அம்பையின் அழல்!

இந்தியப் பெருநிலத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேரிதிகாசமான மகாபாரதம், துணைக்கண்டம் முழுவதிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் காவியம், பாடல், நடனம், நாடகம், விவாதம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்வேறு வடிவங்களைப் பெற்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. பாரதக்கதையின் இந்த நீண்ட பரிணாம வளர்ச்சியின் அங்கமாக நவீன நாவல் வடிவத்தில் வியாச காவியத்தை மீள் கதையாடும் முயற்சியை எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் 2014 ஜனவரியில் ஆரம்பித்தார். 26 பாகங்களில் 25000 இற்கும் அதிகமான பக்கங்களுடன் விரியும் இந்நெடும் பிரயாணத்தின் பூர்வாங்கம்: முதற்கனல்.

       பட உதவி: venmurasu.in

வேசரதேசத்தின் கருநீல நதியோடும் கிருஷ்னையின் நதிக்கரையில் புஷ்கர வனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு பேரண்டத்தின் பிறப்பு குறித்து கூறும் கதையுடன் ஆரம்பமாகிறது நாவல். புவனம் முழுவதுமே நாகங்களின் அசைவால் ஆனது என நாகர்களின் பார்வையில் இருந்து கூறப்படுகிறது உற்பத்திக் காதை. தன் அன்னையின் மடியின் அணைப்பையும் தன் தலைமேல் படும் அவள் மூச்சின் வருடலையும் உணர்ந்தபடி இருக்கும் ஆஸ்திகனுடனேயே நம்மையும் மெல்ல மெல்ல பண்டைய பாரத தேசத்துக்குள் இட்டுச் செல்கிறார் ஆசிரியர். எழுத்தாளர் இந்தக் கதையை நாகர்களின் குல வரலாற்றுடன் ஆரம்பிப்பதிலும் ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. சந்திர குலத்துக்கு நாகர்களுடன் இருந்த; இருக்கும்; இருக்கப் போகும் தொடர்புகளின் சிக்கலான சரடை புரிந்து கொள்வதற்கு இதுவே முதல் படியாக அமைகிறது என்பதை கதையோட்டத்தின் தீரத்தினூடே செல்லுங்கால் உணரவியலும். 

மூவுலகிலும் நிறையும் நாகங்களின் தொல்கதையை கூறி முடிக்கும் மானசா, அஸ்திநகர் மன்னன் தங்கள் குலத்துக்கு எதிராக நடாத்தும் சர்ப்பசத்ர வேள்வி குறித்து ஆஸ்திகனுக்கு எடுத்துரைத்து; தங்கள் குலத்தை காக்கும் பெரும் பொறுப்பை ஆஸ்திகனின் சின்னஞ்சிறு கைகளில் ஒப்படைக்கிறாள். தன் குலத்தின் காவலனென எழும் ஆஸ்திகனின் கண்கள் வழியாகவே பரதாகண்டத்தின் மணிமுடியென திகழ்ந்த அஸ்தினாபுரியின் கம்பீர தோற்றப்பொலிவும், ஜனமேஜயன் நிகழ்த்திய பெரும் வேள்வியும், அந்த வேள்வியின் தோல்வியும் மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. தன்னுடைய வேள்வியின் தோல்விக்கு பின்னே இருக்கும் நிகழ்வுகளின் மாபெரும் வலைப்பின்னலை அறிய முற்படும் அஸ்தினாபுரியின் மன்னன் “எது அறம்?” எனும் மனு குலத்தின் ஆயிரமாண்டு கேள்வியின் விடையை தன் குடியின் முதுபெரும் தந்தையாகிய வியாசரின் வழியே கேட்டுத் தெளிவுறுவதோடு விரிகிறது மாபாரதத்தின் மூலம்.    

பாரம்பரிய பாரதக் கதைகளிலே பெரும்பாலும் தவிர்க்கப்படும் குரு வம்ச மன்னர் பிரதீபருக்கு சுனந்தையில் சூரியனின் கதிரொளியைகூட தாங்காத தோல் கொண்ட தேவாபி, மத வேழங்களை மற்போரில் வெல்லும் பாஹ்லிகர், அன்பின் முழுவீச்சை என்றுமே உணர்ந்திராத சந்தனு என்ற மூன்று மக்கள் பிறப்பதனை இந்நாவல் கூறுகிறது. அரச குடும்பங்களில் பெண்கள் வெறுமனே கருப்பைகளாக மட்டுமே கருதப்படும் மரபையும், அஸ்தினாபுரியில் அக்னி துளியென விழுந்த அரசி சுனந்தையின் கண்ணீரையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. சந்திர குலத்து மன்னர்களை இடைவிடாது துரத்தும் காம மோகம், பீஷ்மரின் பிறப்பு, பேரரசி சத்யவதியின் ஆளுமை, அஸ்தினாபுரி எனும் பெருநகரின் கலாச்சார பாரம்பரியங்கள் என ஒவ்வொன்றையும் பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதியவிடுகிறார் ஆசிரியர். வெண்முரசின் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பம்சமாய் அமைவது யாதெனில் மகாபாரதத்தின் கதையில் இடம்பெறும் மாயங்களும், மந்திரங்களும் இயன்றமட்டும் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நிகழ்வின் பின்னேயும் உள்ள யதார்த்தமும், அக்கால அரசியலின் பின்புலமும் நன்கு எடுத்தியம்பப்படுவதாகும். இவ்வாறான ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது பீஷமரின் பிறப்பும், அவரது இளமைப்பருவமும் இதுவரை நாம் கண்டிராத புதுப் பொழிவை பெறுகிறது.

 பட உதவி: Twitter.in

இந்நூலின் பிரதான கதையோட்டம் வேககதியை அடைவது அம்பை எனும் காசி நாட்டு இளவரசி அறிமுகமாவதில் இருந்தே. இன்னொரு தேவாபியென நோயுடன் பிறக்கும் விசித்திரவீரியனின் முடிசூட்டலுக்கென பீஷ்மரால் காசி நாட்டு இளவரசிகள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவரப்பட்டு வருகிறார்கள். அதில் நடந்தேறும் அரசியல் சூதுகளின் விளைவாக அம்பையின் கனவுகள் அழிவதும், தன்னுடைய குடும்பத்தாலும் காதலனாலும் அவள்  ஒதுக்கப்பட்டு கையறு நிலையை அடைவதும் உணர்வுப் பூர்வமாக முதற்கனல் விவரிக்கிறது.  முதற்கனலின் பிறிதொரு சிறப்பம்சம் அம்பைக்கு பீஷ்மர் மீது எழும் காதல். அறத்தினால் மட்டுமல்லாது தன் அக விளைவாலும் காங்கேயரை விரும்புகிறாள் அம்பை. தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளும்படி பீஷ்மரிடன் அம்பை மன்றாடும் காட்சி இந்நாவலின் உச்சகட்ட நாடகத் தருணங்களில் ஒன்று. “இவரும் ஒரு அறத்தோனா?” என பீஷ்மரை எண்ணி முகம் சுளிக்கும் விதமாக அமைந்திருக்கும் அக்காட்சி. இங்கு சுவாரசியம் என்ன வென்றால் பீஷ்மருக்கும் அம்பையின் மீது காதல் மலர்வதேயாகும், ஆனால் பெரும் காட்டு யானையை சிறு சங்கிலி கட்டுபடுத்துவது போல அம்பை மீது தனக்கு எழும் பெரும் காதல் உணர்வை தன் ஆணவத்தால் பீஷ்மர் கடந்து வருவது நுட்பமாக கூறப்பட்டிருக்கும்.

நாற்பட்ட நல்விருந்து நஞ்சாய் போவது போல நிராகரிக்கப்பட்ட அம்பையின் காதல் பெரும் வஞ்சினாமாக மாறுகிறது. மாயங்களுக்கு இங்கு இடமில்லை  என்றபடியால் மறுபிறவி எடுப்பதற்கு பதிலாக, அம்பையின் அழல் அவளது பெறா மக(ள்)ன் வழியே பேரூருக் கொள்கிறது முதற்கனலில். தன் வாழ்க்கையை பிழைப்படுத்திய அஸ்தினாபுரி பெருநகரின் படித்துறையிலேயே ஆற்றாத சினத்துடன் அம்பை அன்னையாக கோயில் கொள்கிறாள். அஸ்தினாபுரியில் மன்னனாக முடிசூடும் வீசித்திரவீரியன் சின்னாட்களிலேயே வாரிசின்றி இறக்கிறான். அவனது இரு மனைவியராக காசியில் இருந்து தருவிக்கப்பட்டு விதவைகளாகியிருந்த அம்பிகையும், அம்பாலிகையும் நியோக்ய மார்க்கம் எனும் சடங்கினூடாக சத்யவதியின் மகன் வியாசர் மூலம் முறையே பார்வையற்றவனும் பெருந்தோள் வலிமை கொண்டவனுமான திருதராஷ்டிரனையும், உடலால் நலிந்த ஆனால் உளத்தால் ஆர்வம் மிக்க பாண்டுவையும் பெற்று எடுக்கின்றார்கள். இதற்கிடையே அரண்மனை பணியாட்டி சிவைக்கு அறிவும், பொறுமையும் மிக்க விதுரன் மகனாக பிறக்கிறான். மீண்டும் ஒரு முறை அஸ்தினாபுரியின் அரண்மனை முன்றலில் பாஹ்லிகனும், தேவாபியும், சந்தனுவும் பிறக்கிறார்கள். அஸ்தினாபுரியின் நிலை இவ்வாறு இருக்க, பாரத நாட்டின் வேறொரு மூலையில் தன்னைக் கொல்லும் ஆயுதத்தை தானே கூர்த்தீட்டுவது போல அம்பையின் மைந்தன் சிகண்டிக்கு தானே குருவாய் அமர்ந்து பீஷ்மர் வில்வித்தை பயில்விக்கிறார்.

 

பட உதவி:: Twitter.in

முதற்கனலில் குறியீடுகளுக்கு பஞ்சமே இல்லை, அவற்றை விளக்குவதற்கு மட்டுமே ஒரு தனி நூல் எழுதலாம். அவற்றில் குறிப்பிட வேண்டியது அம்பிகை மற்றும் அம்பாலிகையின் நகர்பிரவேசம். தங்கள் விருப்பத்திற்கு மீறி அஸ்தினாபுரிக்கு கவர்ந்து வரப்பட்ட எரிச்சலில் நகர் நுழையும் போது எதிரில் உள்ள எவரையும் காணக்கூடாது என கண்களை மூடிக்கொண்ட அம்பிகைக்கு உணர்வுகளால் அலைக்களிக்கப்படும், விழிகளற்ற மைந்தனும், தன்னுடைய பேதைப் பருவத்தின் துருதுருப்பில் கைகளில் மெல்லிய வெள்ளை மலர்களுடன் நகர் நுழைந்த அம்பாலிகைக்கு நலிந்த, வெண்ணிறத்தோல் கொண்ட ஒரு மைந்தனும் பிறந்தனர். (அன்னையரின் அகமே தங்கள் பிள்ளைகளில் வெளிப்படுகிறது என்பது இந்த குறியீடாகும்). வெண்முரசு வரிசையின் மற்றொரு சிறப்பம்சம் ஒவ்வொரு நாவலின் கதையின் மையக்கருத்தையும் எடுத்துரைக்கும் ஒரு புராணக் கதை அந்நாவலின் கிளைக்கதைகளில் ஒன்றாக கூறப்படும். அந்த வகையில் முதற்கனலில், இருளின் வடிவென திரண்டுவந்த எருமையனை தூய வெள்ளொளியின் பிழம்பான அன்னை வெற்றி கொள்ளும் மகிஷாசுரமர்த்தினியின் கதை கூறப்படும். நாவலை வாசிக்கும் போது அது அக்கதையுடன் கொள்ளும் தொடர்பை உணர முடியும். மேலும் ஆசிரியர் தனித்தமிழ் இயக்கத்தின் ஆர்வலர் என்பதனால் நாவல் நெடுகிலும் பல தூய தமிழ் சொற்கள் பரவியிருக்கும், வாசகர்கள் அவற்றை மனதில் பதித்துக் கொள்வது அவர்களின் மொழிவளத்தை மேம்படுத்தும். 

அன்று பாரத பெருநிலத்தின் அரசியல் எனும் தேர்க்காலில் சிக்கிச்சீரழிந்த அம்பையின் வாழ்வு பின்னாட்களில் எவ்வாறு பாரத பெரும் போருக்கான அடிப்படை விசைகளை இயக்கிவிடுகிறது என்பதே நாவலின் மையம். ஆற்றாது சிந்திய ஒரு துளி கண்ணீருக்கு இந்த அகிலம் முழுதும் விடை சொல்லியாக வேண்டும் என்ற அறத்தை இந்நூல் வழியே எடுத்தியம்பியுள்ளார் ஆசிரியர் ஜெயமோகன்.

முடிவாக கூறிக்கொள்ள வேண்டியது, வெண்முரசு வாசிப்பு என்பது ஒரு தவம். ஆரம்பத்தில் சிறிதே கடினமாகப்பட்டாலும், ஒரு கட்டத்தை தாண்டி விட்டால் அதிலிருந்து மீள முடியாது. வெண்முரசு வாசிக்க விரும்புபவர்கள் மகாபாரதக் கதையை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, சொல்லப்போனால் அறியாமல் வாசித்தால் இன்னும் விறுவிறுப்பாக அமையும். வெண்முரசு நாவல் தொடரை venmurasu.in எனும் வலைத்தளத்தில் வாசிக்கலாம் அல்லது amazon உள்ளிட்ட இணைய வழிகளூடாக கொள்வனவு செய்யலாம், அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் புத்தகக்கடைகளில் கிடைக்குமெனில் கொள்வனவு செய்து கொள்ளலாம். 

 

Related Articles