உயிர்க்கொல்லியா டெங்கு?

 கடந்த வாரம் நன்கு மழை பெய்து வந்தது. புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும்  பொழுது ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க பெரியவருக்கு பத்து தினங்கள் முன்பு என்டோஸ்கோபி டெஸ்டிற்கு தேதி கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் கொடுத்த தேதியில் வராமல் புறநோயாளிகள் பிரிவிற்கு சோகத்துடன் வந்திருந்தார். எதனால் நீங்கள் டெஸ்டிற்கு வரவில்லை என்று கேட்கும்பொழுது, “என்னுடைய 10 வயது பேரக்குழந்தை டெங்கு  காய்ச்சலால் இறந்துவிட்டது, அதனால் என்னால் வர இயலவில்லை” என்றார். மிகுந்த வேதனையுடன் அன்றைய  தினம் கடந்தது. அன்றிலிருந்து கடந்த  ஒரு மாதமாகவே தினமும் செய்திகளில்  வட மாவட்டங்களில்  பல குழந்தைகள், தென் மாவட்டங்களில்  பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்றும்,  அதோடு  இதுவரை இல்லாத அளவில் பெருவாரியான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் , பலர் என்ன காய்ச்சல் என்று தெரியாமலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கேட்கும்பொழுது  மிகுந்த மன வருடலைத் தந்தது. உடனே டெங்கு காய்ச்சலை பற்றிய விழிப்புணர்வு வலைப்பதிவுகளை ஏன் நாம் எழுதக்கூடாது என்று தோன்றியது.  எனவே நாம் இப்பொழுது

 1. டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள் என்ன?
 2. டெங்குவின் அறிகுறிகள் என்ன?
 3. டெங்குவிற்கான பரிசோதனை முறைகள் என்ன?
 4. டெங்குவிற்கான மருந்து முறைகள் என்ன?
 5. வருமுன் காக்க வேண்டிய சில நடவடிக்கைகள் என்ன?

ஆகிய விபரங்களைக் காண்போம்.

டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள்:

டெங்கு காய்ச்சலும்  ஒரு வகையான வைரஸ் நோய் ஆகும். நான்கு வகையான டெங்கு வைரஸ் இருக்கிறது. டெங்கு வைரஸ் 1,2,3,4. இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கியக் காரணமே    பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு (Aedes Mosquito)  மனிதர்களை கடிப்பதுதான். ஏடிஸ் கொசுவிற்கான மற்றொரு பெயர் டைகர் கொசு. இது பெரும்பாலும் பகல் நேரங்களில் மனிதர்களை கடிக்கக்கூடியது. பெரும்பாலும் சூரியன் உதித்து 2 மணிக்குள்ளும்,  சூரியன் மறைய 2 மணி நேரத்திற்குள்ளும் இந்த ஏடிஸ் கொசு நம்மை கடிக்கும்.

 

அதிலும்  பெண்பால் ஏடிஸ் தான்  பொதுவாக டெங்கு வைரஸைப்  பரப்பும். இதனுடைய இனப்பெருக்கத்திற்கு இரத்தம் தேவை என்பதால் இது அதிகப்படியான மனிதர்களை  இரத்தம் உறிஞ்ச கடிக்கிறது. அதன் மூலமாகவே  இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு மனிதர்களைக்  கடிப்பதால், அதன் எச்சிலில் உள்ள வைரஸ் மனிதனின் இரத்தத்தில் கலந்து     தாக்கப்பட்ட மனிதர்களுக்கு டெங்கு நோய் ஏற்படுகிறது.

டெங்கு நோயின் அறிகுறிகள்:

 1. அதிகபடியான காய்ச்சல் (100 F அதிகமான இருப்பது ).
 2. தலைவலி , கண்களுக்கு பின்னால் வலி ஏற்படுவது.
 3. தசை , எலும்பு , மூட்டு வலி, முதுகுவலி.
 4. ராஸ் (Rash), இரத்தக்கசிவு– பற்களுக்கு இடையில், மூக்கில் இருந்து.
 5. களைப்பு மற்றும் வாந்தி.

டெங்குவிற்காக  மருத்துவ  பரிசோதனை முறைகள் (மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செய்ய வேண்டும் )

 1. முதல் வாரத்தில் (NS -1) எனப்படும் ஆன்டிஜன் டெஸ்ட் (முதல் 5 தினங்களுக்குள் ).
 2. இரண்டாவது வாரத்தில் 5 தினங்களுக்கு மேல் ஆன்டிபாடி டெஸ்ட் lgm/IgG Dengue ஆன்டிபாடி டெஸ்ட்.
 3. PCR- பாலி மரேஸ் செ யி ன் ரியாக்சன் எனப்படும் ஜெனிடிக் டெஸ்ட் வெகு அரிதாக செய்யப்படுகிறது. வெகு சில ஆராய்ச்சி நிலைகளில் மட்டும் செய்யபடுகிறது.
 4. பிளேட்லெட் (platelet ) அளவு , வெகு சில நேரங்களில் கல்லிரல் சம்மந்தமான டெஸ்ட் ( LFT) வயிற்றிற்கான ஸ்கேன், நெஞ்சு எக்ஸ்-ரே.
 5. மிக முக்கியமான பிளேட்லெட் (platelet ) அளவு தினமும் டெங்கு நோயினால் படிகபட்டவர்களுக்கு பார்க்கப்படும் ,அதன் அளவு வெகுவாக குறையும் பொழுது தேவைப்பட்டால் பிளேட்லெட் இரத்த வங்கியில் இருந்து வாங்கி டெங்குவினால் பாதிக்கபட்டவருக்கு ஏற்றப்படும்.

டெங்குவிற்கான மருத்துவ முறைகள்:

ஒரு முழுமையான ஓய்வு

 1. காய்ச்சலுக்கான மருந்தாக வெறும்  பாராசிட்டமால்  மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதே வேளையில் ஆஸ்பிரின் , ப்ருஃபன் போன்ற மருந்துகளைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
 2. அதிகபடியான நீர் பருகுதல் /ORS தண்ணீர் / தேங்காய் தண்ணீர்.
 3. காரமான /எண்ணைய் வகையான உணவுகளை தவிர்த்தல்.

 

இயற்கை  மருந்துவ முறைகள்:

 • பப்பாளி (papaya juice) – பப்பாளி இலையில் உள்ள ஹைமோபாப்பின் பாப்டின் எனப்படும்  எண்ணெய் என்சைம் நம் உடம்பில் பிளேட்லெட் (platelet ) அளவை அதிகப்படுத்த உதவும்.
 • நில வேம்புக் கசாயம் நம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ,டெங்குவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

சில நேரங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகி நம் உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதன் அறிகுறிகள்

   நாக்கு வறண்டுவிடுதல், சிறுநீர் குறைவாக வெளியேறுவது, மயக்கமாக காணப்படுவது, கை கால் குழிந்து தளர்ச்ச்சியுடன் காணப்படுவது.

வெகு சில நேரங்களில் சில வீரிய விளைவுகளை டெங்கு வைரஸ் ஏற்படுத்தும்.

 • டெங்கு ஹெமரேஸிக் சின்ரோம் (Dengue Hemorrhagic Syndrome)
 • டெங்கு ஷாக் சின்ரோம் (Dengue Shock Syndrome)

இந்த இரண்டு விளைவுகளும் டெங்குவினால் பாதிக்கப்பட்ட வெகு சிலருக்கு ஏற்படும். இந்த இரண்டும்  அபாயகரமான நோயின்   வெளிப்பாடாகும். சரியான நேரத்தில் ,சரியான மருத்துவ முறையில் இந்த விளைவுகளில் இருந்து வெளிவரலாம் .

எப்போது உள்நோயாளிகள் பிரிவில் இருக்க வேண்டும்?   

வயிற்று வலி /வாந்தி /இரத்த வாந்தி /இரத்த கசிவு /மலம் கருப்பாக போவது /மயக்கம் / மூச்சு விடுதல் கஷ்டம் /குழிந்த உடல் நிலை / பிளேட்லெட் வெகுவாகக்  குறைதல் இந்த காரணங்களினால் உள்நோயாளிகள் பிரிவில் இருப்பது சிறந்தது.

டெங்குவில் இருந்து வருமுன் காப்பது எப்படி?

 • கொசு அதிகமான இடங்களில் உடம்பு முழுவதும் மூடியாவது ஆடை அணிதல் சிறந்தது.
 • கொசுவலை (Mosquito net), Mosquito repelent (கொசு விரட்டி) பயன்படுத்துவது.
 • வீட்டிலும் , வீட்டின் அருகிலும்  தேவையற்ற தண்ணீர் தேங்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்வது.
 • கதவு மற்றும் ஜன்னலை மூடியே வைப்பது, குப்பைத்  தொட்டியை மூடி வைப்பது, வீட்டைச்   சுற்றிலும் நிறைய துளசி செடி வைப்பது.

மேற்கண்ட நடவடிக்கைகளினால் ஏ டி ஸ் கொசுவை நம் சுற்றுபுறங்களில் இருந்து கட்டுப்படுத்தி, டெங்கு வைரஸின் தாக்கத்தைக்  குறைக்க முடியும்.

 • பொதுவாக Recovery (டெங்குவில் இருந்து மீள்வதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம்.
 • வெகுசில நேரங்களில் சில தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் பொழுது இந்த மீள்விற்கான நேரம் அதிகமாகலாம்.
 • சரியான நேரத்தில் ஆரம்ப கட்டத்தில் மருத்துவரை அணுகுவதன் பயனாகவும்  டெங்குவில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

தற்போது இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.   இறுதியாக தூய்மையாகவும், உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி சரியான பரிசோதனைகளை மேற்கொண்டும் , சரியான மற்றும் அளவான மருந்துகளை உட்கொண்டும்  இந்த உயிர்கொல்லியை வெல்ல வேண்டியது அனைவரது கடமையும் கூட. டெங்குவை ஒழிப்போம், சுகாதாரமான சமுதாயம் காப்போம்.

Related Articles