காலமாற்றத்தில் பண்டிகைகள்

இன்றைய காலத்தில் “உலக தொலைகாட்சி வரலாற்றில் முதன் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களேயான…” எனும் திரைப்பட அறிவித்தல்கள் தான் எமது பண்டிகைகள் பற்றி எமக்கு நினைவூட்டுகின்றன  என்றால் மிகையாகாது. தொலைகாட்சி முன் அமர்ந்து கொண்டாடி, ஹோட்டலில் சாப்பிட்டு மகிழும் கலாசாரதிற்கு மாறிவிட்ட  நாங்கள்,  ஆன்மிகம் சார்ந்த, வாழ்க்கை நெறிசார்ந்த பண்டிகைகளின் உண்மை அர்த்தமோ/விபரமோ  புரியாமலேயே இதுவும் ஓர் சந்தோசமான கொஞ்சம் வழமைக்கு மாறான “விடுமுறை நாள்” என்ற மனோநிலையோடு ஒவ்வொரு பண்டிகைகளையும் கடக்கத் தொடங்கியிருக்கின்றோமோ எனும் எண்ணம் மேலோங்குகிறது?

பருவகால மாறுதல்கள், விளைச்சல், போரில் வெற்றி, துக்கம், மகிழ்ச்சி போன்ற எல்லாவற்றியுமே அன்றைய ஆதி மனிதன் ஆடிப்பாடிக் கொண்டாடினான், அந்த கொண்டாட்டங்களே காலவோட்டத்தில் பண்டிகைகளாக தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது . மனிதனின் கூட்டு வாழ்க்கையின் வெளிப்பாடாக இருந்த இந்தப் பண்டிகைகள், சமயங்கள் தோற்றுவிக்கப்பட்டபோது, அந்த சமயங்கள் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைவதற்காக பண்பாட்டு நிகழ்வுகள் தேவைப்படவே சமயவாதிகள் பண்டிகைகளை தம் வயப்படுதிக் கொண்டனர். ஆதியில் இயற்கையோடு இணைந்திருந்த பண்டிகைகள்மீது பொய்மைப் புராணங்கள் இவர்களால் திணிக்கப்படவே, இன்று ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறுவிதமான  புராண இதிகாச கதைகள், காரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது.

புகைப்படஉதவி:www.outlookindia.com

இப்படி சடங்குகளாக உருமாற்றப்பட்ட பண்டிகைகளோடு வர்த்தக நோக்கும் உடன் சேர   பண்டிகைகள் அதனுடைய உண்மையான நிலையில் இருந்து  திரிபடைய   ஆரம்பித்துவிட்டது. இப்போதெல்லாம் பொருட்களின் விற்பனையும், பண மறு சுழற்சியுமே  பண்டிகைகளின் இருத்தலை உறுதிசெய்பவையாக இருக்கின்றனவென்றால் அதுதான் மறுக்கவியலா உண்மை.

பண்டிகைகள்  இன்று பெருகிவரும் பண்ட உற்பத்திகளின் விற்பனைக் களமாகிப் போயுள்ளன. பண்டிகைகளின் கூட்டுக்கொண்டாட்டங்கள் பண்டங்களோடு பிணைக்கப்பட்டு விடவே ஆசாரங்கள் மட்டும் எஞ்சிப்போக, சகோதரத்துவம் துரிதகதியில் காணாமல்போய்க்கொண்டிருக்கிறது. இங்கே, வர்த்தக நோக்கினை நிறைவேற்றாத பண்டிகைகள் மெல்ல  அவற்றின் முக்கியத்துவங்களை இழந்து விடைபெற, காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், தனிமனித பிறந்தநாள் கொண்டாட்டங்கள், என்று புதுப்புது விழாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை இளையோர் முன்னிலையில் “வர்த்தக நோக்கில் ” முதன்மைப்படுத்தப்பட்டு   வருகின்றன.

இன்றெல்லாம் எந்தப் பண்டிகையானாலும், அவை சுற்றம்சூழ இணைந்து கொண்டாடப்படுவது அரிதாகிவர, தனியார் தொலைக்காட்சிகளோடு, அவற்றின் சிறப்பு  நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப காலையில் இருந்து நள்ளிரவுவரை கழிந்துவிடுகிறது என்பதை எத்தனைபேர் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்? எந்தப் பண்டிகையானாலும் சரி, பெரும்பாலான வீடுகளில் அதிகாலையில் இருந்தே அலறத் தொடங்கிவிடும் கேபிள்  தொலைக்காட்சிகள்! நடிகர் நடிகைகளின் சிறப்புப் பேட்டிகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட கதைகள், அன்றைய தினம் வெளியாகவுள்ள புத்தம்புது திரைப்படங்களின் பாடல்கள், “பண்டிகைகள் சுகமா? சுமையா?” என்பதுபோன்ற  சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்று கலை “கட்டிவிடும் நம்முடைய பண்டிகைகள்! சில வாரங்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையும் திரும்பத் திரும்ப தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை ஒளிபரப்பி  தங்கள் “அன்பால்” நம்மை வீட்டோடு  கட்டிப்போட்டுவிடும். 

புகைப்படஉதவி: www.tellybest.com

நாங்களும் அந்த அன்புத்தொல்லையில் மயங்கி, இன்று என்ன பண்டிகை? அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப்பற்றியெல்லாம் நமக்கென்ன வந்தது? என்ற உணர்வோடு கோவிலுக்குக்கூட போகாமல் ஏன்,  காலையில்  பல்கூட துலக்காமல்  தொலைக்காட்சியோடு இரண்டறக் கலந்துவிடுகிறோம்.  ஏனெனில் நமக்குத் தேவைப்பட்டது விடுமுறையுடன்கூடிய ஒரு கொண்டாட்ட நாள் மட்டுமே.

 எந்தவொரு பண்டிகையிலுமே  ஒரு பொருளாதார அசைவு நிச்சயம் இருக்கும் , அதை நாங்கள் குறைகூற இயலாது, ஏனெனில் அது விளிம்பு நிலையில் உள்ள வரிய மக்களுக்கூட ஏதேனும் ஒருவகையில் உதவுவதாகவே இருக்கும்  ஆனால், இப்போது யோசித்துப்பார்க்கையில் பண்டிகைகளின் மூலம் மிகப்பெரிய லாபங்களை சம்பாதிக்கும் கூட்டங்களில் இந்த தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள்தான் முதல்நிலை வகிக்கின்றன என்பது வெளிப்படை. முன்போல் அல்லாமல் ஆண் பெண் இருவருமே பொருளாதார ரீதியில்  இரவு பகல் பாராது ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய குழந்தைகளையும் முழுநேரக் கல்வியில் அமிழ்த்தி எடுத்துக்கொண்டிருக்கின்றோம், பெரும்பாலான குடும்பங்களில் யாருக்கும் மனம்விட்டுப் பேசுவதற்கும் நேரமிராத நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பண்டிகைகளை சாக்காக வைத்தேனும் வெளிச் சமூகத்தை சந்திக்கும், உறவுகளை நாடிச் செல்லும் தருணங்களை வீட்டுக்குள்ளேயே வரையறுத்து விடுகிறது தொலைக்காட்சிகள். தினமும் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நாட்களிலாவது வீட்டில் தங்கி தொலைகாட்சி பார்த்து மனதை ஆறுதல் படுத்திக்கொள்வது ஒன்றும் தப்பில்லையே என்று இன்னொருபுறமும் யோசிக்கத் தோன்றாமலில்லை.

ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் உறவுகளுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை எம்மிடையே, குறிப்பாக குழந்தைகளிடத்தே  இழக்கச் செய்துவிடும் என்பதை மட்டும் மனதிற்கொள்ள வேண்டும். இன்று , மனித குலத்தின் மகிழ்ச்சிக்காக உருவான பண்டிகைகள் வெறும் சடங்குகளாக, பொருளாதார/கலாசார சுமையாக, சில பலரின் பணத்திமிரின் சாட்சியாக பலவிதமாக சிதைவுற்றபோதிலும், அவற்றின் தேவையை மனிதகுலம் இன்னும் இழந்துவிடவில்லை.

புகைப்படஉதவி:ClubMahindra.com

எனவேத்தான் இன்னும் அவை வரவேற்ப்புடன் தொடர்கின்றன, இனியும் தொடரும். இந்தப் பண்டிகைகளின் இடத்தை வேறொன்று பிடிக்காதவரையில், ஆயிரத்தெட்டு குறைகளைக் கூறிக்கொண்டே அவற்றை பொதுப்புத்தியின்  அடிப்படையில் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கப்போகிறோம். பொருளாதார நிமித்தம்   நாடுகள் கடந்து , நகரங்கள் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு பண்டிகைகள் பற்றிய விழுமியங்களை, உணர்வுகளை அனுபவிக்காமல் அவற்றை கதைகளாக சொல்லும் காலம் வந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் அனேகரது எண்ணமாகவும் இருக்ககூடும். .

Related Articles