Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் சாரமணிந்த விமானி

அன்று 1952ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் ஒருநாள் காலை. மனிதரொருவர் பயத்தோடும், வெட்கத்தோடும் தயங்கி தயங்கி இரத்மலானை விமான நிலையத்திலுள்ள விமானவியல் கல்வி நிலையத்தில் நுழைகின்றார். அவரை பார்த்தால் 40 வயதை தாண்டியவர் போல தோற்றம்.பாரம்பரிய சிங்கள முதலாளிமார் அணிவது போல சாரம், பெல்ட், சட்டை, கோட் அணிந்திருந்ததோடு Shoe அணியாதவராகவும் இருந்தார். அவரின் தலைக்கு பின்னால் குடுமியொன்றும் நீட்டிக்கொண்டிருந்தது.அவருடைய பெயர் பௌலிஸ் அப்புஹாமி. அவர் ஒன்றும் அங்கு விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருக்கவில்லை. மாறாக அவர் தானும் விமானமோட்ட கற்றுக் கொள்ளவே வந்திருந்தார். அன்றுதான் அவருக்கு முதலாவது பயிற்சி நாள்.

விமானம் ஓட்டுவதற்கு பொருத்தமான உடையணிந்து, தாடி மீசையை கிளீன்ஷேவ் செய்து, பளபளப்பான முகங்களுடனும், நுனிநாக்கில் ஆங்கிலத்தோடும், இலங்கையின் பிரபல்யமான பாடசாலைகளில் கற்ற, உயர் குடும்பத்து பிள்ளைகளான அவரது சகமாணவர்களை விட வயதில் பாரியளவு வித்தியாசமும், மருந்துக்கும் வாயில் ஆங்கிலம் நுழையாத, பின்தங்கிய கிராமத்தானின் தோற்றத்தோடும் இருந்த தம்மோடு சரிக்கு சமமாக விமானம் ஓட்ட கற்றுக்கொள்ள வந்ததை அவரது சக மாணவர்கள் வித்தியாசமான கண்ணோட்டத்திலேயே பார்த்தனர்.

அன்றைய காலத்தில் இலங்கையின் விமானவியல் துறையானது முழுமையாக உயர்தர பாடசாலைகளில் கற்ற,வசதிபடைத்த குடும்பத்தவர்களுக்கே உரியது என்ற எழுதப்படாத விதி இருந்தது. இதன் காரணமாகவே விமானமோட்ட கற்றுக்கொள்ள வந்த நாட்டுப்புற தோற்றத்திலிருந்த Paulis Appuhamy பலரின் வேறுபட்ட பார்வைகளுக்கும், கேலிப்பேச்சுகளுக்கும் உள்ளானதில்  வியப்பேதுமில்லைதான்.

தன்னை நோக்கிவரும் கேலிப்பேச்சுக்களை அறிந்துகொண்ட பௌலிஸ் அப்புஹாமி  (Paulis Appuhamy) அவற்றை கேட்டும் கேட்காதது போல நடந்துகொண்டார்.நீங்கள் எல்லோரும் எண்ணக்கூடும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த அப்புகாமிக்கு தானும் விமானம் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போது, எப்படி வந்தது என்று?

சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் தனது மூத்த மகனான விஜித குமார விமானங்கள் பறப்பதை பார்க்க ஆசைப்பட்டதனால் அவனை இரத்மலானை விமான நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அங்கே பாரிய இயந்திரங்களாலான விமானங்கள் வானத்தில் பறப்பதைப் பார்த்து பிரமிப்படைந்த பௌலிஸ் அப்புஹாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனே அங்கிருந்த பயிற்சி கல்லூரி பயிற்சியாளர்களில் ஒருவரை அணுகி சிங்கள மொழியில் தயக்கத்துடன் “எனக்கும் விமானத்தை ஓட்ட ஆசையாக உள்ளது. எனக்கு உங்களால் கற்பித்துத்தர முடியுமா?” என கண்களில் எதிர்பார்ப்புக்கள் மின்ன கேட்டார்.

இதைக் கேட்டவுடனே ஆச்சரியமடைந்த பயிற்சியாளர் பௌலிஸ் அப்புஹாமியை கேள்விக்குறியுடன் ஏற இறங்க ஒருவித பார்வை பார்த்தவர் “தலையில் குடுமியை வைத்துக்கொண்டு உன்னால் எப்படி விமானத்தை ஓட்ட முடியும்? “என வினவினார். ஏனெனில் அன்றைய காலத்தில் விமானம் ஓட்டும் பயிற்சியாளர்களும் மாணவர்களும் ஹெட்போன் இணைக்கப்பட்ட இறுக்கமான ஹெல்மெட் அணிந்தே ஓட்டுவர். அவ்வாறான ஹெல்மெட்கள் விமானத்தில் பறக்கும் போது ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டன.

பௌலிஸ் அப்புஹாமி (இடது) – புகைப்படவிபரம் -CeylonGuide.com

இதனால் தலையில் குடுமியுடன் ஹெல்மெட் அணிய கடினமாக இருக்கும் என்பதை பயிற்சியாளர் கூறியபோது அதை காதில் வாங்கிக்கொள்ளாத Appuhamy உடனே “குடுமி இருப்பது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் இப்போதும் கூட பறப்பதற்கு ஆவலாக இருக்கின்றேன்” என உறுதியாக பதில் கூறினார்.

பௌலிஸ் அப்புஹாமி அவ்வாறு கூறியதை கேட்டபோதும் கூட பயிற்சியாளருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அவரின் மனதில் வேறு சில எண்ணங்களும் ஓடிக்கொண்டிருந்தன. “ஹெல்மெட் அணிவதற்கு கஷ்டமான ஒரு சூழ்நிலை இருப்பதற்கு மேலதிகமாக விமானம் ஓட்டும்போது சாரம் அணிந்திருத்தல் விமானம் ஓட்டுவதற்கு சிரமமானதொரு விடயமாகும். மேலும் ஆங்கிலத்தின் வாடையே இல்லாத ஒருவருக்கு வகுப்பறையிலும் விமானத்தில் பறக்கும் போதும் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்? என்பதோடு விமானம் ஓட்ட கற்றுக் கொள்ளும் எல்லா மாணவர்களும் கற்கும் கடினமான பாடங்களை எவ்வாறு அவரால் கற்றுக்கொள்ள முடியும்?” என்றும் யோசித்தார்.

Appuhamyயை சிறியதொரு விமானத்தில் சுற்றிக்காட்டிய பின் பௌலிஸ் அப்புஹாமி சாதாரண தோற்றமுடையவராக இருந்தபோதிலும் விமானம் ஓட்ட கற்றுக் கொள்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க கூடியதொரு ஆர்வமுள்ள மனிதர் என்பது பயிற்சியாளருக்கு தெளிவாக புரிந்தது. அதுமட்டுமன்றி அவருக்கு இயந்திர தொழில்நுட்பங்கள் பற்றிய பரந்தளவானதொரு அறிவு இருப்பதையும் பயிற்சியாளர் அறிந்து கொண்டார்.

உடனே பௌலிஸ் அப்புஹாமியை பயிற்சியாளர் பிரதான பயிற்சியாளரான C.H.S. அமரசேகரவிடமும் மற்றொரு பயிற்சியாளரான சுசந்த ஜெயசேகரவிடமும் அறிமுகப்படுத்தினார். பயிற்சி கல்லூரியில் உள்ள மற்ற மாணவர்களை விட எந்த அனுபவமும் இல்லாத கிராமத்தவரான Appuhamyயிடத்தில் அதீத திறமை ஒளிந்திருப்பதை இருவரும் புரிந்துகொண்டனர். எனவே அவருக்கு பறப்பதற்கான பயிற்சியை வழங்குவதற்கு இருவரும் தீர்மானித்தனர்.

ஆனால் அவர்கள் அன்றைய சமயத்தில் Appuhamyன் எளிமையான தோற்றம், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது பற்றி மட்டுமே அறிந்திருந்தனரே தவிர அவர் ஒரு பெருமைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது பற்றியோ, அவர் தனது தொழிலில் சிறந்து விளங்கியவராகவும், மரியாதைக்குரியவராகவும் இருந்தது பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

1905 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல என்ற ஊரில் பிறந்த Appuhamy தன் சிறுவயதில் இயந்திரங்களை கையாள்வதில் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். மேலும் அவருடைய கிராமம் ஒரு பின்தங்கியதாக இருந்த போதிலும் அவருடைய குடும்ப நண்பரான D.C சேனாநாயக்கவின் உதவியால் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிட்டியது.

பின்பு தன் தந்தையின் பஸ் நிறுவனத்தை பொறுப்பேற்றார். அவருடைய காலத்தில் அவரிடம் இருந்த 36 பஸ்கள் கொழும்பு,கண்டி, குருநாகல்,ஹங்வெல்ல போன்ற இலங்கையின் பல முக்கிய நகரங்களுக்கும் செயற்பட்டன.

1940களில் அன்று “பஸ் முதலாளி” என மக்களால் அறியப்பட்டிருந்த பௌலிஸ் அப்புஹாமி தன்னை விட பல வருடங்கள் இளமையான 17வயது பெண்ணை திருமணம் செய்தார்.

பௌலிஸ் அப்புஹாமிக்கு வழங்கப்பட்ட விமான ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் புகைப்பட விபரம் -groups.google.com

தன் திருமண வாழ்க்கை பற்றி Appuhamyன் மனைவி கூறும் போது “தாம் உடல் ரீதியாக முழுமை பெற்றிருந்த போதிலும் மனதளவில் தான் ஒரு குழந்தையாகவே இருந்தேன். இதன் காரணமாக என்னுடைய பெற்றோர் என்னை மேலும் இரண்டு வருடங்கள் தம்முடனே வீட்டில் வைத்திருந்தனர். இக்காலப்பகுதியில் எனக்கு இரண்டு மகன்களும் 2 மகள்களும் கிடைத்தனர்” என்றார்.

Appuhamyன் பஸ் நிறுவனம் புகழ் பெற்று முன்னேறியிருந்த காலப்பகுதியில் அவர் தன்னிடமுள்ள இயந்திரங்கள் மீதான திறமையை தன் பஸ்கள், தன்வீட்டு மோட்டார் கார்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் மீது பிரயோகித்து பார்த்தார்.

அதுமட்டுமன்றி அவருக்கு Photography மீதும் ஆர்வமும் திறமையும் இருந்தது மட்டுமின்றி, அரிதானதும் விலை உயர்ந்ததுமான கேமராக்களை சேகரிப்பதிலும் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது.

அதே நேரத்தில் இயந்திரங்கள் தொடர்பாக அவருக்கு இருந்த தேர்ச்சி காரணமாக அவருக்கு விமானம் ஓட்டுதலை பற்றி இலகுவாக கற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.

ஆங்கிலம் தெரியாத, சாரம் அணிந்த, குடுமியுடனான சாதாரண ஒரு மனிதனான பௌலிஸ் அப்புஹாமி விமானத்தை செலுத்த அதீத முனைப்புடனும், திறமையுடனும் செயல்பட்டது பயிற்சியாளர்களில் ஒருவரான ஜெயசேகரவை அதிகம் கவர்ந்துவிட்டது. இதுபற்றி அவர் கூறும்போது “எனது குடுமி விமானம் ஓட்டுவதற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்கவில்லை” என Appuhamy கூறியதாக தெரிவித்தார்.

தன் முதல் நாள் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அப்புஹாமி தன் மனைவியைப் பார்த்து “நான் பறப்பதற்கு பயப்படவில்லை நான் நிச்சயம் Licenseஐ பெறுவேன்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காட்டினார்.விமானத்தை திறமையான முறையில் செலுத்தி தனக்கான Licenseஐ 1953ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் திகதி பெற்றுக்கொண்டார். அன்றையநாள் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் அடையாளமாக தனது பயிற்சியாளருக்கு சிங்கள முறைப்படி வெற்றிலை வழங்கி அவரை கௌரவித்தார்.

விமானத்தை செலுத்துவதற்கு அவர் தேர்ச்சியடைந்த பின்பு Tigermoth விமானங்களுக்கு பதிலாக அதிக முன்னேற்றதரத்தையுடைய Chipmunk விமானங்களை செலுத்துவதற்கு முன்னேறியதோடு மட்டுமல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லுமளவிற்கும் முன்னேறினார்.

அவர் அடிக்கடி தனது மகனான விஜித குமாரவை விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறப்பார். அவ்வாறு செல்லும்போது ஒருநாள் எதிர்பாராதவிதமாக பயண வழிப்பாதை தவறிவிட்டது. என்றாலும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்ட அப்புஹாமி புத்தளம் பாலாவியிலுள்ள விமான ஓடுதளத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கினார்.

இருவரையும் காணாது பயத்திலிருந்த இரத்மலானை பயிற்சி நிலையத்தில் இருந்தவர்கள் இருவரையும் தேடி மற்றொரு விமானத்தை அனுப்ப தயாராகிக்கொண்டிருந்தபோது இருவரும் Chipmunk விமானத்தில் பத்திரமாக திரும்பினர். அதுவரை பதைபதைத்துக் கொண்டிருந்த பயிற்சிநிலைய அதிகாரிகளுக்கும் முக்கியமாக Appuhamyன் மனைவிக்கும் அப்போதுதான் உயிர் திரும்ப வந்தது என்று கூற வேண்டும்.

Appuhamyன் மனைவிக்கு தன் கணவனுக்கு விமானங்கள் மீது புதிதாக ஏற்பட்டுள்ள எல்லையில்லா காதலை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது. இந்தக்கவலையானது அவள் தன் கணவனுடன் அவனின் பயிற்சி வகுப்பிற்கு வந்திருந்தபோது Tigermoth விமானமொன்று பயங்கர விபத்துக்குள்ளானதை கண்டபோது இன்னும் அதிகமானது. என்றாலும் அவள் தன்னுடைய கணவனின் ஆசைகளுக்கு தடையாக இருக்கவில்லை. தன் கணவனின் விமானத்தை செலுத்த வேண்டுமென்ற ஆசைக்கு ஆதரவாகவே அவள் செயற்பட்டாள்.

இதன் காரணமாக 1953ஆம் ஆண்டு தனியாக விமானத்தை செலுத்துவதற்கான விமானங்களை பெற்ற விமானிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழாவில் பிரதம அதிதியாக வந்த அன்றைய போக்குவரத்து அமைச்சரும் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக செயற்பட்டவருமான சேர் ஜோன் கொத்தலாவலையை வெற்றிலை வழங்கி வரவேற்பதற்காக Appuhamyன் மனைவியே நியமிக்கப்பட்டாள்.

Appuhamy விமானங்களை ஓட்டுவதை விரும்பிய போதும் தன் பஸ் நிறுவனத்தை முழுமையாக கைவிட்டுவிடவில்லை. இதனால் விமானம் ஓட்டுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டவர் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் விமானம் ஓட்டுவதிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டார்.

பௌலிஸ் அப்புஹாமிக்கு அனுமதி வழங்கப்பட்ட  Tiger Moth biplane விமானத்தின் மாதிரி புகைப்பட விபரம்  Aviationwa.com

Appuhamy தன் பஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருந்த வேளை அவரை நிலைகுலைய வைக்கும் வகையில் செய்தியொன்று அவருக்கு வந்தது. “இலங்கை தேசிய போக்குவரத்து சபையை ஆரம்பிப்பதற்காக இலங்கையில் உள்ள தனியார் பஸ்கள் அனைத்தும் 1958 ஜனவரி முதலாம் திகதி முதல் தேசிய மயமாக்கப்படுவதாக” அப்போதைய இலங்கையின் பிரதமரான S.W.R.D. பண்டாரநாயக்க திடீரென அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

பண்டாரநாயக்கவின் பரம்பரை சொத்தான ஹொரகொல்லையிலுள்ள பங்களா அத்தனகல்லவிற்கு மிக நெருக்கமாகவே உள்ளதோடு பண்டாரநாயக்கவும் Appuhamyம் சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

தன் பால்யகால நண்பன் திடீர் அறிவிப்பை வெளியிட்டு தன் குடும்ப வியாபாரமான பஸ் நிறுவனத்தை பறித்ததோடல்லாமல் தனக்கு அதற்காக வேண்டி எந்தவித இழப்பீடும் வழங்காமல் இருந்தது அவருக்கு தொண்டையில் சிக்கிய முள் போல வேதனையளித்தது. இதன் காரணமாக பிரதமருக்கும் அப்புஹாமிக்குமிடையிலான உறவானது அறுந்துபோனது.

பின்தங்கியதொரு கிராமத்திலிருந்து வந்து தனது உயர்தரமான சிந்தனைகளால் தன்னை முழுமை பெறச்செய்து தன் முன்னாலிருந்த அனைத்து தடைகளையும் தகர்த்து விட்டு தன் இலட்சியத்தை அடைய உத்வேகத்துடன் செயற்பட்ட Appuhamy கவலைக்குரிய விடயமாக 1963ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். என்றாலும் அதன் பிறகும் பத்து வருடங்கள் உயிர்வாழ்ந்த பௌலிஸ் அப்புஹாமி1973 பெப்ரவரி 23ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்துசென்றார்.

அப்புஹாமி தற்போது உயிரோடில்லையாயினும் இலங்கையின் ஆங்கிலம் பேசத்தெரியாத, சாரம் அணிந்த முதல் விமானி என்ற வகையில் இன்றும் நினைவு கூரப்படுகின்றார்.

Appuhamyன் கதையானது இலங்கையர்கள் தமது இலக்குகளையும், சாதனைகளையும் அடைவதற்காக வேண்டி தம் முன்னால் வரும் தடங்கல்கள்,தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு முன்னேறிச்செல்வதற்கு ஊக்கப்படுத்துமொரு கதையாகும்.

Related Articles