கனடாவின் ஆதிவாசிகள்

கனடாவின் ஆதி மனிதர்கள் தோன்றி ஏறத்தாழ 12,௦௦௦ ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் வாழ்வின் பெரும்பகுதி, கடுமையான சூழலில் கழிந்தாலும் கூட நீர், காற்று போன்ற வளங்களை மாசுபடுத்தாமல், நிலப்பரப்பை சேதப்படுத்தாமல், வீணாக வேட்டையாடி அழிக்காமல் வாழ்ந்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சுய ஆளுமையுடன், மற்ற கூட்டத்தின் இறையாண்மைக்கு மதிப்பளித்தும் அங்கீகாரம் வழங்கியும் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில், அவர்களுக்குள் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தில் ஒரு பொதுவான ஒற்றுமை மற்றும் ஆளுமை இருந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கருவிகள், உடைகள், குடியிருப்பு, மற்றும் உடைகள் போன்றவற்றில் இதனைக் காண முடியும்.

படம் – kladata.com

பெரும்பாலான கனடாவின் ஆதிவாசிகள் வேட்டையாடுவதையும், மீன் பிடிப்பதையும் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். அவர்கள் பருவநிலை மாறும்பொழுது உணவுத் தேவைக்காக இடமாற்றிக் கொண்டனர். காரணமின்றி ஒருபோதும் அவர்கள் சுற்றித்திரியவில்லை.

அவர்களுக்கு எங்கு உணவு கிடைக்கும் என்று முன் கூட்டியே அனுமானித்து அங்கு பருவகாலத்திற்கு ஏற்ப முகாம்களை மாற்றி அமைத்தனர். ஒரு பருவத்தில் பெரிய விலங்குகளை வேட்டையாடியும், மற்றொரு பருவத்தில் மீன் பிடித்தும், பெர்ரி பழங்களை சேகரித்தும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்தனர்.

தெற்கு ஒண்டாரியோ பகுதிகளில், ஐரோக்வோயிஸ் மற்றும் ஹூரான்ஸ் பழங்குடியினர் விவசாயம் செய்து வாழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில், வட அமெரிக்காவில் இருந்து பெரிய அளவில் மக்கள் இங்கு புலம் பெயர்ந்தனர். இது உணவுத் தேவைக்கான பருவகால இடமாற்றம் அல்ல. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றம், பரவும் நோய்கள், விலங்குகளின் தடவழி மாற்றம், ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் பகுதிக்கு நடத்திய ஆக்கிரமிப்பு, அவர்களுக்குள் நடத்த சண்டைகளின் வெற்றி, தோல்விகள் இன்னும் பல காரனங்கள் இந்த புலப்பெயர்வுக்கு உண்டு எனலாம். தாவர வகைகள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்திக் கொண்டனர். இன்றளவும் மருந்துகள் தயாரிப்பில் அவர்கள் வழிகாட்டுதல் நமக்கு உதவி வருகிறது.

தெற்கு ஒண்டாரியோ பகுதிகளில், ஐரோக்வோயிஸ் மற்றும் ஹூரான்ஸ் பழங்குடியினர் விவசாயம் செய்து வாழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில், வட அமெரிக்காவில் இருந்து பெரிய அளவில் மக்கள் இங்கு புலம் பெயர்ந்தனர் படம் – wikimedia.org

குடும்பம், நாடு, குளம், இனம் என பலதரப்பட்ட அரசியல், மற்றும் ஆளுமை வரையறைகள் அவர்களுக்குள் இருந்தன. கூட்டத்தின் வயது முதியவர்கள் ஒரு குழுவாக அவர்களுக்கான தலைவனை முடிவு செய்தனர். சிறப்பான தலைமை பண்புள்ள ஒருவரையே தலைவராக அமர்த்தி அவருக்கான மரியாதை வழங்கப்பட்டது. ஒவ்வொரு விடயம் மற்றும் விவகாரங்களில் குழுவின் பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொள்ளும் முடிவே தலைமை குழுவின் முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டங்களுக்குள் நட்புறவு, இராணுவ கூட்டமைப்பு அனைத்தும் இருந்ததாம். சிறுவயதுமுதல் அவர்களுக்கு மத நம்பிக்கைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மற்றும் நிலம், நீர் முதலிய வாழ்வாதாரங்களுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய பண்புசார் விடயங்கள் பயிற்ருவிக்கப்பட்டன.

அவர்களுக்கு எங்கு உணவு கிடைக்கும் என்று முன் கூட்டியே அனுமானித்து அங்கு பருவகாலத்திற்கு ஏற்ப முகாம்களை மாற்றி அமைத்தனர். படம் – i.pinimg.com

அவர்களுக்கென்று தனி எழுத்துக்களை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக வாய்மொழி தகவல் பரிமாற்றத்தை காலம் காலமாக செய்து வந்தனர். அவர்கள் குழுமத்தின் மொத்த வரலாறும் தெரிந்த ஒரு சிலர் இரவு நேரங்களில் சிறப்பு கூட்டத்தை அழைத்து அவர்களின் வரலாறு மற்றும் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளை கதைகளாகவும், செவி வழிச்செய்தியாகவும் பரிமாறினர். கச்சைகளிலும், பட்டைகளிலும் நிகழ்வுகளை படங்களாக வரைந்தும், செதுக்கியும் பதிவு செய்து பாதுகாத்து கதை சொல்லும்பொழுது பயன்படுத்தியுள்ளனர்.

எஸ்கிமோ இனம்

வடதுருவ குளிருக்கு தகுந்தாற்போல் தங்கள் வாழ்க்கைமுறை, உறைவிடம், உணவு, போக்குவரத்து முதலியவைகளை அமைத்துக்கொண்டனர் படம் – plus.google.com

கனடாவின் ஆர்டிக் பகுதி பூமியின் மிக குளிர்ச்சியான தப்பிக்கமுடியாத சூழ்நிலைகளை கொண்ட ஒரு பகுதி. குளிர்காலங்கள் மிக நீண்டதும், அதிகமான குளிருடையதும், சூரிய வெளிச்சம் குறைவாகவும் இருக்கும் பகுதி. இங்கு வாழ்த்த மக்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தங்களை பழக்கப்படுத்திக் கொண்டனர். வடதுருவ குளிருக்கு தகுந்தாற்போல் தங்கள் வாழ்க்கைமுறை, உறைவிடம், உணவு, போக்குவரத்து முதலியவைகளை அமைத்துக்கொண்டனர்.

எஸ்கிமோ என்றழைக்கப்படும் இனூயிட் இன மக்கள் பனிபடர்ந்த மற்றும் பனிப்பொழிவு மிக்க பகுதிகளில் ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வாழ்ந்துள்ளனர். எஸ்கிமோ என்ற வார்த்தையின் பொருள் “பச்சை மாமிசம் உண்பவர்” என்பதாகும். மிக மோசமான பனிப்புயல் மற்றும் பனிச்சரிவும் இங்கு அடிக்கடி நிகழும். அவர்களின் கோடைகாலம் வருடத்தில் இரண்டு மாதங்கள் தான். அப்பொழுது வளரும் சிறிய தாவரங்கள், பாசிகள், மரப்பாசிகள், மற்றும் புதர்கள் அவர்கள் உணவாக இருந்துள்ளது.

எஸ்கிமோ என்ற வார்த்தையின் பொருள் “பச்சை மாமிசம் உண்பவர்” என்பதாகும். படம் – pinimg.com

இனூயிட் இன மக்கள் பெரும்பாலும் நாடோடிகளாக வாழ்ந்தனர். மிக வேகமாக, எளிமையாக தங்கள் தற்காலிக வீடுகளை அமைத்தனர். அவர்களின் கோடைகால வீடுகள் மூங்கில்கள், மரத்துண்டுகள், மற்றும் மான் மற்றும் பனிப்பிரதேச நாய்களின் தோல்கள் போன்றவற்றால் கட்டப்பட்டது. வெவ்வேறு பகுதி மக்கள் கோடை காலங்களில் ஒன்றாக கூடி ஒரு கிராமத்தை உருவாக்கிவிடுவர். குளிர் காலங்களில் வேட்டைக்காக பனிப்பிரதேசதங்களுக்கு சென்று அங்கேயே தற்காலிக, மற்றும் நிரந்தர உறைவிடத்தையும் அமைத்து கொண்டனர். குவிமாடம் போல் முழுக்க முழுக்க பணிக்கட்டிகளால் உருவான வீடு “இக்ளூ.” இவை இன்றளவும் உலகப்புகழ் பெற்றவை. நான்கு மீட்டர் சுற்றளவும், மூன்று மீட்டர் உயரமும் கொண்டவைகளாம் சிலரது நிரந்தர பனி வீடுகள்.

இம்மக்கள் ஆகச்சிறந்த வேட்டைக்காரர்களாகவும் இருந்துள்ளனர். பருவகாலங்களுக்கு ஏற்றவாறு வருடம் முழுவதும் வெவ்வேறு விலங்குகள் அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தன. கடல் நாய்கள், கடல் குதிரைகள், பெலுகா திமிங்கலங்கள், கலைமான், பனிக்கரடி, பறவைகள், முதலியவைகளின் மாமிசங்கள் இவர்களுக்கும் மற்றும் இவர்களின் வேட்டை நாய்களுக்கும் உணவானது. தந்தங்கள், தோல்கள், மற்றும் எலும்புகள் இதர பயன்பாடுகளுக்கானது. இவர்கள் “கயாக்ஸ்” எனப்படும் படகுகளை கோடை கால மீன்பிடிப்புகளுக்கு பயன்படுத்தினர். குளிர் காலத்தில் நிலத்தை துளையிட்டு மீன்கள் பிடிக்கப்பட்டன.

படம் – aspcwf.files.wordpress.com

எஸ்கிமோக்கள் ஆன்மா மற்றும் ஆவிகள் மேல் அதிக்கப்படியான நம்பிக்கை கொண்டிருந்தனர். உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து சடங்களுக்கும்  ஆவியுள்ளதாக நம்பப்பட்டது. ஒரு உயிர் இறந்தவுடன் ஆவியாக வேறு உலகத்தில் வாழ்வதாகவும் நம்பிக்கை. அவர்களுடைய சக்தி வாய்ந்த மத குருவால் மட்டுமே அனைத்து ஆவிகளையும் கட்டுபடுத்த முடியும் என்று கருதினர். மதகுரு வித விதமான மிருகத்தின் உருவங்கள் பதித்த முகமூடிகளை அணிந்து நடனமாடி ஆவியிடம் பேசுவாராம்.

கற்கள், எலும்புகள், மற்றும் தந்தங்கள் கொண்டு மனிதர்கள், மிருகங்கள், மற்றும் ஆவிகளின் சிற்பங்களை செதுக்கினர். முகமூடிகளுக்காக திமிங்கிலத்தின் எலும்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறன. பனிப்புல்லை கொண்டு கூடைகளையும், விலங்குகளின் தோல் மற்றும் ரோமங்களை கொண்டு பல அடுக்குகளாக குளிருக்கேற்ற ஆடைகளையும் வடிவமைத்தனர். காலணிகள், கையுறைகள், முக்காடு, பர்க்கா, என அனைத்தும் தேவைக்கேற்ப வித விதமாகவும், கலை நயத்துடனும் உருவாக்கி பயன்படுத்தப்பட்டன.

இழுவை வண்டிகளில் நாய்களை கட்டி, சுமை தூக்குவதற்கும், பயணிப்பதற்கும், பயன்படுத்தினர். ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் பனியில் இலகுவாகச் சறுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. சம தளத்தில் இருந்த மக்கள் குதிரைகளை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் “கயாக்ஸ்” எனப்படும் படகுகளை கோடை கால மீன்பிடிப்புகளுக்கு பயன்படுத்தினர். குளிர் காலத்தில் நிலத்தை துளையிட்டு மீன்கள் பிடிக்கப்பட்டன. படம் – labrujulaverde.com

எஸ்கிமோக்களின் குழுக்களிடம் சண்டை சச்சரவுகள் மிகக்குறைவு. அவர்கள் சுயகட்டுப்பாடு மற்றும் பண்புகளுடனும் கடுமையான சூழலிலும் உணவு, கருவிகள், உடைகள், மற்றும் பணம் முதலியவற்றை அவர்கள் குடும்பம், நண்பர்கள், குழுக்கள் அனைவரிடமும் இயன்றவரை பகிர்ந்து வாழ்ந்துள்ளனர். நிலப்பரப்பு, மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்திற்கும் மரியாதை அளித்து இணக்கமான உறவு வைத்திருந்த எஸ்கிமோக்கள் வாழ்க்கை தேனினும் இனிமையாதே!

Related Articles