ஆனா ஒன்னுடே! எந்த பிள்ளையையும் பெத்தவனுக ஆரோக்கியமா வளர்க்கலை

66 வயசுலயும் கண்ணாடி போடல. என்ன கொஞ்சம் ரொம்பவே பொடியான எழுத்துகள் மட்டும் சிறிது மங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் படித்துவிட முடிகிறது. ஆனால் 5ம் வகுப்பு படிக்கும் பேரன் கண்ணாடியை போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக நடக்கையில் ஏதோ ஒரு வகையில் பரிதாபமும் எட்டிப் பார்க்கிறது.

அவசர உலகுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் விரைவு காட்டல் இங்கு வழக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் பலரது வாழ்க்கையும் இப்போது விரைவு காட்டி கிளப்பி விடுகிறது. என் கண்முன்பே நான் அன்று உண்டு மகிழ்ந்த பதார்த்தங்கள் பலவும் துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கித் தொலைக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில் நாட்டில் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு காலையில் கருப்பட்டி காபி கிடைக்கும். இப்போது கருப்பட்டி வாங்கும் வீடுகளையே விரல் விட்டு எண்ணி விடலாம். முன்பெல்லாம் கேஸ் அடுப்புக் கலாச்சாரம் தலைதூக்காத அந்த பொழுதில் சமையல் அறையில் மண், கல் கொண்டு சிமெண்ட் கலவையால் அடுப்பு செய்யப்பட்டிருக்கும்.

படம் – blogspot.com

அதில் ஒரு அடுப்பில் பிரதானமாக சமையல் நடக்கும். இன்னொரு அடுப்பில் எப்போதுமே ஒரு பானையில் கொதிநிலையில் கருப்பட்டி காபி கிடக்கும். இதை அப்போது கொடி அடுப்பு என சொல்லுவது உண்டு.  வெளியிலே சென்று உற்சாகமாக விளையாடிவிட்டு, உள்ளூர் குளத்தில் நாள் எல்லாம் மூழ்கி குளித்து விட்டு, அவ்வப்போது வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபியையும், கருப்பட்டி போட்டு பிசைந்து வைத்த அவலையும் சாப்பிட்ட நாட்கள் எல்லாம் இப்போது கற்பனை போல் தெரிகிறது.

தெருவிலே முன்பைப் போல் அவல் கொண்டு வரும் ஆட்களையும் அதிகம் காணவில்லை. இன்னும் சொல்லப்போனால் கிராமப் பகுதிகளிலேயே அரிதாகி விட்டது. இப்போதெல்லாம் நாஞ்சில் நாட்டில் சித்திரையில் கட்டிக் கொடுத்த பெண் வீட்டாருக்கு சம்பிரதாயமாக அவல் கொடுப்பதோடு, அதனோடு உள்ள பந்தம் முடிந்து விட்டதாக தோன்றுகிறது.

படம் – isha.sadhguru.org

உள்ளூரில் பெட்டிக் கடை வைத்திருக்கும் பொன்னுச்சாமி என்னோடு ஆறாம் வகுப்பு வரை படித்தவன். அதன் பின்னர் அவனது அப்பாவோடு சேர்ந்து கடைக்குள் சங்கமித்து விட்டான். ஒரு காலைப் பொழுதில் அவன் கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்தேன். வரிசையாக வந்த பலரும் 3 நிமிடங்களில் தயாராகிவிடும் நூடூல்ஸ் வகையறாக்களை வாங்கி சென்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் குழந்தைகளை கையோடு அழைத்து வந்தனர். குழந்தைகள் பேக் செய்யப்பட்ட சில பொருள்களை கை சுண்டி காண்பித்தன. அத்தனையும் உடலுக்கு தீங்கு தரக்கூடிய பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள். கூடவே பாக்கெட்டை பிரித்தால் நான்கோ, ஐந்தோ வறுத்த, பொரித்த…ஏதோ ஒரு மண்ணு(!) அதனோடு, மீதியெல்லாம் காற்றை அடைத்து பெரிதாக்கியதை விருப்பத்தோடு வாங்கி சென்றனர்.

ஏ…பொன்னுச்சாமி, உனக்கு கடையில பாதி வியாபாரம் இதுதானோ? என்றேன். ஆமாடே என்றவன் என்ன நினைத்தானோ புலம்பித் தீர்த்து விட்டான். ‘’இதெல்லாம் போட்டாத் தான் கடை பக்கமே ஜனங்க வருது. இங்க பாரு கடலை மிட்டாய். வாங்கிப் போட்டது அப்படியே கிடக்கு. ஆனா பாரு இந்த கிண்டர் ஜாய் மிட்டாய் 40 ரூபாய். இது மட்டுமே இந்த சாதாரண கிராமத்துல காலையில் இருந்து 8 வித்துருக்கேன். மேகி, இப்பி நூடுல்ஸ் இதுல்லாம் நேரம் காலம் இல்லாம விக்கும். ஒரு நாளைக்கு இருபது, முப்பது சாதாரணமாகவே! எல்லா சாக்லேட்டும் ஒரு வாரத்துல தீர்ந்து, அடுத்தது வாங்கிப் போடுவேன். ஆனா ஒன்னுடே எந்த பிள்ளையையும் பெத்தவனுக ஆரோக்கியமா வளர்க்கலை..” அவன் பேச, பேச நினைவுகள் கடந்த காலங்களை அசைபோட்டுக் கொண்டே இருந்தது.

படம் – pixabay.com

முன்பெல்லாம் எங்கல் நாஞ்சில் நாட்டில் வீட்டுக்கு வீடு சம்பா அரிசி தான். எங்கள் வீட்டில் எல்லாம் அப்போது தோசைக்கு மாவு அரைப்பதே அதிசயமான ஒன்றாக இருந்தது. அமாவாசை, பொளர்ணமி, கோவில் திருவிழா, தீபாவளி என நல்ல நாள்களுக்குத் தான் மாவு அரைத்து தோசை, இட்லியே கண்ணில் காட்டப்படும். ஆனாலும் ஆரோக்கிய உணவுக்கு குறை கிடையாது. பெரும்பாலான நேரங்களில் கருப்பட்டி தோசை வீட்டில் இடம் பிடிக்கும். சினை இட்லி அம்மா அவிப்பது தெரு முழுக்கவே மணக்கும்.

சினை என்பதன் பொருள் கருவுற்று இருத்தல். இட்லி கருவுறுமா என்ன? அது போல தோற்றத்தில் இருக்கும் இந்த இட்லி. இந்த சினை இட்லிக்குள் சிறுபயிறு, தேங்காய், சர்க்கரை, ஏலம், சுக்கு என ஆரோக்கிய பொக்கிஷமே இருக்கும். இதன் முன்பு உங்கள் பீசாவும், பர்க்கரும் பிச்சை எடுக்கத்தான் வேண்டும். இன்றைக்கெல்லாம் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள். அதனை கவனத்தில் கொண்டே பெரு நிறுவனங்கள் துரித உணவுகளை கடை விரிக்கின்றன. இன்று மருத்துவமனைகள் இத்தனை அதிக அளவில் பெருக்கெடுத்திருப்பதில் துரித உணவுகளுக்கே மிக முக்கிய பங்கு உண்டு.

படம் – vegrecipesofindia.com

துரித உணவுகளின் எதிர்விளைவில் நம்மிடம் இருந்த பல பாரம்பர்ய நெல் ரகங்களையும் நாம் இழந்து விட்டோம். எங்கள் குமரி மாவட்டத்திலேயே அறுபதாம் குறுவை என ஒரு உள்ளூர் ரகம் இருந்தது. இது 60 நாளில் விளைந்துவிடக் கூடியது. என் அப்பா காலத்தில் எங்கள் வயலில் கூட அறுபதாம் குறுவை பயிர் செய்து பார்த்திருக்கிறேன். இன்று இந்த பாரம்பர்ய நெல் ரகம் தேடிய போதும் கிடைக்கவில்லை. குமரியில் பேச்சிப்பாறை மலைப் பகுதியில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி இன மக்களிடம் கரை நெல் என ஒரு பாரம்பர்ய நெல் ரகம் இருந்தது. என்னோடு படித்து, வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் ஆறுமுகம் அடிக்கடி இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது அந்த நெல்லும் சாகுபடி செய்ய ஆள் இல்லை என அவர் சொல்லிக் கேட்ட போது பீசாக்களும், பர்க்கரும் நம் பாரம்பர்யத்தை எத்தனை வீரியத்துடன் காவு வாங்கி வருகிறது என்று தோன்றியது.

படம் – vegrecipesofindia.com

மனித வாழ்வின் மிகப்பெரிய சொத்தே ஆரோக்கிய சம்பாத்யமே. எத்தனை லட்சங்கள் சேர்த்து வைத்திருந்தாலும், உடலில் சர்க்கரை வியாதியை சேர்த்துக் கொண்டால் வாழ்க்கை இனிக்குமா என்ன? அன்று என் வீட்டில் எத்தனை, எத்தனை சிறுதானிய உணவுகள் இருந்தன? கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, தினை இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தினை பாயாசமும், சாமை பொங்கலும் உண்டு கழித்த நாள்களில் இருந்து இன்றைய நாள்களைப் பார்க்கிறேன். ‘’காலையில் கோதுமை தோசையையும், மாலையில் கோதுமையில் சப்பாத்தியையும் தட்டில் வைத்து விட்டு மனைவி சொல்கிறாள். 65 வயசு தாண்டிருச்சு. இனி இதைத் தான் சாப்பிட வேண்டும் என்று!” என் பாரம்பர்ய, ஆரோக்கிய உணவுகளுக்கு விடை கொடுத்து விட்டு, போகாத ஊருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறாய் என்றேன். சிரித்துக் கொண்டாள்.

ஒரு முறை ஒரு இயற்கை அங்காடிக்கு சென்று நிரம்ப சிறுதானியங்களை வாங்கி வந்து வீட்டில் போட்டேன். கட்டிச் சம்பா அரிசியும் கொணர்ந்து வந்திருந்தேன். நானும் இன்று, சமைப்பாள்…நாளை சமைப்பாள் என காத்துக் கொண்டே இருந்தேன். தட்டில் ஒரு நாளும் சிறுதானியம் வந்த பாடில்லை. மெல்ல மனைவியிடம் இது குறித்து கேட்டேன். ‘’ஏங்க அவ்வளவும் காசு கொடுத்தா வாங்குனீங்க? நான் கூட யாரோ அவுங்களுக்கு கிடைச்சதை உங்க தலையில கட்டிட்டாங்கன்னு அடுத்த வீட்டு அக்காட்டல்லா கொடுத்துட்டேன்.”என்றாள்.

படம் – pixabay.com

இவ்வளவு தான் இன்று நம் ஆரோக்கிய புரிதல். கடந்த வாரம் சென்னையில் இருக்கும் மகள் வீட்டுக்கு சென்று திரும்பியவள் பேரக் குழந்தைகளுக்கு வாங்கி வைத்த நூடூல்ஸ் வகையறாக்களையும், பேக்கிங் செய்யப்பட்ட நொறுக்குத் தீனி வகையறாக்களையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

இப்போது இரண்டு, மூன்று நாள்களாக வழக்கமான கோதுமை தோசை, சப்பாத்திகளும் கூட தட்டில் இல்லை. நூடூல்ஸ் ஐட்டங்களாக வருகிறது. இன்னும் எத்தனை பாக்கெட் தான் வைத்திருக்கிறாளோ? தெரியவில்லையே இறைவா!… எனத் துடிக்கிறேன். வேறு என்ன செய்ய முடியும். குடும்ப ஒற்றுமை ஓங்க நாம் இந்த வேசத்தையும் போடத்தானே வேண்டியுள்ளது. காலை, இரவு தான் என்றில்லை. இப்போதெல்லாம்  மாலையில் டீ குடிக்கும் போதும் நூடூல்ஸ் தருகிறாள். ‘’சென்னைக்கு போனமுல்லா… பேரப் பிள்ளைகளு ஸ்கூலு போயிட்டு வந்ததும் இதைத் தான் சாப்பிடுதுங்க…” என்பவளிடம் சிறுதானியத்தை பற்றி சொன்னால் ம்…ஹூம்….என்கிறாள்.

அடக்கவே முடியாமல் கேட்டே விட்டேன். ‘’சென்னையில் இருந்து அப்படி எத்தனை பாக்கெட் தான் எடுத்துட்டு வந்த? இன்னுமா தீரல”

இந்த கேள்வியை கேட்டதும்தான் தாமதம். மறு நொடியில் பதில் சொன்னாள். ‘’அதெல்லாம் அன்னிக்கே தீர்ந்துடுச்சு. இது நான் வாங்குனது. மொத்தம் 10 பாக்கெட் வாங்கிப் போட்டுட்டேன். இன்னும் ஒன்னு தான் கிடக்கு. நாளைக்கு திரும்ப வாங்கணும். இங்க நம்மூருல தான் வாங்குனேன். உங்க சினேகிதன் பொன்னுச்சாமி அண்ணன் கடை தான்!” என்றாள்.

இப்போதுதான் பொன்னுச்சாமி என்னிடம் சொன்ன விற்பனை கணக்குக்கும், என் வீட்டுக்கும் உள்ள தொடர்பும் தெரிகிறது.

Related Articles