பிணியும் மருந்தும்

 

ஒருவரை ஒருவர் அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மனஅழுத்ததிற்குக் காரணமான ‘கார்டிசல்’ என்ற சுரப்பி குறைவாகச் சுரக்கின்றது என்று மேல்நாட்டில் உள்ள ஜுரிஜ் பல்கலைக்கழகத்தில் கண்டறியப் பட்டுள்ளது.

Cortisol ஹோர்மோன் – படம் (images.fineartamerica.com)

அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர். “இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகவும் பழையது” என்று பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று புதிய ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் சொல்வது?

கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்கு வருகிறது?,  அதற்கு என்ன காரணம்?. ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்த மனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவமும் பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.

சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி,  முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதில் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வரண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.

இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சி என்பது குளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ‘புணர்தல்’ என்பது  உரிப்பொருள். முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம் புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர் என்பதால் அதன் உரிப்பொருள் ‘இருத்தல்’.  மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில்

“ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்”

என்று வள்ளுவர்  கூறுவதுபோல் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே அதன் உரிப்பொருள்  ‘ஊடல்’.

நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோ கடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப்பட்டுக்கொண்டிருப்பாள் தலைவி என்பதால் அவை  ‘இரங்கல்’.  பாலை நிலம் வரண்ட பூமி, அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ‘பிரிதல்’  என்ற உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.

சங்க இலக்கியம் கூறும் நால்வகை நிலங்கள் – படம் (garuda-sangatamil.com)

பாலைத் திணையில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவியின்  கூற்று  பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது. மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழர்கள் நோய், நோய்க்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பவற்றைப் பற்றி இலக்கியம் படைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் ‘பசலை நோய்’  என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். பசலை என்பது உணவு,  உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன், நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி, மேனி இளைத்து, கறுத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர். நம் மேனி கறுத்து இளைப்பதற்கும் காதலரின் மேனி கறுப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் அவர்களது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். இது காதலித்து, பிரிவுத்துயரை அனுபவித்தவருக்கு நன்கு புரியும்.

உதாரணமாக ஒரு சங்கப் பாடல்.

“ஊருண் கேணி யுண்டுறைக் தொக்கபாசி யற்றே பசலை காதலர்தொடுவுழித் தொடுவுழி நீங்கிவிடுவுழி விடுவுழிப் பரத்த லானே”. மருதம் – தலைவிக்கூற்று (குறுந்தொகை.399-பரணர்)

சரி காதல் என்பது நோயா? என்று புருவங்களை உயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்து இரண்டும் ஆவது காதல். அதனால்தான் திருவள்ளுவரும், நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம் மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய் என்று கூறியுள்ளார். சான்றுக்கு, காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்  என்று தலைவி கூறும் குறள் இதோ,

“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து”- திருக்குறள் .1183

சங்க காலத்துக் காதல் இலக்கியங்கள் – படம் (tamilandvedas.files.wordpress.com)

மற்றொன்று,  அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது  என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள்.

“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது”-திருக்குறள் .1185

மற்றொன்று இன்னும் சுவையானது, அது விளக்கு மறைவினைப் பார்த்துக் கவியக் காத்திருக்கிற இருளைப் போல,  தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்து என் உடலைத் தழுவ,  பசலைக் காத்திருக்கிறது  என்று தலைவி வருந்துவது.

“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”-திருக்குறள்.1186

அதுமட்டுமா?,  புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த) தலைவன் சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே!, என்றெல்லாம் தலைவியைப் புலம்பவைத்ததென்றால் அது நோய்தானே? இது நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல். இன்னும் சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலை பாருங்கள்.  “உயிர்த்தவ சிறிது; காமமோ பெரிது , அது கொள் தோழி காம நோயே” என்று ஒருத்தி,  “நோய் தந்தனனே தோழி” என்று ஒருத்தி,  “வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்று இந்நோய்” என்று ஒருத்தி அதாவது வெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம்.“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி” என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? .’உள்ள நோய்’, ’வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆன்னா நோய்’, ’ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய்’, என்றெல்லாம் கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.

ஒரு சங்கத்தலைவி,  ஐயோ! எந்நோயை அறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே! என்று புலம்பிக்கொண்டு,  காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட விளக்கமாகக் கூற முடியுமா? என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆசுஒல்லெனக் கடவுவேன் கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவு நோயறியாது துஞ்சும்உளர்க்கே”மெல்ல மெல்ல உயிரைப் போக்கும் மன நோய் இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்?. நோயைக் கூறுவதுடன் தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறிவிடும் நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.  இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,“மருந்துபிறி தில்லை யவர்மணந்த மார்பே” என்று கூறியுள்ளது தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே. இதை இன்றுதான் நிருபித்து உள்ளது மேல்நாட்டு பலகலைக்கழகம்.

கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள். படம் (tamilandvedas.files.wordpress.com)

உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ் இலக்கியம். இதோ,

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து”

இதைவிடச் சான்று தேவையா?,  தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,

“பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ”

அதாவது, பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறு உண்டா?,  என்கிறது இச்சங்கப்பாடல்.  இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்பதை

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு”

காற்றுக்குக்கூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். இன்னும் கூறப்போனால் சங்கத்தமிழன் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உரக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறைப்போம்.  அவ்வாறு நடந்தால், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல நாமும் மகிழலாம், நம் துணையும் நலம் பெறலாம்.

Related Articles