தாகூரின் காதம்பரி!

ஒரு  கலைஞன் உருவாகுவதற்கு ஒரு இரசிகன் தேவை. உலகம் கொண்டாடுகிற இரவீந்ரநாத் என்ற மகா கவிஞன் உருவாகியது, அவனது முதல் இரசிகையான வெறும் பத்து வயது சிறுமியான காதம்பரி தேவியின் முன்னால் என்று சொன்னால் வரலாற்றை தெரிந்த எவராலும் மறுக்க முடியாது.  மேற்கு வங்கத்தில் இரவீந்ரநாத் தாகூர் ஒரு சகாப்தம்.  வங்க மொழி முழுவதும் அவருடைய பாடல்களாலும், கவிதைகளாளும் நிரம்பி வழிகின்றன. அந்த கவிதைகளின் உயிரோட்டமாக, அடிநாதமாக இருப்பவர்தான் காதம்பரி தேவி.

நோபல் பரிசு பெற்ற அந்த மகாகவிஞனை தெரிந்த அளவு, இந்த உலகத்தில் அவ் மாபெரும் கவிஞனின் கவிதைகள் எங்கும் இழையோடி இருந்த காதம்பரி தேவியைப்பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உண்மையில் யாரிந்த காதம்பரி தேவி?,  இரவீந்திரநாத் தாகூருக்கும், காதம்பரி தேவிக்கும் இடையில் இருந்தது என்ன? காதல்தானா? இல்லை நட்பா? அவர் ஜோராசங்கோ தாகூர் பாரியில் ( தாகூர் பரம்பரையின் மாளிகை)  எவ்வாறு நடத்தப்பட்டார்? அவர் அந்த மாளிகையில் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார்?  அந்த ஆன்மா இந்த உலகில் எதை சொல்ல முயற்சித்தது? இதுவெல்லாம் சேர்ந்ததுதான்  சுமன்  கோஷ் இயக்கிய வங்காள திரைப்படமான காதம்பரி.  காதம்பரி தேவியாக கொங்கனா சென்னும்,  ரவீந்திரநாத் தாகூராக  பரம்பிரதா  சட்டொபாத்யா நடித்திருந்தார்கள்.

திரைப்படத்தில் காதம்பரி தேவியாக  நடித்த கொங்கனா சென்னும் மற்றும்  ரவீந்திரநாத் தாகூராக  பரம்பிரதா  சட்டொபாத்யா படத்தில் காணலாம் – புகைப்படவிபரம்- Indianeagle.com

முதலில் காதம்பரி தேவி யார் என்ற விளக்கமும்,  புரிதலும் அந்த திரைப்படம் ஏன் முக்கியம் என்ற  புரிதலை தரும்.  மேற்கு வங்கத்தில்  நிலப்பிரபு குடும்பமான தாகூரின் குடும்பம் மிகப்பெரியது. செல்வாக்கிலும், அந்தஸ்த்திலும் அதற்கென ஒரு தனியிடம் வங்கத்தில் இருந்தது. அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரும் கல்வியிலும், கலைகளிலும், வியாபாரத்திலும்  இப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அப்படிப்பட்ட அந்த குடும்பத்தில்  தாகூரின் சகோதரரான ஜோதிரிந்திரநாத் என்பவரின் மனைவியே  காதம்பரி தேவி.  காதம்பரி தேவி ஜோராசங்கோ தாகூர் பாரியில் கணக்காளராக இருந்தவரின் மகள் என்கிறார்கள்.   ஜோராசங்கோ மாளிகைக்கு காதம்பரி தேவி திருமணம் முடித்து வருகிறபோது பத்து வயது சிறுமி மாத்திரமே.

திரைப்படத்தில் சிறுமியாக நடித்த காதம்பரி புகைப்படவிபரம்- www.YouTube.com

அந்த சிறுமி முதல் முதல் ஜோராசங்கோ மாளிகையில் காலடி எடுத்து வைத்தது முதல், அவள் மரணித்து அவளது உடல் இவ்வுலகை விட்டு போனது வரை அவளுக்கு முதலில் இருந்த ஒரு பால்யகால ஸ்நேகிதனே ரவீந்திரநாத் தாகூர். தாகூருக்கும் காதம்பரி தேவிக்கும் இரு வயதுகளே வித்தியாசம். தாயை இழந்து சிறு வயதில் மிகப்பெரிய அந்த குடும்பத்தில் கவனிக்க யாருமின்றி இருந்த போது தாயாக, நண்பியாக அவரை உருவாக்கியவள் காதம்பரி தேவி. இடையில் என்ன ஆனது? ஏன் அவளுக்கு அப்படியொரு துர் சம்பவம் நேர்ந்தது?, இது எல்லாவற்றுக்கும் விடையாக இந்த திரைப் படம் இருக்கும் என்று பார்த்தால், அது மீண்டும் மிகப்பெரிய  வினாவையும், சில புரிதல்களையும், சில சுய தேடல்களையும் விட்டு சென்றிருக்கிறது.

காதம்பரி தேவியின் தற்கொலை அவளது வாழ்வில் இருந்த இருவரை குற்றவாளியாக காட்டியது. ஒன்று அவள் கணவன்  ஜோதிரிந்திரநாத். மற்றையது மைத்துனனும், நண்பனுமான இரவீந்திரநாத் தாகூர். இரவீந்திரநாத் தாகூரின் அண்ணன் பற்றிய குறிப்புகள்  அவரை திறமையானவராக காட்டுகிறது.  இரவீந்திரநாத் தாகூருக்கு முன்னதாகவே அவர் மிகச்சிறந்த கலைஞராக  இருந்திருக்கின்றார்.   பிரெஞ்சு ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.  பிரெஞ்சு மொழியில் இருந்து முக்கிய இலக்கியங்களை மொழிபெயர்க்கிற அளவு அவர் இலக்கிய பரிட்சயமும், ஈடுப்பாடும் கொண்டிருந்தார்.  அவர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. கல்கத்தா மியூசியத்தில் இவர் வரைந்த மூல ஓவியங்களை, ஆர்ட்கேலரியில்  காணலாம். ஜோராசங்கோ மாளிகையின் கீழ் தளத்திலும்  இவர் வரைந்த ஓவியங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவர்கள் குடும்ப நூலகத்தில் இல்லாத புத்தகங்கள் இல்லை. நாடகம், இசை, எழுத்து, வியாபாரம், வெளிநாட்டு பயணங்கள் என ஓடிக்கொண்டிருந்த அவருக்கு உண்மையில் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கும் அந்த சிறுமியிடம் நேரம் ஒதுக்கி கவனித்துக்கொள்ள நேரமில்லை. 

காதம்பரி தேவி- புகைப்படவிபரம் -www.Wikipedia.com

இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்தது.  இந்த பிரபு குடும்பத்தில் உள்ள சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், அன்பற்ற ஒரு போலி கௌரவம் நிலவிய  அந்த குடும்பத்தில் கிட்டத்தட்ட ஒரே வயது குழந்தைகளாக வளர்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும், காதம்பரிக்கும் ஏற்புடையதாக இல்லை. எனவேதான் அவர்கள் நல்ல நண்பர்களாக அந்த குடும்பத்தில் வளர தொடங்குகிறார்கள்.  ஆனால் வாழ்நாள் முழுவதும் அது நட்பாக மட்டுமே இருந்ததுவா இது எல்லாம்தான்  இந்த திரைப்படத்தை பிரதானப்படுத்தியது.

கல்கத்தாவில் வாழ்ந்தவர்களுக்கு புரியும் அது எப்படிப்பட்ட உயிர்ப்பு நிறைந்த இடம் என்பது பற்றி, அந்த இரம்மியமான கல்கத்தாவின் பழம்பெரும் நகரத்தில்தான் படம் முழுவதுமாக படமாக்கப்பட்டிருக்கிறது. கங்கை கரை, ஜோராசங்கோ தாகூர் பாரி, வங்க கலாச்சாரம், அந்த சடங்கு சம்பிரதாயம், நடிப்பு எல்லாம் அபாரம்.  வங்க மொழி தேன்போன்ற இனிமையானது என சொல்வார்கள். அதை நிரூபிக்கும் வகையில் மனதை உருக்கும் பாடல்கள். ஆனால் ஓரே ஒரு குறை கொங்கனா சென் நடித்த அளவு, கதாநாயகன் நடித்தார், ஆனால் இந்த அவருடைய ஆடைகள் அல்லது ஏதோவொன்று ஒட்டவில்லை. ஆனால் ரவி பாத்திரத்திற்கு உயரமும் கம்பீரமும் சேர்ந்த நடிகர் பொருத்தமானவராகவே இருந்தார்.

இன்றும் ஜோராசங்கோ மாளிகைக்கு வருபவர்கள் முதலில் தேடுவது காதம்பரி தேவியின் புகைப்படத்தையும், அவரது அறையையுமே. ஆனால் இது இரண்டிலும் ஒரு மூடியத்தன்மை காணப்படுகிறது. அவ்வளவு பெரிய மாளிகையில் காதம்பரி தேவியின் ஒரு படம் கூட இல்லை என்பதே பெரும் துயர். ஒரே ஒரு படம் அதுவும் ஒரு பக்கம் சரிந்தவாறு தெளிவற்றது. மற்றையது அந்த அறை. இன்று நூற்றாண்டுகள் ஆகியும் மூடப்பட்டே இருக்கின்றன. காதம்பரி தேவி பற்றிய விடயங்களில் தாகூர் குடும்பம் ஒருவித மூடிய தன்மையோடு நடந்தது.  காதம்பரி தேவியின் உடல்கூட அங்கிருந்து எடுத்துச்செல்ல கொடுக்கப்படவில்லை. பணம்கொடுத்து வீட்டுக்கு ஆட்களை கொண்டுவந்தே எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. பாடத்தில் கூட மிகுந்த தனிமையிலும், துயரிலும் வாழ்ந்த பெண்ணாகவே அவள் கட்டப்பட்டாள்.  தாகூர் குடும்பத்திற்குள் மிகப்பெரிய அரசியலும், சதியும் நடந்தன அதுதான் அவளை தற்கொலைக்கு தூண்டியது என சொல்வார்கள்.

 காதம்பரி தேவியும் இரவீந்திரநாத் தாகூரும் – புகைப்படவிபரம் –www.newsin.asia

குடும்பத்தில் சர்ச்சைகளுக்கும், போட்டி பொறாமை, பழிவாங்கும் தன்மை என்பவற்றுக்கு பஞ்சம் இல்லை. தாகூர் குடும்ப பெண்கள் படித்தார்கள், கலைசார்ந்து ஈடுப்பட்டார்கள் என சொல்லப்பட்டாலும் அவர்களுக்கு ஆண்களை போன்ற சுதந்திரமும், விடுதலையும் இருக்கவில்லை. அதனால் குடும்ப பிரச்சினைகள், தனிமை, சூழ்ச்சி என்பன வெகுவாக அவர்களை தாக்கின. குறிப்பாக காதம்பரி தேவி விடயத்தில். ஒட்டுமொத்த குடும்பமும் அவளிடம் ஒரு பாகுபாட்டை காட்டியது. அவள் நேசித்து வளர்த்த குழந்தை ஒன்றும் அவள் கையால் இறந்துவிடுகிறது. கணவனும் வியாபாரம், நாடகம், வேறு பெண்கள் என ஓடுக்கொண்டேயிருக்கிறார். ஓரே ஆறுதலாக இருந்த ரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கி பழகுவதும் அந்த குடும்ப பெண்களால் விமர்சிக்கப்பட காரணமாகியது. திடீரென ரவீந்திரநாத் தாகூருக்கும் மிருணாளினி எனும் பத்து வயது பெண்ணுக்கும் செய்துவைக்கிற திருமணம் என்பன அவளை வெகுவாக மனதளவில் தாக்கியது. நண்பனாக இருந்த ஒரு துணையும் அந்த வீட்டில் இருந்து சென்றுவிடுகிறது. தொடர்ந்து அந்த மாளிகையில் புறக்கணிக்கப்பட்ட தன்மை என்பன அவளை தற்கொலைக்கு தூண்டுகிறது.

தாகூரின் திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் அவள் அவளது அறையில் விஷம் குடித்து இறந்துவிடுகிறாள்.  அவள் மரணித்த போது நன்றாக ஆடையணிந்து தன்னை அலங்கரித்துக்கொண்டு அவள் கணவனுக்காகத்தான் காத்திருக்கிறாள். இடையில் ஒரு கடிதம் அவளுக்கு கிடைக்கிறது. அதில் என்ன எழுதி இருந்தது? உயிரை மாய்த்துக்கொள்கிற அளவு என்ன அதில் அடங்கியிருந்தது. எல்லாமே அமானுஷ்யமானதாக காதம்பரி தேவி வாழ்க்கை காணப்படுகிறது.

காதம்பரி திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி -புகைப்படவிபரம்- www.YouTube.com

இரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்களிலும், கவிதைகளிலும், ஓவியங்களிலும் மதிப்பிற்குரிய தேவதையாக காதம்பரி தேவி இருந்தார். காதம்பரி தேவி தொடர்பாக  வங்க எழுத்தாளர் கங்கோபாத்யாயா தனது Pratham Alo என்ற நாவலில் விரிவாக எழுதியிருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் “சிதைந்த கூடு” என்ற கதை காதம்பரி தேவியை பற்றியது என சொல்வார்கள்.  இதை ஆதாரமாக வைத்தே சத்யஜித் ரேயின்  “ சாருலதா “ திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படி எண்ணற்ற படைப்புகள் வந்தாலும் வரலாற்றில் ஒரு மென்சோகமான புதிராக காதம்பரி தேவி இருக்கிறார்.  வங்க திரைப்படங்கள் தனித்துவமானவை. அதில் இந்த காதம்பரி என்ற திரைப்படம், அதில் காதம்பரியாக நடித்திருந்த கொங்கனா சென், 

கல்கத்தா நகர். இனிமையான வங்க மொழி பாடல்கள் என மிக அருமையான திரைப்படமே சுமன் கோஷ் இயக்கியகாதம்பரி “. திரைப்படம்.

Related Articles