பிரமிட் திட்டங்கள் (Pyramid schemes) மற்றும் network marketing சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்

“அதிக வேலைப்பளு இல்லாமல் கைநிறைய சம்பாதிக்கும் முறை ஒன்று உள்ளது இணைகிறீர்களா?” இவ்வாறு யாரும் உங்களை அணுகிய அனுபவம்  உண்டா? இக்  கேள்விகளுக்கு பதில் தருமுன் அது  இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒன்றான பிரமிட் திட்டங்களில் ஒன்றா என்பது குறித்து அவதானத்துடன் செயல் பட வேண்டியது அவசியம் ஆகும்.

இலங்கையில் பிரமிட் திட்டங்கள் தடைசெய்யப்பட்டவை  என்று எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் தெரிந்தும் சிலர் தெரியாமலும் இந்த வலைக்குள் தினம் தினம் விழுந்து கொண்டு தான் இருக்கிறோம். அனேகமாக இல்லத்தரசிகளையும் பணத்தேவை உடையோரையும் தனது வலைக்குள் இலகுவாக வீழ்த்தி தனது இலக்கு பணம் சேர்ந்ததும் மொத்த பணத்தையும் வாரி சுருட்டி கொண்டு ஓடி விடும் வழக்கம் கொண்டது தான் இந்த பிரமிட் திட்டம். 

பிரமிட் திட்டம் என்றால் என்ன? எவ்வாறு செயற்படுகின்றது

ஒரு திட்டத்தில் நாம் குறித்தளவு பணமுதலீடு செய்து இணைந்து அதில் மற்றவர்களை இணைப்பதன் மூலம் ஒரு பங்கு வருமானத்தையும் பெறுவோம், இதில் புதிதாக இணையும் நபரும் குறித்த முதலீட்டினை மேற்கொண்டு அவருக்கு கீழ் மேலும் சிலரை இணைப்பார் இதற்கு அவருக்கும் அவரை இணைத்தவருக்கும் ஒரு விகித வருமானம் கிடைக்கும். முதல் நபர் இருவரை சேர்க்க அவர்கள்  தலா நால்வரை சேர்க்க என காலப்போக்கில் இதன் சங்கிலி வடிவான கட்டமைப்பு வளர்ந்து செல்கின்றது. பிரமிட் வடிவத்தை ஒத்திருப்பதால் இது பிரமிட் திட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

பிரமிட் திட்டங்களில் இரு வகை உண்டு. ஒன்று பொருள் விற்பனை (Product based pyramid system) சார்ந்தது மற்றது ஆள்சேர்ப்பு முறை (Naked pyramid scheme) சார்ந்தது. பொருள் விற்பனை   சார்ந்த முறையில் பெரும்பாலும் இணையும் அங்கத்தவர் சகாய விலையில் ஏதேனும் பொருளினை பெற்று இணைய வேண்டும் இதன் மூலம் அவருக்கு பொருட்களை ஏனையவர்களுக்கு விற்கும் உரிமையும் புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் உரிமையும் கிடைக்கும்.

புகைப்பட உதவி:Google Image 

ஆள்சேர்ப்பு முறையில் (Refferals) இணைபவர் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை முதலீடு செய்து இணைவார். அவருக்கு கீழ் இணைபவர்களும் (Referral) முதலீடு செய்ய  வேண்டும் பெரும்பாலும் ஒன்லைன் மூல திட்டங்களில் அவர்களுக்கு விளம்பரங்களை பார்வை இடல் போன்ற மிகச்சிறிய பணிகள் (Tasks) தரப்படுகின்றன. அதற்கு ஒரு  தொகை ஊதியமும் வழங்கப்படுகின்றது இத்தொகை விகிதம்  அடுத்த கட்டங்களுக்கு செல்ல அதிகரிக்கின்றது அடுத்த கட்டத்திற்கு  செல்ல முதலில் அவருக்கு கீழ் குறித்தளவு அங்கத்தவர்கள் இணைய வேண்டும் பின்னர் அடுத்த முதலீட்டையும் மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் . அதன் பின் பிரமிட் அமைப்பில் இவரது கீழ் அல்லது குழுவில் ஒவ்வொரு அங்கத்தவர் இணையும் போதும் இவருக்கான வருமானம் அதிகரிக்கும்.

பிரமிட்  திட்டங்களுக்கு எதிரான சட்ட அணுகுமுறைகள்

பொருளாதார ரீதியான பாதிப்புகளையொட்டி இலங்கையில் இவ்வகை திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வங்கிசட்டம் 1988 இல 30 இன் படி ‘பணம் அல்லது பணத்துக்கு சமானமான முதலீடுகளை மேற்கொண்டு அங்கத்தவர்கள் ,மேலதிக அங்கத்தவர்களை இணைத்தல் மற்றும் அங்கத்தவர்களின் பங்களிப்பு பெறுமதியை அதிகரித்தல் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் எந்தவொரு நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடங்குதல், வழங்குதல், விளம்பரப்படுத்தல், நிதியளித்தல், நிர்வகித்தல் அல்லது இயக்குதல் போன்றவற்றை செய்ய முடியாது என்ற ரீதியில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இச் சட்டத்தை மீறினார் என ஒருவர் நிரூபிக்கப்படுமிடத்து 1000000 /= க்கு குறைந்த தண்டப்பணமும் மூன்று வருடங்களுக்கு குறையாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.

அத்துடன் இச்சட்டம் இணைபவரையும் சாரும் என தெரிந்தே இதனை செய்பவர்களுக்கு மூன்று வருடத்திற்கு குறையாத 5 வருடங்களிற்கு மேற்படாத கடுங்காவல் தண்டனையும் 2000000 ரூபாய்களுக்கு குறையாத அல்லது அங்கத்தவர்களின் முதலீட்டு மதிப்பீட்டு தொகைக்கு இரு மடங்கான தொகை இரண்டில் பெரிய தொகையினை செலுத்த வேண்டும்.

அத்துடன் மேற்குறித்த சட்ட அத்துமீறல் ஆனது “சட்டவிரோத நடவடிக்கை” என பணமோசடி தடுப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறான திட்டங்கள் மூலம்  வருமானம் ஈட்டியவரின் நிதி , பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி சட்டத்தின் மூலம் பறிமுதல் செய்யப்படும்.

பேராசையை தூண்டல், நம்பிக்கையை ஏற்படுத்தல், பாமர மக்களிடையே பண விரக்திக்கு நிவாரணமளித்தல் போன்ற செயல்பாடுகளின் மூலமே  இவ்வாறான திட்டங்கள் மக்களிடையே பிரபலம் அடைகின்றன. பணத்தேவையை உழலும் மக்கள் இவ்வாறான திட்டங்கள் தம்மை இலகுவில் பணக்காரர் ஆக்கி விடும் தனது தேவைகளை நிவர்த்தி செய்யும் என நம்பி இணைகிறார்கள். பின்னர் தன் நெருங்கிய வட்டாரத்திற்கும் இதனை அறிமுகம் செய்கிறார்கள்.

சில தந்திர விளம்பரதாரிகள் அங்கத்தவர் சார்பாக முதலீடு செய்து பின்னர் அதனை வசூலிக்கிறார்கள். 

பெரும்பாலும் இவர்கள் உலகத்தரத்திலான சில நிறுவனங்கள், விற்பனை தளங்களின் பெயர்களை பயன்படுத்தி மக்களை கவர்ந்து தங்கள் திட்டங்களின்பால் திசை திருப்பி இலாபமடைகின்றனர். கவர்ச்சிகரமான அனுகூலங்களை கொண்டதாக காட்டப்படும் இத்திட்டங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சரிவை சந்திக்க ஆரம்பிக்கும் அப்போது மேல்நிலையில் உள்ளவர்கள் லாபம் பார்க்க புதிதாக இணைந்தவர்கள் பணத்தை இழந்து தவிப்பர்.

இவை சரிவை சந்திக்க காரணங்கள்

இலங்கை போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் பிரமிட் திட்டங்களின் ஆயுள் காலம் குறைவாகும். குறிப்பிட்டளவு அங்கத்தவர்கள் இணைந்த பின் இதன் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும். திட்டம் சரிவடைந்து பெரும்பாலானோர் முதலீடு பணத்தையும் இழப்பர்.

புகைப்பட உதவி:Google Image 

இவ்வாறான திட்டங்களில் எந்த ஒரு புது நிதியும் உருவாக்கப்படுவதில்லை. இணைபவர் செலுத்தும் கட்டணமே சுழற்சியில் இன்னொருவருக்கு வருமானம் ஆகின்றது.  இதன்போது முதலில் இணைந்தவர் பெருமளவில் இலாபமடைகின்றனர். பிரமிட் இன்  கீழ்நிலை முதலீட்டாளர்கள் முதலீடை இழக்கிறார்கள்.

சமூகத்தில் ஏற்கனவே இது பற்றிய விழிப்புணர்வுகள் இருந்தும் மீண்டும் மீண்டும் இவ்வகை திட்டங்கள் தோன்ற சில காரணங்கள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளாக தன்னை தானே குற்றவாளியாக்கிக்கொண்டு  தான் ஏமாந்து விட்டோம் என வெளியே சொல்ல வெட்கப்பட்டு அமைதியாக இருந்து விடுகின்றனர்.

ஆனாலும் கூட இம்முறைகளில், கீழ்நிலை அங்கத்தவர்கள் ஒருவர் வெளியேற இன்னொருவர் இணைதல் என பதிலீடு செய்யப்பட்டுக்கொண்டே இருப்பர்.

பெரும்பாலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பவர்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவர்களின்  துணையுடன் இவற்றை முன்னெடுக்கின்றனர். இவ்வகை மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகளவில் அங்கத்தவர்களை சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு இலாபம் ஈட்டுகின்றனர் இவர்கள் புதுப்புது திட்டங்களையும் யுக்திகளையும் கையாண்டு இவற்றின் உண்மை தன்மையை இலகுவில் உணர முடியாதபடி சிக்கல் தன்மையை உண்டாக்குகின்றனர்.

சமூகம் சார்ந்த பாதிப்புகள்

இவ்வாறான திட்டங்களில் இணையும் பொதுவாக 90% – 99 % மக்கள் முதலீட்டை இழக்கின்றனர். இணையும் குழு அயலவர்களையும் உறவினர் நண்பர்களையும் கொண்டதாகவே அமையும். திடம் சரியும் போது இவர்களுக்குள்ளே நம்பிக்கை குறைந்து தர்க்கம் ஆரம்பிக்கின்றது. இவை பல குடும்பங்களில் அமைதியின்மையையும் சிலவேளைகளில் தற்கொலைகளையும் ஏற்படுத்துகின்றன.

பொருளாதார ஸ்தீரத்தன்மை இல்லாதவர்களே அதிகமாக இவற்றில் இணைகின்றனர். முதலீட்டு பணமும் அனேகமாக கடனாகவே அமைகின்றது. இவர்கள் முதலீடு இழக்கும் போது கடன் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.

முதலீடு வெளிநாட்டு நாணயங்களில் செலுத்தப்படும் எனில் இவை பாரிய அளவில் இடம்பெறும் போது நாணய மாற்று விகிதத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு  நாட்டின் அந்நிய செலாவணி இருப்பிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். 

இவற்றில் இணைபவர்கள் இத்திட்டம் மூலம் தனக்கு கிடைக்கப்போகும் எதிர்கால வருமானத்தை நம்பி தனது தேவைகளையும் பொருள் நுகர்வையும் அதிகரித்தது கொள்கின்றனர் இதனால் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் அதே சமயம் பணவீக்கத்துக்கும் காரணம் ஆகிறது. ஆயினும்  திட்டம் சரிய பழையபடி கேள்வி குறைந்து விற்பனையாளர்கள் நஷ்டம் அடைகின்றனர்.

பிரமிட் திட்டங்கள் மக்களின் சேமிப்பை சுரண்டி தனது முதலீடாக உள்வாங்கி கொள்கின்றன. அத்துடன் நேரம் மற்றும் மனித வள விரயத்தையும் உண்டாக்குகின்றன.

இவ்வாறான திட்டங்களை அடையாளம் காணுவது எப்படி?

சிறு முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம் என வருபவர்களிடம் அவதானமாக இருக்கவும், அவர்கள் பெரும்பாலும் தான் அறிந்ததை கூறாமல் நயவஞ்சகமாக மயக்கி திட்டத்தில் இணைத்து விடுவதை நோக்கமாக கொண்டவர்கள். இறுதியில் பண இழப்பு மட்டுமன்றி சட்டத்தின் முன் குற்றவாளியாகவும் இருக்க நேரிடும்.

சந்தை விலைக்கு முரணான விலையில் பொருள் விற்பனை, சலுகைகள், புதிய விற்பனையாளரை இணைப்பதற்கு வெகுமதிகள் என காட்டப்படும் திட்டங்களில் இணைய வேண்டாம்.   

கீழ்நிலை (Downline) எண்ணிக்கை அதிகரிக்க உங்கள் முதலீடு பலமடங்காகும் என கோரும், வர்த்தக வாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பில் பல ஆயிரங்களில் வருமானம், இல்லத்தரசிகளுக்கான அறிய வாய்ப்பு போன்ற பதாதைகளை கொண்ட திட்டங்களில் இணைய முன் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

Related Articles