Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆணுறை எனும் அத்தியாவசியப் பொருளும் அதன் நீண்ட வரலாறும்

மனிதனின் கண்டுபிடிப்புகளில் `இன்று அதிமுக்கியமான ஒன்றாக இருப்பது ஆங்கிலத்தில் ‘காண்டம்’ என்றழைக்கப்படும் ‘ஆணுறை’. கர்ப்பத்தடை மட்டுமின்றி நோய்த் தடுப்பிலிருந்தும் காப்பாற்றும் இந்த உபகரணத்தைக் குறித்த விழிப்புணர்வு இந்தியா போன்று மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் தொடர்ந்து தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இன்றுவரை ‘காண்டம்’ என்ற சொல் தவறாகவே பார்க்கப்படுகிறது. இன்னமும் 98 சதவிகித குடும்பங்களில் காண்டம் என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலை இந்தியாவில் உள்ளது. தொலைக்காட்சியில் கூட காண்டம் பற்றிய விளம்பரம் வந்தாலே அந்தச் சேனலை மாற்றிவிடுவோம். உண்மையில், அது ஆபாச வார்த்தையே அல்ல. பாலியல் கல்வியின் அவசியத்தை உணரும் பண்பட்ட சமூகம் கண்டிப்பாகக் காண்டம் பற்றிய வரலாறும், பயன்பாடும், அதன் விழிப்புணர்வும் பெற்றிருத்தல் அவசியமாகிறது.

ஒரு ஆணுறை விளம்பரப் படம். (படம்: adsoftheworld)

1990 காலகட்டங்களில் பெருகி வந்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவும், தீவிரமாகப் பரவிவந்த எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தவும், இந்திய அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது வட இந்தியாவில் குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் எய்ட்ஸ் நோய் தீவிரமாகப் பரவி வந்தது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர பீகார் அரசு விழிப்பு உணர்வுப் பிரசாரம் நடத்த முடிவு செய்தது. ஆனால், ஆணுறை பற்றி விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்துவதற்கு எந்தச் சமூக ஆர்வலருமே முன்வரவில்லை. காரணம், ‘நம்மைப்பற்றி மக்கள் தவறாக நினைப்பார்களோ?’ என்ற பயம். ஒரு வழியாக சில சமூக ஆர்வலர்கள் சம்மதித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சென்றனர். ஆனால், தயக்கம் காரணமாக ‘கட்டை விரலில் ஆணுறையை அணிந்தபடி’ இதுபோன்று அதைப் பயன்படுத்தினால் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர். சில மாதங்கள் கழித்து அந்த மக்களைச் சந்திக்கச் சென்றபோது, அனைத்து ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி ஸ்தம்பித்துப் போயினர். காரணம், அனைவருமே கட்டை விரலில் ஆணுறையை அணிந்துகொண்டு சுற்றி வந்தனர்

இந்தியாவில் முதன்முதலாக 1969-ம் ஆண்டு ‘ஹிந்துஸ்தான் லேக்டஸ்’ என்ற நிறுவனம்தான் ஆணுறையை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற கரு உருவாவதைத் தடுப்பதற்காகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டன. பின், அது குடும்பக் கட்டுப்பாட்டுச்  சாதனமாக மாறியது. அதன்பின், உலகமே எய்ட்ஸ் நோயால் பாதிப்படைய மீண்டும் ஆணுறைகள் பழையபடியே பால்வினை நோய் கட்டுப்பாட்டுச் சாதனமாக மாறிவிட்டது.

படம்: holykow.altop

ஆணுறைக்கு, ஆங்கிலத்தில் ‘காண்டம்’ என்று பெயர் வந்தது எப்படி? இதற்கு இரண்டு விதமான காரணங்கள் நடைமுறையில் சொல்லப்படுகின்றன. கி.பி 1600 காலகட்டத்தில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சார்லஸ் தன்னை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஓர் உபகரணம் செய்து தருமாறு அரசவை மருத்துவராக இருந்த காண்டத்திடம் வேண்டினார். அதனால், அவர் ஆட்டின் குடலினால் ஆன ஆணுறையை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதனாலேயே அதற்கு அந்தப் பெயர் வந்தது எனப் பலர் சொல்கின்றனர். வேறு சிலரோ, லத்தீன் மொழியில் ‘காண்டஸ்’ என்றால் கிண்ணம். ஆணுறை, கிண்ணம் போன்று இருப்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

பூர்வ எகிப்தில், தொல்லுயிர் பூச்சிகள் மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஆண்குறி சுற்றி ஒரு துணி அல்லது இலைகள் கட்டிக் கொண்டனர் என்று வரலாற்றாசிரியர்கள் நம்பினர். இதுவே உலகத்தின் முதல் ஆணுறையாகும். ஆசியாவில், குறிப்பாக சீனா மற்றும் ஜப்பான்,  நாடுகளில் பயன்படுத்தப்படுத்தப்பட்ட முதல் ஆணுறை க்ளன்ஸ் எனக் கூறப்படுகிறது. அது ஆண்குறியின் தலையை மட்டும் மூடி பிறப்பு கட்டுப்பாட்டுச் சாதனமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஜப்பானில் ஆமை ஓடுகளும், விலங்கின் கொம்புகள் போன்ற பொருட்களும் ஆணுறைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

அதன்பின்பு, கி.பி 1500 காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் ‘சிபிலிஸ்’ என்ற பால்வினை நோய் வேகமாகப் பரவிவந்தது. இதன் காரணமாக தங்களின் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கே பயந்தனர். அப்போது இத்தாலியின் புகழ்பெற்ற உடற்கூறு நிபுணரான கேப்ரியேல் ஃபெலோபியஸ், மெல்லியத் துணியினால் ஆன ஓர் ஆணுறையைக் கண்டுபிடித்தார். அதை, நோய் பரவாமல் இருப்பதற்காகச் சில இயற்கை ரசாயனங்களையும் சேர்த்துத் தயாரித்திருந்தார். இவரே இன்றைய நவீன ஆணுறைகளின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்

படம்: gettyimages

சீனர்கள் எண்ணெய் தடவிய பட்டுத் துணியை ஆண்குறியைச் சுற்றிக் கட்டிக் கொண்டதாகவும்,  ஜப்பனீஸ் ஆட்டுக்குட்டிகளின் தோல்களைப் பயன்படுத்தினர். இந்த காலப்பகுதியில், விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களால் மிகவும் பொதுவானதாக இருந்தது. ஆணுறைகளுக்காகவே ரோமானியர்கள் தனியாக ஆடுகளை வளர்த்தனர். கி.பி 1600-லிருந்து கி.பி 1800 காலகட்டங்கள் வரை ஆடுகளின் குடல்களைக் கொண்டும், விலங்குகளின் தோல்களைக் கொண்டும்தான் ஆணுறைகள் செய்யப்பட்டன. பின்பு 1930-களில் லேடெக்ஸ் எனும் ரப்பர் தொழில்நுட்பம் வந்த பிறகு, மெலிதான ஆணுறைகள் தயாரிக்கப்பட்டன. 1840-ம் ஆண்டு ஆணுறைகளின் தேவை அதிகமானதால் ரப்பரால் ஆன ஆணுறைகள் புழக்கத்துக்கு வந்தன. 1839 ஆம் ஆண்டில், சார்ல்ஸ் குட்யியர் ரப்பர் ஆணுறையைக் கண்டுபிடித்தார். ஆனால் முதல் ரப்பர் ஆணுறை 1855 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்படவில்லை. சில குறுகிய ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையான ரப்பர் நிறுவனங்கள் ஆணுறைகளை உருவாக்குகின்றன. தற்போது புழக்கத்தில் உள்ள ஆணுறைகள் ‘பாலியூரித்தேன்’ கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். இவை டியூரான் என அழைக்கப்படுகிறது. இப்போது பெண்களுக்கான காண்டம் கூட வந்துவிட்டது.

ரப்பரினால் ஆன ஆணுறையைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்யியர். (படம்: scoopwhoop)

அடுத்து இதில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்திலிருந்து ஆணுறை தொழிலாளர் வர்க்கத்தினருக்கான சாதனமாக இருக்கக் கூடாது என்பதில் திட்டமிட்டே அதிகார அமைப்பிலிருந்த சிலர் உலகெங்கிலும் ஆணுறைக்கான சந்தை விரிவாக்கத்தைத் தடுத்து வந்தனர். ஏனென்றால் தொழிலாளர் வர்க்கத்தினர் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் பயன்பாடுகளை அனுபவிக்கத் தொடங்கினால் பின்பு பொருளாதார அமைப்பு முறை கைமாறக் கூடும் என்ற அச்சம் இருந்தது அவர்களிடத்தில். இதன் விளைவாக அப்போது ஆணுறைகள் விலை உயர்ந்ததாகவும், எளிதில் கிடைக்காத பொருளாகவும் இருந்தது. பின்பு காலப்போக்கில் நோய்த் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள அந்தச் சிந்தனையைத் தளர்த்திக் கொண்டனர். விளைவு அரசே இன்று இலவசமாக ஆணுறைகளை வழங்கி வருகிறது.

படம்: amazon.in

பலபேர், ஆணுறை பயன்படுத்தி கடுமையான அலர்ஜி மற்றும் அவஸ்தைக்கு உள்ளாகி இருப்பார்கள். லாடெக்ஸ் என்ற பொருளைக் கொண்டு ஆணுறைகள் தயாரிக்கப்படுகின்றன. அதன் கோட்டிங் ஸ்பெர்மிசைடு என்னும் பொருளால் ஆனது. இந்த வேதிப் பொருட்கள்தான் உடல் அலர்ஜி மற்றும் ஒவ்வாமைக்குக் காரணம். இந்த பிரச்னை அனைவருக்கும் ஏற்படுவதில்லை… குறிப்பாக, ஒருவர் முதன்முதலாக ஆணுறை பயன்படுத்தும்போது அது மருத்துவரின் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவதே நலம். இதில், பலவகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட பல வகை ஆணுறைகள் உள்ளன. அதில், நம் உடலுக்கு ஏற்றவகையில் மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி உபயோகிப்பது நல்லது. இல்லையென்றால், சரும அரிப்பு, வாந்தி, மார்பு இறுக்கம் போன்றவை வர நேரிடும். முக்கியமாக ஆணுறை மூலமாக அலர்ஜி ஏற்பட்டால் சில நேரங்களில், அதன் காரணமாக ரத்த அழுத்தம் குறையும். இதற்கு உகந்த சிகிச்சை அளிக்காவிடில் அபாயகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே ஆணுறைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது வெட்கப்பட வேண்டிய செயல் அல்ல.

படம்: topten

உலகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட காண்டம் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து 20 மில்லியனுக்கும் அதிகமான காண்டங்கள் உற்பத்தியாகின்றன. நடந்து முடிந்திருக்கிற ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில்தான் இதுவரை அதிக காண்டங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது, 2,50,000 உபயோகப்படுத்தப்பட்ட காண்டங்கள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிக்கிடந்ததாம். இங்கிலாந்தில் 20 வயதுக்குட்பட்டவர்களே காண்டம் அதிமாக வாங்குகின்றனர். இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களும் இந்த ஆணுறைக்குப் பின்பான வரலாற்றில் இருக்கின்றது.

எனவே ஆணுறை என்பது அத்தியாவசியப் பொருள் என்பதை இந்தியக் குடும்பங்கள் உணர்ந்து செயல்பட்டால் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கும் சரி, பொருளாதார முன்னேற்றத்திற்கும் சரி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Web Title: The history and interesting facts about condoms

Featured Image Credit: visual.ly

 

Related Articles