பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நண்பன்!

தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து விட்டது. இன்ன பிற வகுப்புகளுக்கும் கூட தேர்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுத் தேர்வு எழுதியோருக்கு சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கோடை விடுமுறையும் துவங்கி விட்டது. மற்ற வகுப்பினருக்கும் அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் விடுமுறை துவங்க உள்ளது.

கடும் வரட்சியினால் பயிர் செய்யாத விவசாய நிலங்கள், நீரின்றி வரண்டுபோன குளங்கள் உள்ளிட்டவை எல்லாம் கிரிக்கெட் மைதானங்களாக மாறும் காலம் இந்த பள்ளி விடுமுறை காலக்கட்டம்தான் (pixabay.com)

தாறுமாறான பருவநிலை மாற்றத்தினால் கடந்த ஆண்டே போதிய அளவு மழை இல்லை. இந்த ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் ஆகியும் இன்னும் போதிய மழை மட்டுமல்ல, வெப்பத்தை தணிக்கும் மிதமான மழை கூட இல்லை. வருடாந்த சராசரி மழையளவே இல்லாமல் உஷ்ணத்தில் இருக்கிறது தமிழகம்.  காலையில் கூடுதல் உஷ்ணத்தோடு சுட்டெரிக்கிறது சூரியன். விடுமுறை கொண்டாட்டத்தில் அதையெல்லாம் பொருட்படுத்தாது வெயிலின் சூட்டை, அப்படியே ஏற்று, தனதாக்கி விளையாட்டைத் துவங்கியுள்ளனர் மாணவர்கள்.

கடும் வரட்சியினால் பயிர் செய்யாத விவசாய நிலங்கள், நீரின்றி வரண்டுபோன குளங்கள் உள்ளிட்டவை எல்லாம் கிரிக்கெட் மைதானங்களாக மாறும் காலம் இந்த பள்ளி விடுமுறை காலக்கட்டம்தான். பொதுத்தேர்வுக்கு தயாராகி, குழந்தைகளை புத்தகப் புழுக்களாக வைத்திருந்த சிலர் இப்போது கட்டுப்பாடு களைந்து மாணவர்களை சுதந்திரமாக்கி இருப்பார்கள். சில மாணவ மாணவிகள் இந்த விடுமுறைக்கு சித்தப்பா, மாமா, தாத்தா, பாட்டி என ஏதோ உறவினர் வீட்டில் சென்று நிற்பார்கள். சில பெற்றோர்கள் இந்த விடுமுறை காலத்தையும் பயனுள்ளதாக்குவதாக மனதளவில் நினைத்துக் கொண்டு காலையில் 9 முதல் 11 வரை ஓவிய வகுப்பு, 11 முதல் 1 மணி வரை கையெழுத்துப் பயிற்சி, மதியம் ஒரு மணி நேரம் இடைவேளை தொடர்ந்து நண்பகலுக்கு மேல் இசை, அது, இது என பிள்ளைகளை சக்கையாய் வாட்டி விடுவார்கள்.

பெற்றோர்களின் இன்னொரு ராகம் உண்டு. அடுத்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை இந்த விடுமுறையிலேயே படிக்க டியூசனுக்கு அனுப்பும் ரகம். ஏன் எத்தனை, எத்தனை தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடமும், பதினோராம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடமும் நடத்தப்படுகிறது? இவர்கள் எல்லாம் பொதுத் தேர்வுக்கு கூட இந்த வகையில் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகள் தயாராகின்றனர். ஆனால் ஒரு அரசுப் பள்ளி மாணவனுக்கு இது சாத்தியம் இல்லை. ஆனால் இப்படி புத்தகப் புழுக்களாக, ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சாறுண்ணிகளாக சார்ந்து இருந்து, புத்தகத்தை செல்லரிக்கும் இவர்கள் இந்த மதிப்பெண்களால் சமூக மதிப்பீட்டை பெற்று விடுகின்றனர். இங்கே சமூக மதீப்பீடு என்பதே வெறும் சம்பளமாய் மாறி நிற்கிறது.

உண்மையில் இன்று மெத்தப் படித்த, அதிக மதிப்பெண் எடுத்த குழந்தைகள், பிற்காலத்தில் அதில் இருந்தும் நன்றாக படித்து சாப்ட்வேர் வேலைக்கு செல்கின்றனர். 22, 23 வயதில் எல்லாம் லட்சத்தை தொட்டு விடுகிறது மாதச் சம்பளம். படிக்காத பலருக்கு இன்னும் வருடத்திற்கே அந்த சம்பளம் வரவில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் யுவ, யுவதிகள் ஆடம்பரமாய் செலவு செய்கின்றனர். நட்சத்திர விடுதிகளில் சாப்பிடுகின்றனர். ஆடம்பர காரெல்லாம் அதிகபட்சம் முப்பது வயதுக்குள் வாய்த்து விடுகிறது. பெரிய வீட்டை கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களால் இந்த சமூகம் பெறும் பயன் என்ன? இத்தனை சிறந்த கல்வியை கற்ற இவர்களது அறிவு, தனி மனித வாழ்வியல் தேடல் ஓட்டத்துக்கு மட்டும்தானா? இவர்களிடம் இருந்து இந்த சமூகம் பயன் பெற ஆக்கப்பூர்வமான விடயங்கள் வெளிப்படாடததன் காரணம் ஒன்று உண்டு அது தான் ‘’வாசிப்புத் திறன்”

இவர்களிடம் இருந்து இந்த சமூகம் பயன் பெற ஆக்கப்பூர்வமான விடயங்கள் வெளிப்படாடததன் காரணம் ஒன்று உண்டு அது தான் ‘’வாசிப்புத் திறன்” (pixabay.com)

பாடப்புத்தகங்களைத் தாண்டி இவர்கள் வாசித்த புத்தகங்களின் நான்கு பெயர்களைக் கேட்டால் இவர்களின் லட்சணம் தெரியும். புத்தகங்கள் வாழ்வியல் அனுபவங்களின் செறிவு. பொதுவாகவே நூல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று நேரத்துக்குரிய நூல்கள், மற்றொன்று எக்காலத்துக்கும் உரிய நூல்கள். நேரத்துக்கு உரிய நூல்களில் இன்றைய தினசரி, வார, மாத ஏடுகள், இன்னும் சில நூல்களை பிரித்துக் கொள்ளலாம். எக்காலத்துக்கும் உரிய நூலில் திருக்குறள் தொடங்கி, பெரும் பட்டியலே போடலாம். ஆனால் இன்று 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை பள்ளிக் காலத்தில், தமிழ் பாடத்தில் ஆண்டுக்கு பத்து பாடல்களாகத் தான் கடந்து செல்கின்றனர்.

திருக்குறள் வாழ்வியல் நெறியினை, ஒழுக்கக் கூற்றை போதிக்கிறது. குறிப்பிட்ட எந்த மதத்தையும் சாராது, அன்பையும், அறத்தையும் போதிக்கிறது. ஆனால் இந்த யுவ, யுவதிகளுக்கு திருக்குறள் பற்றிக் கவலையில்லை. எந்திரன் 2.0 எப்போது ரிலீஸ் என்னும் பெருங்கவலை ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. ரசிகர்களை சந்திக்கும் முடிவில் உள்ள ரஜினி அரசியலுக்கு வருவாரா என்னும் பெருங்கவலை துரத்திக் கொண்டு இருக்கிறது. விடுமுறைக்கு திரையரங்கிற்கு, பூங்காவிற்கு, கடற்கரைக்கு…ஏதோ ஒரு சுற்றுலாத் தளத்திற்கு என குழந்தைகளை அழைத்து சென்று குதூகலப்படுத்தும் எத்தனை பெற்றோர்கள், வாழ்வில் ஒரு முறையேனும் குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார்கள்?

தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு குறைவே இல்லை. நூலகத்துறை பதிவேட்டின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த நூலகங்களில் எண்ணிக்கை 4,532. இவற்றில் 2 மாநில நூலகங்கள் உள்ளன. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒன்று வீதம் உள்ள மாவட்ட மைய நூலகங்களின் எண்ணிக்கை 32, கிளை நூலகங்கள் 1,925, நடமாடும் நூலகங்கள் 10, ஊர்ப்புற நூலகங்கள் 1,821, பகுதி நேர நூலகங்கள் 742 உள்ளன. தமிழகம் முழுவதும் 4532 நூலகங்கள் என்னும் போது, ஒவ்வொரு மனிதரின் வீட்டில் இருந்தும் ஏதோ ஒரு 5 கிலோ மீட்டருக்குள், அதிகபட்சம் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஒரு நூலகம் இருக்கத்தான் செய்கிறது. இது போக கிராமப் பகுதிகளில் அதிக அளவில் அன்றைய கால மக்களாலேயே துவங்கப்பட்ட நூலகங்கள் இன்னும் இருக்கின்றன.

திரையரங்குகள், மால்கள், ரேசன் கடைகள், இவ்வளவு ஏன் டாஸ்மாக் கடைகள் வரை கூட்டம் நிரம்பி வழியும் காட்சிகள் காணக் கிடைக்கிறது. ஆனால் நூலகங்களிலோ உள் நுழைந்ததும் போடப்பட்டிருக்கும் பெரிய மேஜையில் பரப்பி போடப்பட்டிருக்கும் நாளிதழ்களை படிக்க மேஜையை சுற்றிலும் போடப்பட்டிருக்கும் இருக்கைகள் கூட முழுவதும் நிறைந்து பார்த்ததில்லை. நூலக முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடுகையிலே முகத்தில் அடிக்கிறது இன்று வந்து, சென்றவர்களின் எண்ணிக்கை.

மண் சார்ந்த படைப்புகள் கலாச்சாரத்தை தாங்கி நிற்பவை,. அவை பண்பாட்டின், நம் முன்னோர்களின் வாழ்வியல் கூறின் பிரதிபலிப்புகளைக் காட்டும் கண்ணாடி. (pixabay.com)

தமிழக பாடத்திட்டத்தில் சிலபஸ் மாற்றி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இன்னும் இங்கே மதிப்பெண்கள் தான் இலக்காக இருக்கிறது. திட்டக்குழு தலைவர் பிரதமர் என பாடப்புத்தகத்தின் மாற்றாத சிலபஸை பார்த்து படித்துக் கொண்டிருந்தான் பக்கத்து வீட்டு  மாணவன். இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின்  அமைப்பு. 2014 இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதமர்  நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பழைய சிலபஸ்ஸை வைத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கு பொது அறிவினை, பரந்து பட்ட விசாலப் பார்வையை ஒரு நூலகத்தை தவிர வேறு எந்த நண்பனால் தந்து விட முடியும்?

ஆனால் தமிழக அரசு இயந்திரம் அந்த நூலகத்துறையை செவ்வனே வார்த்தெடுக்கின்றதா எனக் கேட்கும் போது கல்வித் துறையில் காலாவதியான பழைய சிலபஸ்ஸை போல, இதுவும் மிரட்சியைத்தான் ஏற்படுத்தி செல்கிறது. நூலகத்துறைக்கு தனி இயக்குநரே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. கல்வித் துறை இயக்குநர் தான் இதை கூடுதல் பொறுப்பாய் கவனித்து வருகிறார். அறிவுப் புரட்சியை, வாசிப்பு வேட்கையை உருவாக்கும் நூலகத்துறையின் வளர்ச்சிக்கு மெனக்கெட நேரம் இல்லாமல் இருப்பது எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக உள்ளது.

நூலக வளர்ச்சிப் பணிகளுக்காக, உள்ளாட்சி அமைப்புகளில் வீட்டு வரி செலுத்தும்போது, அதில் இருந்து 10 சதவீதத் தொகை நூலக வரியாக வசூல் செய்யப்படுகிறது.  இதை  முறையாக வசூலித்து, நூலகக் கணக்கில் சேர்த்திருந்தால் இன்னும் எத்தனை உத்வேகத்துடன் வாசிப்பு களத்தை அடுத்த தலைமுறைக்கு உந்தித் தள்ளி முன்நகர்த்தி  சென்றிருக்க முடியும். தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தும் நூலக வாரவிழாவோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. இதே போல் பள்ளிக் கல்வித் துறையும், நூலகத் துறையும் சேர்ந்து ஒரு திட்டத்தை வாசிப்பு தளத்துக்காக பிரயோகித்தன.

அனைத்து பள்ளி மாணவர்களும் அருகில் உள்ள அரசு நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சுழற்சி முறையில் வாசிக்க நல்ல புத்தகங்கள் பள்ளிக்கே தேடி வரும். திட்டம் என்னவோ நல்ல திட்டம் தான் ஆனால் இது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் உயிர்ப்புடன் செயல்படுகிறது என பார்த்தால், முடிவுகள் நேர்கோணலாய் மாறி நிற்கிறது.

அரசு நூலகத்துறையின் வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நூலகத்தின் பக்கம் திரும்பச் செய்தல் வேண்டும். குறைந்தபட்சம் அந்த அந்த மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களையேனும் மாணவர்கள், இளம் தலைமுறையினர் வாசித்திருக்க வேண்டும். ஏன் என்றால் மண் சார்ந்த படைப்புகள் கலாச்சாரத்தை தாங்கி நிற்பவை,. அவை பண்பாட்டின், நம் முன்னோர்களின் வாழ்வியல் கூறின் பிரதிபலிப்புகளைக் காட்டும் கண்ணாடி. ஆனால் இந்த நூலகங்கள் இன்று மக்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு விலகி நிற்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் கூட நூலகங்கள் உள்ளன. ஆனால் கல்லூரி கேண்டீன்களுக்கு வரும் கூட்டத்தில் நான்கில் ஒரு பங்கு கூட நூலகத்தில் இருப்பது இல்லை.

ஒரு மனிதனுக்கு நல்ல நண்பனாக புத்தகங்கள் மட்டுமே இருக்க முடியும். இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பனை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் நூலகத்துக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று, உறுப்பினராக்கி விடுங்கள். உன் நண்பனப் பற்றி சொல். உன்னைப் பற்றிச் சொல்கின்றேன் என்ற வார்த்தையும் நிஜமாகும். உங்கள் குழந்தைகள், இளைஞர்கள் புத்தகங்களை நண்பர்களாக்கட்டும். அவர்களின் கைபிடித்து அவர்களது வாழ்வில் வசந்தத்தைக் காட்டும் நண்பனாக புத்தகங்கள் மாறியிருக்கும்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இன்றைய யுவ, யுவதிகளின் மேல் நம்பிக்கை பிறந்துள்ளது. அந்த நம்பிக்கை சுடரை, அணையாமல் காக்கும் ஆயுதமாக, கேடயமாக புத்தகங்கள் இருக்கும். அதற்கு இளம் தலைமுறையும், மாணவர்கள் பட்டாளமும் வாசிக்க வேண்டும். புத்தகத்தை தோழனாக்கி!

Related Articles