Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இம்முறை T20 உலகக்கிண்ண போட்டிகளில் கால்பதித்துள்ள புதிய வீரர்கள்

8 ஆவது T20 உலகக் கோப்பை கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 16ஆம் திகதியன்று அவுஸ்ரேலியாவில் ஆரம்பமானது.

இம்முறை உலகக்கோப்பையில் வெற்றிகரமான, ஆட்டத்தை நிர்ணயிக்கும் திறமை வாய்ந்த வீரர்கள் குறித்து பலரும் எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளனர். பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் களத்தில் உள்ளனர் அதே சமயம் புதுமுக வீர்களும் அதே களத்தில் உள்ளனர். அப்படியானதோர் போட்டிக்களத்தில் புரட்சிகரமான வீர்களாகவும், ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என பலராலும் நம்பமுடியாத புது வீரர்கள் சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

  1. டில்ஷான் மதுஷங்க (இலங்கை)

இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களில் அண்மைக்காலங்களில் ஏராளமான பாராட்டினைப் பெற்றவர் டில்ஷான் மதுஷங்க என்றால் மிகையாகாது. அண்மையில் நடைபெற்ற SLC அழைப்பு T20 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டதனால் தேசிய அணியில் இடம்பிடித்தார் மதுஷங்க. அதன் பின்னர் நடைபெற்ற ஆசியத் தொடரில் இவரது பங்களிப்பினை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் பாராட்டியது.

22 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடங்குவதற்கு முன்னர் 6, T20 போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். அதில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பிட்ட ஒரு இன்னிங்ஸில் வெறும் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரது சிறப்பான பந்து வீச்சுக்கு எடுத்துக்காட்டாகும். அதே சமயம் அந்த ஆறு போட்டிகளிலும் சராசரியாக 7.8 ஓட்டங்களை கொடுத்திருந்தார். 

2022 ஆசிய கிண்ண போட்டியொன்றில் இந்திய வீரர் விராத் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது/ www.espncricinfo.com

குறிப்பாக இம்முறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த ஆடுகளங்களில் பந்து வீசும் போது, வலக்கை பந்து வீச்சாளர்களை விட இவரது இடக்கை பந்து வீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடந்த ஆசியக் கோப்பைத் தொடரில் வலக் கை துடுப்பாட்ட வீரர்களுக்கு இவர் பந்து வீசும் போது கையாண்ட யுக்திகளும், அதன் பெறுபேறும் வெற்றிகரமாக அமைந்து சவாலை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை தொடரில் இலங்கையின் உலகக் கோப்பைக் கனவுக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாய் அமையும்.

2. நசீம் ஷா (பாக்கிஸ்தான்)

பாக்கிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சிறப்பான வேகப்பத்து வீச்சாளர்களுடைய பட்டியலில் தற்போதே இணைந்து விட்ட குறிப்பிடத்தக்க வீரர் நசீம் ஷா. அண்மைய ஆசியத் தொடரில் மாத்திரமல்லாது பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்ளாதேஷ் ஆகிய அணிகள் மோதிக்கொண்ட மும்முனைத் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தினை இவர் வெளிப்படுத்தியிருந்தார்.

புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதேபோன்று அவுஸ்ரேலிய வேகமான ஆடுகளங்களில், சகீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோரின் இடது – வலது என்ற மாறுபட்ட பந்து வீச்சுகள் பாகிஸ்தானின் வெற்றிகளுக்கும் முன்னோக்கிய பயணத்திற்கும் சாதகமானதாக அமையும் என நம்பிக்கை வைத்திட முடியும். குறிப்பாக பவர்ப்ளேயின் போது சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமை நசீம் பெற்றுள்ளார். இதுவும் பாகிஸ்தானுக்கு முக்கியமானதொன்றாக அமையும் என்பது எதிர்பார்ப்பு.

நஸீம் ஷா (இடது) 2022 ஆசிய கிண்ண போட்டிகளின்போது அதிசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தயிருந்தார்.www.espncricinfo.com

3. மைக்கேல் பிரேஸ்வெல் (நியூசிலாந்து)

இம்முறை T20 அவுஸ்ரேலியாவில் நடைபெறுவதால், பெரும்பாலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். என்றபோதிலும் வேகமான ஆடுகளங்களில் அண்மைக்காலமாக இவரது பந்து வீச்சு முறை சாதகமாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருந்தது. இதன் காரணமாக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய ஒருவராக இவர் காணப்படுகின்றார். 

பிரேஸ்வெல் இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்காக 13, T20 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். ஆனாலும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம் பந்து வீச்சில் மட்டுமல்லாது 183.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டினைக் கொண்ட சிறப்பான துடுப்பாட்ட வீரராகவும் உள்ளார். ஒரு சிறப்பான சகலதுறை வீரராக இவர் உள்ளது நியூசிலாந்திற்கு களத்தினை சாதகமாக அமைத்துக் கொடுக்கும். 

அண்மைய போட்டியில் 4 ஓவர்களுக்கு அதிகுறைந்த ஓட்டங்களை கொடுத்து சர்வதேச அரங்கில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் – www.espncricinfo.com

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் களம் இவரது திறமையான ஆட்டத்திற்கு சிறந்த உதாரணமாய் அமைந்தது. இதில் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சில் சராசரியாக 4.94 ஓட்டங்களை இவர் விட்டுக்கொடுத்திருந்த அதே நேரத்தில், இத் தொடரின் கடைசிப் போட்டியின் நாயகனாகவும் மைக்கேல் பிராஸ்வெல் தெரிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.

4. டிம் டேவிட் (அவுஸ்ரேலியா)

26 வயதான டிம் டேவிட் சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாத ஒருவராக இருந்தாலும் கூட லீக் களத்தில் தனக்கென ஓர் அடையாளத்தையும், அனுபவத்தையும் கொண்ட ஒருவராக உள்ளார். ஆரம்பத்தில் சிங்கப்பூர் அணியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆடிவந்த இவர் பின்னர் அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்தார். 

இதுவரையில் 19, T20 போட்டிகளில் விளையாடியுள்ள டிம் 585 ஓட்டங்களை குவித்துள்ளார். சர்வதேச அரங்கில் 159.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிங்கை தக்கவைத்துள்ள இவர் தனக்கே உரிய பாணியிலான துடுப்பாட்டத்தைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

அவுஸ்திரேலியா அணியின் டிம் டேவிட்/www.espncricinfo.com

அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்த பின்னர் இந்தியாவிற்கு எதிரான போட்டி ஒன்றில் 27 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் 23 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும் குவித்து சர்வதேச கிரிக்கெட் அரங்கினை தன் பக்கம் ஈர்த்து திரும்பிப் பார்க்க வைத்தார். இவரது துடுப்பாட்டத் திறன் இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் குறிப்பிடத்தக்கதாய் அமையும் என்றே எதிர் பார்க்கப்படுகின்றது.

5. ஹெரி புரூக் (இங்கிலாந்து)

இயோன் மோர்கனின் வெளியேற்றத்திற்கு பின்னர், இங்கிலாந்தின் மிட்பீல்ட் வரிசைக்கு கிடைத்த பரிசாகவே ஹெரி புரூக் பார்க்கப்படுகின்றார். இவரது அண்மைக்கால ஆட்டங்கள் இதனை நம்பவைப்பதாக அமைகின்றது. 

23 வயதான புரூக் 14, டி 20 போட்டிகளில் விளையாடி அதில் 12 இன்னிங்ஸ்களில் 316 ஓட்டங்களை குவித்துள்ளார். ஒரு இன்னிங்சில் 35.11 என்ற சராசரியையும், 149.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டினையும் இவர் இந்த வயதிலேயே பெற்றுள்ளமை சிறப்பான ஒன்றாகும். ஒரு அரைச் சதத்தோடு, 81 என்ற அதிக பட்ச ஓட்டங்களையும் டி20 போட்டியில் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஹெரி புரூக் www.espncricinfo.com

குறிப்பாக பாக்கிஸ்தானுடன் இங்கிலாந்து நடத்திய 7 போட்டிகள் கொண்ட தொடரில், 6 இன்னிங்ஸ்கள் ஆடிய புரூக் 79.33 என்ற சராசரியில் 238 ஓட்டங்களைப் பெற்றார். இதனால் போட்டி நாயகனாகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த துடுப்பாட்டத் திறன் காரணமாக இங்கிலாந்தானது, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இவரை பெரிதும் எதிர்பார்த்துள்ளது.

6. ட்ரிசன் ஸ்டப்ஸ் (தென்னாபிரிக்கா)

தென்னாபிரிக்காவிற்காக ஆடிவரும் இவர் இன்னும் 22 வயதே ஆனவர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனின் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கைகளில் இவரும் ஒருவர். முத்திரை பதிக்கத் தக்க வகையிலான இவரது துடுப்பாட்டத் திறன் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் அழுத்தத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே அமைகின்றது.

அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற போட்டிகளின் மூலம் தனது திறமையை உலகிற்கு காட்டினார். ஆரம்பத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக, இந்தியாவின் ஐபில் தொடரில் மும்பை அணிக்காக விளையாட  தேர்வு செய்யப்பட்டார். அதுமுதல் டி20  கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராகும் அந்தஸ்தினைப் பெற்ற ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார்.

தென்னாபிரிக்கா அணியின் ட்ரிசன் ஸ்டப்ஸ் / www.espncricinfo.com

இதுவரை 9, டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள இவர், 6 இன்னிங்சுகளில் 142 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஒரு இன்னிங்சிற்கு சராசரியாக 28.4 என்ற கணக்கில், 192.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிங்கை கொண்டு தன்னை தவிர்க்க முடியாத வீரராக தன்னை நிரூபித்து வருகின்றார். அதனால் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் டேவிட் மில்லர், மற்றும் ட்ரிசன் ஸ்டப்ஸின் பங்களிப்பு தென்னாபிரிக்காவின் பலமாக பார்க்கப்படுகின்றது.

7. அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

டெத் ஓவர் (Death Over) வீசுவதில் சிறப்பான வீரராக உள்ள அர்ஷ்தீப் சிங், அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தார். ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்காக பந்து வீச அழைக்கப்பட்டதும் அதில் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகவே இவர் அடையாளம் காணப்படுகின்றார்.

இந்தியா அணியின் அர்ஷ்தீப் சிங் /www.espncricinfo.com

23 வயதான அர்ஷ்தீப் ஐபில் உட்பட சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். டி 20 களத்தில் 13 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக இருக்கும் பும்ரா நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க மாட்டார். இது இந்தியாவிற்கு ஓர் இழப்பாக பார்க்கப்பட்டாலும் அதன் அழுத்தமும், தாக்கமும் அர்ஷ்தீப் சிங்கிற்கே வந்து சேர்ந்துள்ளது. அதனால் இம்முறை போட்டிகளில் முக்கிய வீரராக இவரும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.

Related Articles