Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மக்களாட்சித் தத்துவத்தை முன்மொழிந்த ஆபிரகாம் லிங்கன்

 

“பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்”, “நான் அடிமை யாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.” “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும்!” “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது!”

ஆப்ரஹாம் லிங்கன்

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன்.

படம்: simonandschuster

அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது,  தந்தையின் பணிகளில் அவருக்கு உதவியாக லிங்கன் இருந்தார். இவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ். காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல்,  அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை அன்பு கொள்ளச் செய்தன.

1833 ல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் 1842ஆம் ஆண்டு மேரி டாட் எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார்.  அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார்.

படம்: steamcommunity

ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்ததைக் கண்டார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த ஆப்ரஹாம் லிங்கன் அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற அரசியலே சரியான வழி என்று அரசியலில் தன் கால் தடத்தை பதித்தார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்  கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.

1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார். 1834இல் முதன் முதலாக சட்ட மன்றத் தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அமெரிக்க தேசத்தின் வரலாறு, அமெரிக்க அரசியல், அன்றைய அமெரிக்க நிலைமை,  பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு, தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றையெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படம்: youtube

அமெரிக்க செனட் உறுப்பினர்களில் லிங்கனின் பணி முற்றிலும் வேறுப்பட்டிருந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி லிங்கன் முழங்கினார். கறுப்பர் இன மக்களிடம் லிங்கனின் செயல்பாடுகளும், சொற்பொழிவுகளும் வரவேற்பைப் பெற்றன. 1861-ல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் லிங்கன் போட்டியிட்டார்.மக்களை மட்டுமே லிங்கன் நம்பினார். ஆனால் லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், படை பலத்தாலும்,  பதவியின் துணையாலும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணினார். இறுதியில் ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும். அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த உதாரணம்.

லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து  தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன. அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.

படம்: history

அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது: “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,  மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகாது” என்றார்.  1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார்.

ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று. வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும்,  முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனைச் சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 – ல் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

Web Title: American novel power: Abraham Lincoln and the union navy

feature image credit: edwindearbornmcmahanphoto,  history.

Related Articles