தூதில் வளர்ந்த இலக்கியம்

மிக நுண்ணியதும், பிரபஞ்ச வெளியாய் எங்கும் நிறைந்தே மனங்களை ஆளும் காதல், தூலமது அழிந்தே போயிடினும் சூக்குமம் அழியாது என்ற வகையிலான, ஒவ்வோர் ஜனிப்பிலும் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி தன்னை பதியமிட்டு உயிர்ப்போடு இருக்கின்றது. இதன் ஆதி குறித்தான தேடல் அது எத்தனை சாத்தியம் என்பது தெரியாதது. என்றாலும் நம் சங்கம் முதலான காலத்தில் இருந்தே காதல் பல்வேறு வகையிலும் போற்றவும் பாடிக் களித்துக் கொண்டாடியும் வரப்பட்டுள்ளது.

ஈருயிர்கள், தம்மை ஒற்றைப் புள்ளியாய் இணைத்துக் கொள்ள காதல் அவசியமாகிப்போனது. அப்படியான காதலுக்கு உள்ளப் பரிமாற்றங்களுக்கு “தூது” என்பதும் மிக மிக அவசியமாகியது. காதலர் தம் உள்ளத்தின் வெளிப்பாடுகளையும், அதன் கிடக்கைகளையும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்திக் கொள்ள இன்னோர் நபரை அல்லது இன்னோர் பொருளை அனுப்புவது தூது எனப்பட்டது. அதற்காக மட்டுமல்ல ஒருவருடைய கருத்தை பிறிதொருவருக்கு அனுப்புதலே தூது. இது மன்னர்களுக்கு இடையில், புலவர்கள், பிரபுக்கள் என ஏன் பக்தன் இறைவனுக்கும் கூட தூது அனுப்பியுள்ளதாக நம் தொன்மம் உரைக்கின்றது. அத்தகைய தூது சங்க இலக்கியங்களில் இன்றியமையாப் பொருளாக இருந்தது. வெறும் தூதையும் கடந்து, காதலின் ஆழம், பிரிவுத்துயர், பகிர்ந்தவை, பகிர முடியாத நினைவுகளின் குறிப்புகள் அதன் நீட்சிகளும், குறுக்கமும் என பல எண்ண வெளிப்பாடுகளை பாக்களில் வடித்தனர் நம் சங்கக் கவிகள்.

ஆரம்பத்தில் சங்கத்தின் தனிப்பாடல்களில் இடம்பெற்ற தூது, சங்கமருவிய காலத்தில் தோன்றி உலகப்பொதுமறையெனப் போற்றப்பட்ட திருக்குறளில் தனக்கான ஓர் அதிகாரத்தைப் பெற்றதோடு, பின்னெழுந்த காப்பியங்களிலும் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தவறவில்லை. உதாரணமாக தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில் கோவலனைப் பிரிந்த மாதவி முதலில் வயந்தமாலையைத் தூது விடுவதாயும், கோவலனோ அதனை மறுத்துவிட்டுக் கண்ணகியோடு மதுரை செல்லவே இரண்டாம் முறையாய் கோசிகமாணி என்பவனைத் தூது விடுவதாயும் பாடப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

புகைப்பட உதவி – dinamani

தொல்காப்பியர் காலத்தில் அகவாழ்வுக்குப் பங்காற்றும் இக்காதல் தூதினைக் குறிக்க ‘வாயில்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’
என்றவாறாய் இப்பன்னிருவரையே தொல்காப்பியர் தூதுக்கு உகந்தவர்களாய் சொல்கின்றார். இவற்றைத் தலைவிக்காகத் தலைவனிடத்தும் தலைவனுக்காய்த் தலைவியிடத்தும் தூது செல்லும் வகையினில் அகவற்பாவினால் அமைக்கப்பட்ட பாக்களில் நாம் நுகரலாம்.

‘இக்காலத்தில் வருவேன்’ என உரைத்துச் சென்ற தலைவனின் வருகை தாமதிக்கின்றது. இதன்போது தலைவியானவள் எதை எண்ணி வருந்துவாளோ இல்லையோ அலர் தூற்றும் (அலர் – கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் பழிச்சொல் என இலக்கியங்கள் பொருள் படுத்துகின்றன) என்று குறிக்கப்படுகின்றது அயலவரைக் கண்டு அஞ்சுவாள். இதனை ‘எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழையக் கொடியோர் நாவே காதலர் அகலக் கல்லென் றவ்வே..’ என்ற குறுந்தொகைப் பாடல் உரைத்து நிற்கின்றது.

என்றாலும் அவ்வாறு அலர் தூற்றும் அயலவர் கூட சிலபொழுது தலைவியின் துயர்கண்டு தூது சொல்லும் வழக்கமும் அன்றைய நாட்களில் இருக்கத்தான் செய்திருக்கிறது. அந்தவகையில் தோழி தலைவியிடம் ‘நீ வருந்தாமல் என்னருகில் அறத்தோடு நிற்கிறாய். உன்னைத் தலைவன் மணமுடிக்கச் செய்யச் சம்மதிக்குமாறு அயலவர்கள் அதிகமாகத் தூது விடுகின்றனர்’ என்கிறாள். அதனை ‘ஒல்காது ஒழிமிகப் பல்கின் தூதே…’ என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகின்றன.

இந்த காதற் தூதுகளில் மட்டும் உயர்திணைகள் மட்டுமன்றி அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் காணப்பட்டது. காதல் கருக்கொண்ட தலைவன் தலைவியர் அஃறிணைப் பொருட்களையும் தூதனுப்பினர். அத்தூதும், தூது தரும் பொருளும், மிக ஆழமானது. அது காதலின் வெளிப்பாடுகளை திறன்படவே காட்டுவதாய் அமைகின்றது.

புகைப்பட உதவி – vanakkamlondon

ஆனாலும் அப்பாக்கள் உளத்தின் ஓரத்தில் சிறு துயரை ஊற்றுவிக்கச் செய்வதாயும் அமைகின்றன. அதற்கு காரணம் இருக்கத்தான் செய்கின்றது. மேலுரைத்த அந்த நிலை பெரும்பாலும், தலைவன், தலைவிக்கிடையேயான பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில் ஏற்படும். இவ்வாறு தலைவனைப் பிரிந்தவிடத்து விரகம் அதிகரித்த நிலையில் தன் காதல் மிகுதியையும் ஆற்றாமையையும் அஃறிணைப் பொருட்களிடம் கூறித் தூது செல்லத் தலைவி வேண்டுவாள். இதனை ‘காமமிக்க கழிபடர் கிளவி’ என இலக்கண ஆசிரியர்கள் கூறுகின்றனர். அன்பின் மிகுதி என்றும் இதற்கு பொருள் கூறலாம்.

நிற்க.,.. இவ்விடத்தில் ஒன்று., காமம் என்ற சொல்லதனை இழிவானதாகவும், தரம் தாழ்ந்ததாகவும் கருதும் மனநிலை கொண்ட காலத்தில் நாம் வாழ்கின்றோம். இது சரியான புரிதலற்ற ஒன்று. சங்ககாலத்தில் காமம் என்ற சொல் அன்பு என்பதை குறித்து நிற்பதாகவே அமைந்தது. கமம் என்ற சொல்லில் இருந்து காமம் பிறந்ததாகவும் சொல்லப்படுகின்றது. கமம் என்றால் முழுமை, நிறைவு எனப்படும். அதன்படி அன்பின் நிறைவினையே நம் பழந்தமிழர்களும், கவிகளும் காமம் என்றழைத்தனர்.

வருக.,.. சங்கப்பாக்களின், அஃறிணைத் தூது எனப்படுவது, சுவாரசியமானதும் கூட. ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்து அவற்றிற்கேற்றபடி நடக்கும் உணர்வு பெற்றவை அல்ல அஃறிணைப் பொருட்கள். ஆயினும் அவற்றை முன்னிலைப்படுத்தி தூதுரைப்பதைப் புலவர்கள் ஒரு மரபாகக் கொண்டுள்ளனர். அங்கனம் அஃறிணைப் பொருட்களைத் தூது அனுப்புதலைத் தொல்காப்பியர் வழுவமைதி எனச்சுட்டுகிறார். ஏதோ ஒரு வகையில், எதுவோ ஒன்றில் லயித்த உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு நீயாவது போய் சொல்லேன் என் மனநிலையை அவளு(னு)க்கு. என்று நமக்கு நாமே ஒரு நம்பிக்கை, சிறு ஆறுதல் அடையப்பெறுவோமே அதனைத்தான் போலும் அத்துணை தமிழ்ச் சொட்ட அப்போதே பாடித் தொலைத்தார்கள்.

புகைப்பட உதவி – dinamani

சங்கத்தில், தூது விடப்படும் அஃறிணைப் பொருட்களாக அன்னம், மயில், கிளி, தென்றல், வண்டு, பூ, மான், மரம், நெல், முகில் போன்றன அமைந்தன. இத் தூதுகள் பெரும்பாலும் தலைவனின் பெருமையை எடுத்துரைப்பதாக அமைந்ததுதான். முக்கியமாக அந்தத் தலைவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவன் அவளுக்கு தவிர வேறிடத்தில் தலைவனாக இருக்க வேண்டிய அவசியங்கள் ஏதுமில்லை. தலைவியின் மனதை முழுவதுமாய் வென்றிருப்பானாயின் அவளுக்கு அவன்தான் தலைவன், பதி, கோ, வீரன் என அனைத்துமாகின்றான், அவளுமாகிறான். அத்தகைய தலைவன் மீது கொண்ட மையல், அன்பு மிகுதியால் தலைவியானவள் தன் காதலனின் சிறப்புக்களை எல்லாம் கூறி, ‘அப்படிப்பட்டவன் பிரிவால் நான் வாடுகின்றேன். என் துயர் தீர்க்க அவனது மாலை வாங்கி வா’ எனத் தூதாகச் செல்லும் பொருளிடம் வேண்டுவதாய் இவை அமைகின்றன.

தூதுரைக்க உயர்திணை இருக்க ஏன் அஃறிணையை நாடி பாட வேண்டும்? அவற்றுக்கும் உயிரும் உணர்வும் கொடுத்து கொண்டாட வேண்டுமென்ற கேள்வி நம்மவர் எல்லோரிடத்தும் எழல் வியப்பன்று. ஆரம்பத்தில் எனக்கும்தான் என்றாலும் அடியில் உதித்த என் காதல் உணர்வுகளின் போது அதன் பெறுமதியும், அதன் ஆழமும் தெளிவாகியது. அப்படித்தான் அஃறிணைப் பொருட்களைத் தூது விடுவதால் ஏற்படும் பயனை இப்படிக் கூறுகின்றார். நம்பியகப்பொருள்..,

நெஞ்சு நாணு நிறைசோ ரறிவும்
செஞ்சுடர்ப் பருதியுந் திங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியுங் கானலும்
உள்ளூறுந் யன்றவு மொழிந்தவை பிறவும்
தன்சொற் கேட்குந போலவுந் தனக்கவை
இன்சொற் சொல்லுந போலவு மேவல்
செய்குன போலவும் தேற்றுன போலவும்
மொய்குழற் கிழத்தி மொழிந்தாங் கமையும்.’
அதாவது, அஃறிணைப் பொருட்கள் தான் கூறியது கேட்டு தனக்கு ஆறுதல் கூறுதல் போலவும், தன் ஏவலைக் கேட்டு அதன்படி செய்தல் போலவும், தன்னைத் தேற்றுதல் போலவும், தலைவிக்குத் தோன்றுதலால் அவள் உள்ளத்தில் ஒரு ஆறுதல் உண்டாகிறது. என விளக்குகிறது இப்பா.

அந்தவகையில் நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மன் ஆகிய தலைவன் தன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பதை எண்ணி வருந்தும் தலைவி, ‘நந்தி மல்லையங்கானல் முதல்வனுக்குப் பழுது கண்டாய் இதைப்போய்ப் பகர்வாய் நிறைப் பைங்குருகே‘ எனக் குருகைத் தூதுவிடுவதை நோக்கலாம்.

காதலின் துயரது அவளுக்கு மட்டுத்தானோ? ஏனோ அவனுக்கில்லையோ? என்ற வகையில் அது ஒன்றும் பெண்பாலிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டதாள் அமையப் பெறவில்லை. காதலில் எத்தனை பெரும் வீரனும், பெரும் பெருமை படைத்த ஆடவனும் கூட வீழ்ந்துதான் போகின்றான். அவனுக்கும் அதே அளவு துயரையும், உளக்குமுறல்களையும் ஏற்படுத்துவதுதான் என்பதை சங்கக் கவிகள் மறக்கவில்லை. அன்பின் பொருட்டு ஆடவனும் கூட அஃறிணையிடம் ஆறுதல் கொண்டது இதற்குச் சான்று.

தலைவனுக்காய் குருகை தூதனுப்பிய தலைவி இருந்த அதே நந்திக்கலம்பகத்தில் தலைவியை காணத் தேரில் விரையும் தலைவன், தன் தேரினை விடவும், தன்னைக்காட்டிலும் மேகங்கள் வேகமாய்ப் பயணிப்பதாய் உணர்கிறான். அப்போது அம்மேகங்களை நோக்கி ‘ஓடுகின்ற மேகங்களே சீர்மிகும் நந்திவர்மனுடைய நன்நகரில் அழகிய நெற்றியை உடைய என் தலைவியைக் கண்டீராயின் வேகமாக ஓட முடியாத தேரினில் உயிரற்ற (அடடா காதல்) வெறும் கூடொன்று அவளை நாடி வருகிறதென்று கூறுங்கள்’ எனத்தூது விடுகின்றான். எதுவாயின் இப்பாடலுக்கு உரிய புலவரின் பெயர் அறிய முடியாவிட்டாலும் அவர் பெரும் காதலனாக இருந்திருக்க வேண்டும் என்பதென்னவோ உண்மை.

இத்தன்மையதே சங்ககாலப் பாட்டில் இடம்பெற்ற பனம்பழ நாரைத் தூதும். சக்திமுற்றம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த சக்திமுற்றப் புலவர் பசியும் வறுமையும் வாட்டும் வேளையிலும்,
‘நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் உன் மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்
சக்திமுற்ற வாவியுட் தங்கி
நனை சுவர்க்கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையெனைக் கண்டனம் எனுமே’
என நாரையை தன் தலைவியிடத்துத் தூது விடுத்ததை நோக்கலாம். “ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி …” பா வரிகளினூடே, காதலை அன்பை உணர்வாய் கொட்டும் சங்கக் கவிகள் குறித்து வியப்பதை தவிர வேறென்ன செய்திடல் முடியும்?

சரி இவற்றையும் தாண்டிய ஒரு காதல் இருக்கத்தான் செய்தது. மானுடக் காதல் இவ்வாறாய் உயர், அல் திணையில் தூது பேசி லயித்துக் கொண்டிருக்க, பல்லவர் காலத்துக்கு பிற்பட்ட இலக்கியங்களில் இவை இறைக்காதலுக்கு பயன்பட்டமையை ஆழ்வார்கள் மற்றும் நாயன்மாரின் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. எடுத்துக்காட்டாய் ‘சொல் ஆழி வெண்சங்கே’ என ஆண்டாள் சங்கினைத் தூதாய் விடுத்ததையும், ‘சிறையாரும் மடக்கிளியே’ என சம்பந்தர் கிளியைத் தூதாய் விடுத்ததையும் கொள்ளலாம்.
இவ்வாறாய் தூது சென்று வரும் பொருட்கள் பற்றி இரத்தினச் சுருக்கம் என்னும் நூல்,

இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை’

அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள் (மைனா), தோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய பத்துமே தூதிற்குரியவை என அக்காலத்தோரால் கருதப்பட்டன என்கிறது. என்றாலும் கற்பனைகளுக்கும் வரம்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு கவிஞனால், தூது விடப்படாத, விட முடியாத பொருளே இல்லை எனலாம்.

புகைப்பட உதவி – thinakaran

நிற்க…, “அலை எழுப்பும், சிறு கல்லே அப்படியே போய் என்னவளிடம் சொல்லேன், அவற்சிரிப்பால் எனுள்ளம் இப்படித்தான் என்றே” இது சங்கத்தில் அல்ல அங்கிருந்து தற்கால கவிகளுக்கு தொற்றிய தூதுணர்வு.

வருக.., நெல்விடுதூது, வசனவிடுதூது, நெஞ்சுவிடுதூது, கிள்ளைவிடுதூது, தத்தைவிடுதூது, வண்டுவிடுதூது என ஏராளம் பொருள் கொண்டு தூதுரைத்த கதை அடுக்கிக் கொண்டே போகலாம். இதன் வழித்தோன்றல் ஈர்ப்பாலேயே, இன்றைய திரையிசைப் பாடல்களிலும் காதலை வெளிப்படுத்த தூதுக்கள் தொடர்வதை அவதானிக்க முடியும்.

காதல் அது எத்தனை பெரும் சக்தி என்பதை உணர்ந்து. அவ்வன்பில் திலைத்து சொல்சேதி அல்லாத அல்திணையில் தூதனுப்பி வராத பதிலுக்காய் வரம் கொண்டு காத்திருந்து தன்னை மறந்து அக்காதலின் பொருட்டு வாழ்ந்த நம் சங்கம் எங்கே? அருகிருந்தும் காதலை உணராது வேற்றுலகம் நாடும் தற்காலம் எங்கே? சங்கம் பாடியதெல்லாம் பழங்கதை ஆனதும் என்னவோ அவலம் தான். காதல் அழகு தூதும் அழகு. மெய்க்காதலுக்காய் வாழ்வதும் தனியழகு.

Related Articles