Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இருமுறை பதவி கவிழ்க்கப்பட்ட இலங்கையின் இறுதி மகாராணி குசுமாசன தேவி எனும் Dona Catarina

இலங்கையின் வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு என்பது பயங்கர யுத்தம், அரசியல் குழப்பம், அடுத்தவனை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம், சதி முயற்சிகள், இராஜதந்திர பேச்சுவார்த்தை போன்றவை நிறைந்த ஒரு நூற்றாண்டு எனலாம்.

இலங்கை போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் இருந்த அக்காலப்பகுதியில் இலங்கையானது கோட்டை, சீதாவாக்கை, செங்கடகலை என்ற மூன்று பகுதிகளாக ஆட்சி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் தனியானதொரு சுதந்திர பிரதேசமாக இருந்தது. அக்காலத்தில் கோட்டை இராச்சியம் போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததோடு கோட்டை இராசதானியின் மன்னனான “தர்மபால” போர்த்துக்கீசரின் பொம்மை ராஜாவாக செயற்பட்டு வந்தார். இவர் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதோடு 1557ஆம் ஆண்டு தன்னுடைய இராச்சியத்தை போர்த்துகீச மன்னர் “Don John” க்கு பரிசாக வழங்கினார்.

போர்த்துகீஸர்களின் வருகை – புகைப்பட விபரம் -Wikipedia.com

சீதாவாக்கை மன்னனான முதலாம் இராஜசிங்கன் மன்னன் முல்லேரியாவில் நடைபெற்ற யுத்தத்தில் போர்த்துக்கீசரை தோற்கடித்தார். போர்த்துக்கீசரை வெளியேற்றி விட்டு செங்கடகலையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர அதன் மீது போர் தொடுத்தார். இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அவனது இலட்சியமாக இருந்தது. 

ஆனால் இராஜசிங்க மன்னன் தன் தந்தையை கொலை செய்ததாகவும், பௌத்த துறவிகளை கொலை செய்ததாகவும், பௌத்த மதஸ்தானங்களையும், இலக்கிய படைப்புகளையும் அழித்துவிட்டு இந்து கோயில்களை கட்டியதாகவும், பௌத்த மதத்தை விட இந்து மதத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாகவும் மகாவம்சம் அவனை குற்றம்சாட்டுகிறது.

இராஜசிங்க மன்னனுக்கு பயந்த பௌத்த குருமார்கள் புத்தரின் புனிதப்பல்லை பாதுகாப்பு கருதி சீதாவாக்கையிலிருந்து தெல்கொமுவ விகாரைக்கு இடம்மாற்றினர். தர்மபாலவின் காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதம் பரவ தொடங்கியது. இராஜசிங்கனின் காலத்தில் இந்து மதம் செழித்தோங்கியது.

செங்கடகலை இராசதானியின் மூன்றாவது மன்னனே கரலியத்த பண்டாரவாகும். இவர் போத்துக்கீசரின் படையெடுப்பில் இருந்து தனது இராசதானியை பாதுகாப்பதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதோடு, போர்த்துக்கீசரின் ஆதரவையும் பெற்றிருந்தார். அத்தோடு போர்த்துக்கீசருடனும், தர்மபால மன்னனுடனும் நல்லுறவையும் கொண்டிருந்தார். இவரின் மகளே குசுமாசன தேவியாகும்.

இராஜசிங்க மன்னன் பௌத்தனான வீரசுந்தர பண்டார, பௌத்த துறவிகளின் ஆதரவோடு கரலியத்த பண்டார மீது போர் தொடுத்தான். இதனால் கரலியத்த பண்டார தனது அரச குடும்பத்தோடு திருகோணமலை கோட்டைக்கு தப்பிச்சென்று போர்த்துக்கீசரின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.

சிறுவயது முதலே இளவரசியாக வளர்க்கப்பட்ட குசுமாசன தேவி தன் தந்தை இழந்த சிம்மாசன உரிமையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். அவளுடைய தாய் அவளுக்கு தமது தனித்துவத்தை கூறியே உற்சாகமூட்டி வளர்த்து வந்தாள். போத்துக்கீசரின் இராணுவ உதவியோடு செங்கடகலையை மீண்டும் கைப்பற்றி திருகோணமலை கோட்டையில் தன்னுடன் இருந்த தனது மருமகனான யமசிங்க பண்டாரவிற்கு தனது மகளான குசுமாசன தேவியை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதே கரலியத்த பண்டாரவின் இலட்சியமாக இருந்தது. 

அதே நேரம் அவரது மனைவியோ தன்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு கம்பளைக்கு தப்பிச்செல்ல எண்ணினார். ஆனால் இவர்களது எண்ணங்கள் யாவையும் திடீரென ஏற்பட்ட நோயானது தவிடுபொடியாக்கியது.”திருகோணமலை கோட்டையில் கரலியத்த பண்டாரவும் அவனது மனைவியும் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பலியாகினர். இதனால் அவர்களது மகளான குசுமாசன தேவியும், யமசிங்க பண்டாரவும் தொடர்ந்தும் போர்த்துக்கீசரின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டியேற்பட்டது. அவர்கள் இருவரையும் மன்னாருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்த போர்த்துக்கீசர்கள் அவர்களை கிறிஸ்தவ அனாதை இல்லத்தில் வைத்து வளர்த்தனர்.

அங்கே இருவரும் ஞானஸ்நானம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டதோடு குசுமாசன தேவிக்கு அக்காலத்தில் போர்த்துகலை ஆண்டுகொண்டிருந்த அரசியான Catherine of Austriaன் பெயரை அடிப்படையாகக் கொண்டு Dona Catarina என்றும், யமசிங்க பண்டாரவிற்கு Don Filipe என்றும் பெயர் வைக்கப்பட்டது.குசுமாசன தேவிக்கு கற்பிப்பதற்காக ஒரு பாதிரியும் கன்னியாஸ்திரியும் நியமிக்கப்பட்டதோடு, அவர்கள் அவளுக்கு மதம், அரசியல், மொழிகள், சட்டங்கள் என அவள் எதிர்காலத்தில் அரசியாக வருவதற்கு தேவையான அனைத்து வகை கல்வியையும் அவளுக்கு கற்பித்தனர்.

குசுமாசன தேவி எனும்  Dona Catarina – புகைப்பட விபரம் -www.wikipedia.com

செங்கடகலை இராச்சியத்தில் எஞ்சி இருக்கும் அரசியல் வாரிசு Dona Catarina தான் என்பதை அறிந்திருந்த போர்த்துக்கீசர்கள், இவளை வைத்து செங்கடகலை இராச்சியத்தை கைப்பற்றிவிட்டு இவளை போர்த்துக்கீச இளவரசன் ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்க திட்டம்தீட்டினர்.

இதேநேரம் செங்கடகலையை கைப்பற்றி ஆட்சிசெய்து கொண்டிருந்த முதலாம் இராஜசிங்கன் மன்னன், தனக்குகீழ் ஆளுநராக கடமை புரிந்த வீரசுந்தர பண்டார தன்னுடைய கட்டளையை செயல்படுத்தவில்லை என்பதற்காக அவருக்கு மரணதண்டனை விதித்தான். இதனால் வீரசுந்தரவின் மகனான கோனப்பு பண்டார போர்த்துக்கீசரிடம் தஞ்சமடைய அவனை போர்த்துக்கீசர்கள் வரவேற்று கோவாவிற்கு அனுப்பி இராணுவப்பயிற்சி வழங்கினர். அவன் அங்கே போர்த்துக்கீசர் சார்பாக போர்களில் பங்கேற்றதாகவும் சொல்லப்படுகிறது. அவன் அங்கிருந்து திரும்பி வரும்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தன் பெயரை Don Juan of Austria என்று மாற்றி இருந்தான்.

1592ஆம் ஆண்டு யமசிங்க பண்டார, கோனப்பு பண்டார போன்றோரின் ஆதரவுடன் செங்கடகலையை கைப்பற்றிய போர்த்துக்கேசப்படை யமசிங்க பண்டாரவை செங்கடகலையின் மன்னனாக அறிவித்தது. ஆனால் அவனால் குறுகிய காலமே மன்னனாக செயற்பட முடிந்தது.

சந்தர்ப்பவாதியாக செயற்பட்ட கோனப்பு பண்டார கிளர்ச்சி செய்து யமசிங்க பண்டாரவை கொலை செய்துவிட்டு பௌத்த மதத்திற்கு மாறி “முதலாம் விமலதர்மசூரிய” என தன்பெயரை மாற்றிக்கொண்டு தன் 27ஆம் வயதில் ஆட்சிபீடமேறினான்.

மன்னன் – முதலாம் விமலதர்மசூரிய புகைப்பட விபரம் -www.wikipedia.com

ஆட்சிபீடமேறிய முதலாம் விமலதர்மசூரிய செங்கடகலையை போத்துக்கீசர்களினதும் இராஜசிங்க மன்னனினதும் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக ஆட்சி செய்யவேண்டுமென விரும்பினான். இதனால் இராஜசிங்க மன்னனோடு போரிட்ட அவன் பலனையில் வைத்து இராஜசிங்க மன்னனை தோற்கடித்தான். அ௩்கிருந்து சீதாவாக்கைக்கு பின்வாங்கிய இராஜசிங்கனின் காலில் விஷமுள் குத்தியதால் காயம் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தான்.

இராஜசிங்கனின் மரணத்திற்கு பின்னர் சீதாவாக்கை இராச்சியத்தில் பலம் வாய்ந்த யாரும் இல்லாததால் அது பலவீனமடைந்து போர்த்துக்கீசரின் கைகளுக்கு சென்றது. இராஜசிங்க மன்னனை போல வீரனான விமலதர்மசூரிய மன்னன் தன்னுடைய இராச்சியத்தை பலப்படுத்தியதோடு மதரீதியான மற்றும் சமூகரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இடைவிடாது பாடுபட்டார்.

1594ஆம் ஆண்டு Dona Catarinaஐ கண்டி இராசதானியின் அரசியாக்கி போத்துக்கீசை சேர்ந்த தளபதியான General Pedro Lopes De Sousaஐ அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்குடன் 20,000 பேர் கொண்ட பெரும் படை ஒன்று கண்டியை நோக்கி படையெடுத்து சென்றது. Dona Catarinaஐ பல்லக்கிலே வைத்து அழைத்துச்சென்றனர். போத்துக்கீசர் படையெடுத்து வருவதை அறிந்த முதலாம் விமலதர்மசூரிய மன்னன் அந்த பெரும் படையுடன் மோத முடியாது என்பதை அறிந்து போர்த்துக்கீசரை முழுமையாக முற்றுகையிட்டு கெரில்லா தாக்குதலை மேற்கொள்ள தன் படையுடன் காட்டுக்குள் மறைந்து கொண்டார். விமலதர்மசூரியவின் தந்திரத்தை அறியாத போத்துக்கீசர் எந்தவித அச்சுறுத்தலுமின்றி கண்டியை கைப்பற்றினர்.

Dona Catarina பெரும் ஆரவாரத்துடன் ஊர்வலமாக கண்டி நகருக்கு அழைத்துவரப்பட்டாள். மூன்று நாட்களின் பின் மாபெரும் கொண்டாட்டத்தின் மத்தியில் 13 வயதான Dona Catarina அரசியாக முடிசூட்டப்பட்டாள். மூன்று மாதங்கள் பொறுமையாக இருந்த விமலதர்மசூரிய அதன்பின் தன் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். விமலதர்மசூரியவின் படை போத்துக்கேயரின் மீது கெரில்லா தாக்குதல்களை பாரியளவில் மேற்கொண்டது. அதேநேரம் போத்துக்கேயருக்கு உதவியாக இருந்த Lascarin படையினரும் விலகத்தொடங்க கெரில்லா தாக்குதல்களின் உக்கிரம் தாங்கமுடியாமல் போர்த்துக்கீசர் கண்டியை விட்டு வெளியேற தீர்மானித்தனர். இதன்போது Dona Catarinaஐ யானை மீது ஏற்றிக் கொண்டு வெளியேறும் போது “தந்துரே” என்ற இடத்தில் விமலதர்மசூரியவின் கெரில்லா படைக்கும் போர்த்துக்கேய படைக்குமிடையில் பெரும் போர் இடம்பெற்றது. இப்போரில் போர்த்துகீச படையின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். De Sausa படுகாயமடைந்து சில நாட்களின் பின்னர் மரணித்தார்.

போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் Dona Catarinaஐ ஏற்றிக்கொண்டு வந்த யானை வழிமாறி காட்டுக்குள் நுழைந்ததாகவும் கெரில்லா படையின் முக்கிய தலைவர் ஒருவரால் அவள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிருடன் பிடிபட்ட Dona Catarinaக்கு விமலதர்மசூரிய மன்னர் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். 

ஏற்கனவே போரில் தோல்வியுற்று விரக்தியில் இருந்த போர்த்துக்கீசரை மீண்டும் கோபமூட்டும் வகையில் Dona Catarinaஐ முதலாம் விமலதர்மசூரிய மன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமண கொண்டாட்டங்கள் 110 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

முதலாம் விமலதர்மசூரிய மன்னனாக முடிசூட்டிக் கொண்டதன் பின்னர் கண்டி இராச்சியத்தில் புதியதொரு அரச வம்சம் உருவானதோடு புதியதொரு சகாப்தமும் உதயமாகியது. அவர் புத்தரின் புனிதப்பல்லை தெல்கொமுவ விகாரையிலிருந்து செங்கடகலைக்கு கொண்டுவந்தார். ஆனால் விமலதர்மசூரியவின் மனைவியான Dona Catarinaற்கு அவரோடு மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவரிடமிருந்து தப்பிச் சென்று போர்த்துக்கீசர்களிடம் தஞ்சமடைவதற்கு பல தடவைகள் முயற்சித்த போதிலும் அவளால் முடியாமல் போனது. இவர்கள் இருவருக்கும் Mahsstana என்ற மகனும் Suriya Devi, Sama Devi என்ற மகள்களும் கிடைத்தனர்.

1604ஆம் ஆண்டு விமலதர்மசூரிய மன்னன் காய்ச்சலின் காரணமாக மரணித்த போது சொற்ப காலத்திற்கு Dona Catarina மகாராணியாக செயற்பட்டாள். இந்நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி விமலதர்மசூரியவின் வளர்ப்பு தந்தையின் மகனும், முன்பு பௌத்த மதகுருவாக இருந்த செனரத்திற்கும், விமலதர்மசூரியவின் சகோதரனும் பதில்மன்னனாக முன்மொழிய பற்றிருந்தவனுமான தனவக்க மாயாதுன்னவிற்கும் இடையில் இடம்பெற்றது. இதில் செனரத்தின் கை ஓங்கவே மாயாதுன்னவை கொலை செய்துவிட்டு ஆட்சியை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல் Dona Catarinaஐ அவளது விருப்பமில்லாமல் திருமணமும் செய்துகொண்டான். 

இரண்டாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அரசியல் வாரிசு என்ற முழு உரிமையும் Dona Catarinaற்கு இருந்தபோதினும் அது கைகூடாமல் போய்விட்டது. தான் போர்த்துக்கீசர்களிடம் தப்பிச்செல்வதற்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் விருப்பமில்லாமல் செனரத் மன்னனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தாள். அவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் பிறந்தனர்.

விமலதர்மசூரியவின் மூலம் பிறந்த வருங்கால மன்னனாக முடிசூட வேண்டிய மகனான Mahastana உயிரோடு இருந்த நிலையிலும் கூட செனரத் மன்னன் தன் இராச்சியத்தை தன் மூன்று மகன்களில் மூத்தவனுக்கு வழங்க ஆர்வமாக இருந்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் மகன் ஆட்சிபீடமேறுவதை விரும்பிய செனரத் மன்னன், தன் மகனுக்கு போட்டியாக வரக்கூடியவனான Dona Catarinaன் மகனான Mahastanaஐ தீர்த்து கட்ட விரும்பினான். இதன்படி ஆட்சிநிர்வாகம் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்காக அவனை சப்பிரகமுவவிற்கு அனுப்பிவிட்டு அவனை அங்கேயே தீர்த்துக்கட்ட மன்னன் திட்டமிட்டான்.”

Dona Catarina செனரத் மன்னனுடன் விருப்பமில்லாமலும், விரக்தியான மனநிலையிலும், நோயுற்ற நிலையிலுமே வாழ்ந்தாள். தனக்கு விரோதமான ஒரு சூழலில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து மிகவும் மனம்வருந்தினாள். அவள் பத்து வருடங்களுக்குள் ஆறு பிள்ளைகளுக்கு தாயாக வேண்டிய சூழல் ஏற்பட்டதனால் உடல் ரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாகினாள். அவள் தன் வாழ்க்கையில் வெறுமையை உணர்ந்தாள். 1612ம் ஆண்டு அவளுடைய மகனொருவன் செனரத் மன்னனால் விஷம் வைத்து கொல்லப்பட்டது அவளுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நோய்வாய்ப்பட்ட Dona Catarina 1613ம் ஆண்டு தன் 35 ஆவது வயதில் மரணமடைந்தாள். அவள் மரணித்த பின்பும் அவளது கதையில் சுவாரஸ்யத்திற்கு எந்த குறையும் இருக்கவில்லை. விமலதர்மசூரியனால் Dona Catarinaற்கு கிடைத்த 14 வயது பெண்ணான Suriya Deviஐ செனரத் மன்னன் மணந்தான்.

Dona Catarina திருமணத்திற்கு பிறகு பௌத்த மதத்திற்கு மாறி இருந்தாலும் அவள் இரகசியமாக தன் வாழ்நாள் முழுதும் கத்தோலிக்க மதத்தை பின்பற்றியதாக கூறப்படுகின்றது. அவள் மரணித்த பின்பு அவளை அடக்கம் செய்யும்போது அவளுடைய கையிலே தங்கமுலாம் பூசிய ஜெபமாலையும் அவளுக்கு அருகில் பைபிளும் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

விமலதர்மசூரிய மற்றும் செனரத் மன்னர்கள் இருவரும் Dona Catarina மீதான காதலினால் அவளை திருமணம் செய்யவில்லை. மாறாக இருவரும் தாம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு கருவியாகவே அவளை பயன்படுத்தினார்கள்.ஆட்சிக்கான வாரசுரிமையை கொண்டிருந்த Dona Catarinaஐ திருமணம் செய்தது, தமது ஆட்சிக்கு சட்டபூர்வதன்மையை பெறுவதற்கு அவர்களுக்கொரு வாய்ப்பாக அமைந்தது. Catarinaற்கு ஆட்சிபீடம் ஏறுவதற்கான வாய்ப்பு கிட்டியபோது பெண்கள் ஆட்சிபீடம் ஏறுவது கூடாது என வாதம்செய்தார்கள். மக்களும் பெண்ணொருவர் தமக்கான தலைவராக வருவதை விரும்பியிருக்கவில்லை. அவள் ஒரு பௌத்த பெண்ணாக இருக்காததனால் அவள் தமது இராச்சியத்தை போர்த்துக்கீசர்களிடம் ஒப்படைத்துவிடுவாளோ என அவர்கள் பயந்தார்கள். அவர்கள் தமது நாட்டையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என எண்ணினார்கள். இவையெல்லாமே அவள் ஆட்சிபீடம் ஏறுவதை தடுத்த காரணங்கள் எனலாம்.

வரலாற்றாசிரியர்கள் செங்கடகல இராசதானியின் ஏனைய மன்னர்களுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை Dona Catarinaற்கு வழங்கியிருக்கவில்லை.

Related Articles