தேயிலையில் தோய்ந்த கைகள் – நீலகிரித் தொடர் 3

“பொறந்த எடத்துலயே சாவணும்னு நெனைக்கறவனுகளுக்கு இது தாம்ல தலையெழுத்து“

“எங்கெயோ கண்காணாத எடத்துக்கு போறம்னு நெனச்சுக்காதலே! அங்கிருக்கிற கூலியாளுகள்ல பாதிபேரு திருநெல்வேலி, ராமநாதபுர ஜில்லாக்காரங்க தான்.. ஒன்னு ரெண்டு பேரைத் தவிர, எல்லாரும் நம்ம சாதிக்காரங்க தான். கொஞ்சம் மறவருங்களும், மலையாளம் பேசுற மேல் சாதிக்காரங்களும் கூலியா இருக்கிறாங்க”

நீலகிரி வரலாற்றுல எங்கண திருநெல்வேலிக்காரங்க வர்றாங்கன்னு பாக்குதீகளா? அவங்க இல்லாம எப்படி… மேற்கூறிய வரிகள் எரியும் பனிக்காடு புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது. ஓர் பயணம் ஓர் புத்தகத்தை அறிமுகப்படுத்தாவிடினும், ஓர் புத்தகம் ஓர் பயணத்தை உருவாக்காவிடினும் இரண்டும் வீண் தான்.  எரியும் பனிக்காடு மனவெளியில் என்னை மயிலோடையில் இருந்து வால்பாறையின் குமரிமலை வரை பயணிக்க வைத்தது. நிஜவெளியிடையில் வால்பாறை தாண்டி கேரள எல்லையில் இருக்கும் ரோப்பமுட்டம் வரை பயணிக்க வைத்தது. இதற்கும் நீலகிரியின் வரலாற்றிற்கும் என்ன தொடர்பு என்கின்றீர்களா? தேயிலை. அதைப்பற்றி பேசுவதாக சொல்லிக்கொண்டுதானே கடைசிக் கட்டுரையினை முடித்தேன்.

இலைகள் இங்கே விளைந்தாலும், இதன் வேர்கள் இலங்கை, மூணார், வால்பாறை, மலாய், இந்தோனேசியா, ரீயூனியன் தீவுகள், பர்மா என்று நம் முன்னோர்களின் பாதம் பட்ட அனைத்து இடத்திலும் வேறொரு காலனியப் பயிர்களுடன் கிளை பரப்பியிருக்கின்றது. படம் – henmalargal.blogspot.com

இன்று உலகளவில் அதிகம் தேயிலை விளைவிக்கும் நாடுகளில் ஒன்றாகவும், அதனை உபயோகிக்கும் மக்கள் அதிகம் இருக்கும் நாடாகவும் இருக்கின்றது இந்தியா. டார்ஜிலிங், அஸ்ஸாம் தேயிலைகளின் சுவையினைத் தொடர்ந்து நீலகிரியின் தேயிலை மணம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றது. இது நீலகிரிக்கான பொதுவான கட்டுரையாக தர எத்தனையோ முயற்சித்தும் இதனை ஒப்பீடுகளுடன் கூடிய ஒரு கட்டுரையாகவே வடிவமைக்க முடிந்தது. இலைகள் இங்கே விளைந்தாலும், இதன் வேர்கள் இலங்கை, மூணார், வால்பாறை, மலாய், இந்தோனேசியா, ரீயூனியன் தீவுகள், பர்மா என்று நம் முன்னோர்களின் பாதம் பட்ட அனைத்து இடத்திலும் வேறொரு காலனியப் பயிர்களுடன் கிளை பரப்பியிருக்கின்றது.

ஐரோப்பாவில் இருந்து தன்னுடைய செல்வாக்கினை தனது உற்பத்திப் பொருட்கள் மூலம் நிலை நிறுத்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்த இங்கிலாந்தின் கண்ணிற்கு ஆசிய நாடுகள் இயற்கை வளம், மனித வளம் கொண்டவையாகவே தெரிந்திருக்கின்றது.   தேயிலை மட்டுமல்லாது, குளம்பி, சின்கோனா, இரப்பர், கோக்கோ, பட்டை என ஒவ்வொரு பயிரும் காலனி நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டபொழுது, அதனை வளர்ப்பதற்கும் பெரும்வாரியான தொழிலாளர்கள் காலனி நாடுகளில் தேவைப்பட்டார்கள். அவ்வாறே அவர்கள் நீலகிரி மலைத் தொடர்களிலும், ஆனைமலைத் தொடர்களிலும் தேவைப்பட்டார்கள்.

1800களில்இ ந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவிக்கப்பட்ட தோட்டத் தொழிலார்கள்
படம் – pinimg.com

1876 முதல் 78 வரையிலான தொடர் பஞ்சம் காரணமாக பல்வேறு ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்லும் முனைப்போடு இருந்தவர்களை காலனி நாடுகளுக்கு ஒப்பந்த ஊழியர்களாக ஏற்றுமதி செய்தது அன்றைய பிரித்தானிய அரசு. மலைத் தொடர்களில் வேலை செய்ய  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளார்களை, குறைந்த ஊதியத்தில்  வேலைக்கு நியமிக்க நெல்லை, மதுரை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையிலும் இதற்கான கமிசன்கள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன. உயர்வர்க்க குடிகளிடம் விவசாயக் கூலிகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்களை மீட்கும் திட்டங்களாக இத்திட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் போற்றப்பட்டாலும், உண்மை நிலையானது மிகவும் மோசமானதாகவே இருந்திருக்கின்றது, இன்றும் இருக்கின்றது.

நீண்ட வரலாற்றினை தேயிலையின் மணம் கொண்டிருக்க, தமிழக இலக்கியத்தில் அதற்கான இலக்கிய சுவடுகளைத் தேடித் திரிகையில் கையில் கிடைத்தது இரண்டு படைப்புகள் தான். ஒன்று புதுமைப்பித்தன் அவர்களின் துன்பக்கேணி, மற்றொன்று இரா. முருகவேள் அவர்களின் எரியும் பனிக்காடு. இரண்டு இலக்கியத்தின் ஒப்பீட்டு மதிப்பானது சரியான எல்லையில் நிர்ணயிக்கப்படும் வகையில்தான் இருக்கின்றது. அது, பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்வியல் சிக்கல்களையே சித்தகரிக்கின்றது. துன்பக்கேணி இலங்கையிலும், தமிழகத்திலும் நடைபெறும் கதையாக இருக்க, எரியும் பனிக்காடு நெல்லையில் தொடங்கி குமரிமலையில் முடிவற்ற மனநிலையில் நிறுத்தியது.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சம்பளமெனப்படுவது ரூபாய். 294.15 மட்டுமே. படம் – Rakshana Sharifudeen

கங்காணி முறையின் மூலம் அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் இம்மக்கள் தொடர் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். உயர்ந்த மலைகளைச் சுற்றிலும் இருக்கும் காட்டுவிலங்குகளுக்கு மத்தியில் இவர்களின் வாழ்வானது சிறைபிடிக்கப்பட்டது. பச்சைத் தங்கத்தினை உருவாக்க இவர்கள் உழைத்த உழைப்பின் பின்னணியினைக் காண மலையக இலக்கியங்கள் கை கொடுக்கும் உங்களுக்கு.

இந்தியத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்குமான வித்தியாசத்தினை நிலை நிறுத்தியதும் இந்த மலையக வேலைகள் தான்.  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக தமிழகத்தில் இருந்து இலங்கை பயணித்து அங்கே மலையக மக்களாக அடையாளங்காணப்பட்ட தமிழ் மக்கள், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான அரசியல் நிலைப்பாட்டினால் அவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்களின் உழைப்பு இன்றைய நீலகிரியின் பொருளாதார மாற்றத்திற்கான முதுகெலும்பு.  அவ்வாறான இந்தியத் தமிழர்களாக திரும்பி வந்த இலங்கை மலையக மக்கள் நீலகிரியின் சுற்றுவட்டாரம் எங்கிலும் இருக்கின்றார்கள்.  அவர்களே பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளில் வேலைக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கோத்தகிரியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் வழியில் இருக்கின்றது அழகான குயின்சோலை எனும் தோட்டத் தொழிலாளர்கள் இருப்பிடம். கிட்டத்தட்ட நூறு குடியிருப்புகளைக் கொண்ட அவ்விடத்தில் வாழ்பவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களே.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சம்பளமெனப்படுவது ரூபாய். 294.15 மட்டுமே. நாங்கள் சந்தித்த திரு மற்றும் திருமதி வள்ளுவநேசன் இருவரும் இலங்கையில் பிறந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் முறையே பட்டுக்கோட்டை மற்றும் சேலம். இலங்கையில் இருந்து திரும்பி வந்தவர்களின் வாழ்வானது நாளொன்றிற்கு 70 பைசாவில் ஆரம்பமாகியதாக கூறுகின்றார்கள். பெண்கள் பெரும்பாலும் தேயிலை பறிப்பதற்கும், ஆண்கள் தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள்.

கிட்டத்தட்ட அரசாங்க வேலை தான் என்றாலும், அவர்களின் அடுத்த வாரிசு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பட்சத்தில் மட்டுமே அவர்களால், அரசாங்கம் அளித்திருக்கும் வீடுகளில் தங்க முடியும். படம் – dni.condenast.co.uk

இதுவே அங்கிருக்கும் தனியார் தோட்டத்தில் வேலைக்குச் சென்றால், பறிக்கப்படும் தேயிலையின் எடைக்கு ஏற்றவாறு சம்பளம்.  கிலோ ஒன்றிற்கு ரூபாய் மூன்று மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகின்றது. அரசிற்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்தாலும் நாள் ஒன்றிற்கு 25 கிலோ பச்சைத் தேயிலை பறித்தே ஆகவேண்டும். அதற்கு மேலாக பறிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து கிலோ தேயிலைக்கும் தனிச் சம்பளம். ஆனால் குறிப்பிட்ட 25 கிலோ தேயிலையினை பறிக்கவில்லை என்றால் அரைநாள் சம்பளம் தான் என்பது தனித் தகவல். கிட்டத்தட்ட அரசாங்க வேலை தான் என்றாலும், அவர்களின் அடுத்த வாரிசு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பட்சத்தில் மட்டுமே அவர்களால், அரசாங்கம் அளித்திருக்கும் வீடுகளில் தங்க முடியும். 294 ரூபாயினைப் பெறுவதற்கே இத்தனை வருடங்கள் போராடும் ஒரு வர்க்கத்தால், தன் வருங்கால சந்ததியினருக்கான தேவைகளை உறுதிப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. இன்றும் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றதுதான். கொஞ்சம் நாகரீகமாக. கொஞ்சம் நளினமாக.

வாரிசுகள் வேறு வேலையினைத் தேடி முன்னேறிவிட்டால், இவர்களுக்கும், அந்த மலைகளுக்குமான உறவுகள் முடிவிற்கு வந்து விடுகின்றன. அடுத்து வரும் குடும்பத்திற்காக வீட்டினை விட்டுத்தர வேண்டும். பின்பு எங்கிருந்து, அவர்கள் தேயிலைக்காடுகளைத் தேடி நடை போடத் தொடங்கினார்களோ, அவ்விடம் நோக்கி வெறுங்கையுடன் நடக்க வேண்டிய நிலையே இன்றும் மிஞ்சியிருக்கின்றது. அதனால், பெரும்வாரியாக தங்களின் பிள்ளைகளை தேயிலையோடு ஒன்றிய ஒரு வேலைக்கு தயார்படுத்திவிடுகின்றார்கள் அந்தத்தொழிலாளர்கள். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேறுவதை கடினமாக்குகின்றது அவர்களின் நிழலைப் பின் தொடர்ந்து வரும் தேயிலை. கிட்டத்தட்ட நாடோடி நிலை தான் அவர்களுக்கு இன்றும்.

நம் சேட்டன்மார்களின் கதைகளும் கிட்டத்தட்ட இவ்வாறே இருக்கின்றது. முன்பே சொன்னேனே இது ஒரு ஒப்பீட்டுக் கட்டுரையென்று, எரியும் பனிக்காடு அழைத்துச் சென்ற பசுமைக் காடுகளில் மிக முக்கியமான இடம், கேரளத்தின் எல்லையில் இருக்கும் மழுக்கப்பாறை. டாட்டா நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருக்கும் தேயிலைக்காடுகளில் வேலை செய்பவர்களைக் கண்டுவருவதற்காக அப்பயணம் இருந்தது. அங்கும் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றார்கள். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்னரே அம்மக்கள், அவர்களின் வாழ்க்கை முறையினை தேயிலையோடு பிணைத்துக் கொண்டார்கள். தமிழ் மற்றும் மலையாள மக்களின் இணைகள் அங்கே நிறைய பேர் இருக்கின்றார்கள். நாங்கள் சந்தித்த பூங்கனி ஆச்சி, இரண்டாம் தலைமுறை தோட்டத் தொழிலாளி. அந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை சிறுபிள்ளைகள் அங்கே வளர்ந்து வருகின்றார்கள்.

தமிழகத்தை விட கேரளத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு. அதை அவர்கள் பெருமையாகவே கருதுகின்றார்கள். அவர்களின் தொழிலாளர்கள் சங்கமும், சிவப்புக் கொடியும் அதற்கான காரணங்களாக இருக்கின்றன. 318 ரூபாய், ஒரு நாள் சம்பளம், பஞ்சப்படி எனும் பணம் விலைவாசி உயர்வினைப் பொறுத்தும் வழங்கப்படுகின்றது. இவர்கள் வசிக்கும் ரோப்பமுட்டம் குடியிருப்பு ஒரு காலத்தில் கொச்சின் சந்தைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் தேயிலையினை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்காக இருந்தது. சமதளமற்ற பெரிய பெரிய மலைகளைக் கொண்ட மழுக்கப்பாறையில் தேயிலை தொழிற்சாலை தாழ்வான மலைப்பகுதியில் வைக்கப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் பறிக்கப்படும் தேயிலைகளை ரோப்கார் போன்ற அமைப்பின் மூலமாக பெற்றுக் கொண்டிருந்தது. காரணம், இம்மலைகளின் பூகோள அமைப்பு.

ரோப் மூலமாக தேயிலை அனுப்பும் பொருட்டு இவ்விடம் ரோப்புமுட்டம் (மலையாளம்) என்ற பெயர் பெற்றது. இவ்விடத்தில் அடிக்கடி யானைகள் வருவதுண்டு. படம் – lovethesepics.com

ஒரு தொழிலாளி பறித்த தேயிலையினை தொழிற்சாலையில் சென்று சேர்த்துவிட்டு மீண்டும் காட்டிற்குத் திரும்பினால், அந்நாளானது முடிவிற்கு வந்துவிடும். நேரவிரயம் மற்றும் உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இம்முறையை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். ரோப் மூலமாக தேயிலை அனுப்பும் பொருட்டு இவ்விடம் ரோப்புமுட்டம் (மலையாளம்) என்ற பெயர் பெற்றது. இவ்விடத்தில் அடிக்கடி யானைகள் வருவதுண்டு. இப்பொழுது ரோப்பமுட்டம் கிடங்கினை மாற்றி, தேயிலைத் தொழிலாளர்களுக்கான வசிப்பிடத்தினை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது தேயிலை நிறுவனம்.

இவர்களின் அத்தியாவசிய தேவைக்காக இவர்கள், ஒன்று வால்பாறைக்கு வரவேண்டும், அல்லது  சாலக்குடிக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களுக்கும், தேவைகளுக்கும் சமதளம் செல்ல வேண்டிய நிலை இவர்களுக்கு. அந்த உயர்ந்த மலைகளும், பெயர் தெரியாத பட்சிகளும், ரீங்காரமிடும் வண்டினங்களும், உள்ளங்கை அகல பட்டாம்பூச்சிகளும், தூரத்தில் பிளிறும் யானைகளும், கண்ணுக்கெட்டும் வரை பரவியிருக்கும் தேயிலை போர்த்திய மலைகளும் வரலாற்றினை எளிமையாக மறந்துவிட்டு நடக்கவிடவில்லை. சோலையாற்று நீரானது ஓடையில் இருந்து நதியாக பெருக்கெடுக்கும் அழகினை, மலைகளின் மீது உயர உயர பயணிக்கையில் பார்த்து இரசிக்க முடிந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வினைப் போல், அதுவும் ஆர்பாட்டம் இல்லாமல், அமைதியாய், சீரான ஓட்டத்தில், தவழ்ந்து வந்து அணையில் சேர்கின்றது.

Related Articles