யாதுமாகி நின்றாய்

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் – இவ்வரிகள் நினைவிருந்தால் இவனுக்கு அறிமுகம் தேவையில்லை. பெண்ணின் வீர சுதந்திரம் பேசிய அவனிடம்தான் ஒரு பெண்ணை எவ்வாறு காதலிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒரு ஆண் தன்னை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் இவன் வரிகளை பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஒருங்கே நடந்தால்

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்

நின்னைச் சரணடைந்தேன்கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன் – என்று கலி தீர்த்தே உலகில் காதலுற்று வாழ்வினை இனிமையாக்கலாம். வல்லமை தாராயோ என்ற மீசைக்காரனின் வரிகளில் இணைந்திருப்பது ஒரு வகையில் வரம். விமோட்சனம் வேண்டாத சாபம்.

 பொதுவாய் பெண்களிடம் நண்பர்கள், உறவுகள் கேட்கும் ஒரு கேள்வி இருக்கும். எப்படிப்பட்டவனாய் மணம் முடித்துக் கொள்ள என்று? என்னைக் கேட்டால் பாரதி போல் ஒருவன் தான் என்னுடைய தேர்வு… முறுக்கு மீசையுடனும், முண்டாசு கட்டிக் கொண்டும் உருட்டி மிரட்டும் கண்களையும் கொண்டவனையா என்றால், அதில் என்ன தவறு. அவனைத்தான் காதலிக்கின்றேன். அப்படியான ஒருவன் கிடைத்துவிட்டால் வேறென்ன வேண்டும் என்று விவாதமும் நடத்துவேன். மிரட்டும் கண்களை விடுத்து அவன் வரிகளை காதலிக்கின்றேன். அவன் வரிகளில் இருக்கும் சக்தியையும், காளியையும், பராசக்தியினையும்,  முத்து மாரியினையும், செல்லம்மாவையும், கண்ணம்மாவையும் கொஞ்சம் பொறாமையுடன் காதலிக்கின்றேன்.

 

படம்: evilboydavid

இந்த பொறாமைகள் அனைத்திற்கும் பின்னிருக்கும் ஓர் பெண் யார் என்றால் நிவேதிதை. 1906க்குப் பின்னால் கவிஞன் மனதில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றத்திற்கு காரணம் நிவேதிதைதான். இவருடனான சந்திப்பில் தான் பெண்ணியம் என்ற சித்தாந்தத்தின் விதைகள் பாரதியின் மனதில் விதைக்கத் தொடங்கின. “ஓர் மனைவிக்கே உங்களால் சம உரிமையும், சுதந்திரமும் தர இயலவில்லை என்றால் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கான உங்களின் போராட்டம் சர்வ நிச்சயமாய் வீண் தான் என்றார்.” இதற்கு பின்தான் செல்லம்மாவின் தோள்களை கட்டிக் கொண்டு தன்னுடைய வீதியில் தலை நிமிர்ந்து நடந்தான் பாரதி. அவனின் அந்த முடிவு தமிழகத்தில் பல லட்சம் பெண்களை ஏதோ ஓர் வகையில் தலை நிமிர்ந்து நடக்க வைத்தது.

படம்: avenuemail

சுப்ரமணிய பாரதியாக எட்டையபுரத்தில் பிறந்து, காசி, புதுவை, சென்னை என்று  வாழ்ந்தான் அந்த நாடோடிக் கவிஞன். 96 வருடங்களுக்கு முன்பு,  செப்டம்பர் -12, அதிகாலை 1.30 மணிக்கு திருவல்லிக்கேணியில் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு சென்றுவிட்டான். நூறாண்டுகள் ஆகப் போகின்றது அவன் இறந்து ஆனாலும் அவனின் வரிகளை எப்போது படிக்கும்போதும் , புதிதாய் பிறப்பெடுத்த அக்கினிக் குழந்தையின் பூரண ஜோதி போல் பிரகாசமாய், கதகதப்பாய் இருக்கின்றது. நிமிர்ந்த நடை, நேர்த்தியான பார்வை, துணிவான பேச்சு என்று அவன் மீது காதல் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதை ஆயிரம் கைகள் எழுதிவிட்டது. ஆனால் நான் இரசித்த வேறொரு பாரதியினைப் பற்றி எழுதி அவனுக்குச் சிறப்பு செய்கின்றேன் .

இவன் ஒருவனே பெண்ணிடம் கெஞ்சுகின்றான். ஊடல் செய்கின்றான். கூடி மகிழ்கின்றான். அப்பெண்ணின் ஞானச்செருக்கினை இரசிக்கின்றான். அவள் கண்களில் தெரியும் தூய ஜோதியின் ஒளியில் உயிர்த்திருக்கின்றான். பெண்ணை தெய்வமெனக் கொள்கின்றான். இறுதியில் அவளையே சரணடைகின்றான். புதுமைப்பெண் என்றதொரு  புதுப்பதத்தினை உருவாக்கிய அவனிடம் மட்டுமே இவையனைத்தும் சாத்தியமாகின்றன. வீரத்தின், விடுதலையின் தேவையினை தணலாய் ஊரெங்கும் விதைத்துச் சென்ற அவனே பெண்ணைக் கொண்டாடியிருக்கின்றான். அவன் வரிகள் கண்டு காதல் கொள்ளாதோர் இருப்பது அரிது.

படம்: webneel

அவன் ஒரு பெண்ணை காதலிக்கும் விதத்தையும், அதைக்  கவிதையில் வடித்த அழகையும் அவனின் வரிகள் கொண்டு அணு அணுவாய் இரசிப்பதில் அத்தனை இன்பமும் சேர்ந்திருக்கின்றது. காதலையும், வேட்கையையும் கூட வெவ்வேறு வடிவநிலைகளில் கட்டிக் காப்பாற்றி அவன் இரசித்த பெண்ணை ஊரார் காண்கையில் தெய்வமெனக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வரம்பினை அவன் வரிகள் கொண்டிருக்கையில் கண்ணியமாக அவனை காதலிக்க வேண்டியதாய் இருக்கின்றது.

அவன் தன் வாய் திறந்து

அடி தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே! நினைச்

சேர விரும்பினன் கண்டாய்

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி

குறவள்ளீ சிறுகள்ளீ

என்று பாடும் போது அந்ததெள்ளிய ஞானம் கொண்டவளாய் இருந்துவிட ஏங்குகின்றேன். ஆனால் இது பக்தி மார்க்கத்தின் கீழ் வரும் வள்ளிப்பாட்டாய் மாறிவிட அவனை முருகன் என கொண்டாடிக் களித்திருக்க வேண்டியதுதான்.  சிந்தையுள்ள பெண்ணின் மீதான காதலை வெளிப்படுத்தும்போது அறிவிற்குத்தான் அழகென்று பொருள் என்றும் யோசிக்கத் தோன்றுகின்றது.

அவன் கவிதைகளைப் படித்தபின் அவனின் வாழ்க்கைக் குறிப்பினைப் படிக்கின்றேன். செல்லம்மாளுடன் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் தந்தை இறந்துவிட, காசி சென்று ஆண்டுகள் பல கழிந்து வீடு திரும்புகின்றான். அவனின் காத்திருப்புகளின் நிமித்தம் அவனின் காதல் எல்லையினை கூறிட்டு காட்டும் தனிமை இரக்கம் அவன் காத்திருப்புகளை மதிக்கச் சொல்கின்றது. விவேக பாநுவில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவன் இவ்வாறாய் தன் தனிமையின் நோயினை எழுதுகின்றான்

முன்னர்யான் அவளுடன்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது

கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடைக்கும்

செயலையென் இயம்புவல் சிவனே!” – தனிமை இரக்கம்

 

படம்: dinakaran

திருக்காதல் பாடலில் அவள் சம்மதத்திற்காக காத்திருந்ததையும், அந்த நேரமும் கூட கர்வமுடன்  அந்தக் காதலை வளர்த்து வந்தததையும்  இவ்வாறாய் தான் கூறியிருக்கின்றான்..

அடி, நினது

பருவம் பொறுத்திருந் தேனேமிகவும், நம்பிக்

கருவம் படைத்திருந் தேனேஇடை நடுவில்

பையச் சதிகள்செய் தாயேஅதனிலுமென்

மையல் வளர்தல் கண்டாயே” – திருக்காதல்

 இவ்வுலகம் துயில் கொண்டிருக்கும் இவ்வமைதியான இரவில் இவனின் தனிமைகள் இவனை தின்று செரித்திருக்கக் கூடும். அந்த மௌனமும், இரவும் கொல்லும் நோயாகின்றாது காத்திருக்கும் ஒருவனுக்கு.

 மோனத் திருக்கு தடீ! – இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும்பிரி வென்பதோர்

நரகத் துழலுவதோ? – கண்ணம்மா என் காதலி

 அகமும், புறமும் என தமிழில் காதல் சொல்லி வாழ்ந்த இலக்கியங்களில் பெண்ணானவள் பசலை கொள்கின்றாள். தலைவனின் வருகைக்காக காத்திருக்கின்றாள் என்பதை படித்து, பெண் என்பவள் காத்திருக்க கடமைப்பட்டவள் என்று யோசித்திருக்கின்றேன். தன் உயிரிலும் மேலான துணையை விட்டு விலகி நின்ற வலியினை அச்சில் ஏற்றியது பாரதி தான்.

கண்ணம்மாவில் காதலை இரசித்தவன், தன் துணைக்கான வரிகளை முன்பு சொன்னது போல் இறை பக்தியில் சேர்த்துவிட்டு அவனின் காதலை போற்றித் துதிக்கச் சொல்கின்றான். விநாயகர் நான்மணிமாலையில் நான் சிலவரிகளை இவ்வாறாய் வாசிக்கின்றேன். இங்கே விநாயகப் பெருமான் எங்கே வந்தார் என்று விளங்கவில்லை என்றாலும் உற்ற துணைக்கு கூறும் நல் வார்த்தைகள் இதிலிருக்கின்றது.

நெஞ்(சே)

நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)

தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்;

வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்;

ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்…  – விநாயகர் நான்மணிமாலை

 கண்ணம்மாவோ, செல்லம்மாவோ அவர்கள் இருவரும் இவனுக்கு ஒளியாகத்தான் இருந்திருக்கின்றார்கள். மேனியின் வர்ணனையெல்லாம் பொன்னோடு உருவகம் செய்கின்றான். “பொன்னையே நிகர்த்த மேனிகண்ணம்மாவின் நினைப்பு ,

பத்துமாற்றுப் பொன் னொத்தநின் மேனியும்கண்ணம்மாவின் காதல்” என்றெல்லாம் எழுதும்போது இன்றைய கவிஞர்களின் எழுத்துகளின் மீது மோகமோ, காதலோ வருவதற்கு பதில் வெறுப்பும், மரியாதையின்மை மட்டும் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

பெண்களின் கண்களை எழுத்தில் வடிக்கும்போது அவனின் இருள் நீக்கும் ஒளியாக அவற்றை உருவகம் செய்துகொண்டே இருக்கின்றான். அவன் கண்களுக்கு அவை அனைத்தும் சூரிய, சந்திர ஒளியாகத்தான் தெரிகின்றது.

படம்: rammalar

“காலை இளவெயிலின் காட்சிஅவள்

கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;” – சக்தி விளக்கம்

“சுட்டும் விழிச்சுடர் தான்கண்ணம்மா என் காதலி”

“பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு”

என்று பெண்களை அவன் வாழ்விற்கும், உயிருக்கும் ஒளிதரும் சுடராகக்  காண்கின்றான்.

கவனித்துப் பார்த்தால்  அவனின் கட்டற்ற வேட்கை மிகுந்த வரிகளிலும் கூட மேனியையும், முகத்தையும் அல்லாது ஒளியினையும், சுடர்போல் விளங்கும் அந்த விழிகளையும் தன் இருள் நீக்க வந்த கதிரொளியாய் கொண்டிருக்கின்றான்.  அந்த கண்களில் தெரியும் ஒளியினை மோகிக்கும் ஆடவர்கள் நிஜ உலகில் கொஞ்சம் குறைவு தான். (வருத்தமாக இருக்கின்றது) அத்தனைக்கும் மேலாக ஞானச்செருக்கினை திமிரினை இரசித்திருக்கின்றான். இன்று இவ்வாறான பாரதிகள் இல்லை. அதனால்தான் என்னவோ கண்ணம்மாக்களும் அதிகம் கண்களில் படுவதில்லை.

பெண் ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்

பேணு மாயின்  பிறகொரு தாழ்வில்லை;

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே

காத லின்பத்தைக் காத்திடு வோமடா! – பெண்மை வாழ்க

 என்று சொல்லும் போது அவன் நிகரினை கடைபிடிக்கின்றான். ஆண்மக்களின் வீரம் என்பது காதலின்பத்தை காத்திடும் கருவியாக வைத்துப்பாடும் துணிவினை எத்தனை முறை இரசிப்பது. பாரதியை மீண்டும், மீண்டும் படிக்கும்போது வாழ்வின் அர்த்தத்தை எளிமைகளின் பின்னணியில் முடித்துப்போட்டு காதலித்து வாழ்தலே இன்பம் என்று இருக்கின்றது.

கண்களையும், முகத்தையும் வர்ணித்த தோரணை கடந்து, அவனின் காத்திருப்புகள் கடந்து அவனின் காதலை முழுமை செய்யும் ஒன்று இருக்கின்றது. வேண்டுதல் நிமித்தமான சரணடைதல். கண்ணம்மாவினை காதலித்ததைப் போலவே கண்ணனையும் காதலிக்கின்றான் அவன் வரிகளில். ஆனால் எந்த ஆணையும் அவன் எங்கும் அதிகம் வேண்டுவதில்லை. அவனின் வேண்டுதல் எல்லாம் பராசக்தியிடம் போய் சேருகின்றது. காணிநிலம் வேண்டும் என்று பராசக்தியை கேட்கின்றான். அசைவறு மதியினை சிவசக்தியிடம் கேட்கின்றான். திண்ணிய நெஞ்சத்தினையும் தெளிந்த நல்லறிவினையும் அன்னையிடம் வேண்டுகின்றான்.

படம்: santabanta

அந்த வேண்டுதலும் கூட நிம்மதியினை, அமைதியினை, வரங்களை பெண்ணின் ஜோதி வடிவான சக்தியிடம் கேட்கின்றான்.

“நின்னைச் சில வரங்கள் கேட்பேன்அவை

நேரே இன்றெனக்குத் தருவாய்யோகசக்தி…”

வேண்டுதல் தீர்ந்த பின்பு அவனே அடிமையாகின்றான். வரிகளால் ஆள்பவன் தன்னை அடிமையாக அர்பணிக்கும் இடமாக அவன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தான். அங்கும் அவனின் சரிநிகர் பெண்மையினை துணைக்கு அழைத்துக் கொள்கின்றான்.

“நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே

அந்நாள் நீயெனை அடிமையாக் கொள”

 வீரத்தையும், காதலையும் வார்த்தைகளில் சொல்லி வாழ்வில் வாழ்ந்த பாரதியே என்றும் எங்கும் யாதுமாகி நிற்கின்றான். அவனின் வரிகளில் அவனுக்கு ஓர் அஞ்சலி செய்வதில் என் சரணடைதல் மோட்சம் அடைகின்றது.

Related Articles