உலகத்தரத்தை நோக்கி கிராமங்களை திறந்துவிட்ட தாகூர்

பெரும்பாலானோர் ரவீந்திரநாத் தாகூரை ஒரு கவிஞராகவும், சிந்தனையாளராகவுமே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இந்த எல்லைகளைத் தாண்டி, ஒரு மாற்று அரசியல் சிந்தனை கொண்டவராகவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற தெளிவான செயல்திட்டத்தை நடாத்தியவராகவும் ரவீந்திரநாத் தாகூர் இருந்தார்.

இலங்கையில் இசைத் துறையைச் சேர்ந்த பலரும் கற்ற “சாந்தி நிகேதனை 1901 இலும், விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தை 1921 இலும் ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கினார். விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்துக்கு சமாந்திரமாக 1922 இல் “சிறி நிகேதன்” எனும் கிராமத்தை கட்டியெழுப்புவது தொடர்பிலான நிறுவனமும் ஸ்தாபிக்கப்பட்டது. இது கிராமத்தை கட்டியெழுப்புவதற்காக ரவீந்திரநாத் தாகூர் மேற்கொண்ட முற்போக்கான ஒரு செயற்பாடாகும். 1890 காலப் பகுதியில் கிழக்கு வங்கத்திலுள்ள தனது தோட்டங்களில் வசிப்பதற்காகச் சென்றபோதுதான், இந்த சிறி நிகேதன் கிராமத்தை கட்டியெழுப்பும் வேலையும், தொழிற் கல்விக்கான நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும் எண்ணமும் ஏற்பட்டது. அப்போது இளைஞனாக இருந்த ரவீந்திரநாத் தாகூர், வங்கத்து கிராம வாழ்வை அறிந்துகொண்டார்.

கிராமத்தவர்களுடன் தாகூர்…

புராதன வீர இலக்கியங்களையும் சங்கீதத்தையும் சுவைக்கின்ற “பூரண வாழ்வை” கிராமத்தில் மீளவும் உருவாக்க வேண்டும். – தாகூர் (isha.sadhguru.org)

அப்போது தனது 30 ஆவது வயதைக் கடந்து கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூர், அக்காலத்திலேயே ஒரு கவிஞராக பிரபலமடைந்திருந்தார். அப்போதைய பிரிடிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், பத்மா நதியின் அருகே சிலைடா எனும் பகுதியில் தோட்ட முகாமையாளராக கடமை புரிந்தார். ஒரு ஜமீன்தாராக அவர் கிராமங்களுக்கு செய்த சேவைகள், மாவட்டத்தின் அரச வர்த்தமானிகளில் விபரிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ரவீந்திரநாத் தாகூர் ஒரு மனிதநேய செயற்பாட்டாளராக உருவாவதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு, இந்தக் கிராமங்களில் அவர் கடமைபுரிந்தமை ஏதுவாக அமைந்தது.

“கிராமங்களில் வாழ்ந்த காலப் பகுதி முழுவதும், சிறியதொரு விடயத்தை அறிந்துகொள்வதற்கும் நான் முயற்சித்தேன். எனது தொழிலின்படி, சிலைடாவிலிருந்து பட்சார் வரையிலும், ஆறுகளையும், குளங்களையும், கங்கைகளையும், சேற்றுப் பகுதிகளையும் கடந்து பெரும் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. கிராம வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் நான் இவ்வாறுதான் பார்த்தேன். கிராமத்தவர்களின் அன்றாட வாழ்வொழுங்கையும், அவர்களது வாழ்வின் பல்வேறு காட்சிகளையும் புரிந்துகொள்வதற்கான ஆர்வம் என்னுள் நிரம்பியிருந்தது. மெது மெதுவாக கிராமத்தவர்களின் கவலைகளையும், கஷ்டங்களையும் நான் புரிந்துகொண்டேன். இவற்றை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று துடித்தேன். ஒரு நில உடமையாளராக பணம் சம்பாதிப்பதில் மூழ்கி, எனது இலாப நஷ்டங்களுக்காக மட்டுமே முயற்சிப்பது எவ்வளவு வெட்கமான செயல் என்று நான் எண்ணினேன்.” Tagore – The History and Ideals of Siri Nikethan

கிராம மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, தனது சொற்ப வருமானத்தால் முடியாது என்பதை தாகூர் புரிந்து கொண்டார். ஆனால், இந்த விடயத்தை எப்படியேனும் ஆரம்பித்துவிடவேண்டும் என்று அவர் உறுதி பூண்டார். அவர் இரு நோக்கங்களைக் குறிப்பிட்டார். முதலாவது, கிராம மக்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மற்றையது, முன்பு போல் புராதன வீர இலக்கியங்களையும் சங்கீதத்தையும் சுவைக்கின்ற “பூரண வாழ்வை” கிராமத்தில் மீளவும் உருவாக்க வேண்டும். ஒரு கிராமத்திலோ அல்லது இரு கிராமங்களிலோ இதனை யதார்த்தபூர்வமாக நிறைவேற்ற முடியுமென்றால், தான் சந்தோசமடைவதாக, தாகூர் கூறினார்.

“நாம் ஒரு கிராமத்தையேனும் வீழ்ச்சியிலிருந்தும் வறுமையிலிருந்தும் நீக்கிவிட்டால், அது முழு மொத்த இந்தியாவுக்குமே ஒரு பொதுவான முன்னுதாரணமாக அமையும். சில கிராமங்களை இவ்வாறு கட்டியெழுப்புவோம். அப்போது நான் அவற்றை எனது இந்தியா எனக் கூறுவேன். உண்மையான இந்தியாவை கண்டறிவதற்கான வழிமுறை இதுதான்.” Tagore – Towards Universal Man

கல்வி – நேரடியாகவே கிராமத்துக்கு…

விஷ்வ பாரதி ஆரம்ப நிகழ்வு 1921 (rabindranathtagore-150.gov.in)

ஆங்கிலக் கல்வியைப் பெற்ற இந்திய உயர் வர்க்கத்திடம், தொழில் ரீதியான ஒரு வர்க்கம் உருவானதால், முதன் முதலாக இந்திய கிராமங்களில் சமூக வாழ்வு வீழ்ச்சி காணத் தொடங்கியிருந்தது. கிராம மக்கள் நகரங்களால் கவரப்பட்டனர். இந்த புதிய தொழில் வர்க்கம் மனிதர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு, சுய வசதிக்காக மட்டும் முன்னின்றனர். இதனால் கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. கிராமத்துக்கு கல்வி கொண்டு செல்லப்படாமையினாலேயே, கிராமத்தான் என்பது குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் பெயர் உண்மையாகின்றது என்று அவர் எழுதினார். நவீன தொழில்நுட்பத்தையும், விஞ்ஞான அறிவையும் கிராமத்துக்கு கொண்டு செல்வதன் மூலம், கிராமத்தில் புதிய எழுச்சியை உருவாக்க முடியும் என்று ரவீந்திரநாத் தாகூர் நம்பினார்.

ஏனைய விவசாய நாடுகள் குறித்து அவதானித்த ரவீந்திரநாத் தாகூருக்கு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், இந்த முன்னேறிய நாடுகளின் விளைச்சல், தனது சொந்த நாட்டின் விளைச்சலை விட இரு மடங்காக மாறுவது புரிந்தது. அவர் சிறி நிகேதன் ஊடாக, இந்த முன்னேறிய நாடுகளின் புதிய அறிவை, பாரம்பரிய நகரத்து உயர் வர்க்கத்தின் தலையீடு இல்லாமல் நேரடியாகவே கிராமத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். 1906 இல் அவரது மகனான ரதீந்திரநாத் மற்றும் மருமகனான நாகேந்திரநாத் ஆகியோரை, அமெரிக்காவின் அர்பானாவில் உள்ள இலிநொயிஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அங்கு விவசாயம், மாடு வளர்ப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியன குறித்து அவர்கள் நன்கு கற்றனர். பின்னர் 1910 இல் நாடு திரும்பிய அவர்கள், சிறி நிகேதன் ஊடாக, அந்த அறிவை கிராமங்களில் பரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

ரவீந்திரநாத் தாகூர் இப்படிச் சொல்கிறார்: “இந்த யுகத்துக்கு சக்தியை வழங்குகின்ற நவீன விஞ்ஞானம் நம்மிடம் இருக்குமாயின், இன்னும் பல வெற்றிகளை நாம் பெறலாம். உயிரோட்டமாக நாம் வாழலாம்.”

கூட்டுறவு சிந்தனை

அப்போது பலம்வாய்ந்த அரசியல் கருத்தியலாக இருந்த சுய இராஜ்ஜியம் என்ற சிந்தனையை விட, கிராம மக்களை சுய சக்தியால் எழுந்து நிற்பதற்கு ஊக்குவிப்பது அதிகளவு பிரயோசனமானது என்று ரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டார் (hindustantimes.com)

கிராம மக்களே நடாத்திச் செல்கின்ற உணவு களஞ்சியசாலைகள், விவசாய மத்திய நிலையங்கள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள் முதலியன உருவாகினால், எப்போதும் எல்லாவற்றையும் அரசு வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் யாசகர்களாக கிராம மக்கள் இருக்க வேண்டிய தேவை இருக்காது என்பது ரவீந்திரநாத் தாகூரின் கருத்தாகும். இவ்வாறு கிராம மக்கள் அறிவைப் பெற்று, சுய சக்தியால் எழுந்து நிற்கும்போது, அரசின்பால் கொண்டிருக்கின்ற ஈடுபாடு குறையும் என்று அவர் நம்பினார்.

அப்போது பலம்வாய்ந்த அரசியல் கருத்தியலாக இருந்த சுய இராஜ்ஜியம் என்ற சிந்தனையை விட, கிராம மக்களை சுய சக்தியால் எழுந்து நிற்பதற்கு ஊக்குவிப்பது அதிகளவு பிரயோசனமானது என்று ரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டார். இதனால், சுய இராஜ்ஜிய கருத்தியல் கொண்டோருக்கும், ரவீந்திரநாத் தாகூருக்கும் இடையில் கருத்தியல் மோதல்களும் ஏற்பட்டன.

ரவீந்திரநாத் தாகூரின் விஷ்வ பாரதி கல்வி முறைமையின் மூலமாக, குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. அத்தோடு, நடனம், சங்கீதம் போன்ற ஆசியக் கலைகளிலும் அவர்களுக்கு நிபுணத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு எவ்வகையான கல்வியை வழங்கியபோதும். எதிர்காலத்தில் இக்குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கான தொழிற்கல்வி வழங்கப்படாவிடின், எந்தப் பிரயோசனமும் இல்லை என்று ரவீந்திரநாத் தாகூர் புரிந்துகொண்டார். எனவே, விஷ்வ பாரதி ஊடாக பிள்ளைகளுக்கு தொழிற் கல்வியையும் வழங்கி, வகுப்பறைக்கு வெளியே உழைப்பதற்கான வழிமுறையையும் காட்டிக் கொடுத்தார்.

அரசியல் சிந்தனை

ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவராவார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரு சிறந்த இந்தியக் கவிஞருமாவார். ஆனாலும், அவரது அரசியல் பார்வை பெளதீக எல்லைக் கோடுகளையும், இன மத குறுகிய பிரிவுகளையும் தாண்டிச் சென்ற, மிகவும் முன்னேற்றகரமான ஒன்றாகும். (pinimg.com)

இந்தியாவில் சுய ஆட்சி இல்லாமைதான், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து என்று கூறி, மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியவாதிகள் மக்களின் தேசியவாதத்தை கிளறியபோது, ரவீந்திரநாத் தாகூரின் கருத்து அதனையும் விட ஆழமானதாக இருந்தது. எப்போதும் நகர சூழலில் உள்ள சொகுசு வாழ்க்கையின் பின்னால் ஓடிச் சென்று, அரச சொத்தில் அதிக பங்கு கேட்கும் புரட்சிகர சிந்தனைகளை ஒரு புறம் வைத்துவிட்டு, தன்னிறைவு கொண்ட முற்கால ஒழுங்கு முறைக்கு, நவீன அறிவை சேர்த்து, தற்காலத்துக்கு ஏற்ற வகையில், அதனை மேம்படுத்த வேண்டும் என்பதுவே ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனையாக இருந்தது.

ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவராவார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரு சிறந்த இந்தியக் கவிஞருமாவார். ஆனாலும், அவரது அரசியல் பார்வை பெளதீக எல்லைக் கோடுகளையும், இன மத குறுகிய பிரிவுகளையும் தாண்டிச் சென்ற, மிகவும் முன்னேற்றகரமான ஒன்றாகும். வறிய கிராமிய சமூகத்துக்கு சுய சக்தியால் எழுந்து நிற்பதற்கான வழிகளை திறந்து விடுவதற்கு முயற்சித்த ரவீந்திரநாத் தாகூர், தனது சிந்தனையின்படி, கிராமிய மாணவர்களுக்கு பூரணமான கல்வியை வழங்குவதற்காக தனது நோபல் பரிசு பணத்தையும் செலவு செய்தார். திறமைகளால் நிரம்பி, கலைகளால் அழகான, உணர்வுபூர்வமான கிராமிய மக்களைக் கொண்ட கிராமங்களை உருவாக்க ரவீந்திரநாத் தாகூர் என்ற கவிஞர், தனது வாழ்வின் இறுதி வரை உழைத்தார்.

அமில சதுரங்க

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles