பேலியோ உணவு பழக்க முறை

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதனை மனிதர்களாகிய நாம் விரும்பிக் கொண்டே இருக்கின்றோம். யோகா, உடற்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், ஓட்டப் பயிற்சி, நடை பயிற்சி, ஏரோபிக்ஸ் என ஒவ்வொன்றாக நாம் முயற்சி செய்து நம்முடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகின்றோம். இது உடற்பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல், அதனைத் தொடர்ந்து நாம் பின்பற்றும் உணவு முறைகளிலும் நம்முடைய கவனம் அதிகமாக இருக்குமாறு கவனித்துக் கொண்டு வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்றவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்த்துவிடுவார்கள். சிலரோ, உடல் எடை அதிகரிப்பினை குறைக்க அல்லது தவிர்க்க இனிப்பு உணவுகளையும், அசைவ உணவுகளையும் தவிர்த்துவிடுவார்கள். காலையில் எழுந்ததும் இட்லி, வடை, சாம்பார் என்றெல்லாம்  இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அதன் பின்பு காலையில் சப்பாத்தி, இடையில் கொஞ்சம் முளைக்கட்டிய தானியம், மதியம் கொஞ்சம் சாதம், இரவில் மீண்டும் சப்பாத்தி, இடையிடையே நிறைய பழச்சாறு என்று இன்று நிறைய மாறிவிட்டது. சிலர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சைவத்திற்கு மாறிவிடுகின்றார்கள். சிலர் கோழி, ஆட்டுக்கறி என்பதை நிறுத்திவிட்டு மீன் மற்றும் முட்டை என்று மாறிவிடுகின்றார்கள்.   

ஆதிகால மனிதனின் உணவு பழக்கமுறை

ஆதிகால மனிதன் வேட்டையாடி, உணவினை பச்சையாகவோ, நெருப்பில் வாட்டியோ உண்டதைப் போல் தற்போது ஒரு வித்தியாசமான உணவுப் பழக்கமுறை மக்களிடம் பரவலாக பேசப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றது. பேலியோ டையட் அல்லது பேலியோ உணவு முறை என்று சொல்லப்படும் இவ்வுணவு முறை கற்காலத்தில் மனிதன் பின்பற்றிய உணவுப் பழக்கமுறையை மேற்கொள்ளச் சொல்கின்றது.

Early Man
Early Man (Pic: youtube)

தோற்றமும் வளர்ச்சியும்

ஆதிகாலங்களில், அதாவது, குகைக்குள் மனிதன் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் அவன் எப்படி வேட்டையாடி உணவினை உட்கொள்ளத் தொடங்கினானோ, அதனை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட திட்டங்களுக்குள் இருக்கின்றது இந்த பேலியோ டையட் என்னும் உணவு முறை. இன்று மிக விரைவில் மக்கள் மத்தியில் இம்முறை பரவி வந்தாலும், இது தொடர்பான ஆய்வுகள் கிட்டத்தட்ட 1890களின் பிற்பாதிகளிலே தொடங்கிவிட்டது என்றும் கூறலாம். மருத்துவர் எம்மெட் டென்ஸ்மோர் மற்றும் மருத்துவர் ஜான் ஹார்வே கெலாக் போன்றோர்கள் தற்காலத்தில் பின்பற்றப்படும் உணவுமுறைகளை விட ஆதிகால உணவுப் பழக்கம் மிகவும் ஆரோக்கியமாகவும் ஊட்டமிக்கதாகவும் இருந்தது என்று கூறினார்கள். பேலியோலித்திக் உணவுப் பழக்கமுறைகளை மீட்டெடுக்கும் முயற்சியானது 1975களில் தொடங்கியது. அந்த ஆராய்ச்சியினை மருத்துவர் வால்ட்டர் வோகிட்லின் தொடங்கி  வைத்தார். அதன் பின்னால் வந்த ஸ்டேன்லி மற்றும் மெல்வின் கொன்னெர் 1985ல் “விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தாத உணவுப் பொருட்களில் அதிக அளவு சத்துகள் இருக்கின்றன” என்று ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டனர். இவர்கள் இருவரின் பெயரையும் ஆராய்ச்சியினையும் 2002ல் வெளிவந்த “தி பேலியோ டையட்” என்ற புத்தகம் பிரபலமடையவைத்தது.

Paleo Diet
Paleo Diet (Pic: fnbworld)

பேலியோ டையட்டில் அதிகம் பரிந்துரை செய்யப்படும் உணவுகள்

இதை உண்ணுங்கள், இதை உண்ணாதீர்கள் என்பது அனைத்துவிதமான உணவுப் பழக்கமுறைகளுக்கும் ஒரு வரையீடு இருக்கும். அது போல், பேலியோ உணவு முறையில் அதிகம் பரிந்துரைக்கப்படும் உணவுகள் எவையென்று காண்போம். ஆனால் அவை உங்களுக்கு ஆச்சரியத்தினை அளிக்கும். ஏனென்றால் நாம் இதுவரை எந்த உணவெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ அந்த உணவையெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிடுகின்றது பேலியோ டையட். தானிய வகைகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க சொல்கின்றது பேலியோ டையட் முறை.

மாமிசம், கடல் உணவுகள் மற்றும் மீன் வகைகள், பச்சைக் காய்கறிகள், முட்டை, கொட்டை மற்றும் விதை வகைகள், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், அவக்கேடோ, மற்றும் வால்நட் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் பரிந்துரை செய்கின்றது இந்த பேலியோ டையட்.

இந்த பேலியோ உணவுப் பழக்கத்தினை பின்படுத்துபவர்கள் தங்களுக்காக உணவுப் பரிந்துரைகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து 2019 தேர்தலில் பாலியோ டயட் பின்பற்றும் வேட்பாளருக்குத்தான் எங்கள் ஓட்டு என்று முழங்கும் அளவிற்கு செயல்படுகிறார்கள். இதற்காக நிறைய வலை தளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களும் இருக்கின்றன. பேலியோ உணவுப் பொருட்களை விற்பனை செய்வதெற்கென நிறைய கடைகள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றதும் உண்மை. பொதுவாக கொழுப்பு அதிகம் இருக்கும் பொருட்களை உணவாக உட்கொண்டு உடல் கொழுப்பினை குறைப்பது தான் இதன் தாரக மந்திரம் என்று இவ்வுணவு முறையினை பின்பற்றுவோர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

Paleo Diner
Paleo Diner (Pic: venturablvd.goldenstate)

பேலியோ டையட் பரிந்துரைக்கும் பானங்கள்

2002ல், மருத்துவர் லோர்டன் கார்டைன் எழுதி வெளிவந்த “தி பேலியோ டையட்” என்ற புத்தகம் தான் இண்றைய பேலியோ டையட் உணவுப் பழக்கத்தினை பின்பற்றுபவர்களுக்கான புனித நூலாகும். அதில் கீழ்கண்ட பானங்களை பரிந்துரை செய்தும், குறிப்பிட்ட பானங்களை மறுத்தும் இருக்கின்றது. இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்களுக்கு முழுவதும் தடை அதனால் கோலா மற்றும் சோடா போன்ற குளிர்பானங்களை குடிக்க இயலாது. டையட் கோலா அல்லது சோடாவினையும் உபயோகிக்க இயலாது. காரணம், அதில் எந்தவொரு கனிமமோ, தேவைக்கேற்ப ஆரோக்கியம் தரும் காராணிகளோ இல்லை.

காபின் இருப்பதால் காஃபி மற்றும் தேநீர் என இரண்டையும் குடிக்க இயலாது.  பால் பொருட்களையும் முற்றிலுமாக வேண்டாம் என்று கூறப்படுவதால், தயிர், மோர், பால் பொருட்களிலான குளிர்பானங்கள் என எதையும் பருக இயலாது

மாற்றாக

பச்சைத் தேயிலையில் உருவாக்கப்படும் தேநீர் குடிக்கலாம். தேவைக்கு ஏற்றவகையில் நீர் அதிகமாக அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்து பருகலாம். முடிந்த அளவிற்கு பழச்சாறுகளை தவிர்த்துவிட்டு பழங்களாக உட்கொள்ளவே அதிகம் பரிந்துரை செய்கின்றது இந்த புத்தகம்

இளநீர் அருந்தலாம். பாலிற்கு பதிலாக பாதாம் கொட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பாலினை அருந்தலாம் .

Paleomania
Paleomania (Pic: joyoushealth)

ஒரு நாளைக்கு இவர்கள் பின்பற்றும் உணவு முறை (மாதிரிப் பட்டியல்)

காலை

ஒமேகா – 3 அடங்கிய உணவு அல்லது ஆலிவ் எண்ணெயில் செய்யப்பட்ட முட்டைப் பொரியல்

ஒரு கோப்பை பழச்சாறு

மூலிகை தேநீர்

 

சிற்றுண்டி

ஒரு சிறிய அளவிலான மாட்டிறைச்சி சீவல்

ஆப்ரிகாட் பழங்கள்

 

மதிய உணவு

கோழிக்கறியுடன் கூடிய ஆலிவ் எண்ணெய் சாலட்

ஒரு கோப்பை மூலிகை தேநிர்

 

மதிய சிற்றுண்டி

ஆப்பிள் பழங்கள்

பதப்படுத்தாத வால்நட் கொட்டைகள்

 

இரவு உணவு

தக்காளி மற்றும் அவக்கேடோ சாலட்

வேகவைக்கப்பட்ட ப்ராக்கோலி, கேரட்

ப்ளூ பெர்ரி பழங்கள், உலர் திராட்சை, மற்றும் பாதம் பருப்பு

நெருப்பில் வாட்டப்பட்ட வான்கோழிக் கறி

Menu
Menu (Pic: shutterstock)

பேலியோ உணவு முறையினை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

·         நீங்கள் இயற்கையான உணவு எதுவோ அதையே உண்ணத் தொடங்குவீர்கள் என்பது பேலியோ உணவுமுறையில் மிக மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். செயற்கை முறையில் பதப்படுத்தப்படாத உணவுகள் தான் அவை என்பதால் உங்களுக்கு இரசாயனம், மற்றும் உணவினை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை காரணிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.  

·         அதிக அளவு மாமிசம் எடுத்துக் கொள்வதால் புரதம், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவை உடலிற்கு ஊட்டத்தைத் தரும்

·         குறிப்பிட்ட அளவிலேயே உணவு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதால், ஆரம்ப காலத்தில் இம்முறையை பயன்படுத்தும் போது உடல் எடை குறையத் தொடங்கும்

·         நார்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களாக இருப்பதால் உடல் தசைகள் அதிக வலுவடையும் தன்மை கொண்டவையாக மாறும்

·         நோய் எதிர்ப்பு சக்தியினால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வுணவு முறை பயன்படுகின்றது

·         இதில் சைவ மற்றும் அசைவ உணவு பழக்கமுறைகளும் இருக்கின்றன

Health
Health (Pic: montagudriedfruitnuts)

பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள்

மிக முக்கியமான ஒன்று, நாம் யாரும் இப்போது குகைவாசிகள் கிடையாது. இன்று யாரும் வேட்டைக்குச் சென்று உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதும் கிடையாது. வேட்டை மனிதனிலிருந்து நவநாகரீக மனிதன் என்ற இன்றைய வாழ்க்கை வாழ்வதற்குள் மனிதனின் பரிணாம வளர்ச்சி யுகங்கள் கடந்திருக்கின்றது. அக்காலத்தில் பின்பற்றிய உணவு வகைகளை இன்று பின்பற்றுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. உணவு செரிமானம் தொடங்கி அனைத்திற்கும் இது பொருந்தும்.

இங்கு பின்பற்றப்படும் உணவுப் பொருட்கள் யாவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருட்களாக இருக்கின்றன.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை ஒதுக்குவதால் அதில் இருந்து கிடைக்கும் போஷாக்கு கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

விளையாட்டு துறையில் இருக்கும் நபர்களுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் ஒரு குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவினால் அதனை ஈடுகட்ட இயலாது.

Fitness
Fitness (Pic: blog.est)

பொருளாதார ரீதியாக ஏற்படும் நன்மைகள்

பதப்படுத்தாத, சுத்திகரிக்கப்படாத எண்ணெய் உணவுப் பொருட்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் தரப்படுவதால் மரச்செக்கு எண்ணெய் உருவாக்கும் முறை மீண்டும் தலை தூக்கியிருக்கின்றது

கெஃபீர் போன்ற வழக்கொழிந்த உணவுப் பொருட்கள் மீண்டும் உபயோகத்திற்கு வந்திருப்பதால் அதனை தயாரிப்பதற்கு நிறைய பேர் முயற்சி செய்து வருகின்றார்கள்

விகிதம்

இந்த உணவு முறையினை பின்பற்றும் போது 85:15 என்ற விகிதத்தில் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது  பேலியோ உணவினை எடுத்துக் கொள்வது போலவே, சாதராண உணவுகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். அதுவே இந்த உணவுப் பழக்கத்தினையும் உடல்நிலையையும் சமன் செய்ய அதிகமாக உதவும்.

Food
Food (Pic: peacelovepaleo)

பேலியோ டையட்டும் உணவுச் சங்கிலியும்

மிகவும் கவனமான முறையில் அணுக வேண்டிய சிக்கல்களை யாருக்கும் தெரியாமல் வளர்த்தெடுத்திருக்கின்றது பேலியோ டையட் உணவு முறை. அதிக அளவில் இறைச்சியினை உண்ணவே பேலியோ பரிந்துரை செய்வதால் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்கும் தேவை ஏற்படுகின்றது. விளைவாக அதிக அளவில் புற்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கிட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். இந்த விலங்குகளை வளர்ப்பதால் வெளியிடப்படும் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது ஒருவகையில் உலகின் வெப்பத்தினை அதிகரிக்கின்றது என்பதும் உண்மை. வெவ்வேறு வாழ்நிலை சூழலில் வளரும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உணவினை உட்கொள்ளத் தொடங்கினால் உடல்ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கவும் நேரிடும்.

Farming
Farming (Pic: acleanbake)

ஒரு உணவு முறையினை பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சனைகள நம்மைத் தாண்டியும் ஏரளமான உயிரினங்களையும் உணவுச் சங்கிலிகளையும் பாதிக்கின்றது என்றால் அதனை யோசித்தே பின்பற்ற வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு முறைகளையும் உடற்பயிற்சிகளையும் மன ஆரோக்கியத்தினையும் பெற்றிட இருக்கும் வழிகளை பின்பற்றுதலே போதும்.

Web Title: The Diet Paleo

Featured Image Credit: 24life

Related Articles