புறக்கோட்டையில் கொஞ்சம் சுற்றித்திரிவோம்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

“கோட்டைக்கு வெளியே” எனும் கருத்தைக் கொடுக்கின்ற புறக்கோட்டை, ஒல்லாந்து நகர திட்டமிடலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள ஒரு இடமாகும்.

1900 இல் புறக்கோட்டை பிரதான வீதி (movingimages.files.wordpress.com)

புறக்கோட்டை வீதிகள்

வானிலிருந்து பார்க்கும்போது ஒரு வயல்வெளிபோன்று தென்படுகின்ற வகையில், புறக்கோட்டை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டையின் ஒவ்வொரு பாதையும், ஒவ்வொரு பொருட்களின் வியாபாரத்திற்கென ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களை நிறுத்துவது எப்படிப்போயினும், வாகனங்களில் செல்வதற்குக்கூட முடியாதவாறு இப்பிரதேசம் சனநெரிசல் மிக்கதாகவும், நெருக்கமானதும்கூட. ஆனாலும், பல நூற்றாண்டு காலம் தொட்டு இன்றுவரையிலும், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபரத்தில் புறக்கோட்டை ஒரு கேந்திர நிலையம்தான்.

நெரிசல்மிகு புறக்கோட்டை கடை வீதிகள் (staticflickr.com)

காலப் போக்கில் மனிதர்களின் தேவைகள் மாறுகின்றன. அதற்கேற்ப, வியாபார நிலையங்களில் உள்ள பொருட்களும் மாற்றமடைகின்றன. இவ்வாறு மாற்றமடைந்துள்ள வாழ்க்கை முறை காரணமாக, சில காலங்களுக்கு முன்னர் கண்ட புறக்கோட்டையை பார்க்கிலும், இப்போதைய புறக்கோட்டை பாரிய மாற்றம் கண்டிருக்கின்றது.

இலத்திரனியல் பித்தர்களுக்கு…

இலத்திரனியல் மற்றும் மின்னியல் பொருட்களுக்கு முதலாம் குறுக்குத் தெரு ஒதுக்கப்பட்டுள்ளது. (புறக்கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால்) ஓல்கொட் மாவத்தையிலிருந்து முதலாம் குறுக்குத் தெருவுக்கு நுழையும்போது, பெரும் ஒலிபெருக்கிகள் விற்பனை செய்யப்படும் வியாபார நிலையங்களை நீங்கள் காணலாம்.

சில காலம் மின்குமிழ்கள் விற்பனை செய்யப்பட்ட வியாபார நிலையங்களில், பின்னர் ஒவ்வொரு வகையிலான CFL குமிழ்கள் விற்பனை செய்யப்பட்டன. இப்போது, பெரும்பாலான இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில், LED தொழில்நுட்படத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு குமிழ்களைக் காணலாம்.

கையடக்கத் தொலைபேசிகளும் பாகங்களும்

ஓல்கொட் மாவத்தையிலும், புகையிரத நிலையத்துக்கு முன்னாலுள்ள கடைகளிலும் கையடக்கத் தொலைபேசிசகளையும் உதிரிப்பாகங்களையும் வாங்கலாம். ஆனால், இப்பகுதியில் சற்று விலை அதிகமாகவே உள்ளது. முதலாம் குறுக்குத் தெருவின் நடுப்பகுதியளவில் உள்ள ட்ரான்ஸ் ஏசியா மற்றும் அதன் அருகிலுள்ள கடைகளில் கையடக்கத் தொலைபேசிகளின் பாகங்களை மலிவாகப் பெறலாம்.

முதலாம் குறுக்குத் தெருவில் வியாபாரிகள் (roar.lk)

 

இன்னுமொரு புறத்தில், பிரதான வீதி (மெய்ன் ஸ்ட்ரீட்)யில் பெரிய ஹட்டன் நெஷனல் வங்கியைத் தாண்டிச் செல்லும்போது, கடல்நோக்கிய திசையில் (துறைமுக திசையில்) பொலெக் என்றொரு கடை உள்ளது. அந்தக் கடையிலும் அதன் அருகே உள்ள கடைகளிலும் கையடக்கத் தொலைபேசிகளின் உதிரிப்பாகங்களை மலிவாகப் பெறலாம். கையடக்கத் தொலைபேசிகளின் ஸ்பீக்கர், செல்பி ஸ்டிக், சாஜர், பற்றரி, உறை ஆகியவற்றை முதலாம் குறுக்குத் தெருவிலும், பிரதான வீதியின் இறுதியில் உள்ள ப்லொக் கற்களால் ஆன கடைகளிலும் மலிவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ளலாம். CD/DVD    கம்பியூட்டர் பாகங்கள், பென்ட்ரைவ் போன்றன முதலாம் குறுக்குத் தெருவின் இறுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாஸாவில் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றது.

திருமணப் பொருட்கள்

திருமண வைபவங்களுக்குத் தேவைப்படுகின்ற கேக் பெட்டிகள். திருமண அழைப்பிதழ் போன்றன மெலிபன் வீதியில் கிடைக்கின்றன. மெலிபன் வீதியில் இவ்வாறான ஒரு கடைக்குள் நுழைந்தால், பல வடிவங்களிலான அழகிய அழைப்பிதழ்களை துருதுருவென தேர்ந்தெடுக்கும் யுவதிகளையும், அங்கு என்னதான் நடக்கின்றது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும், மணமகன் என்று கருதக்கூடிய வகையிலான இளைஞர்களையும் நீங்கள் காணலாம்.

வைபவங்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் பூக்கள், பூக்கொத்துக்கள் பாங்க்ஷேல் வீதியில் (Bankshall Street) கிடைக்கின்றன. இது பிரதான வீதிக்கு சமாந்தரமாக துறைமுக திசையை நோக்கியுள்ள ஒரு வீதியாகும். அதேபோல், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையும் மெலிபன் வீதியின் இறுதியில் (புறக்கோட்டை அரச மர பகுதி) வாங்கலாம். மாலை, காப்பு, மோதிரம், காதணி முதலிய ஆபரங்களை, பெரும்பாலும் இவ்விடங்களில் மொத்தமாக வாங்கலாம்.

பெறுமதிவாய்ந்த ஆபரணங்களுக்கு, ஐந்து லாம்புச் சந்திக்குச் சென்று, அங்கிருந்து செட்டியார் தெருவுக்குச் சென்று, தேவையானளவு தங்க ஆபரணங்களை வாங்கலாம்.

திருமணம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடம் (btoptions.lk)

 

அத்தோடு, மெலிபன் வீதி என்பது பிரதானமாக காகிதாதிகளுக்கான ஒரு பகுதியாகும். காகிதாதிகளை மொத்தமாக வாங்குவோர் இங்கு அடிக்கடி செல்வர்.

ஆடைகள்

படுக்கை விரிப்புக்கள், துண்டு முதலியவற்றை இரண்டாம் குறுக்குத் தெருவிலும், அதனை அண்மித்துள்ள வீதிகளிலும் போதியளவு பெற்றுக்கொள்ளலாம். டீசேர்ட், சாயா, சட்டை முதலிய வெவ்வேறு ஆடைகளை இரண்டாம் குறுக்குத் தெருவில் பெற்றுக்கொள்ளலாம். பல ஆடைகளையும் தெரிவு செய்து வாங்கும்போது, உள்ளாடைகளை மறந்துவிடுவதாலோ என்னவோ, இந்தப் பகுதியில் வீதியின் இரு புறங்களிலும் பலகைகளில் படர்த்தி ஆடைகளை விற்பனை செய்பவர்கள்.

வைபவங்களுக்கு அணியும் சேலை, சல்வார், காற்சட்டை, கழுத்துப்பட்டி, சட்டை முதலியவற்றை தரமாக வாங்க வேண்டுமாயின், பிரதான வீதியின் இரு புறங்களிலும் உள்ள பெயர் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கலாம். கேசர் வீதியின் உள்பகுதியில் அமைந்துள்ள அஸ்லம் மார்கட், சேலை வாங்கும் யுவதிகளுக்கு மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

புறக்கோட்டை பகுதியில் இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெருக்கள் எங்கும், மொத்த விற்பனையில் ஈடுபடும் ஆடையகங்களே பெரும்பாலும் உள்ளன. மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விசாரித்துச் செல்லும்போது, சில்லறை வியாபார நிலையங்களும் காணக்கிடைக்கின்றன.

வைபவங்களுக்குத் தேசையான அரிசி, கருவாடு, சீனி, மா

நான்காம் குறுக்குத் தெருவில் மொத்த விற்பனையில் (bp.blogspot.com)

வீட்டில் நடைபெறும் பெரிய வைபவங்களுக்கு, சில்லறை சாமான்களை மொத்தமாக வாங்குவது இலாபகரமானதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரிசி, மா, சீனி, பருப்பு மற்றும் கருவாடு, நெத்தலி முதலிய பொருட்களை வாங்குவதற்கு நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களுக்குச் செல்லலாம். சிறிய பாத்திரங்களில் மாதிரிகளை வைத்து, சிறியளவில் வியாபரம் செய்வது போல் தென்படுகின்றபோதும், இந்த சிறிய பகுதியில் இருக்கும் வியாபாரிகள், மொத்த இலங்கையருக்கும் ஓரிரு மாதங்களுக்குத் தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

சட்டி, முட்டி, பீங்கான் முதலியவற்றை, போதிராஜ மாவத்தையின் இறுதியில் மொத்தமாக வாங்கலாம். மரக்கறிகளை மொத்தமாக வாங்குவதாயின் மெனிங் மாகட்டுக்குச் செல்ல வேண்டும். இப்போது போதிராஜ மாவத்தையின் ஓரிடத்திலும் மரக்கறிகளை சில்லறையாக விற்கும் இடமொன்று உள்ளது. வைபவங்களின்போது காகிதத் தட்டுகள், சர்வியட் முதலியனவும் தேவைப்படுகின்றன. பிரதான வீதியிலிருந்து கடல் திசை நோக்கியுள்ள சீன வீதி (China Street) க்கு பிரவேசித்தால், சேவியட், கோப்பை, நெஸ்கபே கோப்பைகள், பொலிதீன், கழிவு சேர்க்கும் பொலீதின் பைகள் முதலியவற்றை வாங்கலாம்.

அப்பிள், தோடம், சொக்கலேட், இனிப்புக்கள்

செம்பள்ளி (panoramio.com)

புறக்கோட்டை அரசமர அருகாமையில் உள்ள கடைகளில் அப்பிள், திராட்சை என்பன விற்கப்படுகின்றன. ஆனாலும், பிள்ளைகளுக்கும், மனைவியருக்கும், வைபவங்களுக்கும் புதிய வகை சொக்லேட், இனிப்பு, பேரீத்தம் பழம், அப்பிள், தோடம், மாதுளை ஆகிய பழங்கங்களை பெருமளவு வாங்குவதற்குப் பொருத்தமான கடைகள் சிவப்பு பள்ளி (Red Mosque) அருகாமையில் உள்ளன. அவற்றில் பல்வேறு வகையிலான வெளிநாட்டு ஜெலி, சொக்கலேட், இனிப்புக்கள் விற்கப்படுகின்றன. இங்கு சென்றால், சுவையாலும், அழகாலும் சுவை நரம்புகளை கிளரச் செய்கின்ற இந்த இனிப்புக்களின் பெரும் பகுதியை, அப்படியே வீட்டுக்கு எடுத்துச் சென்று, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டால் நன்றாயிருக்கும் என்றுகூட எண்ணத் தோன்றும்.

சப்பாத்து, பைகள் முதலியன

சப்பாத்து, பை வகைகளை வாங்குவதற்கு பொருத்தமான இடம் மல்வத்தை வீதியாகும். ஒரு காலத்தில் கெசட் விற்பனை நிலையங்களால் நிரம்பியிருந்தபோதும். இப்போது அங்கு பெருமளவு பேக் மற்றும் சப்பாத்து விற்பனை நிலையங்களே உள்ளன.  மல்வத்தை வீதியின் பிரதான வீதி இறுதியில் பெருமளவு பேக் கடைகள் உள்ளன. வீதியின் அடுத்த இறுதியில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பெரிய, சிறிய பிள்ளைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் இக்கடைகளில் கிடைக்கும்.

பாதணி விற்பனையில் வியாபாரியொருவர் (btoptions.lk)

ஓய்வாக சுற்றித்திரிய…

ஒல்லாந்தர் காலத்து தொல்பொருட்கள் அடங்கிய, புறக்கோட்டை என்று நினைக்க முடியாதளவு அழகான ஒரு இடம் குமார வீதியில் (Prince Street) அமைந்துள்ளது. அது ஒல்லாந்தர் நூதனசாலையாகும். ஓய்வாக சுற்றித்திரிந்து, நம்  நாட்டின் ஒல்லாந்தர் காலத்து கலாசாரம், பொருட்கள், கட்டடக் கலை குறித்து அறிந்துகொள்வதற்கு, இது ஒரு சிறந்த இடமாகும். இவ்வாறான இன்னுமொரு சிறிய நூதனசாலை, ஐந்து லாம்பு சந்தியில் (Gas Works Junction) பழைய நகர மண்டபத்தில் இருக்கின்றது. புறக்கோட்டை புனித பஸ்தியன் கால்வாயின் இறுதியில் புதிதாக அமைக்கப்பட்ட, மிதக்கும் சந்தையும் (Floating Market) ஓய்வாக நேரத்தைக் கழிப்பதற்கு பொருத்தமான இடமாகும்.

புறக்கோட்டையில் எது எங்கே இருக்கின்றது என்று அறிந்துகொண்டு, அங்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு துணைபுரிந்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இங்கு நாம் தவறவிட்டுள்ள ஏதாவது விடயங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமாயின், அதனை பின்னூட்டமாக இட்டு, எமக்கு அறியத்தர மறவாதீர்கள்.

Related Articles