தமிழுக்கோர் கம்பன்

“இராவணன் இல்லையேல் இராமனும் கூட சாதாரண சக்கரவர்த்தி மட்டுமே” என்ற பதங்கள் என் மனதில் திடீரென உதிக்க, இது உண்மைதானா? என்ற கேள்வியும் கூட எனக்குள் எழுந்தது. அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே கம்பராமாயணத்தை படித்துவிடலாமே என்ற எண்ணம், ஓர் ஆவல் தோன்றியது.

பல முறை வெவ்வேறு தருணங்களில் இராமாயணத்தை படித்தும், கேட்டும் அறிந்திருந்ததால், இம்முறை கம்பனின் மொழிநடையிலேயே அவன் சொல்லாட்சியிலேயே இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று என்னுள் எழுந்த ஆர்வம்   தமிழ் இலக்கியங்களில் நான் கொண்ட காதலினால் உருவானது என்றும்கூட சொல்லிவிடலாம்.

வனவாசத்தில் தசரத புத்திரர்கள். படம் – nunavil.com

விரித்தேன் கம்பன் எழுதிய நால்வரிக் காப்பியத்தை, வியந்தேன் அவன் சொல்லாட்சியில். இராமனா? இராவணனா? சிறந்தவன் யார்? என்ற தேடலில் இராம காவியத்தினை விரித்த எனக்கு அந்தக் கேள்வியே மறந்து போனது காரணம் கம்பன் என்னை ஏமாற்றி விட்டான்.

ஆம், நான் தேடிவந்த கேள்வியை மறக்கச் செய்துவிட்டான்.

“கல்வியில் பெரியன் கம்பன்”, “கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வார்த்தைகளின் உண்மைகளை அப்போதே அறிந்துகொண்டேன்.

கம்பனின் சொல்லாட்சி, கவிச்சிறப்பு, அவன் தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உவமைகள், அணிகள் அத்தனையும் கண்டு “தமிழுக்கு ஓர் கம்பன் கிடைத்ததால்தான் கவிகள் இன்றும் வாழ்கின்றனவோ..! என்று எனக்குள் தானே கம்பனை வணங்கிக் கொண்டேன், ஒருமுறை மானசீகமாக.

முதல் முறை கம்பனின் கவிகளைப் படிக்கும் போது அதனை நயக்கத் தோன்றியது. மறு முறையும் அதனை மீட்டுகையில் கம்பனின் சொல்லாட்சி, கவித்துவம், கவி ஆளுமை, சந்தம், அணிகள் போன்றனவற்றில் ஆழ்ந்து இலக்கியத்தை வியக்கத்தூண்டியது.

சற்றே அத்தமிழில் மூழ்கிவிட்டு மீண்டும் அதனையே படிக்கையில் உயர்ந்த பொருள், தத்துவங்கள்  உள்ளே பொதிந்திருப்பதனை புரியச் செய்தது. இதனை நான் சொல்வதனையும் விட கம்பகாப்புகளை படித்துப் பார்த்தால் உங்களுக்கே தெளியும் நான் ஒன்றும் பீடிகைப் போடவில்லையென்பது.

ஒரு படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அவன் வீழ்ந்த பின்னரும் கூட அவனது படைப்புகள் அவன் புகழைப் பாடுமானால் அவனே உண்மையான படைப்பாளி. அந்த வகையில் கம்பன் தன் கவிச்சிறப்பால்  இன்றும் வாழ்வது மட்டுமல்லாமல், அவன் தமிழ் மீது, கவி மீது கொண்ட காதலினால் பல கவிஞர்களை உயிர்த்தெழ வழி சமைத்துள்ளான்.

கம்பனின் கவி ஆளுமையில், அவன் காப்புகளில் கவிச் சிறப்புகளை நான் நயந்து கொண்டிருக்கும் போது, கவியரசு கண்ணதாசன்..,

கம்பராட்டினர். படம் – wikimedia.org

“காலமெனும் ஆழியிலும், காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”

எனக் கம்பன் புகழை மெச்சிப் பாடியதும் என்னுள் ஒரு கீற்றாக ஒரு கணம் வந்து விட்டுப் போனது.

கம்பன் தனது படைப்பில் கையாண்ட உவமைகளை பார்க்கும் போது, கம்பன் எப்படி இப்படிச் சிந்தித்தான்? ஒன்றை ஒன்றிக்கு உவமைப்படுத்த வேண்டுமென்றால், ஒப்பிடுவதைப் பற்றியும் நன்கறிந்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் உலகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கம்பன் அறிந்து வைத்துக் கொண்டே தன் காப்புகளை வடித்தானா? என்ற எண்ணம், கேள்வி எனக்கு மட்டுமல்ல, அவன் கவிகளை படிப்பவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

கம்பன் கவிகளை எழுதுவதற்கு முன்னர் அதனை ரசிக்கின்றான், அவன் ரசித்ததை தான் மட்டும் அனுபவித்து அதனுள் கரைந்து விடாமல், படிக்கும் வாசகனையும் தன் கவிகளின் உள்ளே இழுத்துச் சென்று தன் வார்த்தைகளில் அழுத்தத்திலும், அதன் ஓசை நயத்திலும் மூழ்கடிக்கச் செய்துள்ளான் இது அசாத்தியமானதோர் ஆற்றல்.

இராம காப்பியத்தில் ஒர் தனித்தவம் உண்டு. அதாவது கம்பன் தன் காதைக்குள் கொண்டு வரும் பாத்திரங்களை வர்ணிப்பது. இராமனின் மகத்துவத்தைக் கூறும் கம்பன் அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் இராவணனையும் வர்ணிக்கின்றான்.

இராமனை கண்டு வியந்து நிற்கும் போது அப்படியே சென்று இராவணனின் கம்பீரத்தையும், வீரத்தையும் கூறும் போது கம்பன் வாசகனை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றார். கதாபாத்திரங்களின் இயல்புகளுக்கு ஏற்றவாறு அந்தத்தந்த பாத்திரங்களை எடுத்துக் கூறுவதில் கம்பனுக்கு நிகர் அவன் மட்டும் என்றே தோன்றியது.

உதாரணமாக நான் வியந்த ஓர் கட்டத்தினைக் கூறுகின்றேன்.

இராமனையும், தம்பி இலட்சுமணரையும் விசுவாமித்திர முனி தன்னுடைய வேள்வியைக் காக்க கானகம் அழைத்துக் கொண்டு செல்கின்றார். இந்த கதை கானகத்தில் நகர்ந்து கொண்டு செல்லும் போது தாடகை எனும் ஓர் அரக்கியின் பாத்திரம் உள்ளே பிரவேசிக்கின்றது.

அவளை கம்பர் இவ்விதமாக என் கண் முன்னே கொண்டு வந்து  நிறுத்துகின்றார்.

ஏழுலகமும் கேட்டு அதிரும் படி கர்ச்சினை செய்யும் தாடகை படம் – dangercatstudio.com

“இறைக்கடை துடித்த புருவங்கள்-எயிறு என்னும்

பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயள்

மறக்கடை அரக்கி – வடவைக்கனல் இரண்டாய்

விறைக்கடல் முளைத்தென வெருப்பு எழ விழித்தாள்”

கம்பனின் இவ்வரிகள் எத்தனை அழகாக ஓர் அரக்கியை காட்டுகின்றது அடடா… கம்பன் கவியுலகில் ஜாம்பவான் தான் என்றுமே. கடும் கோபம் காரணமாக நெறித்த புருவங்கள்.., கோரமான பற்கள் தெரிய, இரு கண்களும் தீ என எரிய, ஏழுலகமும் கேட்டு அதிரும் படி கர்ச்சினை செய்கின்றாள் இராமனை கண்ட அரக்கி. இங்கு ஓர் சிறிய பாத்திரமாக கதைக்குள் வரும் தடாகையைக் கூட கம்பன் இவ்விதமாக கூறுவது வியப்பினை ஏற்படுத்துகின்றது அல்லவா. ஒவ்வோர் பாத்திரத்தினையும் வாசகனின் கண் முன்னே நிறுத்த வேண்டும் என்ற கம்பனின் நோக்கத்ததையும், அவன் கவியாற்றலையும் கூட இக்கட்டம் வெளிப்படுத்துகின்றது.

கம்பன் இங்கு தாடகைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் உண்டு என்பதும் தொடர்ந்து படித்தபோதே தெளிவானது.

இராமன் ஓர் தெய்வீகப் பிறவி, தன்னிகரற்ற தலைவன் அவன் மோதும் ஓர் அரக்கியை சாதாரணமானவளாக வர்ணித்து விட முடியுமா? இப்படிப்பட்ட அரக்கியை நோக்கி இராமன் விட்ட பாணம் “சொல்லொக்கும் கடிய வேகச்சுடுசரம்” எனச் சென்று தாடகையை தாக்குவதாக கம்பன் கூறுகின்றான்.

உதிர்க்கப்படும் சொல்லுச்சொல் எத்தனை வேகம் உண்டோ அத்தனை வேகமாக பயணித்த இராமனின் அம்பு “கல் ஒக்கும் அவள் நெஞ்சில்” புகுந்து “புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் போல” துழைத்து வெளிவந்ததாக கம்பன் விபரிக்கின்றான்.

வலிமை படைத்த அரக்கியின் நெஞ்சை, சொற்கள் உதிரும் வேகத்தொடு சென்று தாக்கிய இராமனின் அம்பு. தீயவர்களின் காதில் நல்லோர் ஓதும் சொற்களைப் போல் இலகுவாக வெளிவந்தது என்று கூறும் கம்பனின் கவி நயத்தில் நான் அக்கணம் சிலிர்த்தே போனேன்.

இவ்விதமாக எங்குமே சலிப்பை ஏற்படுத்தாது காவியத்தின் உள்ளே ஓர் பாத்திரமாக என்னையும் அழைத்துக் கொண்டு பயணித்த கம்பனை என்னென்று நான் புகழ.

இக்கணம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. பெருமாளின் அழகை வர்ணித்து பாடிய ஆழ்வார் ஒர் கட்டத்தில் அதற்கு மேலே பெருமாளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் “ ஐயோ என்சொல்லி அவனழகை வர்ணிப்பேன் ” என்று வியந்தே நின்று விட்டாராம். அத போல கம்பனின் கவிச்சிறப்பை அவன் கையாண்ட கவி நுணுக்கங்களை கண்டு வியக்க மட்டுமே முடிந்த எனக்கு அதனை வர்ணிக்க எடுத்துக் கூற தெரியவில்லை.

முழு உலகத்தினையும் இரு வரிக்குள் அடக்கலாம் என்ற உண்மையை வெளிப்படுத்தியவன் வள்ளுவன். காவியத்திற்குள் கற்பனையை உலாவவிட்டு இசையோடு கூடிய நாடகத்தினையும் இணைத்து ஒப்பற்ற காவியத்தை படைத்தான் இளங்கோ.

இந்த இருவரிலும் முற்றாக வேறுபட்டு இலக்கிய உலகில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் நால்வரிக் கவியில் உள்ளடக்கி இப்படியும் எழுதலாம். என்ற உண்மையை உணரவைத்து தான் பெற்ற கவியின்பம், இலக்கிய இன்பம் வையகமும் பெற வேண்டும் என்று பல நூறு வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் வாழ்த்த ஒருவன் இன்று உயரத்தின் தாரகையாக ஜொலிக்கின்றான்.

வால்மீகி. படம் – maadurgawallpaper.com

இன்றும் ஓர் முரண்பட்ட கருத்து உண்டு அதாவது “கம்பன் என்ன சொந்தமாகவா காவியம் படைத்தான் வால்மீகி எழுதியதை அப்படியே மொழி பெயர்த்தான். இதில் எப்படி அவனை சிறப்பாக எடுத்துக் கொள்ள முடியும் என்பதே அது.

அனால் கம்பன் எழுதிய கவிக் காப்பியத்தை படிக்கும் போது பல இடங்களில் வால்மீகியையும் விஞ்சி விடுகின்றான். வால்மீகியின் கதையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது கம்ப காப்பியம் என்பதே உண்மை.

கம்பனவன் கவிகளின் ஊடாக ஓர் தீர்க்கதரிசியாக உருவெடுக்கின்றான். இயல்பு வாழ்வினை அழகாக படம் பிடிக்கின்றான். தத்துவம் கலந்த கவிபுகுத்தி சித்தாந்தகளையும் விபரித்து அறம், பொருள், இன்பம்,வீடு என அனைத்தையும் தெளிவாக காட்டுவதால் தான் அவன் இன்றும் சிகரத்தின் உச்சத்தில் உள்ள ஓர் உலகமகா கவியாக வாழ்கின்றான் என்ற வாதத்தினை எவராலும் மறுக்க முடியாது என்பது என்கருத்து.

இந்தப் பிரபஞ்சத்தை நாம் அண்ணார்ந்து பார்க்கையில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அழகை வாரி இறைக்கும், ஆனாலும் எம் உலகில் மானிடக் கண்களுக்கு ஆதவனும், நிலவும் தனியோர் அழகு. அவ்வகையாக கம்பனும் இலக்கிய தமிழ் உலகில் தனித்துவத்தை பெற்ற ஓர் படைப்பாளி என்பதனை அவன் படைத்த காப்புகளை படிப்பவர்களுக்கு நிதர்சனமாகும்.

இராமனின் தெய்வீகமும், இலக்குவனின் அன்பும், சகோதரங்களின் பாசமும், அன்னைகளின் நேசமும், பெண்மையின் உயர்வும், சீதையின் கற்பும், வாலியின் வீரமும், அனுமனின் பக்தியும், இராவணின் ஒழுக்கமும், சூர்ப்பநகையில் நயவஞ்சகமும், மாயனின் மாயாஞாலங்களும், தசரதனின்ஆட்சியும் என ஒவ்வோர் பாத்திரத்தையும் தனிப்பண்போடு உலகிற்கான எடுத்துக்காட்டாய் எடுத்தியம்பிய கம்பனின் சிறப்பு தனிச்சிறப்பு.

இராமாயண பாத்திரங்கள். படம் – fthmb.tqn.com

இராவணனின் மரணத்தைக் கூறும் கம்பன்.., காமத்தின் வினையால் தலைசிறந்த ஓர் தலைவன் இறுதியில் சேற்றில் வீழ்ந்து இராம பாணம் உடலை சல்லடையாக துழைத்து உயிர் துறந்ததை எண்ணும் மண்டோதரியின் சோகத்தினை விளக்குகையில்…,

“வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த – திருமேனி மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ

கள்ளிருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி” என கவி வடிக்கின்றார்.

இங்கு இராவணனின் கம்பீரத்தையும், சீதையின் அழகையும் கூட கூறும் கம்பன், சீதையின் மீது இராவணன் கொண்ட காமம் எனும் போதை இராவணனின் உடலில் எங்கேனும் உண்டா என சல்லடையாக இராமனின் பாணம் தேடிவிட்டது என அழுத மண்டோதரி அத்தோடு தன்னுயிரையும் நீக்கிக் கொண்டு விட்டாள்.

இதனூடாக கம்பன் எத்துணை பெரிய உலக நியதியையும் கூட கவிக்குள் அடக்கிவிட்டான். அது மட்டுமா ஒரே கவியில் சோகம், அழகு, வீரம், காமத்தின் கொடுமை, பெண்ணியம் அனைத்தையும் ஒருசேர காட்டும் கம்பனின் கவிச்சிறப்பை என்னென்று நான் வியக்க.

நிற்க.., கம்பனின் கவிப்புலமையை நான் பாடியது போகட்டும் வாசகனாக அதில் கலந்து நீங்களும் ஒரு முறை படித்துப் பாருங்கள் ஓர் மாய உலகிற்கு இலக்கிய ஏணியில் ஏற்றி கம்பன் அழைத்துச் செல்வான் என்பது உண்மை.

“கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” பாரதி சொல்லிய இந்த வரிகளை மீண்டும் ஒருகணம் சிந்தித்துப் பார்த்து விட்டு கம்பனின் கவிச்சிறப்பில் நுழைந்துவிட்டேன் நான் மீண்டும்.

Related Articles