மருத்துவ குணம் வாய்ந்த இந்திய மசாலாக்கள்

இந்தியாவின் பெருமைகளில் ஒன்று, இந்திய உணவுகளில் இருக்கும் மசாலாக்கள். கூகுளில் படிக்கும் போது இந்திய மசாலாக்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதை விட, இன்னும் எத்தனையோ அதிசய பண்புகளைக் கொண்டது தான் இந்திய மசாலாப்பொருட்கள். உணவில் கலக்கப்படும் மசாலாக்களின் சுவைக்கு அதை புதிதாக சுவைக்க வருபவர்கள் அனைவரும் “தட்டி கட்டிய வீட்டைச் சுற்றி வரும் வாலிபர்” போலத்தான். அந்த பதார்த்தம் இருக்கும் பாத்திரத்தையே சில மணி நேரம் சுற்றிவருவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவ்வளவு ஏன் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை கண்டு வியந்ததைப் போல இந்திய உணவின் சுவையையும் சுவைத்து சிலாகித்து போனதன் விளைவு வேறெதுவுமில்லை நமது மசாலாப் பொருட்கள் அளித்த ருசி தான். முதலில் கேரள மண்ணை ஆண்ட சேரனிடமிருந்து ஏலக்காயையும், பிப்பிலியையும் பண்டை மாற்று வணிக முறையில் கிரேக்கியர்கள் 10 ஆம்  நூற்றாண்டிலேயே வாங்கிச்சென்றதாக மு. வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் கூறுகின்றது.

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒளிந்திருக்கிறது. என்ன தெரியுமா? பிப்பிலி என்பது இன்று நாம் மிளகு என்று அழைக்கிறோமே அதன் இயற்பெயர் தான். அதனை பிப்பிலி என்று நம் அரசர் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் கூற அவர்கள் வாயில் பிப்பிலி என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் பெப்பிர் என்று கூறத் தொடங்கி தான் ஆங்கிலத்தில் மிளகுக்கு பெப்பர் என்ற பெயர் கிடைத்தது. இன்று அனைத்து உணவு விடுதியிலும் மேசைக்கு நடுவில் இருக்கும் இரண்டு சிமிழ்களில் இருக்கும் பொருட்கள் வெறும் உப்பு மற்றும் மிளகு பொடி தான் என்று நான் அலட்சியப்படுவதுண்டு. உப்பு, சுவையை நாவில் உணரச்செய்யும் கருவி மற்றும் மிளகு நம் உடலில் இருக்கும் கபம் மற்றும் பித்தம் அனைத்தையும் போக்கும் மருந்து.

நமது வீட்டின் சமையலறையில் அஞ்சரைப் பெட்டி என்ற ஒன்று இருக்கும். நாம் கடந்த சில தசாப்தங்களில் தொலைக்காட்சியிலும், வானொலியிலும், கேட்ட அதே கதை தான். அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களில், அனைத்து உடல் வியாதிகளுக்கும், குறைபாடுகளுக்கும் மருந்து இருக்கிறது. இது இந்த கட்டுரையை வலுப்படுத்துவதற்காகவோ, இந்திய மசாலாக்களை பிரகடனப்படுத்துவதற்காகவோ கூறப்பட்ட வார்த்தைகள் இல்லை. இது உண்மையிலும் உண்மை;

சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், நவீன மருத்துவம் போல தான் பாட்டி வைத்தியமும். படிப்பறிவு இல்லாத பாட்டிகளுக்கு, மனித உடலில் இருக்கும் 72,000 நாடிகளும் எப்படி செயல்படுகிறது என்று தெரிந்தா கை வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிந்த வைத்தியத்தை எப்படி கற்றுகொண்டிருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தால், வாழ்க்கைமுறை என்ற ஒற்றை பதில் தான் நமக்கு பதிலாக கிட்டும்.

சில மருத்துவ குறிப்புகள்

உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது வெந்தயம். சீரகம் உடலில் இருக்கும் நீர் அளவை தக்க வைக்க உதவும்.

கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

இயற்கை வைத்திய முறையில் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள நீரின் அளவை தக்க வைக்கவும், காது வலிக்கும் மேலே குறிப்பிட்ட மருத்துவம் மட்டும் தான் இருக்கின்றது என்பதில்லை.

நம் உடலில் நமது கண் ஒரு முக்கியமான பகுதியாக நாம் பார்க்கிறோம்.  அந்த கண் சார்ந்த அனைத்து குறைபாட்டிற்கும் உகந்த மருந்து மிளகுடன் சேர்ந்த பாகல் இலை.

பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

சமையல் மஞ்சளின் மருத்துவ குணம் அறிந்து அதிர்ந்து போன அமெரிக்கர்கள் 1995 ஆம் ஆண்டு மஞ்சளுக்கான காப்புரிமையை பெற்றிருந்தது. இந்திய மண்ணில் விளையும் ஒன்றுக்கு, இந்தியா அல்லாத நாட்டினர் காப்புரிமை பெற்றதை எதிர்த்து இந்தியா வழக்கு பதிவு செய்து அதில் வெற்றியும் கண்டு, மஞ்சளுக்கு அமெரிக்கர்கள் பெற்ற காப்புரிமையை ரத்து செய்துள்ளது. இந்த காப்புரிமை மீட்பு நடந்த ஆண்டு 1997.

இப்படி மிளகு, வெந்தயம், சீரகம் என்று ஒவ்வொன்றாக எடுத்து, அதனால் குணப்படுத்தமுடியும் உடல் குறைபாடை குறிப்பிட்டு கூறுவதால், சம்மந்தப்பட்ட பொருளால் குணப்படுத்தக்கூடிய உடல் குறைபாடு ஒன்றே ஒன்று தான் என்றில்லை.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் “ஸ்பைசஸ் போர்ட் பாரத்” என்கின்ற அரசு சார்பு மசாலாப் பொருட்களின் குழுவின் பகுப்பீட்டின்படி கீழே குறிப்பிடுபவையெல்லாம் மசாலா பொருட்கள் –

ஏலக்காய், மிளகு, மிளகாய், இஞ்சி, சமையல் மஞ்சள், கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், செலரி, பட்டை, லவங்கம், பூண்டு, கருவேப்பிலை, புதினா, வேற்கடலை, கொத்தமல்லி, மாதுள விதை, குங்குமப்பூ, பிரிஞ்சு இலை என்று அந்த வரிசையில் 52 பொருட்கள் இருக்கின்றது.

அந்த 52ல் குறைந்தது மூன்றேனும் பயன்படுத்தி தான் எந்த இந்திய சமையலும் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. இதில் பெரும்பாலானவை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் விளைகின்றது.

Spices In Bowl (Pic: bsnscb)

மசாலாக்களின் வரலாறு

இந்திய மசாலாக்கள், 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய வணிகப் பொருட்களாக அமைந்தது இந்திய விவசாயிகளுக்கு மிக சாதகமான ஒன்று தான். ஏன், ஆங்கிலேயர்களே இந்தியாவிலிருந்து வாங்கிச் சென்ற பொருட்களில் நமது அஞ்சரைப் பெட்டியை அலங்கரிக்கும் பொருட்களும் அடங்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

இங்கு இந்தியாவில் விளைந்த பிளாக் பெப்பர், கடுகு போன்ற பொருட்களில் வெளி நாட்டவர் பல ஆராய்ச்சிகள் செய்து “வெள்ள மிளகு” “வெள்ளை கடுகு” என்று சிலவற்றை கண்டுபிடித்து இந்த நவீன காலத்தில் உணவு சார்ந்த வணிகத்தில் அவர்களும் கல்லா கட்டுகிறார்கள் என்று கூறுவது மிகையாகாது. இந்த பத்தியில் கூறிய செய்தியை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று ஒரு அடுக்கு விடாமல் உற்று பாருங்கள். எந்த பொருள் எங்கு தயாரிக்கப்பட்டது, அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் எங்கு பெறப்பட்டது என்பது புரியும்.

பூண்டிலும் கூட மருத்துவ குணம் உண்டு

பூண்டு முக்கியமாக உடல் எதிர்ப்புசக்தியை மேம்படுத்தும். ஆங்கிலத்தில் இம்யூன் சிஸ்டம் என்பார்கள். இரத்த அழுத்தத்தையும் சமன்படுத்தும் என்பது உறுதி. இது மட்டுமா காய்கறிக்கடைக்காரரே அலட்சியப்படுத்தும் ஒரு பொருளின் மருத்துவ குணம் தெரியுமா உங்களுக்கு

Grinded Spices (Pic: apessay)

கருவேப்பிலை

சரி கருவேப்பிலை 12 விதமான உடல் உபாதைகளுக்கு மருந்து என்று கூறினால் உங்களில் எத்தனை நபர் நம்புவீர்கள். இந்த தகவலை படிக்கையில் எங்களுக்கும் ஆச்சர்யம் தான் வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

 • இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது

 • வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது

 • குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு

 • சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது

 • கீமோதெரபியால ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்கிறது

 • தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது

 • கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்குகிறது

 • கல்லீரலைப் பாதுகாக்கிறது

 • கெட்டக் கொழுப்பினக் குறைக்கிறது

 • முடியை வலுவாக்குகிறது

 • நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது

 • செரிமான மண்டலத்திற்கு நல்லது

Curry Leaves (Pic: youtube)

பெருஞ்சீரகம்

ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது.

கருப்பை சார்ந்த பிரச்சனைகள் உள்ள பெண்கள் பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, ஓரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கருத்தரிப்பிற்கே இந்திய அஞ்சரைப் பெட்டி பொடுட்கள் வழிவகுக்கும் போது மீதமுள்ள உடல் ரீதியான பிரச்சனைகளைக் களைய கேட்கவா வேண்டும்.

இப்போது நம்மில் அனைவரும் நமது வீட்டில் சமைக்கும் உணவில் முதலில் ஒதுக்குவது எது எது என்று யோசிக்கத் தொடங்கிவிடுவோம். இங்கு குறிப்பிடப்படாத மசாலா பொருட்களின் மருத்துவ குணங்களை கூகுளில் தேடத்தொடங்கிவிடுவோம்.

Full Meals (Pic: chicago.eater)

ஏன் தேடக்கூடாது? நமக்கு நமது பாட்டன் பாட்டி கூறும்போது நாம் தவிர்த்ததை இன்று உலகமே ஆராய்ந்து, அந்த பொருட்களுக்கு காப்புரிமை வாங்கிக்கொள்ள முந்திக்கொண்டு நிற்கின்றது. நாம் உண்மையை உணர்ந்தால், உணவுப் பழக்க வழக்கத்திலாவது பல நல்ல மாற்றங்களை செய்து கொள்வேமே.

உணர்ந்து மாறுதலின் வலிமையை உணர்ந்து பதிவிடுகிறோம் இந்த கட்டுரையை.

Web Title: Medicinal Qualities Of Indian Spices, Tamil Article

Featured Image Credit: cravebits

Related Articles