விளையாட்டு ஊடகவியல் – வாய்ப்புக்களும் வாழ்க்கையும்

விளையாட்டு என்ற வார்த்தையே விளையாட்டாகிப் போயுள்ள ஒரு காலம்.. ஆனால் விளையாட்டு வீரர்கள் இப்போது சம்பாதிக்கும் புகழும் பெயரும் பணமும் விளையாட்டான விடயம் அல்ல.. ஆனால் விளையாடாவிட்டாலும் வெளியே இருந்தும் இந்த விளையாட்டுக்கள் மூலமாக எமக்கு என்று ஒரு தொழில்துறையை உருவாக்கக் கூடிய ஒரு வழிவகை பற்றிப் பார்க்கலாம்.

ஊடகங்கள் பல்கிப் பெருகி ஆதிக்கம் செலுத்தி, இளைஞர்களின் மேல் தாக்கம் செலுத்தும், இளைஞர்கள் ஆர்வம் கொண்டுள்ள இந்தக் காலத்தில் ஊடகவியல்/ இதழியல் – Journalism  என்ற வார்த்தை அதிகமாகப் பரவியுள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் ஊடகவியல் துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு / இலத்திரனியல் ஊடகத்துறை. இதில் அச்சு ஊடகத்துறை என்பது அச்சில் வெளிவரக்கூடிய தினசரி, வார, மாத இதழ்களைக் குறிக்கிறது.

பாரம்பரிய ஊடகத்துறையின் முன்னோடி இது. இவற்றில் பத்திரிகையின் முதன்மை ஆசிரியருக்குக் கீழ் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், சிறப்பு செய்தியாளர்கள், பந்தி எழுத்தாளர்கள் என்ற பதவிகளில் பணி புரிய வாய்ப்புகள் உள்ளன.

இப்போது முன்பு போலன்றி தனியாக விளையாட்டுக்கேன்றே  பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வெளிவருவதால் இன்னும் ஏராளமான தொழில் நிலை வாய்ப்புக்கள் உள்ளன. (onlinecourse.olympic.org)

கார்ட்டூனிஸ்ட், புகைப்படக் கலைஞர், பிழை திருத்துனர், வரைகலை வடிவமைப்பாளர், பக்க வடிவமைப்பாளர் என வேறு பல வேலைகளும் இதில் உள்ளன.

இலத்திரனியல் ஊடகத்துறை என்பது வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் (இப்போதெல்லாம் Facebook, Twitter, Instagram மூலமாகக் கூட) போன்றவற்றை  உள்ளடக்கியது. அச்சு ஊடகத்துறையில் இருந்து இது வேறுபட்டது; நவீனமயமானதும் கூட.

இலத்திரனியல் ஊடகங்களில் (செய்தி) ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்பட / காணொளிக் கலைஞர்கள், ஒளி- ஒலிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்கள், இணையத்தில் பக்க வடிவமைப்பாளர், (தொலைக்காட்சி) அரங்கு அமைப்பாளர் என பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

முன்னைய காலங்கள் போலன்றி ஒவ்வொரு துறையிலும் ஏராளமான விசேடத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதால் விளையாட்டு செய்திகளைத் தொகுப்பதற்கும், துரிதமாக செய்திகளை வழங்குவதற்கும், பூரணமான விளையாட்டு விஷயங்களை எழுதுவதற்கும்,சிறப்புக்கட்டுரைகள் எழுதுவதற்கும் எனத் தனித்தனியாக விளையாட்டு ஊடகவியலாளர்கள்/ இதழியலாளர்கள் (Sports Journalists) இப்போது அவசியப்படுகிறார்கள்.

  • Journalists (reporters) – நிருபர்கள்/ இதழியலாளர்கள்
  • Editor · – ஆசிரியர்
  • Columnist – பத்தி எழுத்தாளர்
  • Copy editor – பிரதி ஆசிரியர்
  • Meteorologist – வானிலை நிருபர்  News presenter – செய்தி வாசிப்பாளர்
  • Presenter – தொகுப்பாளர்
  • Photographer – புகைப்படப்பிடிப்பாளர்
  • Pundit/Political commentator – துறைசார் வல்லுனர்கள்

என்று விதவிதமான வகிபாகங்கள் ஒவ்வொரு விளையாட்டு இதழியல் பிரிவிலும் பிரதானமாக இருக்கின்றன. இதில் எங்கள் நோக்கம் எதுவோ, எங்களது ஆர்வம் எதிலோ அதை நாம் தெரிந்தெடுத்துக்கொள்வதன் மூலமாக ஒரு விசேடத்துவத் தொழிற்துறையில் பணிபுரியலாம், பயணிக்கலாம்.

அதிகரித்துவரும் விளையாட்டு ஊடகங்கள்

அதிகரித்துவரும் விளையாட்டு ஊடகங்கள்

சாதாரணமாகவே இந்தக் கால இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்கள்;எமது அன்றாடப் பேசு பொருட்களில் ஒன்றாக இருக்கும் இவ்விளையாட்டை (அது கிரிக்கெட்டோ அல்லது கால்பந்தோ ஏன் ஹொக்கியோ) ரசிக்கும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, எமது வாழ்வாதாரத் தொழில்துறையாக மாற்றுவது எமது வாழ்க்கையை ரசனை மிக்கதாக மாற்றும்.

ஆங்கில மொழி ஊடகங்களிலேயே இதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழிலும் விளையாட்டு இதழியலுக்கான தேவையும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறன. இப்போது தமிழிலும் விளையாட்டு செய்திகளுக்கான தனியான இடம் தொலைகாட்சி, வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய வழி வாசிப்புக்கள் என்று பல்கிப் பெருகி வருவது ஆரோக்கியமான ஒரு மாற்றம்.

விளையாட்டுக்களின் பொற்காலம் என்று அழைக்கப்படும் (Golden Age of Sports) முதலாம் உலக மகா யுத்தத்துக்கு பிற்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்து படிப்படியாக செழுமைப்பட்ட இந்த விளையாட்டு இதழியல் எங்கள் பகுதிகளுக்கு வர நீண்ட காலம் எடுத்தது; அதிலும் எமக்கு நெருக்கமான எமது தாய் மொழியில் வருவதற்கு இன்னும் அதிகமான காலம் தேவைப்பட்டது.

விளையாட்டா? அது அளவோடு இருந்தால் காணும் என்று தான் எம்மவர்களின் உளப்பாங்கு அண்மைக்காலம்வரை இருந்திருக்கிறது.

ஆங்கில ஊடகங்களில் இந்நிலை சில காலத்திற்கு முன்னரே மாறினாலும் கூட, தமிழின் அச்சு ஊடகங்களில் அண்மைக்காலம் வரை (சிலவற்றில் இன்றும் கூட) கடைசிப் பக்கம் அல்லது ஓரிரு பக்கங்கள் தான் விளையாட்டுக்கு.

1924 இல் WEAF வானொலி நிலைய அறிவிப்பாளர் கிரஹாம் மேக்னமீ பேஸ்பால் உலகத்தொடர் விளையாட்டொன்றின் ஒலிபரப்பில் ஈடுபடுகிறார். (media1.britannica.com)

1924 இல் WEAF வானொலி நிலைய அறிவிப்பாளர் கிரஹாம் மேக்னமீ பேஸ்பால் உலகத்தொடர் விளையாட்டொன்றின் ஒலிபரப்பில் ஈடுபடுகிறார். (media1.britannica.com)

இணையங்கள் துரிதமாக மாறிக்கொண்டன. வானொலி, தொலைக்காட்சிகள் இளைஞரின் விளையாட்டு மீதான தாகத்தைப் புரிந்து தமது வழிகளை மாற்றிக்கொண்டன.

ஆங்கிலத்திலும் சர்வதேச ரீதியிலும் 1920களில் தான் விளையாட்டுப் பத்தி எழுத்தாளர்கள், விமர்சகர்கள், விளையாட்டுக்கென்று தனியான தொகுப்பாளர்கள் ஆகியோர் உருவாக ஆரம்பித்தார்கள்.

நேரடி ஒலி, ஒளிபரப்புக்கள் வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற ஆரம்பிக்க தனியான தொழில்வாய்ப்புக்களும், தேர்ச்சிகளும் அதிகரித்தன. ஆனால் தனியான விளையாட்டு ஒலி/ஒளிபரப்புக்கள், சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்தது 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு தான். இப்போது இந்த விளையாட்டு ஊடகவியலின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம்..

சகல விளையாட்டுக்களும் பணம் கொழிப்பதாக, பிரபல்யத்தின் முக்கிய வழிகோலாக, பொழுதுபோக்கின் வடிகாலாக, அதிகம் இளைஞர்களின் பேசுபொருளாக, சமூக வலைத்தளங்களின் ‘முக்கிய’ பரபரப்பு விடயமாக மாறியுள்ளன.

ஒளிபரப்பாளர்கள் கிரிக்கெட் முதலான போட்டிகளுக்கு நேரடியாகச் சென்று நேரடிக் களத் தகவல்களைத் (updates) தர ஆரம்பித்தவேளை – பாரம்பரிய நேரடி ஒலிபரப்பிலிருந்து (இலங்கையைப் பொறுத்தவரை தமிழில் நேரலை நேர்முக வர்ணனைக்கு வாய்ப்பு எப்போதுமே updates போலத்  இடையிடையே வாய்ப்புக்கள் என்பது எல்லோரும் அறிந்ததே) வேறுபட்டிருந்த இவ்வகை நிகழ்வுகள் விளையாட்டு ஒலிபரப்பாளர் – sportscaster என்ற பதத்தை உலகுக்கு வழங்கியது.

(sportscareers.com)

இப்போது துடிப்பான பல பெண் விளையாட்டு ஒலிபரப்பாளர்களையும் காண்கிறோம். (sportscareers.com)

சம்பாதிக்கும், சாதிக்கும் துறைகளாக இவை மாறியுள்ளதோடு, ஏனைய துறைகளைப்போல அல்லாமல், அல்லது அவற்றை விட அதிகமாக செய்திகள், களநிலவரங்கள், சுவாரஸ்ய சம்பவங்கள் துரித கதியில் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துறையாகவும் இருக்கின்றன.

இதனால் புள்ளிவிபரங்களுக்கும் புதிய தகவல்களுக்கும் தட்டுப்பாடு இருக்காது.

எந்நேரமும் பரபரத்துக்கொண்டே இருக்கும் ஒரு துறை என்பதால் எதிர்காலத்துக்கான அதிக வாய்ப்புள்ள, பரந்து விரியக்கூடிய ஒரு தொழில் துறையாக இது இருக்கும் என்பது நிச்சயம்.

பலர்ஆங்கில மொழி மூலமான விளையாட்டு ஊடகங்களில் புள்ளி விபரவியலாளர்களாக (statisticians), தேடல் + விபர சேகரிப்பாளர்களாக இன்னும் தகவல் சேமிப்பாளர்கள் மற்றும் இவற்றைத் தொகுத்துக் கட்டுரையாக்குபவர்களாக தொழில் செய்கிறார்கள்; கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.

தமிழில் இவ்வாறு ஒரு விசாலித்த பரப்பு எப்போது உருவாகும் என்று அனைவரும் ஏங்குவது உண்டு.

ஒரு சிலர் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டாலும் தமிழ் மூலமான வாசகர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவென்பதால் பொருளாதார இலாபம் பற்றி நோக்குமிடத்தில் இது நடக்க  சில காலமாகலாம். இப்போதைக்கு ஆங்கில மொழிபெயர்ப்பே

ஆனால், விளையாட்டு ஊடகவியல் இப்போது முன்னர் ஒரு காலத்தில் நாம் யாரும் எதிர்பார்த்திருந்திராதவண்ணம் பாரிய புதிய தொழில் பிரிவுகளை  காலமாற்றத்துக்கேற்ப கொண்டுள்ளன.

(jou.ufl.edu)

அதிகமாக செய்திகள், களநிலவரங்கள், சுவாரஸ்ய சம்பவங்கள் துரித கதியில் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துறையாகவும் இருக்கின்றன. இதனால் புள்ளிவிபரங்களுக்கும் புதிய தகவல்களுக்கும் தட்டுப்பாடு இருக்காது. (jou.ufl.edu)

சிறு உதாரணமாக,

அரசியல், நிதியியல் என்று மட்டும் இருந்த புலனாய்வு இதழியல்/ ஊடகவியல் இப்போது விளையாட்டுத் துறையிலும் வந்திருக்கிறது. (பின்னே.. சூதாட்டம், பந்தயம் என்று வந்தால் இதுவும் வரத்தானே வேண்டும்)

அது மட்டுமின்றி, விளையாட்டு விபரவியலாளர், வரலாற்று எழுத்தாளர், விபரிப்பாளர், கார்ட்டூனிஸ்ட் என்று பலவிதமான துறைகள் விரிந்திருக்கின்றன. இவை இன்னமும் நேரடியாகத் தமிழ்மொழிக்கு வராவிட்டாலும் கூட, மொழிபெயர்ப்போடு இப்போதைக்கு தனது ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வாய்ப்புக்களோடு வழங்குகிறது.

இப்போது தமிழிலும் இந்த விளையாட்டு இதழியலின் தேவை உணரப்படும் நேரம் எமது ஆர்வத்தையும் பொழுதுபோக்குக்கான நேரத்தையும் பொன்னாக மாற்றிக்கொள்ளும் இப்படியான வாய்ப்பு எங்கள் வாழ்க்கைப் பாதைக்கான நல்ல வழிகாட்டியாக அமையுமே..

பயன்படுத்திக்கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள்.

Related Articles