மருதநாயகம் – முடிவு

செங்குருதி கொதிக்க, புழுதி பறக்கும் களத்தில் நின்ற யூசுப் மட்டும் அஞ்சவில்லை. புறமுதுகும் காட்டவில்லை. ஒன்று மரணம் அல்லது வெற்றி என்று மெய்சிலிர்க்கும் வண்ணம் போர் புரிந்தான். சினங் கொண்டு மதம் பிடித்து வாள் சுழற்றிய யூசுப்கானின் வீரத்திற்கும், விவேகத்திற்கும் முன்னால் எதிரிகளால் நிற்க முடியவில்லை. உயிர்களை பரிசு கொடுத்துவிட்டு யூசுப்கானிடம் வீழ்ந்தனர்.

அந்த போர்… யூசுப் என்றால் யார்? அவன் வீரம் என்ன? என்பதை ஆங்கிலேயருக்கு அடையாளங்காட்டி விழி பிதுங்க வைத்தது. விளைவு பதவிகளும், பரிசுகளும் யூசுப்பிற்கு வந்து குவிந்ததன. தளபதி பொறுப்பையும் தாண்டி ஆளுநர் பதவியையும் யூசுப்பிற்கு வழங்கி அழகுபார்த்தனர், ஆங்கிலேயர்கள்.

தன் வீரத்தை மட்டுமே நம்பி பதவிகளை யூசுப் பெற்றிருந்தாலும் அதனை ஆற்காட்டு நவாப்பினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொறாமை புகைவிட ஆரம்பித்தது. அந்த புகையை கொஞ்சம் கொஞ்சமாக கொளுத்திவிட ஆரம்பித்தனர் ஆங்கிலேயர்கள். அந்த நெருப்பு கொளுந்து விட்டால் மட்டுமே தாம் குளிர்காய முடியும் என்பதை ஆங்கிலேயர் நன்கு அறிந்திருந்தனர்.

யூசுப், ஆற்காட்டு நவாப் இருவருக்கும் இடையில் பனிப்போர் வலுத்தது. சூழ்ச்சிமிகு ஆங்கிலேயர் செல்வாக்கு மிக்க ஆற்காட்டு நவாப்பை ஆதரித்த அதே சமயம் யூசுப்புக்கு எதிராகவும் சதுரங்க காய்களை நகர்த்தி சதியாட்டம் ஆடினார்கள். இத்தனை காலமும் வீரத்தை மட்டுமே நம்பி அதன் வெற்றிகளுக்கு பின்னால் ஓடிய யூசுப்கானுக்கு அப்போதுதான் ஆங்கிலேயர்களின் சதிகள் புரிய ஆரம்பித்தது. அந்நியரின் ஆதிக்கம் உறைக்க ஆரம்பித்தது.

உறைத்தது மட்டுமல்ல அந்நியருக்கு ஏன் அடிபணிய வேண்டும்? நம் நாட்டை நாமே ஏன் ஆளக்கூடாது? உள்ளுக்குள் மோதல் ஏன்? அதிலேன் அந்நியர்கள் குளிர்காய வேண்டும்? என்ற பல கேள்விகள் பிறக்க விடுதலை உணர்வு துளிர் விடத்தொடங்கியது யூசுப்கானுக்கு. அது விடுதலைக்கான துளிர் மட்டுமல்ல அதுவே அவன் மருதநாயமாக உருவெடுக்க ஓர் ஆரம்ப விதையாக மாறியது.

இந்தியாவில் பிரஞ்சுப்படைகளில் வீழ்ச்சிக்கும், ஆங்கிலேயரின் வளர்ச்சிக்கும் யூசுப்கானின் வாற்பிடித்த கரங்கள் பெரும் பங்காற்றியிருந்தன. அதேபோல் யூசுப்கான், ஹைதர் அலி, புலித்தேவன் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்த வீரர்கள் அல்ல, இந்த மூன்று மாவீரர்களும் தங்களுக்கிடையே போர் தொடுத்துக் கொள்ளாவிட்டிருந்தால் ஆங்கிலேயர் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது சற்றே குறைந்திருக்கும்.

போரில் சிறந்து விளங்கிய யூசுப்கானுக்கு அரசியல் அதிலுள்ள சூழ்ச்சிகள், குவியும் இலாபங்கள் புரியவில்லை. அவன் நம்பியது, அவனது வீரத்தை மட்டுமே. அதற்காக ஆங்கிலேயரை எதிர்த்த ஹைதர் அலியையும், புலித்தேவனையும் வென்று கொடுத்து விட்டான். இந்த இடத்தில் பாரதத்திற்கு அவன் செய்தது துரோகமாகவே பார்க்கப்படல் வேண்டும்.

சரி, மீண்டும் யூசுப்கானின் கதைக்குச் செல்வோம். ஆங்கிலேயர் சூழ்ச்சி புரிந்து கொண்ட யூசுப்கானை ஒதுக்கி விட ஆங்கிலேயரால் முடியவில்லை. அப்படி ஒதுக்கும் தருணத்தில் அவனின் வீரத்திற்கும் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதை ஆங்கிலேயர்கள் அறியாதவர்களா என்ன.

இந்த இடத்தில் யூசுப்பிற்கு போட்டியாக இருந்தவர் ஆற்காட்டு நவாப். வீரமா? பின்புலமா என்ற கேள்வி வந்ததால் யூசுப்பின் வீரமும் ஆங்கிலேயருக்கு அவசியப்பட்டது. அதனால் ஆற்காட்டு நவாபின் எதிர்ப்பையும் மீறி மதுரை மண்டலத்தின் ஆட்சியை 1759 களில் யூசுப்கானுக்கு ஆங்கிலேயர் வழங்கினர்.

அன்று தொடக்கம் யூசுப் கான் சாஹிப் மதுரையின் நாயகனாக மாறி மருதநாயகம் என அழைக்கப்படத் தொடங்கினான். மக்களைக் காப்பதில் அதன் பின்னர் மருதநாயகம் மக்களின் நாயகனாகவே மாறிப்போனான். நதிகளுக்கு அரண் அமைத்து, விவசாயத்தையும் மக்களையும் காப்பாற்றினான். மறுபக்கம் பிரெஞ்சுக்காரர்களுக்கு, சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்தான். அன்று அவன் ஆற்றிய சேவைகளின் பெருமைகளை இன்றும் விருதுநகர், தேனி, தூத்துக்குடி உட்பட பல பகுதிகள் பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றன.

அவன் ஆட்சியின் சிறப்பை இப்படிக் கூறுகின்றது ஓர் பாடல்,

(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.அதிலே, ஈ – எறும்புமொய்க்காமல் இருந்ததடா பணமும்என்றும்,கட்டேது காவலறியர்கள் – தேசம்கறந்து பால் வெளிவைத்தால்காகம் அணுகாது

மருநாயகத்தின் ஆட்சியில் செல்வம் வீதியில் கொட்டிக்கிடந்தாலும் அதனை அண்ட ஈ எறும்பு கூட அஞ்சும். கறந்தெடுத்த பாலை வெளியில் வைத்தால் அதை காகம் கூட நெருங்காது, அவன் ஆட்சியில் திருடர்கள் இல்லை என்பதை கூறுகின்றது அப்பாடல்.

முஸ்லிமாக இருந்த போதும் கூட சிறந்த ஆட்சியாளன் என்பதற்காக பாகுபாடு அற்று ஏனைய மதங்களுக்கும் வாரி வழங்கினான் மருதநாயகம். கடந்த கால ஆட்சியில் அந்நியர்களால் சிதைக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை புனரமைத்தான். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை புதுப்பித்தான். மன்னன் எம் மதமாக இருந்தாலும் மக்களுக்காக சேவையாற்றுபவனே உண்மையான மக்களின் தலைவன். இதனை வாழ்ந்து காட்டிய மருதநாயகம், ஒரு பக்கம் தொழுகையில் ஈடுபட்டு மறுபக்கம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தான்.

சோழர் காலம் மட்டுமோ பொற்காலம்? மருதநாயகம் மதுரையை ஆண்டபோது அதுவும் பொற்காலம்தான் என அக்கால மதுரை மக்கள் மெச்சும் அளவு நீங்காத தனி இடம் பதித்துக்கொண்டான் மருதநாயகம்.

இப்படியாக கொடி கட்டிப்பறந்த மருதநாயகத்திற்கு நடந்தது என்ன? வீழ்ந்தது எப்படி மீண்டும் அவன் முடிவுக் கதைக்குள் பயணிக்கலாம்.

மதுரையை சிறப்போடு ஆண்ட மருதநாயகத்தின் புகழ் ஆங்கிலேயராலும் புகழப்பட்டதை ஆற்காட்டு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மெல்லப் புகைந்தது பொறாமை அதனால் வெடித்தது மோதல். சதிகள், சூழ்ச்சிகளால் புரளிக்கதைகளை உருவாக்கி ஆங்கிலேயருக்கும் மருதநாயகத்திற்கும் இடையே மோதலை உருவாக்கினான் நவாப். இதனால் ஒரு கட்டத்தில் மருதநாயகமா? அல்லது ஆற்காடு நவாப்பா? யார் முக்கியம்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் தள்ளப்பட்டனர்.

வீரமா? அந்தஸ்தா?, திறமையா? சூழ்ச்சியா? எது முக்கியம் என்ற கேள்விக்கு இலாபம் மட்டுமே நோக்காகக் கொண்ட ஆங்கிலேயருக்கு ஆற்காடு நவாப் முன்னிலையாகப்பட்டான். அதனைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்ட மருதநாயகத்திடம் “கான் சாஹிப் நீங்கள் வசூலித்த கப்பத்தினை இனி ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைக்க வேண்டும்” என கட்டளை பிறப்பிக்கின்றனர் ஆங்கிலேயர்கள்.

அஞ்சுமா சிங்கம்? குள்ள நரியின் முன்னே பணியுமா சிறுத்தை! வெகுண்ட மருதநாயகம் “முடியாது? நவாப் என்ன… அவனுக்கு மட்டுமல்ல உனக்கும் இனி கப்பம் கட்ட முடியாது” எனச் சீறுகின்றான். வியந்து விழித்த ஆங்கிலேயர் கண்களுக்கு அப்போது அசுரனாக தென்படுகின்றான் மருதநாயகம்.

என்ன செய்ய அப்போதும் கூட ஆங்கிலேயருக்கு உறைக்கவில்லை அந்தஸ்தை நம்பி குள்ளநரியிடம் சிக்கி, சிங்கத்தின் பகையாளியாக தாம் மாறிவிட்டோம் என்பதை. அது வரை சிறந்த ஆட்சியாளனான, மாவீரனாக இருந்த மருதநாயகம், அன்றுமுதல் அரசியல் ராஜதந்திரியாக உருவெடுத்தான்.

ஆங்கிலேயரை எதிர்க்க பிரெஞ்சுக்காரர்களில் உதவியை நாடினான். பழைய நண்பனல்லவா பிரெஞ்சுக்காரர்கள், அது மட்டுமல்ல ஆங்கிலேயரை மருதநாயகம் எதிர்ப்பதால் தங்களுக்கும் இலாபம் என்பதை அவர்கள் அறியாதவர்களா? அதனால் மறுப்பு ஏது? கிடைத்தன உதவிகள் தாராளமாகவே.

அடுத்து ஆட்டத்தினை ஆரம்பித்தான் மருதநாயகம். ஆங்கிலேயர் பக்கம் நின்று ஒருகாலத்தில் வாள் வீசி வலிமை பெற்ற அவனது கரங்கள் தற்போது ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. அடுத்தடுத்து போர்கள் வெடித்தன. மருதநாயகம் இப்போது வெறித்தனமாக போர் புரிந்தான். எதிரிகள் மிரண்டு நின்றனர் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நினைப்பில் செய்வதறியாத நிலையில் ஆங்கிலேயர்கள் பதுங்கினர். மீண்டும் பாய்ந்தனர். அவர்களின் நரித்தந்திரங்கள் எதுவும் மருதநாயகத்தின் முன்னால் பலிக்கவில்லை.

ஒரு கட்டத்தினை தாண்டி போரினால் மருதனை வீழ்த்த முடியாது என்ற நிலை உருவெடுத்து விட்டது. பழி தீர்க்க வஞ்சகர்கள் ஒன்று திரண்டனர். சூழ்ச்சி சதிகள் ஒருபக்கம் ஒன்று கூட, ஆங்கிலேயருக்கும், மருதநாயகத்திற்கும் இடையே மாபெரும் போர் மூண்டது. அந்தப் போருக்கு மதுரைப்போர் என பெயர் பொறிக்கப்பட்டது. ஓர் வீரனை ஒழிக்க, அடக்க அனைவரும் ஒன்று திரண்டு தாக்கினர்.

மதுரைப் போரில் ஆங்கிலேயர் பக்கம் இருந்து சதிகளும், துரோகமும், சூழ்ச்சிகளும் மிக அதிகமாகவே ஆயுதங்களாக வீசப்பட்டன. மருதநாயகத்தின் மதுரைக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அப்போதும் அவன் அஞ்சவில்லை, பணியவில்லை.

மண்டியிட்டால் மன்னிப்பு என்ற ஆங்கிலேயரை எதிர்த்து வெறி கொண்டு தாக்கிய மருதநாயகத்தின் சிறு படை ஆங்கிலேயர் படையை அஞ்சி ஓடச் செய்தது. அதன் பின்னர் மருதநாயகத்திற்கு தோள் கொடுக்க பிரெஞ்சுப் படைகளும் வந்துசேர்ந்தன. ஆங்கிலேயப்படை பின்வாங்க தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போர் மீண்டும் களம் காணத் தொடங்கியது. இம்முறை ஆங்கிலேயர் முன்னரை விடவும் பலம் கொண்டு வந்து தாக்கினர்.

இந்த கட்டத்தில் மருநதாயகத்திற்கு உதவியாக ஹைதர் அலி வந்து சேர்ந்தார். ஒரு சிங்கத்துடன் இன்னோர் சிங்கம் இணைந்து கொண்டது. இரு சிங்கங்களின் கர்ஜினைகளுக்கு முன் நின்று எதிர்க்க முடியாமல் தோற்று ஓடியது ஆங்கிலேயப் படை. மற்றொரு முனையில் இந்த தோல்விச் செய்தி கேட்ட ஆற்காடு நவாப் வெகுண்டான்.

மதுரைப்போரில் மருதநாயம் வெற்றி பெற்றிருந்தாலும், போரின் காரணமாக மதுரை பாரிய இழப்புகளைச் சந்தித்திருந்தது. எது எப்படிப்போனாலும் அடி பணிய மாட்டேன் என்ற மருதநாயகம் இப்போது கடைசிச் சொட்டு  இரத்தம் வரை தாய் நாட்டுக்கு போராடுவேன் என்கின்றான்.

அப்படியே நகர்கின்றன நாட்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் துரோகங்கள் இணைந்து தொழுகையில் இருந்த மருதநாயகத்தை எதிரிகளின் வலையில் சிக்க வைத்தது. இந்தத் தமிழனும் துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டான். கடைசியில் மூன்று முறை தூக்கில் இட்டபோதே அந்த மாவீரன் அடங்கினான்.

மரணித்தான் மாபெரும் வீரன் மருதநாயகம். ஓர் சிங்கத்தை துரோகங்கள் இணைந்து குழிக்குள் தள்ளிவிட்டன. அதன் பின் மருதநாயகத்தை கண்டு அஞ்சியவர்களுக்கு அவனது உடற்பாகங்கள் தனித்தனியாக வெட்டி அனுப்பட்டன. அதன் மூலம் இனி அந்த வீரன் இல்லை, வஞ்சகத்தால் வீழ்த்திவிட்டோம் என்பதை ஆங்கிலேயர்கள் மறைமுகமாக கூறினர். அதேசமயம் தமிழன் மாவீரன், அவனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனபதையும் கூட உலகறிந்து கொண்டது.

மருதநாயகம் இவன் ஆங்கிலேயர் படையில் சேவை புரிந்தான் என்ற தூற்றல்கள் இருந்தாலும், அவன் ஆங்கிலேயரின் உறக்கத்தினை கெடுத்தவன். இந்திய வரலாற்றில் மட்டுமல்லாது தமிழர் வரலாற்றிலும் அவன் புகழ் போற்றத்தக்கது. வரலாற்று பக்கங்களை நிரப்பிய ஓர் மாவீரனின் வரலாறு பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது புதைந்து போவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

காரணம் இன்றும் ஒரு சிலர் புகழை மட்டுமே பாட வேண்டிய நிலைக்கு தமிழர் தள்ளப்பட்டதற்கும், பல வரலாறுகள் புதைக்கப்பட்டு போகின்ற காரணத்தினால் நாளைய சமுதாயத்திற்கு வரலாற்றின் ஏடுகளைத் தட்டி எடுத்து ஆவணப்படுத்துவது இக்காலகட்டத்தில் தமிழுக்கு தேவையான முக்கிய விடயம் என்பதோடு அந்த மாவீரன் புகழையும் மனதில் சற்று நிறுத்திக்கொள்வோம்.

Related Articles