ஆண் மற்றும் பெண்ணின் பார்வையில் திருமணம்

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கால மாற்றத்தில் ஏற்படும் மன மாற்றமும், சமூகச்சூழலின் மேல் இருக்கும் அவரது பார்வையும், மாறுபடும். அதை காலம் வாரியாக பிரித்து கூற விழைகிறது இந்த கட்டுரை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை நிலை, வாழும் பகுதி, சார்ந்துள்ள சமூகம், வளர்ந்த விதம், என்று பல்வேறு கூறுகளைக் கொண்டு தான் இந்த மனிதனின் மன மாற்றத்தைப் பற்றி புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இதில் குறிப்பாக தனது எதிர்காலத்தைப்பற்றிய கற்பனைகளையும், காலம் மாற மாற சூழலுக்கு ஏற்றார்போல் தன்னைப் பொருத்திக்கொள்ளும் விதம் பற்றியும் பேச இருக்கிறது, இந்த கட்டுரை.

உலகெங்கிலும் இருக்கும் தனி மனிதர்களிடம் நிலவும் ஒரு பரவலான கருத்து “உச்சபட்ச மகிழ்ச்சி என்பது உண்மையாகவே தனக்கு ஏற்ற மனைவியை கண்டுபிடிப்பது”, என்பது தான். தனிமையில் வாழ்பவர், தனிமையில் வாழும்பொழுது தான், என் முழு சுதந்திரத்தை உணர்கிறேன் என்று கூறுவதுமுண்டு. திருமணமாகாத 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாருக்கும் திருமணம் பற்றிய கனவுகள் அவ்வப்போது வந்து போகும். அதிலும் ஒரு சில ஆணும், பெண்ணும் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாதது போன்றதொரு வெளிப்பாடு பலரை ஆச்சர்யப்படுத்தும்.

இளைஞர்களின் உளவியல் மற்றும் இந்திய புள்ளிவிவரம்

உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறும் கூற்றுகள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். திருமணமாகாத அமெரிக்க இளைஞர்கள் 814 நபர்களைக் கொண்டு, உளவியல் ஆய்வாளர் செய்த ஆய்வில், திருமணமாகாத பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்வதாக உணர்வதாகவும், திருமணமாகாதவருக்கு தனது குடும்பத்தினர் மீது எப்போது அக்கறையும், பிணைப்பும் இருப்பதாகவும், திருமணமான ஆணும் பெண்ணும் தன் சுதந்திரத்தை இழந்து, தனிமையில் வாடுவதாகவும் கூறுகின்றது. இது அமெரிக்க இளைஞர்கள் தானே, இந்தியாவில், நிலை வேறு என்று நாம் எடுத்துக்கொள்ளலாகாது. ஏனெனில், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்தபின், அதிக ஊதியம் பெறும் நோக்கம் கொண்டு, பலர் வெளிநாடுகளின் வாழ்க்கைமுறையோடு ஒட்டிய வாழ்க்கைமுறையை தான் பின்பற்றுகின்றனர்.

2014 ஆம் அண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியான புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65% பேர், 35 வயதுக்கும் கீழுள்ளவர்கள் என்று கூறுகின்றது. 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களின் சதவிகிதம் 81% ற்கும் மேல் குறைந்துள்ளது. பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் வேலைத் தேடி நகரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்த தகவல் கூறுகின்றன. 74% கல்வியறிவை எட்டியுள்ள இந்தியாவில், வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்படுபவர்களில் 15 முதல் 29 வயதில் இருப்பவர்கள் தான் அதிகம் என்கின்றது மத்திய அரசின் புள்ளிவிவரம்.

2017 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி, கேரள உயர் நீதிமன்றத்தால் ஒரு வழக்கில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அகிலா (எ) ஹதியா, இந்து மதத்திலிருந்து இஸ்லாமியத்திற்கு மாறி ஷஃபின் ஜஹன் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் செல்லாது என்பது தான் அந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு. இந்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஹதியாவும், ஷஃபின் ஜஹனும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் ஹதியா கூறியது, “தனி ஒரு பெண்ணால் தான் விரும்பிய மதத்திற்கு மாறத் தடை விதிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 18 வயது நிரம்பியவருக்கு, நாட்டுப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை உண்டு, திருமணம் செய்யலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம், சுயமாக வேலைக்குச் செல்லலாம், ஆனால் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுதல் கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்?” என்பது தான்.

இன்றைய தலைமுறையினரில் அநேகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகத் தான் ஹதியாவின் பார்வை இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு காதல் திருமணங்கள் நிகழ்கின்றது என்பதற்கு தேசியக்குற்றப்பிரிவின் அறிக்கையில் 2014-2015ல் கௌரவக் கொலைகள் 796% மாக அதிகரித்திருப்பதாக தகவல் உள்ளது.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது, 18 வயது பூர்த்தியான அனைவரும் தன்னுடைய திருமணம், துணையை தேர்ந்தெடுப்பது போன்ற விடயங்களில் தானே முடிவெடுக்க விரும்புகிறார்கள் என்பதைத் தான். விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமே, எதிர்காலத்தின் மீது கொண்ட ஒரு கற்பனையும் ஒரு முக்கிய காரணம்.

Men Psychology (Pic: lovemydress)

ஸ்காட் ஹால்ட்ஸ்மேனின் ஆய்வு

ரோட் தீவின், உளவியல் ஆய்வாளர் ஸ்காட் ஹால்ட்ஸ்மேனின் கூற்றுபடி, அநேக திருமணமான ஆண்களின் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்ட ஒன்று. அவர் மேலும் விரிவாக கூறுகையில், புதிதாக திருமண உறவில் ஈடுபட்டுள்ள ஆண்களின் இயல்பு நிலை சற்று மாறி, புதிய மனிதராக சுற்றியுள்ளவருக்குத் தெரிவார் என்கிறார்.

பொதுவாக திருமணமான பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுவதாகவும், சராசரியாக ஐந்து விதமான தொனிகளில் பேசுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதே திருமணமான ஆண்கள் ஒரு நாளைக்கு வெறும் 2000 வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும், சராசரியாக மூன்று விதமான தொனிகளில் பேசுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்காட்டின் அதே ஆய்வில் திருமணமான ஆண்கள், உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும், புதிய சந்தர்பங்களைக் கையாள்வதிலும் தடுமாறுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளார். பிற்காலத்தில் வரயிருக்கும் மன உளைச்சலை கணிக்கத் தவறுகிறார்கள் ஆண்கள் என்கின்றது அந்த ஆய்வு.

திருமணமான ஆண்கள், திருமணமான புதிதில், தன் துணைவியாரோடு இருக்கும் பொழுதெல்லாம், தன் துணைவியாருக்குப் பிடிக்கும்படியாக நடந்துக்கொள்வதில் முனைப்பு காட்டுவார்.

மணம் முடிக்க இருக்கும் தருவாயில் தன் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும்  என்கின்ற எண்ணம் கொண்டுள்ளவர்களாக மாறுவார்கள் ஆண்கள். இதை பெண்ணோடு ஒப்பிடுகையில் ஆணுக்கு அதிகம் தான் என்கின்றது ஸ்காட்டின் ஆய்வு.

பெண்ணோடு திருமண உறவு ஏற்படும் தருவாயில், ஆண் பெண் உறவை, புதிதாக ஒன்றன் போல் பாவித்துக்கொள்வார்கள் ஆண்கள்.

பெண்ணைக்காட்டிலும், ஆணுக்கு, தன் துணைவியை மகிழ்விப்பது ஒரு பேரார்வமாகத் தான் இருக்கும்.

Indian Scenario (Pic: focuzstudios)

திருமணமான இந்திய பெண்கள்

அநேக இந்திய ஆண்களும், இந்திய பெண்களும், தனது திருமணம் பாரம்பரிய வழிமுறைகளோடு நடைபெற விரும்புவதாகத் தான் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க. இந்தியாவிற்குள்ளேயே, பகுதி வாரியாக திருமண சடங்குகளும், சாங்கியங்களும் மாறுபடும். உதாரணத்திற்கு தென்னிந்தியா என்று எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களும், மராட்டிய மாநிலத்தில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களும் மாறுபடும் என்றாலும், அந்த சம்பிரதாயங்களினுள் மெல்லிய இழையில் ஒரு ஒற்றுமையைக் காணமுடியும். இந்திய மண்ணிலும், இந்திய விளை நிலங்களிலும் விளையாத எந்த ஒரு பொருளையும் கொண்டு எந்த பகுதி மக்களும் சம்பிரதாயங்கள் செய்து திருமண நிகழ்வை மேற்கொள்ளப்போவதில்லை.

இந்த புரிதலையும் தாண்டி ஒரு 14000 நபர்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு வழங்கும் புள்ளிவிவரத்தில் 91% பெண்களுக்கு தன் துணைவனைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் கிடைப்பதில்லை எனவும், அவை அனைத்தும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றும் தெரியவருகிறது. அதாவது அந்த பெண்ணின் பெற்றோரோ அல்லது அந்த பெண்ணின் சகோதரர்களோ, தன் வீட்டுப் பெண்ணின் துணைவனை தேர்ந்தெடுப்பதில் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அந்த, சமூக ஆய்வு கூறுகின்றது. அதிலும்  50% ற்கும் அதிகமான கதைகளில், அந்த பெண் திருமணம் நடைபெறுவதற்கு முன் ஒரு முறை கூட தன் எதிர்காலக் கணவரோடு பேசியிருக்க மாட்டார் என்கின்ற தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. சுதந்திர இந்தியாவில், இன்னும் சில பகுதியில் வாழும் பெண்களுக்குச் சுதந்திரமில்லை.

இந்த ஆய்வளிக்கும் புள்ளிவிவரத்தோடு, கௌரவக்கொலைகள் தொடர்பாக முன்பு கூறிய புள்ளிவிவரத்தை ஒப்பிட்டுப்பார்க்கையில், இந்தியாவில், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விடயங்கள் இன்றும் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானதாக உள்ளதாக புரிந்துக்கொள்கிறேன்.

புள்ளிவிவரங்களையும் கருத்தில்கொண்டு, அதற்கு அப்பாற்பட்டும் நாம் சிந்திக்கையில், நம் பார்வைக்குப்படும் எல்லா சமூகப் பிரச்சனைகளும் நமக்கு உணர்த்துவது, ஆணுக்கு, பெண் சரிக்கு சமம் இல்லை என்கின்ற மனோபாவம் இன்றும் நிலவுகதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

Indian Women (Pic: mostinside)

இங்கே நான் குறிப்பிட்டிருப்பது, நான் பார்த்த, கடந்துவந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு நான் புரிந்துகொண்ட ஒன்று. உண்மை நிலை வேறு விதமாகவும் இருக்கலாம். இது திருமணம் பற்றிய ஆண் மற்றும் பெண்ணின் பார்வை, வயது வாரியாக பகுத்துக் கூற முயற்சித்த கட்டுரை.

Web Title: Marriage In The Eyes Of Men And Woman, Tamil Article

Featured Image Credit: ilovehdwallpapers

Related Articles