கால ஓட்டத்தில் தொலைந்து போன கடிதப் போக்குவரத்து!

கால ஓட்டத்தின் சுழற்சி அபாரமானது. கண்களை மூடி திறப்பதைப் போல வேகமாக ஓடி நகர்ந்து  விடக் கூடியது. இப்போது தான் பணியில் சேர்ந்தது போல் இருந்தது. இரு குழந்தைகளும் விறு, விறுவென வளர்ந்து திருமணம் முடிந்து பேரக் குழந்தைகளும் வந்து விட்டனர். ஓய்வு பெற்றும் 4 ஆண்டுகள் ஆகிறது. புதிய, புதிய உறவுகள் மலர்ந்துள்ளன. எத்தனையோ மாற்றங்களை கால ஓட்டத்தில் நிகழ்த்தி விட்டு காலம் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அதில் தொலைந்த பொழுதுகளும், நினைவுகளும் அதிகம்!

அன்றைய நாட்களில் படிப்பை முடித்த அத்தனை பேரின் நினைவிலும் இன்றும் நிழலாடும் ஒரு இடம் அஞ்சலகங்கள். இவை காலைப் பொழுதிலேயே  பரபரப்பாகி விடும். வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கி, எந்த அலுவலகங்களுக்கெல்லாம் வேலை கேட்டு சென்று வந்தமோ, அங்கெல்லாம் இல்ல முகவரி வாங்கப்பட்டு பின்னர் கடித வழியாகவே தகவல் வரும். 1990 வரை இந்த நிலை தான் அதி தீவிரமாக இருந்தது.

பள்ளிப்பருவத்து அஞ்சலக நினைவுகள் பசுமையானவை (image courtesy- wikipedia.org)

இப்போதைப் போல தொலைபேசிகளின் ஆதிக்கமும், இணையதள பெருக்கமும் காலூன்றாத கால கட்டம் அது. காதல் கடிதங்களை சுமந்து வரும் புறாக்களாகவும் தபால்காரர்களே அன்றைய காலங்களில் இருந்தனர். வீடுகளுக்கு அடிக்கடி கடிதங்கள் வரும். பணி நிமித்தமாக வெளியூரில் பணி செய்த போது, என் மனைவியின் தந்தையிடம் இருந்து வாரத்துக்கு இரு கடிதமேனும் வரும். மனப்பாடப் பாடலைப் போலவே, எப்போதும் ஒன்று போலவே தொடங்கும் விசாரிப்புகள்.

அன்புள்ள மருமகனுக்கு..நலம். நலம் நாடுவதும் அதுவே. மகள் செல்வி, பேரக்குழந்தைகள் நலம் என நம்புகிறேன். எனத் தொடங்கி உறவுகளை சுமந்து 300 கிலோ மீட்டரை தாண்டி வந்து கடித வழியில் உறவாடும் எழுத்துக்கள். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கியதும், ஊரில் இருக்கும் அம்மாவுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பி வைப்பேன். பணம் கிடைத்ததும் என் அம்மா கையெழுத்திட்டு, அத்தாட்சிச் சான்று திரும்ப என் கைக்கு வரும். சிதம்பர வடிவு என்னும் பெயரை அம்மா எழுதியிருக்கும் விதத்திலேயே அம்மாவின் உடல் ஆரோக்கியத்தை கணித்து விடலாம். என் தலைமுறையில் உள்ளவர்கள் இதனை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். பணம் பெற்ற ரசீதில் பெற்றோரின் கையெழுத்தோடு உரையாடிய பொழுதுகள் இப்போது வங்கிப் பணப் பரிவர்த்தனையில் இல்லை.

பணம் பெற்ற ரசீதில் பெற்றோரின் கையெழுத்தோடு உரையாடிய பொழுதுகள் மீளவரா (image courtesy – http://www.thehindubusinessline.com)

வேலை செய்யும் பிள்ளைகள், பணத்தை வங்கியில் பெற்றோருக்கு போட்டதும், வங்கிக் கணக்கில் ஏறிய மறுகனமே வங்கியில் இருந்து செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்து விடுகிறது. இந்த தொழில்நுட்ப புரட்சியால் பரிவர்த்தனை எளிமையாகியுள்ளதே தவிர, உறவின் உணர்வின் வலிமையை, அதனால் இன்னொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியவில்லையே! தபால் காரரோடு படித்த இளம் தலைமுறையினருக்கு நன்கு பரிச்சயம் இருந்தது. நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு என கடிதம் வரும் போதெல்லாம் சரியான நேரத்தில், வீட்டுக்கு வந்து கடிதத்தை கொடுத்து விட்டு, வெற்றி பெற குறிப்பும் சொல்லி செல்லும் தபால்காரர்களும் அன்று இருந்தார்கள்.

அஞ்சலகங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. அஞ்சல் குறியீட்டு எண்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒருவரின் பெயர் போல எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் இப்போதெல்லாம் படித்த இளையோருக்கும், அஞ்சலகங்களுக்கும் தொடர்பு அற்ற நிலை உருவாகி விட்டது. வேலை வாய்ப்புக்கு மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கிறார்கள். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவே அழைப்பாணை வருகிறது. வேலை கிடைத்ததற்கான உத்தரவும் மின்னஞ்சலில் பெறுகின்றனர்.

இதே போல் முன்பு காதல் கடிதப் போக்குவரத்துக்களும் தபால் வழியாகத் தான்.தபால்காரர் இந்த வயதில் இது தேவையா என அறிவுறுத்தி, முதலில் கல்லூரி படிப்பை நல்லபடியாய் முடிக்கவும், நல்ல வேலையை தேடிக் கொள்ளவும் அறிவுறுத்திய பொழுதுகளில் உணர்ந்து வாழ்வில் வெற்றி பெற்று, அதன் பின்னர் காதலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆனால் காதல், கால ஓட்டத்தில் அஞ்சல் நிலையங்களை விட்டு, விட்டு செல்போன், முகநூல், வாட்ஸ் அப் என வெகுதூரம் வந்து விட்டது. இதோ இப்போது உங்கள் பகுதி தபால்காரரின் முகம் எப்படி இருக்கும் என ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.. கால ஓட்டத்தின், விளையாட்டில் நாம் விலகி ஓடி வந்து விட்ட அஞ்சல் துறையின் சேவை தெரியும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தான் இந்தியாவில்  முதன்முதலாக 1764-1766களில் மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயற்படத் துவங்கியது. பின்னாளில் அனைத்து மாகாணங்களிற்கும் அஞ்சல் துறை விஸ்தரிக்கப்பட்டது.

இந்திய அஞ்சல் அலுவலர்களின் பரிணாமத்தை காட்டும் முதல் நாள் உறை (image courtesy – http://www.indianphilately.net)

1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்_அஸ்ஸாம், பிகார்_ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய  சென்னை, பஞ்சாப்_வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1852ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அஞ்சல் நிலையங்களில் தபால் தலைகளும், இன்லேண்ட் லெட்டர், கவர் உள்ளிட்டவை கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படுவது இல்லை.

இந்த ஊரில் நான் பணிக்கு சேர்ந்த பிறகு எத்தனை பேருக்கு என் கையால் பணி ஆணை வழங்கியிருக்கிறேன் தெரியுமா? என பெருமையுடன் கூறுவார் ஓய்வு பெற அஞ்சல் கார நண்பர் பரந்தாமன். பல அஞ்சல்க்காரர்கள் நேரம் தவறாமையின் அடையாளமாகவே வாழ்ந்தனர். கடிதங்களை பட்டுவாடா செய்வதில் காலந் தவறாமை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஊரில் பல இடங்களில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அதில் போடப்படும் கடிதங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் சரியான நேரத்தில் ஊழியரால் திறந்து எடுத்துச் செல்லப்படும். அவர் பெட்டியை திறக்கும் நேரத்தை வைத்து கடிகார நேரத்தை சரி செய்த வழக்கம் கூட இருந்தது.

குறிப்பாக பரம ஏழைகளும் பயன்பெறும் வகையில் மிக குறைந்த விலையில் விற்கப்படும் அஞ்சல் அட்டையில் கன்னியாகுமரியில் இருந்து எழுதி அனுப்புகிற கடிதம், இமயமலையில் அடிவாரத்தில் வசிப்பவருக்குக் கூட விலாசம் சரியாக இருந்தால் தவறாமல் சென்று சேர்ந்து விடுகிறது. போதிய படிப்பறிவு இல்லாதவர்களும் கூட, அஞ்சலகத்தை முழுதும் நம்புகிற அளவுக்கு நம்பிக்கையின் மொத்த உருவமாக அஞ்சலகங்கள் திகழ்ந்தன. இவைகளில் முக்கியமானது தந்தி. இந்த பயனுள்ள சேவையை மக்களுக்கு அஞ்சல் துறை செய்தது மறக்கவே முடியாத மகத்தான பணி.

தந்தி என்றாலே சாவோலை வருவதாக அஞ்சிய காலமும் உண்டு. தந்தியை விரைவாக உரியவரிடம் சேர்க்க, தந்தி சேவகர்கள் இரவு, பகல் பார்க்காமல் அலைந்து திரிந்ததெல்லாம் இப்போது நினைவுகளில் மட்டும் தான். தொலை தொடர்புத் துறையின் அதி நவீன வளர்ச்சியால் தந்தி சேவை இல்லாமலே போய் விட்டது. விலாசம் சரியாக இல்லாவிட்டாலும் கூட, அஞ்சல் ஊழியர் தன் அனுபவத்தாலும், அனுமானத்தாலும் விலாசதாரரை தேடிக் கண்டுபிடித்து பட்டுவாடா செய்கிற வழக்கமும் இருந்தது. என் பதின் பருவ காலங்களில், எங்கள் கிராமப் பகுதிகளில் அஞ்சல்களை உரியவர்களிடம் சேர்க்கும் பணியோடு, அதை அவர்களுக்கு படித்துக் காட்டி பதிலும் எழுதிக் கொடுக்கும் சேவையினையும் தபால்காரர்கள் செய்து வந்தனர்.

இதனாலேயே அஞ்சல் ஊழியர்களையும், தந்தி ஊழியர்களையும் அஞ்சல் சேவகர், தந்தி சேவகர் எனவும் அழைத்து மகிழ்ந்தனர் மக்கள். ஆனால் இன்று இந்த அஞ்சலகங்கள் தொழில்நுட்ப புரட்சியினால் வெகு தூரம் அன்னியப்பட்டு நிற்கிறது. தனியார் கூரியர் சேவையும் தபால் துறையை நசியச் செய்ததில் பங்கு வகித்தது. அஞ்சலகங்களோடு ஒப்பிடுகையில் தனியார் கூரியர் கட்டணம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் உரியவரிடம் சென்று சேர்த்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மனதில் வேரூன்றி விட்டது. இது துவக்கத்தில் அஞ்சல் நிலையங்கள் வைத்திருந்த நம்பிக்கை. இதை இவை எப்படி மக்களிடம் இருந்து இழந்தன என்பது ஆய்வுக்குரியது.

அடுத்ததாக அலைபேசியின் அபரித பயன்பாட்டால் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாகவும், இரண்டு வரிக்குள் அடங்கும் படியான ஒரு கலாச்சாரத்தையும் எட்டி விட்டதால் அஞ்சல் துறையை நாடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போதைய நிலையில் அஞ்சலகங்கள் அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை, பதிவுத் தபால்கள் அனுப்புதல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல், அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, 1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்களுக்களை அனுப்புவது, 2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்கிக் சேவை மூலம் வீட்டுப் உபயோகப் பொருட்களையும் அனுப்புவது, செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி, மின்னணு அஞ்சல், இணைய வழி பில் தொகை செலுத்தல், அஞ்சல் டெலிவரி உள்ளிட்ட பணிகளை செய்கின்றன.

இன்று அஞ்சல் பெட்டிகளை நாடுவோர் அரிதிலும் அரிது (image courtesy – http://bobbacaps.blogspot.com)

ஆனால் இவைகளை மிஞ்சி, பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம்,வங்கி சேமிப்புக் கணக்கு, மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், கடவுச்சீட்டு விண்ணப்பம், தங்கக் காசு விற்பனை, காப்பீட்டுத் திட்டச் சேவை, கங்கை நீர் விற்பனை உள்ளிட்ட பிற சேவைகளுக்காக அஞ்சலத்திற்கு செல்வோரே இன்று அதிகரித்து வருகின்றனர். அதிலும்  கிராமப்புற அஞ்சலகங்கள் ஆர்.டி. வசூல் மையங்களாகவும், தொலைபேசி பில் கட்டும் மையங்களாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாகரீக மாற்றம், வளர்ச்சி என்ற பெயரில் தொலைபேசி, அலைபேசி, இணையம் என அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்ததில் அஞ்சல் அட்டையை பொதுமக்கள் தொலைத்ததன் வெளிப்பாடு தான் இது. ஒரு காலத்தில் இராணுவத்துக்கு இணையான அளவு சேவை புரியும் துறையாக, நம்பகத் தன்மை நிறைந்த துறையாகவும், அரசுக்கு பொன்முட்டை இடும் துறையாகவும் இருந்த அஞ்சல் துறை இன்று நோயாளி போல் காட்சி தருவது வேதனை அளிக்கிறது. அதன் மைய நோக்கமான தபால் சேவையில் இருந்து மக்களும் விலகி நிற்கின்றனர். ஒரே ஒரு முறை உங்களுக்கு உங்கள் உறவுகள் அனுப்பிய கடிதத்தையோ, வேலைக்கான உத்தரவு வந்த கடிதத்தையோ, திருமண அழைப்பிதழ்களை தாங்கி வந்த கடிதத்தையோ, வெளியூரில் இருந்து நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தையோ, அவர்கள் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தையோ நினைத்துப் பாருங்கள். மின்னஞ்சல்களும், சமூக வலைதளங்களும் தந்திட முடியாத பேரன்பை தூக்கிச் சுமந்தவை அவை.

கால ஓட்டத்தில் இவை சிதறுண்டு போனது. இப்போது ஸ்கைப்பில் பேசும் காலம் வந்து விட்டது. முகமும் பார்க்கலாம். ஆனால் அது எத்தனை பேருக்கு பரிச்சயம்? இன்னும் கணினியே இல்லாத பல வீடுகள் உள்ளன. அவர்களின் பிள்ளைகள் பிழைப்புக்காய் வெளியூர், வெளிநாடுகளில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தலைமுறையினருக்கு வார்த்தைகளினால் விவரிக்கவே முடியாத அழகிய கவிதை அன்றைய கால கடிதப் போக்குவரத்து என்றால் அது மிகையல்ல.

Related Articles