“அதிகம் படித்த பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம்” – யாழ்பாணத்தின் திருமணங்கள்

கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான், மாப்பிள்ளை தேடுறது கஷ்டமா இருக்கு” என்று ஒருவர் கூறியதற்கு மற்றயவர் அதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டார்.

ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. (lh3.googleusercontent.com)

இந்த ஒரு வசனத்தில், திருமணம் சார்ந்து இப்போது நடந்துகொண்டு இருக்கும் மிகப் பெரிய ஒரு சமூக, பொருளாதார மாற்றம் பிரதிபலிப்பதாகவே தெரிந்தது. தமிழ் சமூகத்தில் பெண்களை திருமணம் செய்து வைப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சமூக கடமை என எண்ணப்படுகிறது . அந்த கடமையில் இருந்து தவறுவதையோ, அந்த கடமையை செய்யும் உரிமை காதல் திருமணம் என்ற வகையில் காவு வாங்கப்படுவதையோ பெரும்பாலான பெற்றோர் இன்றைய காலத்திலும் கூட விரும்புவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது.

பெண் பிள்ளைகள் கொண்ட பெற்றோர்களின் வாழ்க்கை அவர்கள் பிறந்தது முதலே மாறிவிடுகிறது. அவர்களுக்காக தமது வாழ்வை சுருக்கி கொள்வதும், செலவுகளை குறைப்பதும், திருமணத்துக்காகவும், சீதனத்துக்காகவும் பணம் சேமிப்பதும் என்று அவர்களில் பொறுப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த இருபது முப்பது வருடங்களில் வந்த தொழில்நுட்ப புரட்சி, தொழில் துறைகளில்  பெண்களின் பங்களிப்பு, நுகர்வு கலாச்சாரம் என்று அத்தனையுமே மாறி விட்டிருக்க பெண்களின் திருமணம் சார்ந்திருக்கும் சமூக  நிலைப்பாடுகள் மட்டும் நிலைத்திருப்பது ஆச்சரியமே.

தமது பெண் பிள்ளைகளை தகுந்த நேரத்தில் திருமணம் செய்து கொடுப்பது என்ற அவர்களின் பொறுப்பு  தாமதமாகும் போது அவர்கள்  மிகப்பெரிய அழுத்தத்திற்கும் கவலைக்கும் ஆளாகிறார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் கோவில் கோவில்களாக திரியும் பெற்றோர்களின் வலியும் வேதனையும்  பல சமயங்களில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நாம் சார்ந்த சமூகம் திருமணங்களையும், சடங்குகளையும் சாதி, அந்தஸ்து, கௌரவம் உள்ளடக்கிய சிக்கலான முறைமையாகவே காலம் காலமாக கையாண்டு வந்துள்ளமையும், போட்டித் தன்மை கூடிய சமூக அமைப்பும் அவர்களின் மன  அழுத்தத்துக்கு காரணமாகின்றன.

தன்னுடைய மகளுக்கு திருமணம் நடைபெறாததற்கு, அதிகம் படிப்பித்ததே காரணம் என்று பிழையாக நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த அப்பாவி தாய்க்கு எம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கும் சமூக பொருளாதார காரணிகள்தான் அதற்கான மிகப்பெரிய காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். தவிரவும் திருமணம் கைகூடாததற்கான பழியை தம்மீது சுமத்தி, அவர்களை வருத்தி, கோவில் குளம் என்று பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் முன்னர் அதற்கான சமூக பொருளாதார காரணங்களை ஆராயலாம்.

திருமணம் சார்ந்த சமூக மாற்றங்கள் என்ன ?

(lh3.googleusercontent.com)

வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். (lh3.googleusercontent.com)

  1. ஆணாதிக்க யாழ் சமூகத்தில், கடந்த இருபது வருடத்தில் வந்த மாற்றம் மிக முக்கியமானது. பெண்கள் படித்துவிட்டார்கள்,  இல்லை இல்லை – ஆண்களுக்கு சமனாகவோ, அதிகமாகவோ படித்து விட்டார்கள். இடப்பெயர்வுகள், கொழும்பு வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்பன இதனை  சாத்தியமாக்கிவிட்டிருக்கிறது.  வெளிநாட்டு பட்ட படிப்புக்கள், சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழில்சார் கற்கை நெறிகள் என்று தகுதிகளை வளர்த்ததுக்கொண்ட பெண்களுக்கு, தங்கள் முன்னே விரிந்து கிடக்கும் வாய்ப்புக்கள், மற்றுமொருவரில் தங்கி இருக்கும் எண்ண ஓட்டங்களை மாற்றிவிட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறையவே  மாறியிருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கள் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. எனவே அந்த எதிர்பார்ப்புக்களுக்கு பொருத்தமானவரை தேடுவதில் தாமதம் ஏற்படுகின்றது.
  2. படித்த பெண்களுக்கு முன்பு இருந்ததைப்போல் வெளிநாட்டு வாழ்க்கை என்பது வியந்து பார்க்கும் (aspirational) விடயமாக இல்லை. தொழிநுட்ப வளர்ச்சியுடன் இணைந்த இணைய வசதி, அதனோடு இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் போன்றவை வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய புரிதலை அவர்களுள் ஏற்படுத்தி இருக்கின்றன. வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். கொழும்பில் நடந்த வெளிநாட்டு மாப்பிளைகளுடனான கல்யாணங்கள் குறைந்து போய் இப்போது  யாழ்ப்பாணத்திலேயே அவை அதிகம் நடைபெறுகின்றன. தவிரவும் மேற்கத்தேய நாடுகளில் இருக்கும் இலங்கை ஆண்களுக்கு அங்கேயே பெண் துணையை தேடக்கூடியதான சமூக கட்டமைப்பு உருவாக்கி விடப்பட்டாயிற்று.  அதனால் இலங்கையில் வந்து திருமணம் செய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கு குறைந்திருக்கிறது.
  3. யுத்தம், அசாதாரண சூழ்நிலைகள் மாறி, இங்கிருக்கிற ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க, வெளிநாட்டு வாழ்க்கைதான் தீர்வு எதிர நிலை மாறி, உள்நாட்டிலும் வாழலாம் என்ற நிலை வந்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் இருக்கும் ஆண்கள் தொகை வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் குறைவு. எனவே உள்நாட்டில் இருக்கின்ற பெண்கள் தொகைக்கு ஏற்ற கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய ஆண்கள் உள்நாட்டில் இல்லாமையினால் திருமணங்கள் கடினமான காரியமாக மாறியிருக்கிறது.
  4. தவிரவும், புவியியல் வரையறை, இன, மத, சமூக கட்டமைப்புக்களுக்கு அப்பால் சென்று திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் அப்படியான திருமணங்கள் அதிகம் நடைபெறும் போது மேற்சொன்ன கட்டமைப்புக்குள் இருக்கும் பெண்களின் விகிதாசாரம் அதிகரிப்பதும் பெண்களின் திருமணங்கள் தாமதமாக ஒரு காரணம்.
  5. யாழ் சமூகத்தில் இருக்கும் சீதன முறைமை காரணமாக படித்த மாப்பிளைகளுக்கான கேள்வி சகல மட்டங்களிலும் உள்ளது.  அந்தக்கேள்வி  பணபலம் கொண்டவர்களால்  பூர்த்தி செய்யப்பட, அதிகரித்த படித்த பெண்களின் விகிதாசாரத்தில் நடுத்தர மற்றும் வசதி குறைந்த படித்த பெண்களின் திருமணங்கள் தாதமாகின்றன.

    (mg.thebridalbox.com)

    இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது. (mg.thebridalbox.com)

  6. நாம்  சார்ந்த சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது, பொருளாதார நிலைமைகள்  மாறி இருக்கின்றன,  இளம் சந்ததியினரிடையே திருமணம் தொடர்பான எண்ணப்பாடுகள் மாறியிருக்கின்றன, பெண்களை திருமணம் செய்து கொள்ளும் சராசரியான திருமண வயது தொடர்ச்சியாக பின்தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது, பெண்களுக்கான சராசரி கருவள வீதம் (fertility Rate)  அன்றைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக குறைவடைந்து 2012 ஆம் ஆண்டு நடந்த தொகைமதிப்புக்கு அமைவாக தமிழ் பெண்களிடம் சராசரியாக 2.3 ஆக உள்ளது. இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது.

மேற்கூறிய  மாற்றங்கள்  தொடர்பான தகவல்களில் உள்ள குறைபாடுகள் (information gap), பெண் பிள்ளையை அதிகம் கற்பித்ததே, திருமண தடைக்கான பிரதான காரணம் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கு காரணமாக அமைகிறது. சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான சரியான புரிதல் பெற்றோர்களிடம் இருத்தல் மிக அவசியம். பெண் பிள்ளைகளை அதிகம் படிக்கவைத்ததே அவர்களது திருமணம் பிந்திப் பின்செல்வதற்கான காரணம் என நினைத்து வீண் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், படித்த பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம் என்ற தப்பபிப்பிராயத்தை வளர்ப்பதும் தவறு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

Related Articles