இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

முதல் சுவாசத்தின்போதே அரசியல் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைப்பதுண்டு. அந்த சிலரில் இந்திரா காந்தி முக்கியமானவர். மோதிலால் நேருவின் பேத்தியாக, ஜகவர்லால்  நேருவின் மகளாக பிறந்துவிட்டு அரசியல் காற்றை அவ்வளவு சீக்கிரம் புறந்தள்ளிவிட முடியுமா என்ன? 1917ம் ஆண்டு நவம்பர்  19 ஜகவர்லால் நேரு கமலா தம்பதிகளுக்கு ஓர் பெண் குழந்தை பிறந்தது. தாத்தா மோதிலால் நேருவுக்கு தன் தாயின் பெயரான இந்திராணியை பேத்திக்கு சூட்டவேண்டும்  என்று ஆசை. நேருவுக்கோ ப்ரியதர்ஷனி என்கிற பெயரிலேயே பிரியம் அதிகம். இறுதியில் இரண்டையும் சேர்த்து “இந்திரா ப்ரியதர்ஷனி” என வைத்தாயிற்று. துடிதுடிப்பும் பரபரப்புமாக வளர்ந்துகொண்டிருந்தார் இந்திரா. அப்போது நேருவின் வீட்டுக்கு காந்தி வருவார். காந்தி வருகிறார் என்றால் அவரை பின்பற்றி காங்கிரஸே வருகின்றது என அர்த்தம். அப்படி நேருவின் வீட்டுக்கு வரும் காங்கிரசின் அத்தனை தலைவர்களுடனும் பழகும் வாய்ப்பு இந்திராவுக்கு கிடைக்கிறது. வெறுமனே பழகுவதற்கு மட்டுமல்ல அவ்வப்போது போராட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கின்றது. அந்நியதுணி எரிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட்டபோது, ஆனந்தபவன் மொட்டைமாடியில் நின்று தன்னுடைய மேல்நாட்டு உடையை தீக்கிரையாக்கினார் சிறுமியாயிருந்த இந்திரா. ஆறு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட இந்திரா “செசிலியா” என்கிற ஆங்கில பள்ளியில் படிப்பது நேருவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் மோதிலால்  நேருவின் விருப்பத்தை மறுக்கவியளவில்லை  நேருவால்.பின் பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திராவுக்கு வீட்டுக்கே ஆசிரியர்கள் வந்து ஆங்கிலம், உருது, இந்தி போன்ற மொழிகளும் கற்பிக்கப்பட்டது. 

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேருவை அவ்வப்போது கைதுசெய்து நீண்ட நாட்களுக்கு  சிறையில் அடைத்துவிடுவது பிரிட்டிஷ் அரசின் வழக்கம். அப்படி சிறையில் இருக்கும் போதெல்லாம் மகள் இந்திராவிற்கு கடிதம் எழுதுவார் நேரு. அந்த கடிதங்களெல்லாம் குசலம் விசாரிக்கும் சராசரி குடும்ப கடிதங்கள் அல்ல. உலக சரித்திரங்களையெல்லாம் அறிமுகம் செய்யும் அறிவுக் களஞ்சியங்கள். பின்னாளில் அக்கடிதங்களெல்லாம் தொகுக்கப்பட்டு” உலக வரலாற்று சாட்சியங்கள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு படிப்பு மட்டும் போதாது என ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட ” சாந்தி நிவேதம்” என்ற புகழ் பெற்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார் இந்திரா . கல்வி பயிலும்போதே இந்திராவிற்கு  அரசியலிலும்  ஆர்வம் வந்தது. காங்கிரஸ் கட்சியினுல் சிறுவர் சிறுமியரை கொண்ட அமைப்பு ஓன்று கமலா நேருவினால்  நிறுவப்பட, “வானரசேனை” என செல்லமாக அழைக்கப்பட்ட அந்த அமைப்பின் தலைவியாக இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதின்மூன்று. popcut  செய்யப்பட்ட தலையில் கதர் குல்லாய் அணிந்துகொண்டு பங்கேற்றார் இந்திரா.

நேரு அவர்களினால் மகள் இந்திராவிற்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு புகைப்படவிபரம் –www.themarginalian.org

நேருவைப்போலவே  கமலா நேருவும் நேரடி அரசியலில் ஈடுபட்டிருந்த அந்நேரத்தில் , ஓர் துடிதுடிப்பான இளைஞர் ஒருவர் அறிமுகமானர் கமலா நேருவுக்கு. அவர்தான் “பெரோஸ்” . காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட பெரோஸ் அவ்வப்போது கமலா நேருவைப்பார்க அவரது வீட்டுக்கு வருவார் . அப்போது இந்திராவுக்கும்  பெரோசுக்கும் ஏற்பட்ட சாதாரண பழக்கம் மேற்படிப்புக்காக லண்டன் சென்றபோது நற்பாக மாறி காதலாக உருமாறியது . திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தபோது பல தடைகள்! தடைகளாக இருந்தவர்கள் நேருவும் காந்தியும் என்பது வியப்புக்குறியது. ஒருவழியாக காந்தி நேருவின் ஆசியுடன் 1942 மார்ச் 26ம் திகதி அன்று பெரோஸ் , இந்திராவின் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற கையேடு ” வெள்ளையனே வெளியேறு ” போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், நேரு கைது செய்யப்பட, பெரோஸ் தலைமறைவானார். இந்திராவிற்க்கு தன் வீட்டினுள் தலைமறைவாக இருந்த “லால் பகதூர் சாஸ்திரியை” பாதுகாக்கும் பொறுப்பு. அதனை கனகச்சிதமாக முடித்துக்கொடுத்து தலைவர்களின் நம்பிக்கையை பெற்றார் இந்திரா. அதன்பின் பொதுக்கூட்டமொன்றில் பிரிட்டிஷுக்கு எதிராக பேசிய இந்திரா கைது செய்யப்பட்டு சுமார் எட்டு மாதகாலம் சிறையில் இருந்தார். இந்திய சுதந்திர காலகட்டமது, அரசியலில் நேரு பயங்கர பிஸியான நேரம், கமலா நேருவின் மறைவு நிகழ்ந்தது. எனவே நேருவின் தனிப்பட்ட மற்றும் அரசியல் விடயங்களை கவனித்துக் கொள்ள உதவியாக இந்திரா நேருவுடன் டெல்லியிலேயே தங்கிவிட்டார். இடைப்பட்ட காலகட்டத்தில் சஞ்சய் மற்றும் ராஜிவ் என்கிற இரண்டு  ஆண் குழந்தைகளுக்கு தாயானார் இந்திரா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இந்திரா நேருவுடனேயே தங்கியிருந்ததில் பெரோசுக்கு மிகுந்த வருத்தம். ஆனால் சுதந்திர இந்தியாவின் பிரதமர் என்கிற உயர்பொறுப்பை ஏற்றிருக்கும்   தந்தைக்கு துணையாக தான் இருக்கவேண்டியது தவிர்க்க முடியாதது என்றார் இந்திரா .இதில் ஏற்பட்ட முரண்பாடு இந்திரா டெல்லியிலும், பெரோஸ் லக்னோவிலும் தனித்தனியே தங்கினார்.

நேரு பொது கூட்டத்திற்கு சென்றாலும், நாடாளுமன்றம் சென்றாலும் , கட்சிக்கு காரியக்கமிட்டிக் கூட்டத்திற்கு சென்றாலும் தந்தையோடு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் இந்திரா. 1952  சுதந்திர  இந்தியாவின் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அநேகமாக இந்திரா காந்தியும் தேர்தலில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தந்தை நேரு, கணவர் பெரோஸ் ஏற்கனவே தேர்தல் களத்தில் இருந்ததால் அதை தவிர்த்த இந்திரா, இருவருக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். தேர்தல் முடிவில் காங்கிரசே வெற்றிபெற்றதால், மீண்டும் பிரதமராக நேருவே தொடர்ந்தார். “ரேபரேலி” பகுதியில் வெற்றிபெற்ற பெரோஸ் டெல்லி வந்து  திருமூர்த்தி  பவனிலேயே தங்கிவிட்டார். ஆனால், அங்கே அவருக்கு அதிருப்திகளே அதிகம் கிடைத்தது . பிரதமர் நேருவின் மகள் என்கிற அடிப்படையில் இந்திராவிற்கு கிடைக்கும் மரியாதைகள் பெரோஸின் கவனத்தை கலைத்தன. கூடவே தனக்குரிய மரியாதை தரப்படவில்லை என வருந்தினார். அந்த ஆத்திரமும் அதிருப்தியும் நேருவின் மீதே திரும்பின. ஒருமுறை காங்கிரஸ் காரியக்கமிட்டியில் பேசிய பெரோஸ் “காரியக்கமிட்டி கூட்டத்திற்கு குடும்பத்துடன் பங்கேற்க அனுமதி உண்டா?” என கேட்டார். அப்படி கேற்க காரணம் அப்போது நேருவின் அருகில் இந்திராவும் அமர்ந்திருந்தமையே. அதற்கு நேரு மன்னிப்பு கேற்க, இந்திராவிற்கு பெரும் மனவருத்தத்தைக் கொடுத்தது . அடுத்த சில மாதங்களிலேயே இந்திராவை காங்கிரஸ் கமிட்டி உருப்பினராக்கி  பெரோசுக்கு பதிலடி கொடுத்தார் நேரு. 

எனினும்1924ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த காந்தியடிகலாரை கதர் சட்டையணிந்து பார்க்ள சென்றிருந்த சிறுமி இந்திரா.- புகைப்படவிபரம் -www.themarginalian.org

நேருவின் மகள் என்பதையும் தாண்டி காங்கிரஸ்சின் பிரச்சார முகமாகவும் இருந்தார் இந்திரா. அவரது உழைப்பையும் திறமையையும் அங்கீகரிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணித்தலைவியாக நியமிக்கப்பட்டார். பின் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியின் அதிகார படிக்கட்டுக்களில் மெல் மெல்ல ஏறத் தொடங்கிய இந்திரா 1959 ஆம் ஆண்டு உச்சத்தை தொட்டார். இந்திரா,  காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை வியப்புடன் பார்க்கப்பட்டது. ஏனெனில் காமராஜர், நேரு, மொரார்ஜி, ஜெகஜீவ ராம் உள்ளிட்ட பல தலைவர்கள் இருக்கையில் வயதிலும் அனுபவத்திலும் மிகவும் இளையவராக இருந்த இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டமையே வியப்புக்கு காரணம். இந்திராவின் பதவியுயர்வின் போதெல்லாம் கட்சியின்  மற்றும் ஆட்சியின் மையமாக இருந்தவர்   நேரு. இந்திராவுக்கு கொடுக்கப்பட்ட பதவிகளும் பொறுப்புகளும் பெரோஸின் மனதில் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தி குடும்பத்துக்குள் ஏற்பட்டிருந்த பேதம் ஆட்சிக்குள்ளும் ஊடுருவியது . நேருவின் ஆட்சியில் நடந்த காப்பீட்டுத் துறை ஊழல்களை அதிரடியாக வெளிக்கொணர்ந்து நேருவுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் பெரோஸ். நேருவின் ஆட்சிமீது ஊழல்கறை படிந்தது. தந்தைக்கும்  கணவனுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தில், தோல்வியடைந்தது தந்தை நேரு   என்பது இந்திராவின் மனதை பெரிதும் பாதித்தது. விளைவு பெரோஸிடமிருந்து விலக தொடங்கினார். அவர்களுடைய அந்த பிரிவு 1960 செப்டம்பர் 07ஆம் திகதி நிரந்தரமானது . 

ஆம், பெரோஸ் காந்தி நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்தார். இந்த இழப்பையும் தாண்டி அரசியல் பணிகளில் கவனம் செலுத்தினார் இந்திரா . பிரதமர் நேருவினுடைய வெளிநாட்டு விஜயங்களின்போது உடன் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். அதன்மூலம் நாடுகளின் தலைவர்கள், காட்சியாளர்களுக்கு இந்திரா நன்கு அறிமுகமானார். இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலையும் உள்வாங்கியதற்கு நேருவுடன் செய்த உரையாடல்களே காரணம் எனலாம். ஆட்சியின் சூட்சுமங்கள், அரசியலின் நுணுக்கங்கள் என கற்றுக்கொண்டிருந்த இந்திராவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், 1964மே 27 அன்று பிரதமர் நேரு மரணமடைந்தார் . இந்திராவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அதிர்ச்சி . ஆனாலும் அடுத்து இயங்க வேண்டிய சூழல். நேருவின் இடத்திற்கு லால்பகதூர் சாஸ்திரியை கொண்டுவந்தார் காமராஜர்.பின் நேருவின் குடும்பத்தில் இருந்து ஒருவரை அமைச்சரவைக்குள் கொண்டுவர விரும்பிய சாஸ்திரி, இந்திரா காந்தியை “தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை” அமைச்சுப் பதவியில் நியமித்தார். Commonwealth மாநாட்டில் கலந்துகொள்ள தன்சார்பாக இந்திராவையே  அனுப்பியும் வைத்தார். எல்லாமும் சுமுகமாய் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை, வெளியுறவுத்துறை சம்பந்தமான நியமனமொன்றில் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இந்திராவுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட, அந்த பனிப்போர் பகிரங்கமாக பல அரசியல் நிகழ்வுகளில் வெளிப்பட்டது. அதாவது தமிழகத்தில் ஏற்பட்ட இந்தித்  திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது, இந்திரா நேரடியாக தமிழகம் சென்று கலகக்காரர்களை சந்தித்தது, சாஸ்திரிக்கு அதிருப்தியை கொடுத்தது. அதேபோல் 1965 ஆகஸ்ட் காஷ்மீருக்கு இந்திரா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ நகரில் கலவரம் மூலவே, உடனடியாக இந்திரா டெல்லி திரும்பும்படி   பணிக்கப்பட்டார். ஆனால்  இந்திராவோ கலவரம் முடியும்வரை காஷ்மீரிலேயே தங்கியிருந்து, கலவரப்பகுதிக்கு நேரில்  சென்று பார்வையிட்டார். இந்த சம்பவமும் சாஸ்திரியை கடுப்பாக்கியது. எனினும் மக்களிடம் இந்திராவின்  தைரியம் வியக்கப்பட்டது.

சாஸ்திரியின் மறைவுக்குப்பின்,  மீண்டும் ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க  வேண்டிய நிலை. நேரு மறைந்தபோதே தான் பிரதமராக வேண்டும் என  விரும்பினார்  “மொரார்ஜி தேசாய்” .ஆனால் காமராஜர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தார். தற்போது சாஸ்திரிக்கு சார்பாக தன்னை தேர்ந்தெடுக்கும்படி கோரினார் மொரார்ஜி. ஆனால் காமராஜர் மனதில் வேறு ஒரு கணக்கிருந்தது . சாஸ்திரியின் இடத்தை நிரப்புவது மட்டுமல்ல, நல்ல ஆட்சியாளராக தேர்ந்த நிர்வாகியாக , அனைவரையும் அரவனைத்துச் செல்பவராக இருக்க வேண்டும் . குறிப்பாக அடுத்தடுத்து வரப்போகும் தேர்தல்களில் மக்களைக் கவர்ந்து வாக்குகளை திரட்டித்தரும் செல்ல்வாக்குடையவராக இருத்தல் வேண்டும் என்ற கணக்குப்படி இந்திரா காந்தியை பிரதமராக நியமிக்க விரும்பினார் காமராஜர். இதில் மொரார்ஜி முரண்பட, இருவர்க்குமிடையேயான போட்டியில்  இந்திராவே வெற்றிபெற்று பிரதமரானார். 

அப்போது இந்திராவுக்கு வயது 48!  இந்திரா குருவியா? எறும்பா? என்கிற சர்ச்சைதான் நாடுமுழுவதும் இடம்பெற்றிருந்தது. இத்தனை சிறுவயதில் பிரதமர் பதவியென்பது குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்றது,  பாரம் தாங்காமல் திணறிவிடுவார் என்றனர் சிலர். இல்லையில்லை மொரார்ஜி போன்ற பெரிய பெரிய யானைகளின் காதுகளுக்குள் புகுந்து இம்சிக்கக்கூடிய எறும்பே இந்திரா என்றனர் பலர். ஆகவே, தான் எடுத்துவைக்கும் ஓவ்வொரு அடியையும் மிக நிதானமாகவே எடுத்துவைத்தார் இந்திரா. மூத்த தலைவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று செயற்பட்ட அதேவேளை ,தன்னை சுற்றி எப்போதுமே இளம் தலைவர்களையே செயற்பட வைத்துக்கொண்டார . பிரதமர் பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழல். ஒரிசா மாநிலத்தில் பிரச்சாரத்தின்போது கல் வீச்சுக்கு ஆளான இந்திரா அசராமல் பிரச்சாரத்தினை தொடர்ந்த மனோதைரியம் பல மூத்த தலைவர்களையே  வியக்கச் செய்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ்சே வெற்றிபெற மீண்டும் பிரதமரானார் இந்திரா. வங்கிகளை தேசியமயமாக்குவது, ஆயுள் காப்பீட்டை தேசியமயமாக்குவது, மன்னர்களுக்கான மானிய ஒழிப்பு ,உணவு ஏற்றுமதியில் கட்டுப்பாடு ,போன்றவை உள்ளடங்கலான பத்து அம்ச திட்டத்தினை அமுல்படுத்தி ஓட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார் இந்திரா  . நாட்டின் இன்றியின்றியமையாத தேவை பசுமைப் புரட்சி எனக்கூறிய இந்திரா தன் மகன் சஞ்சய் காந்திக்கு கார் தயாரிக்கும் உரிமத்தை வழங்கியமை பலத்த சர்ச்சைக்குள்ளானது . அதன்பின் இந்திரா பல விடயங்களில் மூத்த  கட்சி உறுப்பினர்களை முந்திச் சென்றமை ,பல முடிவுகளை எதேச்சாதிகிகாரமாய் எடுத்தமை  போன்றவை காமராஜர் தலைமையில் “திராவிட காங்கிரஸ்” , இந்திரா தலைமையில் “இந்திரா காங்கிரஸ்” என   காங்கிரசை இரண்டாக பிளவுரச் செய்தது .

பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் பிரதமர் இந்திரா காந்தி- புகைப்படவிபரம் -www.thequint.com

மைனாரிட்டி அரசை தொடரவியலாததால் மீண்டுமொரு தேர்தலை எதிர்கொண்டு மூன்றாவது முறையாகவும் தனது  பிரதமர் பதவியை உறுதிசெய்த இந்திரா எடுத்த முடிவு முக்கியமானது. 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானை   வென்றது . உண்மையில் பாகிஸ்தானுக்குள்தான் உள்நாட்டு கலவரம்  வெடித்திருந்தது . அப்போது இந்தியா கிழக்குப் பாகிஸ்தானை ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய  பாகிஸ்தான் இந்தியாமீது போர் தொடுத்தது . இந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி கிழக்குப் பாகிஸ்தானை பிரித்து “வங்கதேசம்” என்ற பெயரில் தனி நாடாக்கியது . சுதந்திர இந்தியா பெற்ற இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வெற்றி இந்திரா காந்தியை அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வைத்தது. ஆம், அணுகுண்டு சோதனையை நிகழ்த்த விரும்பிய பிரதமரின்  விருப்பத்தை அப்படியே பூர்த்தி செய்து கொடுத்தனர் இந்திய விஞ்ஞானிகள். ராஜஸ்தான் மாநிலத்தின் “பொக்ரானில் “நடந்த முதல் அணுகுண்டு சோதனை அண்டை நாடுகள் பலவற்றில் வியப்பை ஏற்படுத்தியது.

வெற்றிக்களிப்பில் இருந்த இந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த சேதி. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி  செல்லுபடியாகாது என அஹமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பானது இந்திராவின் MP பதவியை மட்டுமல்ல பிரதமர் பதவியையே காவு கேட்டது .அதை ஏற்றுக்கொள்ள இந்திரா விரும்பவில்லை. அசாதாரண சூழலை எதிர்கொள்ள, அசாதாரண முடிவை எடுக்க தயாரானார் இந்திரா. அந்த முடிவு  Emergency! தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை, ஒட்டுமொத்த தேசத்துக்குமான நெருக்கடியாக மாற்றும் வகையில் இந்தியாவில் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். எதிர்க்கட்சி தலைவர்கள் தேடித்தேடி கைது செய்யசெய்யப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாயின. ஊடக சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டது. பேச்சு சுதந்திரம் கருத்துக் சுதந்திரம் எல்லாமும் கேள்விக்குறியாயின. எதிர்க்கட்சி தலைவர்கள் மாத்திரமல்ல எதிர்த்துப் பேசுவார்கள் என சந்தேகம் கொண்டவர்களெல்லாம் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக வெளியே வந்துவிடாமல் இருக்க ” மிசா ” சட்டம் பயன்படுத்தப்பட்டது . காரணத்தை சொல்லாமல் கைது செய்யவும் , சிறையில் அடைக்கவும் வழியமைத்துக் கொடுத்தது மிசா . எமர்ஜன்சிகு எதிராக பேசிய தமிழ்நாடு,  குஜராத் அரசுகள் கலைக்கப்பட்டன . 

அரசியல் எதிரிகளை ஒருபக்கம் ஒடுக்கிய இந்திரா காந்தி, அடுத்து சட்ட நெருக்கடியை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினார். எமர்ஜன்சி  அவசரகால சட்டம் போன்றவற்றை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது . நாட்டின் பிரதமர் குடியரசுத் தலைவர் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு கிடையாது, அவற்றை நாடாளுமன்றத்தால்  நியமிக்கப்படும் அமைப்பால் மட்டுமே விசாரிக்க முடியும்.  இந்த சட்டத்தின் மூலம் இந்திரா மீதான அலகமாபாத் தீர்ப்பு செல்லுபடியற்றதாக்கப்பட்டது .

இளமையில் இந்திரா -புகைப்படவிபரம்  karsh.org/indira-gandhi/

அதன்பின் அவர்கொண்டுவந்த இருபது அம்சத் திட்டம் என்பது அவரது அரசியல் எதிரிகளை குறிவைப்பதாகவே பெரும்பாலும்  இருந்தது . எமர்ஜன்சியின்போது நடந்தவை பற்றி தனியாக ஒரு பத்தியே எழுதும் அளவிற்கு சர்வாதிகாரமாக பல தன்னிச்சை முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை எல்லாவற்றுக்கும் இந்திரா காந்தியின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் சஞ்சய் காந்தி.

ஒருவாறு பிரச்சினைகள் எல்லாமும் தீர்ந்தது என்ற நம்பிக்கையில் தேர்தலை அறிவித்தார் இந்திரா. அப்போது இந்திராவை எப்படியாவது பதவியிறக்கியேயாக வேண்டும் என்ற முனைப்பில் இருந்த வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றும் பல்வேறு கட்சிகளும்” இந்திரா எதிர்பு” என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைந்து “ஜனதா கட்சி” உருவானது . தேர்தலில் இந்திரா படுதோல்வியடைந்து பதவியிழந்தார். அடுத்த ட்விட்ஸ் இந்திராவால் புறம்தள்ளப்பட்ட மொரார்ஜி தேசாய் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமரானார். அதன்பின் இந்திராவுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன, அவரது வெற்றிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ஆனால், குறுகிய காலத்துக்குள்ளேயே கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட மொரார்ஜி பதவியிழந்தார். மூன்றாண்டுகால ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்தது. பின் மீண்டும் தேர்தலை சந்தித்த இந்திரா சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்து, தேர்தலில் வென்று நான்காவது தடவையாக பிரதமர் நாற்காலியை கைப்பற்றினார். 

சஞ்சய் காந்தி அமைச்சராக்கப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியபோதுதான், ஓர் விமான விபத்தில் சஞ்சய் அகால மரணமானார்.  இது இந்திராவுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. அந்த இழப்பை ஈடுகட்ட, இளைய மகன் ராஜிவ் காந்தியை அரசியலுக்குள் அழைத்துவந்தார் இந்திரா. இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பிருந்தது. அத்தோடு. அண்டைநாடான இலங்கைப் பிரச்சினையிலும் தலையிட தவறவில்லை இந்திரா. 1983 ஜூலை கலவரம் வெடித்தபோது, அதில் இந்திரா தலையிட முயன்றார் . ஆனால், ஒரு கட்டத்தில் இலங்கை இந்தியாவையும் இந்திராவையும் அலட்சியம் செய்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கத் தயாரானார். இப்படி அண்டை நாட்டுப் பிரச்சினையில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்தபோது, உள்நாட்டு பிரச்சினையொன்று விஸ்வரூபம் எடுத்திருந்தது . 

அது “காலிஸ்தான்” பிரிவினை 1949களில் “முஸ்லீம் லீக்” கட்சி பாகிஸ்தானை தனியாக பிரித்துக்கொண்டபோது, முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்தியா என்றால் சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாபையும் தனியாக பிரித்து தனிநாடாக்கும்படி Jagjit Singh Chouhan தலைமையில் உருவான குழு உற்பட, சீக்கிய குழுக்கள் பலவால் கோரப்பட்டது. இந்த தனிநாட்டுக் கோரிக்கைதான் இப்போது பூதாகாரமாகிப் போயிருந்தது. காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்திருந்த தீவிரவாதக் குழுவின் தலைவனான Jarnail Singh Bhindranwale” தனது அறுநூற்றுக்கும் மேற்பட்ட சகாக்களை அழைத்துக்கொண்டு சீக்கிய பொற்கோவிலினுள் மறைந்திருந்தபோது, “Operation Blue Star” என்கிற ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்தார். இந்த அதிரடித் தாக்குதலில் ராணுவத்தினருடன்  சேர்த்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறத bhindranwale கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட சீக்கியர்களால், இந்திரா ராணுவத்தை கோவிலுக்குள் அனுப்பி அதன் புனிதத் தன்மையை கெடுத்துவிட்டார் என்பதை ஏற்க முடியவில்லை . கடும்கோபமுற்றிருந்த சீக்கியர்களால் இந்திராவின் உயிருக்கு ஆபத்து  நேரும் என்பதை ஊகித்திருந்த பாதுகாப்பு பிரிவினர், இந்திராவின் பாதுகாப்பு பணிகளில் சீக்கியர்கள் இடம்பெறுவதை தவிர்க்க விரும்பினார். ஆனால் இதற்கு இந்திரா உடன்படவில்லை. இறுதியில் பாதுகாப்பு பிரிவினர் எது நடந்துவிடும் என அச்சப்பட்டனரோ, அது நடந்தது.

தனது மெய்பாதுகாப்பாளர்களால் சுட்டுகொள்ளப்பட்ட இந்திராகாந்தி – கற்பனை சித்திரம்- புகைப்படவிபரம்- Twitter.com

ஆம், இந்திராவின் மெய்க்காப்பாளர்களாக இருந்த Satwant Singh மற்றும் Beant Singh என்கிற இரு சீக்கியர்களால் மொத்தம் முப்பது குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரதத்தின் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட இந்திரா, பாகிஸ்தானை பதற வைத்த இந்திரா, போர்க் கப்பலை அனுப்பி மிரட்டிப் பார்த்த அமெரிக்காவையே அதிர வைத்த இந்திரா, அணுகுண்டு சோதனையை நடத்திக்காட்டிய துணிச்சலான இந்திரா, இந்திய நாட்டினுள் பல அதிரடி சீர்திருத்தங்களை அச்சமின்றி செய்த இந்திரா,  சொந்த நாட்டு பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். அவரது வீட்டு வாசலில் வைத்து காலை 9.10மணியளவில் சுடப்பட்ட இந்திராவின் உயிர் பிற்பகல் 2.30 மணியளவில் உடலைவிட்டு பிரிந்தமை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. அகில இந்திய  வானொலியில் மாலை ஆறு மணிக்கு இந்திராவின் மரணச்செய்தி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது . 

ஒரு மாபெரும் சகாப்தம் வீழ்ந்ததை இந்தியா மட்டுமன்றி இந்த உலகமே துயரத்துடன் ஏற்க மறுத்தது….

Related Articles