Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சோழமண்டலத்தில் நீர் மேலாண்மை

மூவலூர்.  காவிரியின் கடைமடை பகுதியில் உள்ள குக்கிராமம்.  ஊருக்கு நடுவே கரைபுரண்டு ஓடுகிறது காவிரி. ஆற்றின் கரையை ஒட்டியபடி உள்ள பழைய காவிரியில் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நீர்வரத்தை பார்க்கமுடிகிறது. பல ஆண்டுகளாக சாக்கடையாக இருந்து, சமீபத்தில் தூர்வாரப்பட்டு, காவிரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். மூவலூர் மட்டுமல்ல டெல்டா மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட பல வாய்க்கால்களில் காவிரி நீர் கரைபுரண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது.

தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் நன்கொடை

தமிழகத்திற்கு உரிய பங்கான காவிரி நீர், கடந்த மூன்று மாதங்களில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் பெரும்பாலான பாசன ஆறு, வாய்ககால்களில் நீர் நிறைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுத்த காரணத்தால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் நன்கொடை இது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் திறந்துவிடப்படுகிறது.  மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை மூன்று முறை எட்டியிருக்கிறது. முதலில் 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் கன அடி நீர் கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.

திறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணையை தாண்டி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்கு முற்றிலுமாக வந்து சேரவில்லை என்பது சர்ச்சையானது. கடைமடைக்கு வந்து சேரும் முன்னரே கொள்ளிடத்தின் வழியாக வீணாக கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் வட பகுதிகளான  பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, திருமருகல் ஒன்றியங்களில் கடைமடை பாசனப் பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. காவிரியில் வெள்ளம் வந்தால் உபரி நீரை என்ன செய்வது? இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை பற்றி பேசுவதற்கு முன்னர் டெல்டாவின் நிலப்பரப்பை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் அதனூடாக பாயும் ஆறுகளை அடிப்படையாக வைத்தே பிரிக்கப்பட்டிருக்கிறது. பாலாறு பாயும் பகுதிகள் தொண்டை நாடு என்றும், வடவாறு பாயும் பகுதிகள் நடு நாடு என்றும், காவிரி பாயும் பகுதிகள் சோழ நாடு என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய நடைமுறை சங்க காலம் தொடங்கி, மராத்தியர்கள் காலம் வரை பின்பற்றப்பட்டிருக்கிறது. சோழ நாட்டைப் பொறுத்தவரை கல்லணைக்கு கீழே உள்ள பகுதிகளை கடைமடை என்றும், கல்லணைக்கு மேலே உள்ள பகுதிகள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பகுதிகள் நடுமடை என்றும் அழைக்கப்படுகின்றன.

Old Cauvery River Flow (Pic: Writer Himself)

தமிழ்நாட்டில் அணைகளும், ஏரிகளும்

கல்லணை.  தமிழ்நாட்டின் ஏழு அதிசயங்களை கணக்கெடுத்தால் பட்டியலில் சர்வ நிச்சயமாக கல்லணையை சேர்த்துவிடலாம். கல்லணை, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மையப்பகுதியில் இருக்கிறது. கல்லணை என்பது அணைக்கட்டு அல்ல. அணை என்றால் தண்ணீரை தேக்கி வைத்து, தேவைக்கேற்ப திறந்து விடும் இடம். கல்லணையில் சிறிய கொள்ளளவு கொண்ட தண்ணீரைத்தான் சேமித்து வைக்கமுடியும், அதையும் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. கல்லணை என்பது ரெகுலேட்டர். பொங்கி வரும் காவிரியை, தடுத்து மடை மாற்றும் பணியை செய்கிறது.

தமிழ்நாட்டில் அணைகளும், ஏரிகளும் இருந்ததும் அவற்றை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டி, நிர்வகித்தது குறித்தும் சில குறிப்புகள் உண்டு. குறிப்பாக, நீரை தேக்கி வைக்க வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவது மன்னனின் கடமை என்று சங்க இலக்கியப் பாடல் குறிப்பிடுகிறது.

“அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே

நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத்”

நிலம் குழிவாக இருக்குமிடத்தில் நீர்நிலைகள் பெருகும்படி செய்வது எந்தவொரு மன்னனின் தலையாய கடமையாகும் என்பதுதான் இதன் விளக்கம். ஏரி, குளங்களை வெட்ட தண்ணீரை சேமித்து வைக்கும் செயல்களை செய்வோரை புணரியோர் என்று குறிப்பிடும் இன்னொரு சங்கப்பாடலும் உண்டு.

Mettur Dam (Pic: newindianexpress)

சான்றுகள்

9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை குறித்து, குறிப்பாக சோழ மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாசன நடவடிக்கைகள், ஆற்று நீர் போக்குகள், கட்டப்பட்ட குளம், ஏரி போன்றவை பற்றி ஏராளமான கல்வெட்டுக்குறிப்புகளும், செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன.

கோவை மண்டலத்தின் பேரூர் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது, நொய்யலாற்றின் குறுக்கே சிறிய அளவிலான அணையை கட்டி, மக்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு வீர ராஜேந்திர சோழன் என்னும் மன்னன் அனுமதி அளித்ததாக ஒரு கல்வெட்டுக்குறிப்பு உள்ளது. புகலிடம் கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் மக்களுக்கு மன்னன் எழுதிக்கொடுத்ததாக சொல்லப்படும் குறிப்பு, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில்  கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

கடைமடை பகுதிகளை பாதிக்காத வகையில், ஆற்றுக்கு மேல் பகுதியில் இருக்கும் அடிமடையைச் சேர்ந்த பகுதிகள் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், கடைமடைக்கு நீர் வராததற்கு அடிமடை, நடுமடையில் திடீரென்று பெருகும் பாசனப்பகுதிகள் மட்டுமல்ல. குடிநீரை காரணம் காட்டி, தண்ணீரை மடை மாற்றுவதும்தான். அன்றிலிருந்து இன்றுவரை கடைமடை விவசாயம் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம்.

சோழ நாட்டில் முப்போகம் விளையும் என்பார்கள். ஆண்டு முழுவதும் காவிரியில் நீர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவமழையின் காரணமாக மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் பகுதி இது. கர்நாடகாவிலிருந்து வரும் நீர், கடைமடைப் பகுதியை சென்றடைவதற்கு குறைந்தபட்சம் 21 நாட்களாகும். குறித்த நேரத்திற்கு வருமா என்பதும் தெரியாது. இந்நிலையில் ஆண்டுமுழுவதும் விவசாயம் என்பது எப்படி சாத்தியப்பட்டது?

Tamil Ancient Inscription (Pic: wikimedia)

கல்லணை மற்றும் கொள்ளிடத்தின் பங்கு

ஏரி, குளங்களில் நீரை சேமித்து வைத்து, பின்னர் பாசனத்திற்காக பயன்படுத்தியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. உண்மைதான். காவிரியின் வடபகுதியிலிருக்கும் வீராணம் ஏரி தொடங்கி, தெற்கு பகுதியில் மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகள் இதற்காகவே கட்டப்பட்டிருக்கவேண்டும். டெல்டாவில் காவிரி பாயும் கடைமடை பகுதியில் ஏரிகள் சாத்தியமில்லை. காவிரி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பாசனப்பகுதிக்கு செல்வதால் பெரிய அளவில் இங்கே ஏரிகளை கட்டமுடியாது. மீறி கட்டி, வெள்ளம் காரணமாக உடைந்து போனால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்துவிடும் அபாயமிருக்கிறது.

இந்நிலையில்தான் கல்லணை மற்றும் கொள்ளிடத்தின் பங்கு முக்கியமானதாகிறது. காவிரியில் வரும் வெள்ள நீரை, டெல்டாவுக்கு போகவிடாமல் தடுத்து, கொள்ளிடத்திற்கு மடைமாற்றவேண்டும். அத்தகைய வேலையைத்தான் கல்லணை செய்துவருகிறது. ஒருவேளை, கல்லணை இல்லாவிட்டால் காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் டெல்டாவின் பாசனப்பகுதில் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.

ஜீன் மாதத்தில் தொடங்கும் சம்பா சாகுபடிக்கு 25000 அடி கன நீர் மட்டுமே கல்லணையிலிருந்து திறந்துவிடுவார்கள். இரண்டரை லட்சம் பாசனப் பகுதிகள் கொண்ட டெல்டா பகுதிகளுக்கு இவையெல்லாம் போதாது. ஆனாலும், கல்லணையிலிருந்து அதிகப்படியான நீரை திறந்துவிட முடியாது. வெள்ள சேதத்தை கொண்டு வந்துவிடும். உண்மையில் சம்பா சாகுபடிக்கு மட்டுமே டெல்டா பகுதி, காவிரி நீரை நம்பியிருக்கிறது. மற்ற இரு போகங்களுக்கும் மழை வந்தாகவேண்டும்.

டெல்டாவின் 80 சதவீத இடங்கள் வடகிழக்கு பருவமழையால் பயனடையும் பகுதிகள். புரட்டாசி மாதத்தில் தொடங்கும் பருவமழை, இப்பகுதியில் காவிரியை விட அதிகளவு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் பெய்யும் தண்ணீரால் காவிரி நிறைந்து, வெள்ள நீர் கொள்ளிடம் வழியாக வழிந்தோடி கடலில் கலக்கிறது. இங்குதான் கொள்ளிடம் முக்கியத்துவம் பெறுகிறது. கொள்ளிடம், காவிரியிலிருந்து வரும் உபரி நீரை கடலுக்குள் கொண்டு சேர்க்கிறது. இதை தவிர்க்க முடியாது. வெள்ள நீராக வருவதை தடுத்து ஏரி, குளங்களில் சேகரிக்க முடியாது. கல்லணைக்கு முன்னாலே மடை மாற்றி விட்டால் மட்டுமே இது சாத்தியம்.

டெல்டா பகுதியில் புதிதாக அணை கட்டமுடியாது. காவிரி நீரோ, மழை நீரோ எதுவாக இருந்தாலும், சுழற்சி முறையில்தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆயிரக்கணக்கான ரெகுலேட்டர்கள் டெல்டா பகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியாக ஓடி வரும் நீரை, மடைமாற்றுவதோ அல்லது வேகத்தை கூட்டுவதோ இதன் பணி.  குறைவான நீர் வரத்து இருக்கும்போது தண்ணீரை அங்கேயே சேமித்து வைக்கவும் முடியும். டெல்டாவின் நீர்ப்பாசனம், சுழற்சி முறையில் ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக குளம், குட்டைகளுக்கும் பின்னர் அங்கிருந்து வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Kallanai (Pic: thecivilengineer)

பாசன ஆறு மற்றும் வடிகால் ஆறு

எந்தப்பகுதியாக இருந்தாலும் காவிரி ஆற்றின் கிளை ஆறு இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். பாசன ஆறு மற்றும் வடிகால் ஆறு. காவிரியிலிருந்து வரும் தண்ணீர் முதலில் பாசன ஆற்றுக்கு திருப்பி விடப்படும். பாசன ஆற்றிலிருந்து ஏராளமான வாய்க்கால்கள் பாசனப்பகுதிக்கு நீரை கொண்டு செல்கின்றன. உபரி நீரானது வடிகால் வாய்க்கால்கள் வழியாக ஆங்காங்கே உள்ள குளம், குட்டை போன்ற இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அதாவது, ஆற்று நீர் முதலில் பாசனத்திற்கு மட்டுமே பய்னபடுததப்படுகிறது. உபரிநீர்தான் சேமிக்கப்படுகிறது. இது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். ஒரு சில இடங்களில் பாசன வாய்க்கால்களை மறித்து, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புதிய பாதைகள் திடீரென்று உருவாக்கப்பட்டுள்ளன. நீரை சேமிக்க வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் டெல்டாவின் நீர்ப்பாசனம் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எடுத்த முடிவால் உண்டான விபரீதம் இது.

Cauvery River (Pic: theprint)

சோழர்களின் கல்வெட்டில் அடிக்கடி காணப்பெறும் வாசகம் – நீர் கலப்பு செய்தல். பாசனப் பகுதிகளுக்கு செல்லும் நீரை, தவறான முறையில் வேறு பகுதிகளுக்கு மடைமாற்றும் செயலைத்தான் இது குறிப்பிடுகிறது. நீர் கலப்பு செய்யும் நபர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனையை சோழர்களின் கல்வெட்டு விரிவாக விளக்கியிருக்கிறது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று கண்டனக்குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், இதை நினைவுகூர வேண்டியிருக்கிறது. இதுவரை காவிரி நீர் பங்கீடு என்பது தமிழகம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக இருந்துவந்திருக்கிறது. இனி எதிர்காலத்தில் காவிரியின் கடைமடை மற்றும் நடுமடை பகுதியை சார்ந்தவர்களுக்கு இடையேயான பிரச்னையாக உருவெடுக்கும் ஆபத்தாக மாற வாய்ப்பிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்?

Web Title: Water Management in Delta, Tamil Article

Featured Image Credit: wikipedia

Related Articles