உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – The Brothers Karamazov

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும் நிதர்சன வாழ்கையின் ஒவ்வொரு சூழ்ச்சியையும் பேசுவதே ஆகும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எமது வாழ்கையில் ஒரு முறையேனும் சந்தித்த நபர்களை ஞாபகப்படுத்திச்செல்லும். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வாழ்கையின் இருண்மை நிலையையும் இருண்மையால் ஏற்படுகின்ற பித்தநிலையையும் அதன் தொடர்ச்சியையும் அது சமூகத்தில் பிரதிபலிக்கின்ற எதிர்வினையையும் பேசுகின்றது.

கரமசோவ் சகோதரர்கள் – பிரதி பற்றி

(orig12.deviantart.net)

சுதேசமொழி வழக்கு எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு இனக் குழுமத்தின் வரலாற்று இருப்பு என்பது அவர்களின் இலக்கியங்களாலேயே சாத்தியமாகின்றது. இன்றைய இலக்கிய சூழலில் உலகத்தரமான படைப்புகள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலானவை ஏதோ ஒரு இனத்தின் வழக்கு நிலை கலாசார புனைவுகளாகவே காணப்படுகின்றன. அவை அவர்களின் சுதேச மொழியில் எழுதப்படுகின்ற போது மேலும் உயிர்ப்பு நிலையை அடைகின்றன. அவர்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.  கரமசோவ் சகோதரர்கள் அன்றைய பேச்சுவழக்கில் இருந்த ருச்சியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற நபராலேயே சொல்லப்படுகின்றது. அவர் கதை நடக்கின்ற இடத்தில் வாழ்ந்த ஒருத்தர். தஸ்தாயெவ்ஸ்கி ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க்கின் குரலையே தன் குரலாக கொள்கிறார்.

ஒளியும் இருளும்.

ஒளியில்லாத இடமே இருள். யாரும் இருள் இல்லாத இடம் ஒளி என்பதில்லை. கரமசோவ் நாவல் இருளில் ஒளியினை விவாதிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பலர் இருளிலேயே வாழ்பவர்களாக இருக்கின்றனர். நாவலின் பெரும் பகுதி இருண்மையாகவே இருக்கின்றது. தகப்பன் கரமசோவ் இருண்மையின் மொத்த வடிவம். பொய், காமம், சூழ்ச்சி, நடிப்பு, சுயநலம், பேராசை,சந்தேகம் என்று தீமையின் அனைத்து குணங்களையும் கொண்டவர். அவரின் வாழ்வின் நோக்கம் சந்தோசம் மட்டுமே. சந்தோசம் முழுக்க முழுக்க காமத்தால் கிடைக்கும் என்ற எண்ணத்தை தீவிரமாக கொண்டவர். அதே வழியில் அதைக் கடைப்பிடிப்பவர். குடும்ப நலம், சுற்றுச் சூழல் நலம் என்ற எதையுமே கணக்கில் கொள்ளாது சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். இதற்காக மகன்களை வெறுக்கவும் மனைவியரை கொடுமைப்படுத்தவும் செய்கிறார்.

(modernlib.com)

தகப்பன் கரமசொவிற்கு இரண்டு பதிவு மனைவியர், பல எச்ச மனைவியர். தஸ்தாயெவ்ஸ்கி பதிவு மனைவியரை உறுதியாகக் கூறக் காரணம் தகப்பன் கரமசொவின் வாழ்வில் இனி வருகின்ற எல்லா அத்தியாயங்களிலும் கூட இருக்கின்ற, அவருடன் பயணிக்கப்போகின்ற மூன்று மகன்மார்களைக் கொண்டே.

முதல் மனைவிக்கு பிறந்தவன் திமித்ரி. அவனை மித்யா என்றும் அழைப்பார்கள். இண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் இவான் மற்றும் அலக்ஸ்சி. திமிதிரியும் இவானும் தகப்பனின் சாயலில் ஐம்பது சதவீதம் உள்ளவர்கள். இருவருக்குமே காமத்தின் வேட்கை பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தகப்பனின் இருண்ட புத்தியை பின்பற்றுகிறார்கள். அதற்காக தகப்பனையே எதிர்க்கவும் செய்கிறார்கள். காமம் தகப்பனுக்கும் இரண்டு மகன்மார்களுக்கும் இடையே பெரும் விரிசலைத் தருகிறது. இருண்மை தகப்பனில் இருந்து முதலிரண்டு மகன் மார்களுக்கும் தொடர்கிறது.

அலக்ஸ்சி அப்படிப்பட்டவன் இல்லை. கரமசோவின் குணங்களை ஏற்றுக்கொள்ளாதவன். பகுத்து அறியும் பண்பினைக் கொண்டவன். அதனாலேயே இருட்டின் மத்தியில் ஒளியாக தெரிகின்றான். ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன். அன்பும் கருணையும் உதவும் மனப்பாங்கும் உண்மையான காதலையும் உடையவன். சிதறிக்கிடக்கும் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடும் ஒருத்தன். நாவலில் வருகின்ற அத்தனை இருண்மைக்கும் தனியே நின்று ஒளி கொடுக்ககூடியவன்.

மதகுருவும் சமூக பார்வை பிறழ்வுகளும்.

தஸ்தாயெவ்ஸ்கி அலக்ஸ்சியை ஒரு ஒளிர்ந்த பாத்திரமாக உருவாக்குவதற்கு பயன்படுத்திய கருவி ஆன்மிகம் ஆகும். தஸ்தாயெவ்ஸ்கி வாதப்பொருளை இங்கிருந்தே தொடங்குகிறார். ஒரு மனிதன் இருண்மையில் இருந்து வெளிவர ஆன்மிகம்தான் ஒரே வழியா? ஆன்மீகத்தை நம்பாதவர்கள் இருண்மையில் இருந்து வெளிவர முடியாதா ?

 

(pinimg.com)

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு நடுநிலையான மனிதன் என்பதிலிருந்து மதவாதி என்ற போர்வைக்குள் இழுத்து வாதிக்கமுடியும். கரமசோவ் சகோதரர்கள் கிறிஸ்தவ மதத்தின் பேசு பொருளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வலுக்கிறது. இதை தஸ்தாயெவ்ஸ்கி லாவகமாக இவான் கூறுகின்ற “இயேசு மீண்டும் அவதரித்தால்” என்ற கவிதையின் ஊடாக தகர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அலக்ஸ்சி, பாதர் சொசிமா என்ற மதகுருவின் வழிகாட்டலிலேயே வளர்ந்து வருகின்றார். தகப்பன் கரமசோவின் நேர் எதிர் வடிவம் பாதர் சொசிமா. அலக்ஸ்சியின் வாழ்கையை நெறிப்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் இருந்தார். வயதானவுடன் அவர் இறந்து போக அவரின் உடல் பிரார்தனைக்காகவும், நோய்களை நீக்கும் வலிமை கொண்ட புனித பொருளாகவும் வைக்கப்படுகிறது. சில நாட்களியே உடல் வெடுக்கு அடிக்கத்தொடங்குகிறது. அதுவரை மக்களால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருத்தர் சடலத்திலிருந்து கெட்ட வாடை வருவதால் நிராகரிக்கப்படுகிறார். அவரின் ஆரம்ப ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒருமுறை மக்களிடையே வாதிக்கப்டுகிறது. ஒரு எளிய இயற்கை மாற்றம் மக்களின் மனதில் பிறழ்வுகளை உருவாக்கத் தொடங்குகிறது. தஸ்தாயெவ்ஸ்கி கூறுகின்ற நுட்பமான செய்திகளில் இதுவும் ஒன்று.

காதலும் நாவலும்.

நாவல் முழுக்க காமதிற்கான போராட்டமாக இருந்தாலும் காமத்தை தேடிக்கொள்ள காதலையே அணுகுகின்றார்கள். நாவலில் லிசாவின் பக்கங்கள் அறிமுகம் ஆகும் வரை தஸ்தாயெவ்ஸ்கி காதல் காமதிற்க்கான முன்னாயத்தம் போலவே குறிப்பிடுகின்றார். காதலின் எந்த அசைவும் காமத்திற்கானதே என்பதை வருகின்ற எல்லாப் பாத்திரங்கள் மூலமும் உறுதி செய்தபடியே நகர்ந்தார். லிசாவின் அறிமுகமும் லிசா அலக்ஸ்சி காதலும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் புரிதலை காட்டுகின்றது. லிசா அங்கவீனமாக இருந்தாலும் அலக்ஸ்சி அவள் மீது கொண்ட காதல் உடலைத் தாண்டி உள்ளம் சார்ந்தது என நிரூபணம் செய்கிறார்.

இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி பெரும்பாலான உண்மை விடயங்களை, ஒளிர்மை வாய்ந்த கருத்துகளை வாசகனுக்கு கொண்டுசேர்க்க பயன்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தஸ்தாயெவ்ஸ்கி முதலில் ஒரு கருத்தைப் பற்றிய புறவயமான எண்ணக்கருக்களை ஏற்படுத்துகிறார். பின்னர் அவற்றின் மறை விம்பங்களை காட்டுகிறார். வாசகன் மறையான விம்பத்தை நெருங்கும் போது அதை லாவகமாக உடைத்து மெய் விம்பத்தை காட்டுகிறார். இந்த புரிதல் நுட்பம் வாசகனின் மனதில் ஆழமாக இரு வேறான எல்லைகளையும் காட்டிவிடுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்ச்சி வாசகனை அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத நீண்ட பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

(huisjenphilosophy.files.wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது மனித மனதின் இருண்மைகளுக்குள் பயணிப்பதை போன்றது, அந்தப் பயணத்தில் நாம் அடையும் வெளிச்சமும் தைரியமும் செவ்விலக்கியத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் இந்த உலகில் நமது இருப்பின் அடையாளத்தையும், நோக்கத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவுகிறது, அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் அவசியம் வாசிக்கவும் ஆழ்ந்து விவாதிக்கப்படவும் வேண்டிய முக்கிய நாவலாகும். – எஸ். ராமகிருஷ்ணன்

Sparknotes  இலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வசனங்கள்.

“Listen: if everyone must suffer, in order to buy eternal harmony with their suffering, pray tell me what have children got to do with it? It’s quite incomprehensible why they should have to suffer, and why they should buy harmony with their suffering.”

Very different is the monastic way. Obedience, fasting, and prayer are laughed at, yet they alone constitute the way to real and true freedom: I cut away my superfluous and unnecessary needs, through obedience I humble and chasten my vain and proud will, and thereby, with God’s help, attain freedom of spirit, and with that, spiritual rejoicing!”

“But hesitation, anxiety, the struggle between belief and disbelief—all that is sometimes such a torment for a conscientious man like yourself, that it’s better to hang oneself. . . . I’m leading you alternately between belief and disbelief, and I have my own purpose in doing so. A new method, sir: when you’ve completely lost faith in me, then you’ll immediately start convincing me to my face that I am not a dream but a reality—I know you know; and then my goal will be achieved. And it is a noble goal. I will sow a just a tiny seed of faith in you, and from it an oak will grow—and such an oak that you, sitting in that oak, will want to join ‘the desert fathers and the blameless women’; because secretly you want that ver-ry, ver-ry much.. . .”

முடிப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன். கரமசோவ் சகோதர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே இது. ஒரு குறுகிய கட்டுரையின் மூலமாக கரமசோவ் சகோதரர்களையோ தஸ்தாயெவ்ஸ்கியையோ விவரித்து விட முடியாது. இரண்டு முறை வாசித்து மூன்றாம் முறை வாசிக்கும் போது கூட புதிய பொருள்களை அறிந்துகொள்ளகூடியவாறு இருக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முடுக்குகளையும் தஸ்தாயெவ்ஸ்கி காட்டியவாறே கொண்டுசெல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி இருட்டில் இருந்து ஒளியை காண்பிக்கும் மாயவித்தைக்காரனாகவே ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றார்.

Related Articles