தீர்வுகளுக்கு அப்பால் நிற்கும் தடிமன்!

 

2000 ஆம் ஆண்டில் ViroPharma எனும் மருத்துவ நிறுவனம், மனிதர்களை லட்சம் ஆண்டுகளாக விடாது தொடர்ந்து வரும் தடிமனுக்கு (ஜலதோஷத்திற்கு) நிரந்தர சிகிச்சை தீர்வாக pleconaril எனும் புதிய வகை மாத்திரையை உருவாக்கும் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்தது. பல நோயாளிகளுக்கு இப்புதிய மாத்திரை உதவிய போதிலும், சிகிச்சையின் ஒரு சில நாட்களின் பின்னர் ஆய்வுக்கு உள்ளானவர்களில் 7 பேரில்,Pleconarilக்கு முற்றிலும் எதிர்ப்புத் தெரிவிக்கும் முற்றிலும் புதிய வகை வைரஸ் திரிபு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். வைரஸ்கள் மிகவும் வேகமாக வியத்தமடையும் நுண்ணங்கி என்ற போதிலும், ஆய்வாளர்கள் கண்டறிந்த இந்த திரிபு நினைத்துப் பார்க்க முடியாதளவு மிக விரைவாக வியத்தமடைந்திருந்தது. இவ்வைரஸ் சில நாட்களிலேயே ஆராய்ச்சியாளர்களின் பல வருட கடின உழைப்பைத் தவிடு பொடியாக்கிவிட்டது. 

சரியான நோயெதிர்ப்பமைப்பு இல்லாத ஒருவருக்கு தடிமன் ஏற்படுமென்றால், தொற்று விரைவில் நுரையீரல் முழுவதும் பரவிவிடும். வெகுவிரைவான வைரஸ் பரவலானது நுரையீரல் உடலுக்கு போதுமான ஒக்ஸிஜனை வழங்க முடியாது மூச்சுத்திணறலுக்கு ஆளாகும் அளவுக்கு நுரையீரலின் திசுக்களை கடுமையாக சேதப்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் முழுமையாக செயல்படாத நோயெதிர்ப்பு அமைப்பினையோ கொண்டுள்ளதுடன், இன்னும் பலர் மருத்துவ நோக்கம் கருதி நோயெதிர்ப்பு குறைப்பு மருந்துகளை உட்கொண்டு வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்த சிறிய தடிமன் காய்ச்சல் கூட உயிருக்கு பேராபத்து விளைவிக்கும் கொடிய காரணியாக அமைய முடியும். 

தடிமனுக்கான நோய் அறிகுறிகள்- படஉதவி/medlineplus.gov

ஆனால் முழுமையாக செயற்படும் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட நபருக்கு ஏற்படும் தடிமன் சில இலேசான அறிகுறிகளை மட்டுமே பெரும்பாலும் கொடுக்கும். சராசரியாக, வயதுக்கு வந்த ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் 150 முறைக்கும் அதிகமாக தடிமன் தொற்றுக்கு ஆளாவார். தடிமன் தொற்றுக்கு முக்கிய காரணமாக அமைவது வைரஸ் கிருமிகள். அனைத்து வகை தடிமனுக்கும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றுக்கான காரணம் வேறுபட்டிருக்கலாம். தடிமன் (ஜலதோஷம்) குறைந்தது 8 வெவ்வேறு குடும்பகளைச் சார்ந்த வைரஸ்களால் ஏற்படுகிறது. அவை ஒவ்வொன்றும் தனது சொந்த திரிபுகள் மற்றும் துணை வகைகளைக் கொண்டிருக்கலாம். எனவே பல்வேறு வைரஸ்கள் எவ்வாறு ஒரே மாதிரியான நோயை ஏற்படுத்துகின்றன?

அடிப்படையில் எந்த வகை வைரஸ்கள் ஆனாலும் அவை சில வழிகளில் மட்டுமே நம் உடலை ஆக்கிரமிக்க முடியும்: அதில் முதன்மையானது சுவாசம். சுவாசித்தல் நமக்கு இன்றியமையாததாகும், எனவே நமது நோயெதிர்ப்பு அமைப்பு மூக்கின் துவாரத்தில் இருந்தே பல முன்னணி பாதுகாப்புகளை செயலாக்கியுள்ளது. உண்மையில் இந்த முன்னெச்சரிக்கை நடைமுறைகளே தடிமனுக்கான பல அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. நம் மூக்கில் இருந்து சளி சொட்டுவதென்பது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மூக்கின் வழியாக உள்நுழையும் வைரஸ்களை வெளியேற்றும் நடைமுறையாகும். உடலில் காய்ச்சல் காய்வது என்பது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் வைரஸ் பெருக்கத்தை தடுக்கும் முறையாகும். உங்கள் உடல் வீக்கமடைவது மற்றும் சிவப்பது நோயெதிர்ப்பு அமைப்பு இரத்த நாளங்களை விரிவுபடுத்தி வைரஸை அழிக்கும் வெண்குருதி அணுக்களின் ஓட்டத்தை அதிகரிப்பதன் விளைவாகும். காய்ச்சல் காயும் உடம்பென்பது உயிரியல் அடிப்படையில் ஒரு போர்க்களம் அன்றி பிரிதல்ல. தடிமன் பல்வேறு வைரஸ்களால் ஏற்படுகிறது என்றால், அதை குணப்படுத்துவது என்பது இயலக்கூடிய ஒன்றா எனும் சந்தேகம் எழுகிறது. 

ஜலதோஷம் பற்றிய சில பொதுவான தகவல்கள் – படஉதவி- www.medindia.net

உண்மையில் தடிமன் தொடர்பான நிலவரங்கள் நமக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. தடிமனை ஏற்படுத்துவதில் 200க்கும் மேற்பட்ட வைரஸ் திரிபுகள் பங்கு வகித்தாலும், ரைனோவைரஸ்கள், கொரோனா வைரஸ்கள், அடினோவைரஸ்கள் மற்றும் என்டோவைரஸ்கள் எனும் நான்கு வைரஸ் வகைகளே அவற்றுள் மிகவும் பொதுவானவை. அதிலும் வைரஸ் மூலமான தடிமன் தொற்றுக்களில் 30% முதல் 50% வரையானவற்றுக்கு ரைனோவைரஸ் வகையே காரணமாகின்றன. அனைத்து ரைனோவைரஸ் நோய்த்தொற்றுகளையும் நம்மால் முற்றாக அகற்ற முடிந்தால், தடிமனைக் (ஜலதோஷத்தை) குணப்படுத்துவதில் நாம் மாபெரும் வெற்றியை அடைந்துவிடலாம். வைரஸை எதிர்த்துப் போராட இரண்டு முக்கிய வழிகள் உள்ளன: ஒன்று தடுப்பூசிகள் மற்றையது வைரஸ் தடுப்பு மருந்துகள். உண்மையில் ரைனோவைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் முதல் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.

1957 ஆம் ஆண்டில், வில்லியம் பிரைஸ் எனும் மருத்துவர் 50 குழந்தைகளுக்கு செயலிழக்கப்பட்ட ரைனோவைரஸுடன் கூடிய தடுப்பூசியையும்,  மேலும் 50 பேருக்கு மருந்துப்போலியையும் செலுத்தினார். விரைவில்,  அக்குழந்தைகளிடையே ரைனோவைரஸ் தொற்று பரவியது. தடுப்பூசி போடப்பட்ட குழுவில், 3 குழந்தைகள் மட்டுமே நோய்வாய்ப்பட்டனர். மருந்துப்போலி வழங்கப்பட்ட குழுவில், 23 குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகினார்கள். எண்ணிக்கை சிறியதாக இருந்தபோதிலும், இந்த முயற்சியின் முடிவுகள் நம்பிக்கைக்குரியதாகவே அமைந்தன. தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் ரைனோவைரஸை வெற்றிகரமாக அடையாளம் கண்டு எதிர்த்தன. ஆனால் தடுப்பூசியின் பிற்கால சோதனைகள் எந்த பயனையும் அளிக்கவில்லை. ரைனோவைரஸ் தொற்று மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது.  இது பிரைஸின் தவறு அல்ல – ரைனோவைரஸ்கள் பல்வேறு துணை வகைகளைக் கொண்டது என்பதனை அந்நேரத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. பிரைஸ் தடுப்பூசி, நம்மிடையே வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாதபடியால் பரந்தளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை. அதாவது 169 ரைனோவைரஸ் துணை வகைகளில் ஒரு சில துணை வகைகளுக்கு எதிராக மட்டுமே அத்தடுப்பூசி பயனளித்தது.

ஆனால் சில சமயங்களில் தடுப்பூசிகள் பெருமளவு பயனுள்ளதாக அமையலாம். உதாரணமாக, MRNA கோவிட் தடுப்பூசிகள், உண்மையான கொரோனா வைரஸிடமிருந்தும்  அதன் திரிபுகளிடமிருந்தும், கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக திறம்பட நம்மைப் பாதுகாக்கின்றன. ஆனால் ரைனோவைரஸுக்கும் அல்லது தடிமனுக்கு காரணமாகும் வேறு எந்த வைரஸுக்கும் எதிராக நாம் இன்னும் பரந்த பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியை உருவாக்கவில்லை. எனவே வைரஸ் தொற்றுக்கு எதிரான அடுத்த பாதுகாப்பு முறைமையான வைரஸ் தடுப்பு மருந்துகளை நோக்குவோம். வைரஸ்கள் மனித உடலில் உள்ள உயிர்க்கலங்களை ஆக்கிரமிப்பதன் மூலமாகவே பெருக்கமடைகின்றன.  எனவே திறன் மிக்க வைரஸ் தடுப்பு மருந்தானது மனித உயிர்க்கலங்களுக்கு தீங்கிழைக்காத அதே நேரம் வைரஸுக்கு எதிராக நச்சுத்தன்மையுள்ளதாக அமைய வேண்டும். இந்த சமநிலையை துல்லியமாக அடைவது என்பது கடினமாகும். அவ்வாறே ஒரு சமநிலை மிக்க ஒரு மருந்தை நம்மால் உருவாக்க முடிந்தாலும் வைரஸ்கள் இலகுவில் அந்த மருந்திலிருந்து திரிபடைந்துவிடலாம்.

வைரஸ்களின் நடத்தைக் கோலத்தைக் கணிப்பது இலகுவானது அல்ல. எவ்வாறாயினும், வைரசுகளுக்கு எதிராக சில நம்பமுடியாத வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம்: ஒரேயொரு பயனுள்ள தடுப்பூசியின் மூலம் பெரியம்மை நோயை முற்றாக ஒழித்துள்ளோம். இதற்கு இதர சில காரணங்களும் சாதகமாக அமைந்தன, பெரியம்மை வைரஸ் மற்ற உயிரினங்களில் ஒளிந்து கொள்ள முடியாது மற்றும் ஒப்பீட்டளவில் அவற்றின் திரிபு விகிதம் மிகவும் குறுகியதே. ஆனால் மறுபுறம், HIV வைரஸ் மிக விரைவாக வியத்தமடையக்கூடியதாகும்.  கோட்பாட்டு அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படாத நபரில், HIV வைரஸின் மரபணு குறியீட்டில் சாத்தியமான அத்தனை மாற்றங்களும் ஒரே நாளில் நிகழலாம். பல தசாப்தங்களாக முயற்சி செய்தும், AIDS நோய்க்கான தடுப்பூசி இன்னமும் உருவாக்கபடவில்லை. ஆனால் பயனுள்ள HIV மருந்துகளின் கலவையைக் கொண்டு  வைரஸின் திரிபு விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் திறன் நம்மிடையே உள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்போதைக்கு  தடிமன் (ஜலதோஷம்) நம்மை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. அதனுடன் வருடாவருடம் நாம் போராடித்தான் ஆகவேண்டும். ஆனால் கடந்த சில தசாப்தங்களில் mRNA தடுப்பூசிகள் மற்றும் CRISPR போன்ற சில புதிய மருத்துவ அணுகுமுறைகள் சூழலை நமக்கு சாதகமாக மாற்றியுள்ளன. குறிப்பாக CRISPR முறைமை மிகவும் சாதகமான மருத்துவ முறைமையாக உருப்பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஏனெனில் இந்த CRISPR முறைமை முதன்முதலில் பற்றீரியாக்கள் தங்களை வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு அமைப்பாக உருவாக்கிக் கொண்டதாகும். COVID-19 தொற்றுநோயின் ஆரம்பத்தில், CRISPR அமைப்பு நமது நுரையீரல் கலங்களில் உள்ள கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூவன்ஸா மரபணுக்களை சிதைக்கக்கூடும் என்று ஒரு ஆய்வுக் குழு காட்டியது. PAC-MAN. என சுருக்கமாக பெயரிடப்பட்ட முறைமை இன்னும் முழுமையாக விருத்தியடையாதபடியால் தடுப்பூசிகளில் உலகம் கவனம் செலுத்தியது. ஆனால் வருங்காலத்தில் CRISPR முறைமை வைரஸ் தொற்றுக்கு எதிரான பூரண பாதுகாப்பை நமக்கு வழங்கலாம். 

Related Articles