மஞ்சள் காமாலை ஓர் வியாதியின் அறிகுறியே

“காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்” என்று ஒரு சொலவடை உண்டு. இது வேடிக்கைபோல் தெரிந்தாலும் விபரீதமான ஒன்று. கண் மஞ்சளாகத் தெரிந்தாலே மஞ்சள் காமாலைதான் என்று முடிவு செய்துவிட்டு நாட்டு மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். காமாலைதானா? அதிலும் எந்த வகையைச் சார்ந்தது? அதன் வீரியத் தன்மையின் தற்போதைய அளவு என்ன? என்று எந்தவிதப் பரிசோதனையும் செய்வதில்லை. பிறகு நோய் முற்றிக் காப்பாற்ற முடியாமல் இறந்துபோகிறார்கள்.

மஞ்சள் காமாலை என்பது ஒரு வியாதியின் அறிகுறியே. அது தனியான நோய் அல்ல. அது பல காரணங்களால் வரலாம்.

நிகழ்வுகள்

 1. ஒரு இளம் தம்பதி தங்களுடைய பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு மஞ்சள் காமாலை அதிகமானதால் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்களிடம் போட்டோதெரபி எனும் ஒரு சிகிச்சை முறையை தலைமை மருத்துவர் விவரிக்கிறார்.
 2. 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் தங்களுடைய 12ஆம் வகுப்புப் படிக்கும் மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவரைக் காண்பதற்காக வெளிநோயாளிகள் பிரிவில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் மகனுக்கு 20 நாட்களாக சோம்பல், உடல்வலி, வாந்தி என்றும் கடந்த 5 நாட்களாகக் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலையினால் அவதிப்படுவதால் கவலையுடன் இருக்கின்றனர்.
 3. 35 வயது காவல்துறை அதிகாரி ஒருவர் வருடாந்திர முழுஉடல் பரிசோதனை செய்து அதில் கல்லீரல் ஆய்வு முடிவில் பிலிருபின் சற்று அதிகமாக இருப்பதால் உடலில் எந்தப் பிரச்சனையும் இன்றி மனக்குழப்பத்துடன் காத்திருக்கிறார்.
 4. 80 வயது மதிக்கத்தக்க பெரியவர் இரண்டு மாத காலமாகக் கண் மஞ்சளாக இருப்பதாலும், வயிற்று வலி இருந்ததாலும், 20 கிலோ எடை குறைந்துவிட்டதாலும் நாட்டு மருந்து உட்கொண்டிருக்கிறார். அப்போதும் சரியாகவில்லை என்ற கவலையில் இறுதியாக ஒரு மருத்துவரின் வயிறு ஸ்கேன் செய்து பார்த்தபோது பித்தக்குழாயில் கட்டி இருப்பது தெரிய வந்து பிறகு குடல்பிரிவு மருத்துவரைக் காண அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்த நான்கு நிகழ்வுகளின் வெளிப்பாடு மஞ்சள் காமாலை என்றாலும் அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கிறது. எனவே அதன் காரணங்களையும், தீர்வுகளையும் முதலில் நாம் காண்போம்.

மஞ்சள் காமாலை வருவதற்கான மிக முக்கியக் காரணம் (BILIRUBIN)  பிலிருபின் எனப்படும் நிறமி. இந்த பிலிருபின் தினமும் உற்பத்தியாகும். இரத்தச் சிகப்பணுக்கள் (RBC) அதனுடைய வாழ்நாள் (120 நாட்கள்) முடிந்தவுடன் ரெடிகுலோ எண்டோதீலியல் சிஸ்டம் (RETICULO ENDOTHELIAL SYSTEM) எனப்படும் (பெரும்பாலும் மண்ணீரலில்) இரத்தச் சிகப்பணு சிதைக்கப்படும் செயற்பாட்டினால் பிலிருபின் உருவாகும். அது மண்ணீரலிலிருந்து கல்லீரலுக்கு ஒரு புரதத்தின் உதவியுடன் எடுத்துச் செல்லப்படும். அங்கு சில வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு பித்தம் வழியாகச் சிறுகுடலைச் சென்றடையும்.  அங்கு ஏற்படும் சில மாற்றங்களுக்குப் பிறகு சிறுநீர் மற்றும் மலம் வழியாக கழிவாக வெளியேற்றப்படும். இந்தச் சுழற்சி முறையில் ஏற்படும் சில மாற்றங்களினால் நமது உடலில் மஞ்சள் காமாலை வெளிப்படும்.

மஞ்சள் காமாலைக்கான காரணங்கள்

கல்லீரலுக்கு முன்

 • ஹீமோலைசிஸ் எனப்படும் இரத்தச் சிதைவு நோய் (Hemolytic Anaemia)
 • சில பரம்பரை நோய்கள் (நொதியக் குறைபாடு- Unconjugated hyperbilirubinemia)

கல்லீரல் ஹெபடைடிஸ் (Hepatitis)

 • வைரஸ் (Hepatis A,B,C,D,E)
 • மது
 • மருந்தின் பக்க விளைவுகள்
 • ஆட்டோ இம்யூன்
 • சில பரம்பரை நோய்கள்.
 • கர்ப்பகால மஞ்சள் காமாலை.

கல்லீரலுக்குப் பின் (பித்தப்பை & பித்தக்குழாயில்)

 • பித்தக்குழாய்க் கல்
 • தொற்றுநோய் (Infection)
 • அடைப்பு (Stricture)
 • கணையக் குறைபாடு
 • கட்டி (சாதாரண + அசாதாரணக் கட்டி)

மஞ்சள் காமாலை ஏற்படப் பொதுவான காரணங்கள்

நிகழ்வு 1:

 • குழந்தை பிறந்து 24 மணி நேரத்தில் மஞ்சள் காமாலை பெரும்பாலும் அசாதாரண காரணங்களினால் வரும். 24 மணி நேரத்திற்குப் பிறகு சில சாதாரண காரணங்களினால் வரும். (ABO/Rh) இணக்கமின்மையால் ஏற்படலாம். இதற்குத் தேவைப்பட்டால் போட்டோதெரபி மற்றும் வேறு சில சிகிச்சை முறைகளை குழந்தைகள் நல மருத்துவரின் (Paediatrician) ஆலோசனைப்படி பெறுவது நல்லது.
 • வெகு அரிதாகச் சில பிறந்த குழந்தைகளுக்குப் பித்தக்குழாயில் சுருக்கம் ஏற்படுவதால் மஞ்சள் காமாலை வரும்.

நிகழ்வு 2:

 • இளைஞர்களுக்குப் பொதுவாக மஞ்சள் காமாலை வருவதற்கு காரணம் Hepatitis  A & E  எனப்படும் வைரஸ் கிருமியின் தாக்கமே. இது பொதுவாக நீர் மற்றும் உணவு சுத்தமின்மையால் ஏற்படலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஓய்வு, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, தேவைப்பட்டால் சில மருந்துகள் ஆகியவற்றின் மூலமே குணப்படுத்த முடியும்.
 • 30-40 வயதுப் பெண்களுக்குப் பொதுவாகப் பித்தப்பை மற்றும் பித்தக் குழாய்க் கற்களால் மஞ்சள் காமாலை ஏற்படும். இது உடல் பருமன் அதிகமாக இருப்பதினாலும், இரத்தச் சிதைவு நோயினாலும் ஏற்படும். எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி சிகிச்சைகள் மூலம் இதைச் சரி செய்யலாம்.

நிகழ்வு 3:

 • Bilirubin அதிகமாக இருந்த 35 வயதுக் காவல்துறை அதிகாரிக்கு சில அமிலக் (Enzyme) குறைபாடுகளினால் (Gilbert/Rotor/Dubin Johnson syndrome) மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கலாம். இதற்கும் முறையான பரிசோதனை செய்த பின்னர் சரியான ஓய்வு எடுத்தாலே போதுமானது.

நிகழ்வு 4:

 • வயது முதிர்ந்தவர்களுக்குப் பித்தக்குழாயில் அல்லது கணையத்தில் ஏற்படும் சுருக்கத்தினாலோ அல்லது கட்டிகளினாலோ மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதற்கும் மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த ஓய்வு மற்றும் சிகிச்சிகளினால் குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை எவ்வாறு வெளிப்படும்

 • வெண்விழி மஞ்சளாகக் காண்பது.
 • சிறுநீர் மஞ்சளாகக் காண்பது.
 • சில நேரங்களில் வயிறுவலி, காய்ச்சல், உடல் வலி.
 • வெகு சிலநேரம் மலம் வெள்ளையாகப் போவது, உடல் அரிப்பது.

என்ன தீர்வு?

 • மருத்துவரை அணுக வேண்டும்.
 • சில ஆரம்பகட்டப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
 • மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த அதற்குக் காரணமான நோயைச் சரி செய்ய வேண்டும்.
 • Hepatitis A & E எனப்படுவது கிருமியின் தாக்கமே. இதனை இரத்தப் பரிசோதனை செய்து மருத்துவரை அணுகி உறுதி செய்தவுடன், பொதுவான ஓய்வு/ தண்ணீர்/ ஆரோக்கியமான உணவுகள் உண்பதால் தானாகவே சரியாகிவிடும்.
 • சில நேரங்களில் மஞ்சள்காமாலை HEPATITIS B & C எனப்படும் கிருமியின் தாகத்தினாலோ அல்லது வேறு சில தொற்றுகளினாலோ ஏற்படலாம். அதற்கான சரியான மருந்தை உட்கொள்வதினால் அதனைக் கட்டுபடுத்த முடியும்.
 • சில நேரங்களில் இரத்த சிதைவு (HEMOLYTIC ANAEMIA) எனப்படும் இரத்த சமந்தமான காரணங்களினாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். இரத்த சம்பந்தமான மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்வதினால் அதனைக் கட்டுப்படுத்த முடியும்.

நாட்டுமருந்து மஞ்சள் காமாலைக்கு தீர்வா?

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

                                     குறள்: 948

நாட்டு மருந்து இந்நோய்க்கான நோயெதிர்ப்பு சக்தியைத் துரிதப்படுத்துகிறது அதிலும் Hepatitis A & E வைரஸ் பாதிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும். எனவே எப்பொழுதும் ஒரு மருத்துவரை அணுகி சாதாரண மஞ்சள் காமாலையா? அல்லது அசாதாரண மஞ்சள் காமாலையா? என்பதையும் அதற்கான காரணத்தையும் அறிந்து அதற்கு முறையான சிகிச்சையை மேற்கொள்வதே சாலச் சிறந்தது. அதை விடுத்து நோய் முற்றும் வரை ஏதாவது நாட்டு மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை செல்வதால்தான் பலர் இந்நோயினால் உயிரிழக்க நேரிடுகிறது. சுய மருத்துவத்தைத் தவிர்த்திடுவீர். நோயில்லா சமூகத்திற்கு வழிவகுப்பீர்.

Related Articles