செந்தமிழ் கெட்ட வார்த்தையானது எப்படி?

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று “

                                                           – குறள். 100

எத்தனையோ நல்ல வார்த்தைகள் புழங்கப்படும் சமூகத்தில்தான் கெட்ட வார்த்தைகளும் இருக்கிறது. சொற்கள் தம்மளவில் நல்லவையோ, கெட்டவையோ அல்ல. கெட்ட வார்த்தை எதுவென்று சமூகமும், பண்பாடுமே தீர்மானிக்கின்றன. அவைகளின் கருதுகோள்படி உலகம் முழுவதிலுமே சமூக இயக்கத்தைப் பண்படுத்துகிற அறம், ஒழுக்கம், விழுமியம் போன்ற சமூகச் சீராக்க சக்திகளுக்கு எதிராகத் தோன்றுகிற அனைத்தையும் கேடாக நினைத்து அவற்றைச் சுட்டுகிற சொற்கள் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுகிறது. அதோடு ஒடுக்கப்பட்ட மக்களும், அசுத்தங்களும் கூட கேடாகப் பார்க்கப்படுவதால் அவற்றைச் சுட்டுகிற சொற்களும் இதில் அடக்கம். பொதுவாக இவை கோபம், வெறுப்பு முதலியவற்றை வெளிக்காட்டுவதற்காகவோ அல்லது ஒருவரை இழிவு படுத்தும் நோக்கில் கேலி செய்வதற்காகவோ பயன்படுத்தப்படுகிறது. இரண்டு நிலைகளிலுமே யாரை நோக்கி உபயோகப்படுத்தப்படுகிறதோ அவர்களது மனதைக் காயப்படுத்துவதே அதன் இலக்கு.

இரண்டு நிலைகளிலுமே யாரை நோக்கி உபயோகப்படுத்தப்படுகிறதோ அவர்களது மனதைக் காயப்படுத்துவதே அதன் இலக்கு.

சமூகத்திற்குச் சமூகம், மொழிக்கு மொழி, காலத்திற்குக் காலம் வரையறை மாறுகின்றது என்றாலும் இதில் பொதுக்கூறுகள் இல்லாமல் இல்லை. தமிழில் மட்டுமின்றிப் பல உலக மொழிகளிலும் இந்தக் கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் இயற்கையின் ஆக்க சக்தியான பாலுறுப்பு மற்றும் வரைமுறை மீறிய பாலுறவு சார்ந்தவையாக உள்ளது. அதிலும் குறிப்பாகப் பெண்களின் பாலுறுப்பு மற்றும் பாலுறவு சார்ந்தவையாகவே இருப்பதைக் காணலாம். தந்தைவழிச் சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனை அவ்வாறு கட்டமைத்திருப்பதுதான் இதற்குக் காரணம். எனவேதான் முறையான தந்தை இல்லாதவன் என்ற வசை கடுமையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆசாரக்கோவையில்  யார் யாருடன் தனித்திருக்கக் கூடாது என்று ஒரு பாடல் கூறுகின்றது.

“ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான்”

அதாவது ‘தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறங்க மாட்டார்கள், ஏனென்றால் ஐம்புலன்களையும்  தடுப்பது அரிது’ என்பதே பொருள்.  இதன்படி தந்தைவழிச் சமூக ஒழுக்கநெறிக் கட்டமைப்பு ஆணாதிக்க சிந்தனையையும் தாண்டித் தாய், மற்றும் சகோதரியுடனான பாலுறவை வன்மையாக எதிர்த்திருக்கிறது என்றும் அதன் விளைவாகவே  நம் கெட்டவார்த்தைகளில் ‘தாயோலி ’, ‘வக்காலோலி ’  போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன என்றும் தெளிவாகிறது.

வரைமுறை மீறிய பாலுறவு சார்ந்தவையாக உள்ளது.

மேலும் “படித்தவன் மாதிரியா பேசுகிறான்?” என்ற வழக்கைப் பொதுவாகக் கேட்டிருப்போம். அதாவது கெட்ட வார்த்தைகள் கல்வியற்றவர்களிடம் வெளிப்படுவதாகவும், கற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்துவது கூடாது என்பதும் தமிழ்ப் பண்பாடாகக் கருதப்படுகின்றது.

இதுதவிர உடற் கழிவுகளும், அதை வெளியேற்றும் உடல் உறுப்புகளும் அருவக்கத்தக்கதாகப் பார்க்கப்படுவதால் அவையும் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுகிறது. உறுப்புகள் சார்ந்த சொற்களைத் தவிர்ப்பதால் அச்சொற்கள் வழக்கிழந்து போகின்றன, அல்லது தலைமறைவாகி விடுகின்றன. இதனால் ஏற்படும் நடைமுறைத் தொல்லைகள் ஏராளம். உடல் உறுப்புகளை முற்றும் சுட்ட முடியாமலேயே இருக்க இயலாதல்லவா? அதற்காக மொழித் தூய்மையை மறந்து வடசொற்களைக் கையாள வேண்டியிருக்கிறது. காரணப் பெயர்களாகப் புதிதாகச் சொல்லாக்கம் செய்ய வேண்டியுள்ளது. அல்லது ஆங்கிலச் சொற்களைக் கடன்பெற வேண்டியுள்ளது. கெட்ட உறுப்புகள் என்பதால் அவற்றின் செயல்பாடுகளைக் குறிக்கும் சொற்களும் விலக்கப்பட்டனவாகி விடுகின்றன.

இயல்பான உடல் செயல்பாடுகளான சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல், மாதவிடாய், குசு, விறைப்பு போன்றவற்றைச் சுட்ட வாய்ப்பான சொற்கள் அமைய முடியாமல் போய்விடுகின்றன. உதாரணமாக ‘பீ’ என்ற சொல்லைப் பயன்படுத்த முடிவதில்லை. ‘மலம்’ என்பது சைவ சித்தாந்தத் தத்துவப்பொருள் பெற்றுவிட்டது. மலம், மூத்திரம் ஆகியன பற்றி எழுதும் இலக்கிய வகைமை மேற்கத்திய மரபில் தனியே உண்டு. ‘Scatology’ என்று இதற்குப் பெயர். ‘பேள்’ என்ற சொல்லையும் இன்றைக்குப் பயன்படுத்த முடிவதில்லை. (சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இடம்பெறும் இச்சொல் க்ரியாவின் தற்கால மொழி அகராதியில் இல்லை). ‘புளுத்து’ என்ற சொல்லுக்கும் இதே கதிதான்.

‘விந்து’ தமிழ்ச் சொல்லா எனத் தெரியவில்லை. தமிழ்க் கொக்கோக ஆசிரியர் ‘சுக்கிலம்’ என்பதை நேராக ‘வெண்மம்’ என மொழி பெயர்த்திருக்கிறார். பெண்களின் உடற்கூறியலில் முக்கியமான ‘தூமை’ என்பதும் வசைச்சொல்லாகிவிட்டது . (தூமையைத் தீட்டாகக் கருதுவதைச் சிவவாக்கியர் கடுமையாகக் கண்டிக்கிறார்.)

சாதாரண உடல் இயக்கத்தையே கூச்சத்துடன் பார்க்கும் ஒரு சமூகம் புணர்ச்சியைப் பற்றி எந்தப் பார்வையைக் கொண்டிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தமிழ் லெக்சிகன் ‘விழைச்சு’ என்னும் சொல்லுக்குப் ‘புணர்ச்சி’ என்று தெளிவாகப் பொருள் (தொகுதி 6, ப.3724) தருகிறது. அதோடு புணர்ச்சியைக் குறிக்கும் ‘ஓள்’ என்ற பழந்தமிழ்ச் சொல் கெட்ட வார்த்தையானது போல் அதன் அனைத்து வடிவங்களும் கெட்டவையாகின்றன.  இதனால் அந்தச் சொற்களனைத்தும்  வழக்கொழிந்து ‘உடலுறவு’ என்றவொரு மொன்னையான  புதிய சொல்லாடல் பொது மொழியில் இடம்பெற்றுவிட்டது.

இதைவிட வேடிக்கை பலசொற்கள் எப்படிக்  கெட்டவார்த்தை ஆகியது என்பதுதான். மூலப்பொருள் இழந்துபோவதே வசவுகளின் இலக்கணம் என்றுகூடச் சொல்ல முடியும்.உதாரணமாக சிலவற்றைக் காணலாம்.

உழைக்காமல் இரந்துண்ணும் வாழ்க்கை மேல் உள்ள இழிவுணர்ச்சியின் வெளிப்பாடுதான்  ‘பொறுக்கி’ என்னும் வசைச்சொல். ‘எரப்பாளி’ என்ற கெட்ட வார்த்தையின் பொருள் ‘இரப்பவன்’. மேலும் ‘நாதாரி’ என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக் குறிக்கும் சொல். ‘எடுபட்ட பயல்’ என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

‘ஓகம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லின் பொருள் ‘ஒருங்கிணைத்தல்’. இதுவே வடஇந்தியாவில் ‘யோகா’ என்று மருவி மனதை உடலோடு ஒருங்கிணைக்கும் கலைக்குப் பெயரானது. ஆனால் இன்று ‘ஓகுதல்’ என்பது கெட்ட வார்த்தையாக மட்டுமே பயன்படுகிறது. ‘உவத்தல்’ (மகிழ்தல்) என்ற தூய தமிழ்ச்சொல்  சென்னைத்தமிழில் ‘ஓத்தா ‘ ஆனது. ‘அடையாளம்’ என்பதற்கான தூய தமிழ்ச்சொல் ‘புண்டை’. அது பெண்குறியையும்  சுட்டுவதால் கெட்ட வார்த்தை ஆனது. எஸ்.வையாபுரிப்பிள்ளை அதற்கு அவரது பேரகராதியில்  அர்த்தமும் கொடுத்திருக்கிறார்.

‘பன்னாடை’ என்பது இன்றைய வழக்கத்தில் வசைச் சொல்லாக மட்டும் பயன்படுகிறது.  உண்மையில் இது தெங்கு, பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்து நிற்கும் வலைத்தகடு போன்ற பகுதி. நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும். தென்னை மரத்தில் தேங்காய்க் குலைகளுக்குக் கீழே இழைகள் நெருக்கம் அல்லாத பட்டையாக ஏறத்தாழ 3 அடி நீளமும், ஓரடி அகலமும் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் இதனை ‘கள்’ முதலியவற்றை வடிகட்டப் பயன்படுத்தினர். பன்னாடையானது மீந்த சக்கையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். மேலும், மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு பகுதி இதுதான். தென்னை, பனை, வாழை போன்ற மரங்களில் ஒவ்வொரு பகுதியும் முற்றிலுமாக வாழ்க்கையில் பயன்படும். ஆக, பன்னாடை என்ற வசவின் பின்புலம் நெருக்கமின்மை என்றும் எதுவுமே (அறிவு) தங்காதவர் என்ற பொருளில் ‘வசைச் சொல்லாகப் பயன்படுகிறது.

பன்னாடை படம் -clipart-library.com

கூகைங்ற பறவை காய் இளசா இருக்கும் போதே அதுல இருக்குற தண்ணிய உறிஞ்சிவிட்டால் உரித்த பிறகு தேங்காய் கன‌மாக இருக்காது. அது மிஞ்சி இருக்குற தண்ணிக்கு மட்டும் உள்சோறு வளர்ந்த தேங்காய், கூமட்டைத் தேங்காய். பாத்தா உள்புறம் கொஞ்சம் மட்டுமே வெள்ளையாவும், மீதி வெறும் ஓடுமாகத்தான் தெரியும். எனவே அரைகுறை அறிவுடையவர்களை ‘கூமட்டை’ என்பர்.

கூழ்முட்டை, கூழைமுட்டை என்பன அழுகிய முட்டை, கெட்டுப்போன முட்டை என்று பொருள்படும்.  `கூமுட்டை’ என்பது இச்சொற்களின் திரிபு; அழுகிய முட்டை எதற்கும் பயன்படாது என்பதால் எதற்கும் பயன்பாடாதவர்களைத் திட்டுவதற்கு இந்தச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஊதியமில்லாமல் கட்டாய உழைப்பு நல்கவேண்டிய கீழ்நிலையிலுள்ளவரைக் குறிக்கும் ‘முட்டாள்’ என்று கல்வெட்டுகளில் வழங்குகிற சொல் பின்னாளில் வசவாக மாறியிருக்கிறது. தொடக்ககாலத் தமிழ் நாவல்களில் அடிக்கடி தட்டுப்படும் ‘தட்டுவாணி’ என்ற (பார்ப்பன) வசவின் பொருள் வலவனுக்கு அடங்காத குதிரை என்பதுதான். கணவனுக்கு அடங்காத பெண்களை ‘தட்டுவாணிச் சிறுக்கி’ என்று திட்டுவார்கள்.

கணவனுக்கு அடங்காத பெண்களை ‘தட்டுவாணிச் சிறுக்கி’ என்று திட்டுவார்கள்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் ஒவ்வொரு காவல் நிலையமும் அறியப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலை Known Depredators (KD) என்ற பெயரில் வைத்திருந்தது; அதிலிருந்து தோன்றிய வசவுதான் ‘கேடி’.

சொல் என்ற அளவில் மட்டுமல்லாது, யார் பேசுகிறார்கள் என்ற நிலையிலும் கெட்ட வார்த்தைகள் கட்டுப்பாட்டுக்கு உரியதாகின்றன. சில சமூகப் பிரிவினரிடையே வசவுகளின் புழக்கம் அதிகம் என்பது ஒரு சமூகவியல் உண்மை. மீன்காரிகளும் மீன் பிடிப்பவர்களும் சரளமாக வசவுகளைப் பயன்படுத்துவார்கள் என்பது உலக முழுமைக்கும் பொது. ‘To swear like a sailor/ to swear like a fishwife’ என்பன ஆங்கில வழக்குகள். விலை பேசிவிட்ட மீனுக்கு அதிகக் காசு கொடுக்க முன்வரும் வாடிக்கையாளரை நோக்கி, “உன் மீசையில் இருக்கிற மயிரும், என் ‘இதுல’ இருக்குற மயிரும் ஒன்னு” என்று தூக்கிக் காட்டுகிறாள் பிரபஞ்சனின் ‘மீன்’காரி.

யார் பேசுகிறார்கள் என்ற நிலையிலும் கெட்ட வார்த்தைகள் கட்டுப்பாட்டுக்கு உரியதாகின்றன

ஒரு சமூகம் கைக்கொள்ளும் மதிப்பீடுகளையும் போற்றும் விழுமியங்களையும் வெறுக்கும் கீழ்மைகளையும், அச்சமூகத்தில் நிலவும் சாதி, சமயம், வர்க்கம், பாலினம் முதலான பாகுபாடுகளையும், அப்பாகுபாடுகளுக்கிடையேயான அதிகார ஏற்றத்தாழ்வுகளையும் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தக்கூடியவை கெட்ட வார்த்தைகளே. அதேநேரத்தில் அறம் சார்ந்த சமூகத்தின் கட்டமைப்புகளை மீறுவது ஒழுக்கக் கேடு. அது சொற்கள் மூலமானாலும் சரி. எனவே கெட்டவார்த்தைகள் ஒரு நாகரீக சமூகத்தில் எப்போதும் தடுக்கப்பட்டே இருக்கும். ஆனால் எது கெட்ட வார்த்தை என்று புலனாவதில்தான் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. சமூக,பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தோட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனித துர்வாடை. அதை நாற்றமிகு மலர்களாக மாற்றிப் பயன்படுத்த வேண்டியது பண்பட்ட சமூகத்தின் கடமை.

உசாத்துணைகள்:

  1. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ – பெருமாள்முருகன்.
  2. ‘சில கெட்ட உறுப்புகள்’, ‘விரிவும் ஆழமும் தேடி’ – சுந்தர இராமசாமி.

Related Articles