சோதனைகளையும் சூழ்ச்சிகளையும் கடந்து பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோ

ஆணாதிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இக்கூற்றுக்கு பாகிஸ்தானும் விதிவிலக்கு அல்ல. அவரது குடும்பம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம்கொண்ட குடும்பம். அதனால்,  தானும் பிற்காலத்தில் அரசியல் களத்தில் இறங்கி,  பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை இளமைப் பருவத்திலேயே நன்கு உணர்ந்திருந்தார் பெனாசிர் பூட்டோ. அதன்படியே, தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் களமிறங்கினார். 35 வயதில் பிரதமரானது  எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலாக இருந்தது.  தன் உயிரைப் பறிக்க காத்திருந்த வெடிகுண்டுகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் சவாலாக இருந்தது பெனாசிரின் வாழ்க்கை.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்ஃபிக்கார் அலி பூட்டோ – பேகம் நஸ்ரத் பூட்டோ தம்பதியினருக்கு மூத்த மகளாக 1953,  ஜூன் 21-ல் பிறந்தார்  பெனாசிர் பூட்டோ. அவரின் குடும்பம் சிந்திகளின் பூட்டோ வம்சாவழியில் இருந்து வந்தது. பெற்றோர் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இருந்ததால்,  சிறு வயதிலேயே அரசியல் சூழலில் வளர்ந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக திகழ்ந்தார். தமது ஆரம்ப கால பள்ளிக்கல்வியைப் பாகிஸ்தானில் முடித்த அவர், அவரின் உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்தார். 1969 முதல் 1973 வரை அவர் ஹேவர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள ரேட்கிளிப் கல்லூரியில் படித்தார். இங்கு அவர் அரசின் ஒப்பீட்டளவிலான கும் லாவ்டு விருதுகளுடன் இளங்கலை பட்டத்தைப் பெற்றார். அவர் ஃபீ பேட்டா காப்பாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹேவர்டில் இருந்த அவரின் காலத்தைப் பின்னர், “என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான நான்கு ஆண்டுகள்” என்று குறிப்பிட்ட பூட்டோ, அது ஜனநாயகம் மீதான அவரின் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைத்ததாக தெரிவித்தார். பின்னர் 1995ல் பிரதம மந்திரியாக இருந்த போது,  பாகிஸ்தான் அரசிடமிருந்து ஹேவர்ட் சட்ட கல்லூரிக்கு ஒரு பரிசை அவர் ஏற்பாடு செய்தார். 2006 ஜூனில்,  அவர் டொரொன்டோ பல்கலைக்கழகத்திலிருந்து மதிப்புமிக்க எல்.எல்.டி பட்டம் பெற்றார்.

 

குடும்பத்துடன் பெனாசீர் பூட்டோ (படம்: dunyanews)

அவரின் அடுத்த கட்ட கல்வி இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது. பூட்டோ 1973க்கும், 1977க்கும் இடையில் லேடி மார்கரேட் ஹால்,  ஆக்ஸ்போர்டில் தத்துவம்,  அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். இக்காலகட்டத்தில் அவர் சர்வதேச சட்டம் மற்றும் இராஜாங்கம் குறித்த கூடுதல் பயிற்சிகளையும் முடித்தார். எல்எம்எச் -க்கு பின்னர் அவர் செயிண்ட் கேத்ரீன் கல்லூரி,  ஆக்ஸ்போர்டிற்குச் சென்றார். என் கல்லூரிப் பருவம்போல, மீண்டும் ஒரு பொற்காலம் கிடைக்காது என்று பலமுறை கூறியிருக்கிறார். படிப்புடன் நிற்காமல் சமூக நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்தினார். ஏன் எதற்கு எனப் பள்ளி,  கல்லூரிக் காலங்களிலேயே தீர்க்கமான கேள்விகளையும் விவாதங்களையும் முன்வைத்தார். அந்தக் குணமே, பெனாசிரை துணிச்சலுடன் பல பிரச்னைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமையையும் பெற்றவர் இவர்.

கல்லூரிப் படிப்பை முடித்து பாகிஸ்தானுக்குத் திரும்பி பெனாசிர்க்கு பல திடுக்கிடும் பேரதிர்ச்சிக்கள் காத்துக்கொண்டிருந்தது. அவரது தந்தை சிறைவாசத்திலிருந்து தூக்கிலிடப்பட்டார். பிறகு பெனாசீரை  வீட்டுக் காவல் வைத்தனர். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் பெனாசிரைப் பெரிதும் பாதித்தது. இதனால்,  அரசியல் மற்றும் நாட்டின் நிலவரத்தை நன்கு உணர்ந்திருந்தார். இந்த கடுமையான சூழ்நிலையிலும் தீர்க்கமான முடிவெடுத்து தன் 24 வயதில்  தந்தையின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது,  பாகிஸ்தான் நாட்டு அரசியலில் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய பெண் ஆளுமைகள் யாருமில்லை.

படம்: dagbladet

1987-ம் ஆண்டு ஆசிஃப் அலி ஜர்தாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார் பெனாசீர். இவர்களுக்கு பிலாவால்,  பக்த்வார்,  ஆசீஃபா ஆகிய குழந்தைகள் பிறந்தன. தனி ஒரு பெண்ணாகத் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினரால் பல எதிர்ப்புகளையும் துயரங்களையும் எதிர்கொண்டார். 1988-ம் ஆண்டு தனது 35-ம் வயதில் முதல் பொதுத் தேர்தலை எதிர்கொண்டார் பெனாசீர். இவரது கட்சி அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். அரசை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றார். பிரதமராக இருந்த காலங்களில் மகளிர் காவல் நிலையங்கள்,  பெண்கள் அபிவிருத்தி வங்கிகளை அதிக அளவில் நிறுவினார். பெண்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார் மேலும் கருக்கலைப்பு போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.  உலகப் பெண் தலைவர்களின் கழகம் என்ற அமைப்பை நிறுவி, அதன் உறுப்பினராகவும் இருந்தார். கெய்ரோவில் நடந்த மக்கள்தொகை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டில் பேசிய பெனாசீர் தமக்கென சொந்த சமூக பண்பாடுகளைக் கொண்டுள்ள தனிநபர்கள்,  சமூகங்கள் மற்றும் மதங்களின் மீது கட்டுப்பாடற்ற உடலுறவு,  கருக்கலைப்பு,  பாலியல் கல்வி மற்றும் இதுபோன்ற பிறவற்றை திணிக்க விரும்புவதாக அந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

படம்: maverickpakistanis

1996 செப்டம்பரில் தாலிபான் காபூலை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தான். பூட்டோ ஆட்சியின் போது தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் முக்கியத்துவம் பெற்றது.  தாலிபான்களை ஒரு குழுவாகவும்,  அது ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் என்றும்,  அது மத்திய ஆசிய குடியரசுகளுக்கு வர்த்தக அனுமதியை வழங்கும் என்றும் அந்த காலத்தில் இருந்த பல தலைவர்களைப் போலவே அவரும் கருதினார் என்பது ஆசிரியர் ஸ்டீபன் காலின் கருத்தாகும். அமெரிக்காவைப் போன்றே,  அவரின் அரசாங்கமும் தாலிபான்களுக்கு இராணுவத்தையும்,  நிதி உதவிகளையும் அளித்தது. அத்துடன் ஆப்கானிஸ்தானிற்குள் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறிய பிரிவு ஒன்றையும் கூட அனுப்பியது. மிக சமீபத்தில், தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர்,  தாலிபான்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றமிக்க பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டனம் செய்தார்.

ஆனால் இருபது மாதங்களிலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இவரது பதவியை பறித்தனர். பின் இவர் எதிர்க்கட்சி தலைவரானார். பிறகு 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி,  மீண்டும் 1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். இருமுறையும் பெனாசீர் பதவியை இழக்க கணவரின் மீதான ஊழல் புகார்களே முக்கிய காரணமாக இருந்தது. இப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளைச் சமாளிக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டார். தனிப்பட்ட காரணங்களால் 1998-ம் ஆண்டு துபாயில் குடியேறினார். அங்கேயே குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

படம்: suchtv

மீண்டும் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய பெனாசீர் தன் மீதான அனைத்து குற்ற சாட்டுகளில் இருந்தும் மீண்டு வெளிவந்தார். அரசியலில் மீண்டும் தன் பிரவேசத்தை ஆரம்பித்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்பை விட அதிகமாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கினார் அந்த வீரப் பெண்மணி. அந்தச் சமயத்தில் அவரைக் குறிவைத்து பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடந்தன. அவற்றுக்கெல்லாம் கடும் சவாலாக இருந்தார் பெனாசீர். தன் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தும், அஞ்சாமல் அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டார். எப்போது வேண்டுமானாலும் தன் உயிர் போகும் என்பதை உணர்ந்திருந்தவர், உங்களுடன் எத்தனை நாள் அன்பு செலுத்தப்போகிறேன் எனத் தெரியவில்லையே என்று பல முறை தன் குடும்பத்தாரிடம் நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான தன் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களத்தில் இருந்தார் பெனாசீர். தேர்தலுக்கு சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில் 2007  ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி  ராவல்பிண்டி நகரில்,  மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெனாசீர் பூட்டோவின் மறைவுக்குப் பிறகு மனித உரிமைகளுக்கான ஐநா சபையின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இவரது வாழ்கை வரலாறு குறித்த திரைப்படமும் வெளியானது. பெனாசீரின் சகோதரர்கள் ஷாநவாஜ் மற்றும் மிர் முர்தாஜா இருவருமே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் வரலாற்றிலேயே பெண் அரசியல் தலைவர் என்றாலே மக்களின் நினைவில் முதலில் வருபவர் பெனாசீர் பூட்டோ என்ற நிலையில் உயர்ந்து விளங்குகிறார்.

Web Title: memories of benazir bhutto

Featured Image Credit: easterneyetribune

Related Articles