அகமும் புறமும் பாடும் காதல்

தமிழ் எத்தனை எத்தனை கொண்டாடப்பட்டதோ, அதே அளவு முடியுடை மூவேந்தர்களின் அரியணை கண்ட நம் தொன்மம் தொடங்கிய சங்கத்திலே, காதலையும் கொண்டாடினார்கள் என்றும் சொல்லலாம். இன்றளவும் விளக்கவும், விபரிக்கவும் அர்த்தப்படுத்தவும் முடியாத காதலை சங்கத்தில் அத்தனை இயல்பாய் ரசனைச் சொட்டச் சொட்ட எடுத்தியம்பினர் அக்காலக் கவிகள். தமிழும் இலக்கியமும் அப்படி செழிப்பாய் நிற்கக் காரணம் இருந்தது, தமிழையும், கவியையும் உயிராய் சேசிக்கும் புலவர்கள். அப்புலவர்களின் தமிழ்ப் பற்றை கவி ஆழத்தோடு ஆராய்ந்து ஆதரித்த அரசர்கள் என்று இருந்ததாலே இன்றும் சங்கக் கவிகள் இன்பத் தேனாய் காலத்தை வெல்வதாய் அமைந்து இருக்கின்றன.

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்து எட்டுத்தொகை’ என்னும் எட்டுத் தொகையும் …
‘முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை பெருகு வள மரக் காஞ்சி மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத் தொடும் பத்து’ என்றவாறாய்ப் பத்துப் பாட்டும். என்றே சங்ககால இலக்கியங்களை கூறிவிடலாம்.

அன்பையும், காதலையும் பாடும் அகமும், போரையும், வீரத்தையும் பாடும் புறமுமே, பதிணெண் மேற்கணக்கு நூல்கள் எனப்பட்ட இச்சங்க இலக்கியத்தின் உயிர் நாடியாக விளங்கியது. (இப்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை) என்றாலும் 2381 சங்கப் பாடல்களிலே 1862 பாடல்கள் அகத்தையே பேசுகின்ற அதேவேளை, சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்களும் அகத்தையே பாடியுள்ளனர். என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது. ஏதோ ஒரு வகையில் பிரபஞ்ச இயக்க விதிகளுக்கும், இன்ன பொருள் என கண்டறிய முடியா தாக்கத்திற்கும், உயிர்களின் உயிர்ப்புக்கும் காரணமாய் அமையும் அகப்பொருள் எனப்படும் இக்காதலானது இலக்கியங்களில் வியாபித்து நிற்றலும் புறத்தினுள் விரவி வருதலும் வியப்பன்றே.

புகைப்பட உதவி – in.pinterest.com

அறுவகை இலக்கணம் எனும் நூலை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ‘பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு ஆவியாகும் அகப்பொருள் இயல்பே’ என்றார். மலருக்கு நறுமணம் இன்றியமையாதது. அதுபோலத் தூய தமிழுக்கு அகப்பொருள் இலக்கணம் இன்றியமையாதது என்பதே இதன் பொருள். இதன்படி, இச்சீர்மிகும் காதலில் சங்கத்தமிழர் களித்திருந்ததும், காலத்தை படம்பிடித்துக்காட்டும் கண்ணாடியாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் காதலானது கனிந்திருந்ததும் நோக்கத்தக்கது.

‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னே இவ்வாறு என்று யாண்டும் கூறப்பெறாததாய் உள்ளத்தால் உணர்ந்துகொள்ளும் பொருள்.’ என்கிறார் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான நச்சினார்க்கினியர். அந்த வகையில் அகம்/காதல் எனப்படுவது, தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது எனவும் பிறர்க்கு விளக்க இயலாததாக இருப்பதுவும் உள்ளத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய பொருளும் ஆகும். இது இன்பத்துள் பேரின்பம். உணர்ச்சியுள் பேருணர்ச்சி.

இவ்வாறாக மோகம், தாபம், விரகம், போகம், காமம் ஆகிய காதல் சார் உணர்வுகளுக்குள்ளும் உணர்வுகளைக் கடந்தும் துய்க்கின்ற காதல் ஒழுக்கங்களை சங்க காலத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைத் திணைகளே தீர்மானித்தன எனலாம். இவை முறையே புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், உடன்போக்கு என நிலங்களுக்குப் பொருண்மைர்குவமு் கொள்ளப்பட்டன.

இதனை ‘போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கம் அளி ஊடல் அணி மருதம், நோக்கு ஒன்றி இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல் புல்லும் கவிமுறைக்கு ஒப்ப’ என்ற அடிகள் விளக்கி நிற்கின்றன. இதுவே அன்பினைந்திணை எனப்படுகின்றது. தவிர, தொல்காப்பியர் காதலை அன்பினைந்திணையுடன், ஒரு தலைக் காமமான கைக்கிளை, பொருந்தாக் காமமான பெருந்திணையுடனுமாக மூவகைப்படுத்துகிறார். இம்மூவையின் பாற்படும் இலக்கியங்கள் ஜனித்தன. தமிழ் தழைத்த சங்கத்திலே தோன்றிய இப்பாக்கள் தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய், நற்றாய் என்னும் குறிப்பிட்ட பாத்திரங்களால் பதியமிடப்பட்டுள்ளன. இவை அப்பாக்களுக்கும் அவை சொல்ல வரும் பொருளுக்கும் உயிர்ப்பை தருவதாய் அமைகின்றன.

சங்க இலக்கியங்களைப் பொருத்தவரையிலும் அவை இயற்கையின் ஓர் அங்கம். அந்த வகையில் இயற்கையின் சாட்சியாய் இயற்கையின் கைகளிலேயே தவழ்ந்த சங்கக் காதல் இயற்கையைக் கொண்டே பாடப்பட்டதையும், அப் பாட்டினூடு அவை தரும் ஆழத்தினூடு அறியலாம். அதே போன்றே காதலுக்காய் கையாளப்படும் அணிகளும் வர்ணனைகளும் இயற்கையையே சார்ந்திருந்ததையும் இவ்விலக்கியங்களில் காணலாம். ‘நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி’ அதாவது, நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதோ அவ்வாறே தலைவி உயிருடன் இயங்குவதற்கு தலைவனின் காதல் நெஞ்சம் இன்றியமையாதது என்கிறது நற்றிணை. ஈருயிருக்கிடையிலான பிணைப்பை, எத்துணை அழகாய் இப் பா உரைக்கின்றது.

குறுந்தொகைப் பாடலொன்று இவ்வாறு பாடுகின்றது,
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைநிலம். அங்கே, வேரிலுள்ள கொம்புகளில் பலாப்பழங்கள் தொங்குகின்ற மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்வாயாக! உன்னைத் தவிர யாரால் தலைவியின் நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது. அது போலத் தலைமகளின் காதலை உரிய தலைவன் அனுபவிக்க முற்படவில்லையாயின் அக்காதலுக்கு ஆதாரமதய் விளங்கும் அக்காதலியின் சிற்றுயிரையும் இறந்துபடச் செய்துவிட்டு தானும் கெடும் என்றவாறாய் அமைவதை அவதானிக்கலாம். இப்பா காதலின் ஆழத்தை சொல்வதற்கு இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் உதாரணத்தை இணைத்துள்ளமை அதன் தனிச்சிறப்பு.

புகைப்பட உதவி – flipkart

பெண்பால் மட்டுந்தான் காதலா? ஏன் ஆண்களுக்கு இல்லையோ? என்ற வகையில் ஆண்களின் புறத்தினை பேசும் அளவிற்கு அவர்களின் அகத்தையும் பாடுகின்றது சங்க இலக்கியங்கள். பொருள் தேட புறப்பட்டுச் செல்லும் தலைவன், தான் சென்ற காரியம் முடியும் முன்னரே தலைவியின் நினைவுகளால் சிக்கித் தவிக்கின்றான். நினைவுகள் பேசும் கதைகளுக்கு சங்கமும், பாடுபொருள் தலைவனும் மாத்திரமென்ன விதிவிலக்கா? மனமோ தலைவியிடம் உடனே போ என்கிறது. அறிவோ பொருளை தேடி முடி பின்னே செல் என்கின்றது. இந்த அறிவுக்கும், மனதிற்குமான இருதலைக்கொள்ளி காதல் நிலையை இவ்வாறு கூறுகின்றது நற்றிணை (284) பா ஒன்று.

“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே ”

அதாவது, ‘இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவளிடம் யாமும் இனிச் சென்று அவள் பிரிவுத்துயரைத் தீர்ப்பபோம் என நெஞ்சம் சொல்லும். என்றாலும் செய்யக் கருதிய செயலை முற்றிலும் முடிக்காமல் இடையே அதற்கு ஊறு செய்தால் அதன் பயனை அடையாமையோடு இகழ்ச்சியையும் தரும். என் அறிவோ சிறுபொழுதும் நீ செல்லா திருப்பாயாக என்று சொல்லும். களிறுகள் ஒன்றோடு ஒன்று தமக்குள் மாறுபட்டு பற்றியிழுக்கத் தேய்ந்த பழைய கயிற்றைப் போல என் வருந்திய உடம்பு இருபாலும் இழுத்து இற்று விழத்தான் வேண்டுமோ?’ என்கிறான். காதலைச் சொல்ல இதனை விடவும் வேறு பா வேண்டுமோ? தலைவனின் அறிவுக்கும், மனதிற்கும் இடையிலான போராட்டம் அதற்கு காரணமான காதல், அன்பிற்கும் தன் கடமைக்கும் இடையேயான தவிப்பு நிலை அதனால் ஏற்படும் பிரிவுத்துயர் என்ற அனைத்தையும் அச்சொட்டாய் காட்டுவது சங்கப் புலவரின் தனித்தன்மை யன்றல்லோ.

காதலின் வலியது உலகின் மிகப்பெரும் வலி என்றும் அதுவோர் இன்ப அவஸ்தை என்றும் சொல்லக் கேட்டிருப்போம். அது என்ன பெரும் வலியோ என்றே கேட்பவருக்கு உண்மைக் காதல் இல்லை என்றே சொல்லி விடலாம். அது மாறுபட்டதோர் மாயஉலகு. இப்படியான காதலின் பிரிவுத் துயர் மெய்க் காதலர்க்கு மட்டுமே தெரிந்திருக்கும். நற்றினையானது தலைவியின் விரகம், பிரிவுத் துயர் பற்றி இவ்வாறே கூறுகின்றது.., தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு நெடுநாளான போதும் முயன்றிலன். அவன் களவு இன்பத்தையே நாடியவனாக நெடுங்காலம் வந்தும் துய்த்தும் பிரிந்து போவான் ஆயினான். தன்துயரைப் பொறுக்க ஆற்றாத் தலைவி, தோழிக்கு இவ்வாறுரைக்கிறாள்.

‘தோழி, சிறந்த மலைநாடனான நம் தலைவன் வந்து என்னைக் கூடினால் என்பால் நல்ல அழகு உண்டாகும். அவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றால் என் மேனியின் நிறம் மாறி அழகையும் கெடுக்கும். ஆதலால் நம் தலைவனது மார்பு இசையறி விலங்காகிய அசுண மாவைக் கொல்பவரது கையைப்போல இன்பமும் துன்பமும் ஒரு சேர உடையதாயிருக்கிறது’ என்கிறாள். இந்த அசுணமா என்னும் இசையறி விலங்கைப் பற்ற நினைப்பவர் இன்னிசை இசைத்து, அது அதில் மயங்கித் தம் அருகில் வந்ததும் கடும் இசையான பறையினைக் கொட்ட அவ்விசையைத் தாங்காது அது உயிர் துறந்ததும் அதனைக் கொள்வர். இவ்வாறு அசுணத்திற்கு தான் இன்பம் நல்கித் தொடர்ந்து உயிரையும் வாங்கும் இசைப்பாரின் கை போன்றது தலைவனின் கொடிய மார்பு என்கிறாள் தலைவனின் அணைப்பிற்காய் ஏங்கும் தலைவி.

நற்றிணைப் பாடல்கள் காதலைப்பாடும் அகப்பாடல்களாக இருந்த போதிலும் காதலின் அங்கமான காமத்தையும் அதன் சுவை சேர்க்கும் குறிப்புகள் அதிகமில்லை. இங்கு நல்ல காதலையும், அக் காதலர்களின் உள்ளத்து உணர்வுகளையும் நயம்படச் சொல்லும் பாடல்களே அதிகமான உள்ளன. காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. அவன் திரும்பிவரும் நாளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். ஒரு கட்டத்தில் வாழ்வைப் பற்றிய நம்பிக்கையையும் இழந்து விடுகிறாள். காதலனைக் காணாமலேயே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று பரிதவிக்கிறாள். இந்த நிலையில் தலைவனைப் பிரிந்த தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கிறாள். அதனை அழகாக இப்படிப் பாடுகின்றது, நற்றிணைப் பா 397 ..,

‘சாதல் அஞ்சேன் அஞ்சுவன் சாவில் பிறப்புப் பிறிதாகுவது ஆயின் மறக்குவன் கொல்என்; காதலன் எனவே’
‘தோழி நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காய் அஞ்சுகிறேன். அது, மறுபிறப்பென்று ஒன்றிருப்பின் அதில் தலைவனை மறந்துவிடுவேனோ என்பதுதான்.’ என்கிறாள்.

இப்படியாகக் காதலை, அன்பை கனியக் கனியப் பாடிய சங்க இலக்கியங்கள் அதன்ஊடு, அறம் கூறவும் மறக்கவில்லை. இவ்விலக்கியங்களில் திருமணதத்துக்கு முன்னரான காதல் ஒழுக்கங்களைக் களவொழுக்கங்கள் எனவும், திருமணத்திற்குப் பின்னரான காதல் ஒழுக்கங்களைக் கற்பொழுக்கங்கள் என்றும் வகைப்படுத்தின. அதில், திருமணத்தை விரைவுபடுத்தும் பொறுப்பு தலைவிக்கு மாத்திரமன்றி தோழிக்கும் இருந்திருந்தது.

இச்சமயம், நற்றிணையின் 172 ஆவது பாடலை கூறி ஆகவேண்டும்,

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே

அஃதாவது, பகற்குறியை நாடும் தலைவனை தோழி புன்னை மரத்தடியில் சந்தித்து இவ்வாறு கூறுவாளாயினாள். ‘இங்கு இருக்கும் புன்னை மரங்கள் யாவும் நாம் சிறுவயதில் விளையாட்டாக நட்ட விதைகளில் உருவானதே. இவற்றிற்கு பாலும் தேனுமே ஊற்றி வளர்த்தோம். அப்போது எங்கள் அன்னை, ‘உங்களை விட உங்கள் தங்கையான இப்புன்னை மிக நல்லவள்.’ என்று பாராட்டியுள்ளார். எனவே எம் தங்கைகளான இப்புன்னையின் நிழலில் பகற்குறியில் சரசம் செய்வது வெட்கமாக உள்ளது.’ கூறுகிறாள். இங்கு நிழல் தரும் வேறு மரங்கள் பலவும் உள்ளன எனக்கூறி தலைவியை மணந்து உரிமையாக்கிக் கொள்வாயாக என்பதனை மறைமுகமாய்க் கூறுகிறாள். இப்படியாக சங்க காலத்துக் களவுக்காதல் கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. அது மாத்திரமா? சங்கத்தில் இயற்கையை எவ்விதம் நேசித்தனர்? மரங்களையும் தன் உறவாக உயிராக மதித்ததையும் கூட இப்பா சொல்லிவிடுகின்றது.

புகைப்பட உதவி – myartmagazine.com

கற்பு என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. கற்பு வாழ்வுக்கு வழி வகுக்கும் களவுக் காதலின் நெறியைக் குறித்து ‘களவொழுக்கம் தூயது: களவுக்காதலர் மன மாசற்றவர்: மணந்து கொள்ளும் உள்ளத்தவர்: களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்.’ என்று ஆய்வாளர் வ.சு.ப. மாணிக்கம் கூறியதை இங்கு குறிப்பிடலாம்.

காதல் அது…, விழிகளின் சங்கமத்தில் விதைகொண்டு வேர்கொண்டு விருட்சமென இதயமதில் வியாபித்திருப்பதும் மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்ற காதலை இன்று வரையில் பாடாதவர் எவருமில்லை. தமிழ் மொழியின் பரவலான வளர்ச்சிக்குப் பசுமைத் தீனியான ஒப்பற்ற சேம நிதியங்களான இச்சங்க இலக்கியங்கள் கறையில்லாக் காதலை பாடியது.

பண்பாடு என்னும் பன்னாடையினால் வடித்தெடுக்கப்பட்ட நம் கவிக்கோன்கள் தம் மனம்தொட்ட காதலைப் பாடுகையில் இன்னார் இன்னார் என்று பெயர் சுட்டாமல் தலைவன் தலைவி எனப்போற்றிப் பாடியது பண்டையோர் பணண்பாட்டினைப் பறைசாற்றுகின்றது. எடுத்துக்காட்டாக, இப்பாடலை சொல்லாது விடுதல் கடினம்
‘யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே..’.

காவியமாய் பாடவேண்டிய புணர்தல், ஊடல், காத்திருத்தல், இரங்கல், பிரிதல், உடன்போதல் போன்ற காதலின் நிலைகளை அழகுதமிழில் அணிநயங்களோடு அதிகபட்சமாய் பன்னிரண்டு அடிகளில் அடக்கிப் பொருட்செறிவுடன் உணர்ச்சிப் பெருக்கும் குன்றா வண்ணம் சொல்லும் மாண்பு சிலாகிப்புக்குரியது. அத்தகைய நயப்பிற்கும், சிறப்பிற்கும் உரிய சங்க இலக்கியங்கள் தந்த காதலை இச்சிறு சொற் பத்திகள் கொண்டு விளக்குவது என்னால் இலகு என்றால், நானும் முற்பிறப்பில் சங்கத்தில் பிறந்திருப்பேன் அப்பெரும் பேறு ஏதும் எனக்கில்லை.

Related Articles