ஒரு புறம் உணவு வீண்விரயமாகிறது மறுபுறம் பட்டினியால் உயிர்கள் செத்து மடிகிறது!

வீண் விரயம் செய்வதிலேயே மிக மோசமான விரயம் உணவைச் சமைத்து அதைக் கொட்டுவதுதான். உணவுப் பற்றாக்குறை என்பது எம்போன்ற  வளர்முக நாடுகளுக்குப் பழகிப்போனவொன்று. இந்த விடயத்தில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? உணவுத்தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எந்த அளவில் எம்மிடம் இருக்கிறது? இதுபோன்ற கேள்விகளை எழுப்புவோமாயின் பதில் பூச்சியமாகத்தான் இருக்கும். தனிமனிதர்    ஒவ்வொருவருக்குமே உணவு விரையம், அதுதொடர்பான சிக்கனம் என்பன பற்றிய சிந்தனை இல்லை. எல்லாவற்றையும் அரசு பார்த்துக்கொள்ளும் என்ற எண்ணமும் அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையிலும்தான் நாம் ஒவ்வொருவருமே இருந்துவருகிறோம். பொதுவாகவே இப்படியான வீணடித்தல் என்பது நம் ஒவ்வொருவர்க்குமே சர்வ சாதாரணம். நாட்டில் முக்கால்வாசிக்கும்மேலான   மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் எம்போன்ற நாடுகளில் இப்படியான விரயம் நியாயமானதுதானா?

புகைப்பட உதவி/twitter.com/AwanishSharan

இன்றைய திருமண வைபோகங்கள் தங்கள் செல்வத்தை, செல்வாக்கை வெளிக்காட்டும் விழாக்களாக மாற்றமடைந்துள்ளன என்றால் அது மிகையில்லை. “இம்மாதிரியான சிறப்பான விருந்தினை இதுவரை உண்டதில்லை” என அனைவரும் சிலாகிக்க வேண்டும் என்பதற்காகவே பல வகையான பதார்த்தங்கள் அங்கே பந்திவைக்கப்படுவதுண்டு, இன்று ஆகக்குறைந்தது ஒரு திருமண விழாவிற்கான  ஒரு உணவின்   விலை ரூபா 2500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது . இப்படி செலவிடப்படும் பணத்திற்கு வஞ்சனையில்லாது உண்பவர் பலர். ஆனாலும் இன்றைய Buffet system முறையில்”  எப்படி இருக்கிறது என்று Taste செய்துதான் பார்ப்போமே என்ற ரீதியில் எல்லாவற்றையும் தட்டில் நிரம்பி  வைத்துக்கொண்டு பின் உண்ண  முடியாமல் குப்பைக்கு அனுப்பிவைப்பவர்களே இன்று அதிகம்.

அதுமட்டுமன்றி குழந்தைகளோடு வரும் சில பெரியவர்கள், குழந்தை எந்த அளவு சாப்பிடும் என்பதைக்கூட கருத்திற் கொள்ளாது அதனுடைய தட்டிலும் அள்ளி வைத்து அதையும் சேர்த்து குப்பைத்தொட்டிக்கு  அனுப்புவதை நாம் பல விழாக்களில் கண்ணுற்றிருப்போம்.   ஒரு திருமண விழாவில் எஞ்சுகிற உணவில் ஒரு கிராமமே ஒரு நேரம் சாப்பிடலாம் எனும் அளவுக்கு எஞ்சிப்போவதும் உண்டு.  அப்படியே எஞ்சிப்போனாலும் அவற்றை அருகில் உள்ள முதியோர் இல்லங்களுக்கோ, அநாதை இல்லங்களுக்கோ கொடுக்கும் மனோபாவம் எந்த அளவில் சாத்தியப்படுகிறது ?

இன்று நாம் விரும்பிச் சாப்பிடும்  ஒருவகை உணவுதான் பிரியாணி. ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் இந்த பிரியாணியில் இறைச்சியிட்டு  சமைக்கப்பட்டு, அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஓன்று மட்டுமே அதிகமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதாம். இந்த முறை சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றமடைந்து முட்டை சேர்க்கப்பட்டது . இன்று அதுவும் முன்னேற்றமடைந்து Chicken fry, Chicken 65 சேர்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இவற்றுடன்  காடை, கொக்கு, கௌதாரி Fry என ஐட்டங்கள் கூடிக்கொண்டே போகக்கூடும். பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை நாம் அதிகப்படுத்துகிறோம். வரும் விருந்தினர்களும் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்துவிட்டு அப்படியே எச்சில் தட்டில் மீதியை ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.

புகைப்பட உதவி/www.dawn.com

யதார்தமாக எஞ்சுவது  வேறு, வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி  உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு இல்லையா?  தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும் மனிதனுடைய உள்ளத்தில் இது போதாது இன்னும் வேண்டும் என்ற எண்ணம் சொத்து சேர்ப்பதில் இருந்து நாவுக்கு சுவையான தீனி போடுவதுவரை தொடரத்தான் செய்கிறது .

மோசமான களஞ்சியப்படுத்தல், காலாவதியாவதற்கு முன்பே விற்கப்படவேண்டும் என்ற அவசரம், அதிகப்படியான கொள்வனவு, பௌதிக நிலை, காலநிலை மாற்றங்களால் ஏற்ப்படும் அறுவடைப் பாதிப்பு, சிக்கல்கள் போன்றவற்றோடு, மேலை நாடுகளில் கைக்கொள்ளப்படும் திராட்சைத் திருவிழா, தக்காளித் திருவிழா, சொக்கலட் திருவிழா போன்ற அர்த்தமற்ற திருவிழாக்களில் மேற்குறித்த உணவுப் பொருட்களை கால்களில் போட்டு ஏறி மிதித்து, ஒருவர் மீது ஒருவர் அவற்றை எறிந்து விளையாடி அவ்வுணவுப் பொருட்களை விரயம் செய்வதென்று பல வழிகளிலும் உணவு விரயங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

நம்முடைய மதங்கள் கூட உணவு விரயம் பற்றிய   பல விடயங்களை அறிவுறுத்தினாலும் அவை உகந்த முறையில் கைக்கொள்ளபடுவதில்லை என்பதே  என்  கருத்து. அதிலும் மதத்தின் பெயரில் அன்றுதொட்டு இன்றுவரை உணவுப்பண்டங்கள் பல வழிமுறைகளில் விரையமாக்கபடுவதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா? “சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கையிலிருந்து தவறிக் கீழே விழும் சிறுதுண்டு உணவைக்கூட எடுத்து துடைத்துவிட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம்! ஆனால், பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மிஞ்சித்தான் உணவைச் சமைக்கிறார்கள் அல்லது உணவகங்களில் ஓர்டர் செய்கிறார்கள் என்கிறது ஓர் அறிக்கை. சாப்பிட்டதுபோக எஞ்சியது இறுதியாக குப்பைக்குப்போகிறது. அதுமட்டுமன்றி உணவு சமைக்கப்படும்போதோ, ஓர்டர் செய்யப்படும்போதோ  படு ரிச்சான உணவுவகைகளையே அவர்கள் நாடுகிறார்களாம். இதில் உணவு மிஞ்சிப்போவது மற்றைய மாதங்களைவிட ரமலான் மாதத்தில்தான் கூடுதலாக நடக்கிறது என்கிறது ஓர் இணைய அறிக்கை.

அதேபோல் இந்து மதத்தினை நோக்கின், நாம் பூஜை பரிகாரங்கள் என்ற ரீதியில் உணவுப் பொருட்களை வீணடித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் மிகையில்லை. ஆரோக்கியத்தின் அடிப்படையான பாலை, பாலாபிஷேகம் என்ற பெயரில்தி குடம் குடமாக கொட்டி சாக்கடையில் கொண்டுசேர்ப்பது, திருஷ்டிப் பரிகாரம் என்ற பெயரில் குழம்பு வைத்து சாப்பிடவேண்டிய பூசணிக்காயை தெருவில் போட்டு உடைப்பது, உப்பு, மிளகாய் என்று எல்லாவற்றையும் கொட்டி தீ வைத்துக் கொளுத்துவது, எலுமிச்சைப் பழத்தை வாகனங்களின் சக்கரங்களுக்கு கீழ் வைத்து நசுக்கி விரயமாக்குவது, இரும்புச் சத்து மிக்க எள்ளினை சனீஸ்வரருக்கு தீயிட்டுக் கொளுத்துவது , நேர்த்திக்கடன் என்ற பெயரில் தேங்காய் உடைப்பது, ஓம குண்டலத்தில் அக்னியை வளர்த்து அதில் நெய்யையும், தானியங்களையும் கொட்டிப் பாழடிப்பது என்று பல வடிவங்களில் இந்த விரயம் அன்று தொட்டு இன்றுவரை தொடரத்தான் செய்கிறது .

நம்முடைய முன்னோர்கள் உணவு வீணாகக்கூடாது என்பதற்காக பல நீதிக் கதைகளை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், அவற்றை நாம் இன்று நம் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்கிறோமா? “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்றார் வள்ளுவர், ஆனால் அவர் கூறிவைத்ததுபோல் எல்லோரும் பகிர்ந்துண்டு வாழாததுதான் இன்றைய உணவுப் பற்றாக்குறைக்கு மற்றுமோர் காரணம் எனலாம். ஓரிடத்தில் கன்னாபின்னாவென்று உணவு கொட்டிக்கிடக்க, மற்றோர் இடத்தில் படுபயங்கரமான உணவுப் பற்றாக்குறை.

புகைப்பட உதவி/goofleimage.com

ஒரு பக்கம் நடு இரவில் Phone பண்ணினால் பீசா மற்றும் ரெடிமேட் உணவு என எல்லாவகை உணவுகளையும் வரவழைத்து சாப்பிடக்கூடிய சூழல் என்றால், மறுபக்கம் முப்பது கோடி மக்கள் இரவு உணவில்லாமல் வெறும் வயிற்ருடன் தூங்கச் செல்கிறார்கள். எனவே உண்பது குற்றமல்ல, ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. அப்படி வீணாக்கப்படுவது என்பது குற்றம்தானே? இந்த குற்ற உணர்விற்கு நாம்தானே பொறுப்பேற்க  வேண்டும்? மிதமிஞ்சி நாம் ஒதுக்கும் ஒரு பிடி உணவு பலருக்கு ஒருவேளை உணவாக இருக்ககூடும். நாளொன்றுக்கு இருபதியிரண்டாயிரம் குழந்தைகள் பட்டினியால் இறந்துபோகின்றார்கள்  என்கிறது யுனிசெப் புள்ளிவிபரம் .

உலகில் பிறந்த எந்த மனிதனுமே பசியால் வாடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையிலேயே 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் திகதியன்று “உலக உணவு நாள் ” என்ற ஓன்று உருவாக்கப்பட்டு இன்றுவரையில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக அளவில் நிலவிவரும் பசி தொடர்பான விழிப்புணர்வை உலக நாடுகளிடையே ஏற்படுத்தும் பொருட்டு இத்தினம் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

Cover Image : krishijagran.com

Related Articles