Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்கும்

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை.  இனிமேல் பிறக்கவும் முடியாது. இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர். விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராகவும், சத்தியத்தின் சீடராகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் என்றும் கொடுத்த வாக்கை மீறாமல் நடப்பவர்.

தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்: ”தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்”. மேற்காணும் வாசகத்தில் உள்ள இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றும் பலர் கூறுகின்றனர். ‘அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்’ என்றார் மகாத்மா காந்தி. ‘ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்’ என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் ‘கண்ணாக’க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அரசியலிலும் திறமை வாய்ந்த தியாகச்சுடராக திகழ்ந்தார். உடையில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும் வெண்மை நிறம் படைத்த மெய்ஞானியாக விளங்கினார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.

படம்: thenewsminute

அன்றைய காலக்கட்டத்தில் மன்னராட்சி இல்லையென்ற போதிலும் இவர் என்னவோ மக்கள் மனதில் மன்னராகவே வாழ்ந்து வந்தார் இன்றும் வாழ்ந்து வருகிறார். பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்.

திரு.முத்துராமலிங்கம்  30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ‘பசும்பொன்’ கிராமத்தில் பிறந்தார். முத்துராமலிங்கம் அவர்களின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானதால் இவரது தந்தைக் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். ஆனால் அந்த இரண்டாவது மனைவியும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதை பிடிக்காத முத்துராமலிங்க தேவர் அவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

படம்: sirfnews

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்பவரிடம் கல்வி கற்றுக்கொண்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து அவருக்காக தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவரும் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் இறந்துவிட்டார்.

சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலையை 1933 ஆம் ஆண்டு சாயல் குடி என்ற கிராமத்தில் திறந்தார். அந்த விழாவை தொடங்கி வைக்க மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவரால் விழாவுக்கு வர முடியாமையால் அந்த சமயத்தில் தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார். அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

படம்: andhimazhai

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்த அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்து சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது. குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது.

படம்: timothykurek

இவர் 1936ஆம் ஆண்டு மாவட்ட வாரிய தலைவரானார். 1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். 1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார். அதுமட்டுமின்றி தேவர் தாழ்த்தப்பட்டவருக்காக ஆலயப் பிரவேசம் நடத்தினார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கிய இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்து இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர்.

Web Title: Freedom fighter Pasumpon Muthuramalinga Thevar

Featured Image Credit: addieuname-listflickriver

Related Articles