அழகூட்டும் பொருட்களின் நன்மைகளும் தீமைகளும்

உலகம் வளர்ச்சி அடைகிறது என்று நாம் நம்புகிறோம். அதனாலேயே பெரும்பாலான புதுமைகளை ஏற்றுக்கொள்கிறோம். அதுவும் இந்த தலைமுறையினருக்கு இருக்கும் ஒரு மனோபாவம் என்னவெனில், புதுமை எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, அதில் கொண்டாட்டத்தை தேடுகிற மனோபாவம் அநேக இளைஞர்களுக்கு இருக்கின்றது. வெகு சமீப காலத்தில் தான் புதுமைகளில் இருக்கும் ஆபத்துகளைப் பற்றிய விளக்கங்களை சற்று ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். அதில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது முதற்கொண்டு, இன்றைய தலைமுறையினர் பயன்பாட்டில் வைத்திருக்கும் துரித உணவு பருகும் பழக்கமும் தான்.

இந்த கட்டுரையில் நாம் அலசவிருப்பது அழகு சாதன பொருட்கள் மீது பெண்கள் கொண்டுள்ள மோகமும், அநேக அழகு சாதன பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகளும்.

மேற்கத்திய கலாச்சார மோகம்

மனிதர்களை தேடுகையில் அவர்களது முகம் கொண்டு தான் நாம் அவரை அடையாளம் காண்கிறோம். அதனால் முகத்தின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புரிதலில் தான் முகத்தின் பொலிவை வெளிப்படுத்த முற்படுகிறார்கள் பலர். அதற்காக 50 ஆண்டு முன்பு வரை இருந்த வழக்கம், பைத்த மாவு  முகத்தில் தேய்த்து நீராடுவது, பருவிலிருந்து விடுபட எலுமிச்சை சாறு முகத்தில் தேய்த்து அறை மணி நேரம் கழித்து குளிப்பது போன்ற இயற்கை சார்ந்த அழகு மெருகூட்டும் பழக்க வழக்கங்கள் தான் இருந்தது.

நமது நாட்டு மக்களுக்கு மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதிருக்கும் மோகம் மிகையாக தொடங்கிய 80 களிலும், 90 களிலும், இந்திய வணிகச் சந்தையில் அறிமுகமான அழகு களிம்புகளை மக்கள் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினர். முதலில் பரவலாக மக்கள் ஏற்றுக்கொண்டாலும், 90 களின் இறுதியில் இயற்கை முறைக்கும், இரசாயன களிம்புகளின் பயன்படுத்தும் முறைக்கும் ஒன்றுக்கு ஒன்று முரணான பார்வைக்குட்பட்டு விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. 90 களின் இறுதியில் தான் அழகு நிலையங்களும் நமது நாட்டு வீதிகளில் முளைக்கத் தொடங்கின. இந்த அழகு நிலையங்கள் அனைத்தும் சுற்றியுள்ளோர் தன் தோற்றத்தை எப்படி ஏற்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் சராசரி மக்களை மனதில் கொண்டு தான் தொடங்கப்பட்டது.

Women Looking Up (Pic: youtube)

அழகு நிலையங்கள்

அழகு நிலையங்களுக்குச் சென்றால், தன் முகம் எளிதில் பொலிவடைவதால், அழகு நிலையங்களுக்கு பல இளம் பெண்கள் படையெடுத்தனர். முகத்தின் அழகுக்கான களிம்புகளை பயன்படுத்தினால் 4 வாரங்கள் முதல் 6 வாரங்களில் கிடைக்கும் முகப்பொலிவு சில மணி நேரங்களில் கிடைப்பதால் பல பெண்களும் அதையே விரும்பினர். உடனடியாக அழகுப் பொலிவு பெறுவதற்காக அழகு நிலையங்களில் உபயோகப்படுத்தும் இரசாயனக் களிம்புகளால் வரும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளை வெளியிட, தனது வணிகத்தை நிலையில் வைத்துக்கொள்ள எண்ணற்ற வழிகளை மேற்கொண்டனர்.

ஒரு பக்கம் அழகு நிலையங்களை தக்க வைத்துக்கொள்ள புதுப்புது வழிகளை திட்டமிட்ட அதே நேரத்தில், முகப்பொலிவுக்கான விதவிதமாக பல களிம்புகளை சந்தைக்கு கொண்டு வந்தனர். அதற்கெல்லாம் இவர்கள் விளம்பரம் செய்ததே பெரும்பொருட்செலவில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தான். இந்த பொருட்களின் வணிகத்திலும் ஒரு கை தேர்ந்த யுக்தி தான் ஆண்களுக்கென்று தனி வகை களிம்பு, பெண்களுக்கென்று தனி வகை களிம்பு என்ற கட்டுக்கதைகள். இரண்டு களிம்புகளிலும் சேர்க்கப்படும் ரசாயனச் சேர்க்கைகளால் ஏற்படும் மாற்றங்களையும், விளைவுகளையும் பயன்படுத்தி ஆராய்வதற்குள் ஒரு சுற்று வணிகம் செய்துவிடலாம்.

பல வண்ண மயமான சின்ன சின்ன பெட்டகத்தில் வீட்டிற்கு வாங்கிச் செல்லும் அழகு சாதன களிம்புகளாக இருந்தாலும் சரி, அழகு நிலையங்களிலும் பயன்படுத்தும் களிம்புகளிலும், பெரும்பாலும் பயன்படுத்தும் பொருட்கள் என்னன்ன? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Beauty Parlour (Pic: sanabeautyparlour)

தயாரிப்பில் பயன்படுத்தும் திரவங்கள்

ப்தலேட்ஸ், லெட், குவாண்டேர்னியம், பெக் கலவைகள், பியுடைலேடட் கலவைகள், ஆக்டினாக்சைட், கார்பன் பிளாக் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது. இது மட்டுமா, தலை முடி, கருமை இழந்து, வெள்ளை நிறத்திற்கு மாறுகின்ற ஒரு தோற்ற மாறுதலும் இன்று பலருக்கு இருக்கின்றது.

இந்த வணிகர்கள் அதனை சரி செய்வதற்கு எந்த கண்டுபிடிப்புகளையும் நம் முன் கொண்டு வராமல், அதனை மறைப்பதற்கு, “ஹேர் டை” என்கின்ற பெயரில் கொண்டு வந்து, நம்மை பயன்படுத்தவைக்க அயராது உழைத்தனர். அந்த ”ஹேர் டை”யை தயாரிப்பில் வண்ணம் நன்றாக முடியின் மீது படிந்து நிறம் மாறச்செய்ய அதனுள் சேர்க்கப்படும் ”அமோனியா” முடியின் ஆரோக்கியத்திற்கே எதிரானது. இன்று இந்த அமோனியாவினால் ஏற்படும் விளைவுகள் பொதுமக்களுக்கு புரிந்தவுடன், அமோனியா சேர்க்கப்படாத “ஹேர் டை”க்கள் விளம்பரத்திற்கு வந்தன.

அழகு சாதன பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்களை பட்டியலிட்டு ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? களிம்புகளை பயன்படுத்தும் தினம் நம்மை பொலிவாக காண்பிக்க உதவும் அதே சேர்க்கைப் பொருட்கள் தான் பின் நாட்களில் நமது உடல் தோற்றத்தில் விளைவுகளை ஏற்படுகின்றது.

Lipstick (Pic: morphebrushes)

பாதிப்புகள்

மேலே குறிப்பிட்டதெல்லாம் வெறும் இரசாயனங்கள் என நாம் கடந்து செல்ல முடியாது. உதாரணத்திற்கு “லெட்” யை எடுத்துக்கொள்வோம். இந்த “லெட்” சில காலங்களுக்கு முன்பு வீட்டின் சுவற்றில் பூசும் பெயிண்டில் கலக்கப்பட்ட பொருள். ஆனால் “லெட்” பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பெய்ண்ட்களை இந்தியா முதற்கொண்டு பல நாடுகள் தடை செய்துள்ளது. ஏனெனில், ”லெட்” பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பெயிண்ட் பூசப்பட்ட அறைக்குள் செல்வதால், பல குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகின்றது.

அந்த “லெட்” யை பயன்படுத்தி 33 தயாரிப்பு நிறுவனங்கள் தனது 400 வித/வண்ண லிப்ஸ்டிக் தயாரித்திருக்கின்றது என்ற அதிர்ச்சி தரும் தகவலை அந்த ஆய்வு முடிவு தருகின்றது. இந்த ”லெட்” ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்பட அநேக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இது மேலே குறிப்பிட்ட திரவங்களில் லெட் என்ற ஒரு திரவத்தினால் ஏற்படும் விளைவுகளை மட்டும் தான் கூறிப்பிட்டிருக்கின்றேன். பெரும்பாலும் அனைத்து லிப்ஸ்டிக்குகளிலும் பெட்ரோ கெமிகல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் எண்டோக்ரைன் உறுப்புகளில் பிரச்சனைகள் வரக்கூடும்.

அதிகமாக லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பின் இடுப்புப் பகுதி இயல்பை மீறி வளர்ந்து விசித்திரமான தோற்றம் தருவதற்கு காரணமாக அமையலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

மிகவும் பிரபலமான சில முக அழகு களிம்புகளைப் பற்றி பார்ப்போம். பிலூம்பெர்க் ஆய்வுப்படி அத்தகைய களிம்பின் விற்பனை 17 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும். ஆனால் அதில் மிக அதிக அளவில் ஹைட்ரோகுயினோன் பயன்படுத்தப்படுவதாகவும். அந்த பொருள் உடல் ரத்த அழுத்தம் முதற்கொண்டு, ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தையும் ஏற்படுத்துகிறதாம். நம் முகத்தின் பொலிவினை எப்படியாவது கூட்டமுடியும் என்று  நம்மை நம்ப வைத்து வணிக ரீதியாக செயல்படுகிறார்கள்.

அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களில் அதிக பெண்கள் சந்திக்கும் பிரச்சனை, இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றத்தை பெற்றுவிடுவது தான்.

மேலும் இறுதியாக களிம்புகளில் கலக்கப்படும் திரவமாக நான் குறிப்பிட விரும்புவது ஃபார்மல்டிஹைட்.  இது ஃபார்மலினின் ஒரு வகை. ஃபார்மலின் என்ற திரவம்,சவக்கிடங்குகளில், இறந்த மனித உடலை பராமரிப்பதற்காக பயன்படுத்தும் திரவமாகும். அதனை சில உணவுப் பொருட்களில், குறிப்பாக நாம் தினமும் வாங்கும் பாக்கெட் பாலில் கலக்கின்றனர். இந்த செய்தியே போது இது எவ்வளவு ஆபத்தானது. ஃபார்மல்டிஹைடை கலப்பதினால், பொருளின் தன்மை எந்த விதித்திலும் மாறாமல் இருக்க உதவுகிறது. இதனால், அந்த களிம்பு காலாவதியான களிம்பா என்றே நம்மால கண்டுபிடிக்க முடியாத வண்ணம் தான் இந்த கலப்படம் இருக்கின்றது.

Aging For Women (Pic: shutterstock)

நிறைவாக இந்தக் கட்டுரையை, அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக எழுதும்பொருட்டு எழுதவில்லை. ஏனெனில், இன்றும் சில தயாரிப்புகள், வரையறைகளுக்குட்பட்டு தான் தயாரிக்கின்றனர். அதையும் தாண்டி, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், காஸ்மெடிக்ஸ்களையே நம்பாமல், தங்களது உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டு ஏன் தன் அழகை மெருகேற்ற முற்படக்கூடாது. உங்கள் வீட்டு அக்கா, தங்கைகளுக்கு இந்த கட்டுரை பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Web Title: Effects Of Using Cosmetics By Women, Tamil Article

Featured Image Credit: uniquetimes

Related Articles