இந்திய தேசிய இராணுவத்தின் சரித்திர நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

“தனி மனித சிந்தனைக்காக ஒருவர் உயிர் துறக்கலாம். ஆனால் அது ஆயிரக்கணக்கான இதயங்களில் விருட்சமாய் வீற்றிருக்கும்”

                                                                              -நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 

இந்திய மக்களால் முதன் முறையாக தலைவர் என்று அன்பால் அழைக்கப்பட்டவர, “விடுதலை என்பது போரினாலே தான் கிடைக்கும்” என்று இந்திய ராணுவத்தை உருவாக்கி ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதியாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர். அந்த இராணுவப் படை மூலம் அப்போது இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இரண்டாம் உலகப் போரில் மிக நீண்ட கடல் பயணம் மேற்கொண்ட ஒரே தலைவர்  இந்தியாவில் இருந்து ஜப்பான் வரை நடைப்பயணமாகவே சென்று இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டிய ஒரே தலைவர்.

இந்திய விடுதலையைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட தன்னிகரில்லாத புரட்சி வீரர்தான் நம் சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் கட்டாக் என்ற இடத்தில் ஜனவரி 23, 1897 ஆம் ஆண்டு  ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும், ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

படம்: quotespick

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். பின்னர், 1913ல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்  சேர்ந்த அவர் சி.எஃப் ஓட்டன்  என்ற ஆசிரியர்,  இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால்  ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர்,  ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்  சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர்  தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்விற்குப் படிக்க லண்டனுக்குச் சென்றார்.

ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றார். 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்  சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது என்றே கூறவேண்டும். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில்  ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு,  ரெஜினால்ட் டையர்  என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்,  வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது. ஆனால் தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்ததால் மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து,  “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா?” என்று அவர் கேட்டதற்கு,  “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது”  என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.

படம்: scroll

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா,  செக்கோஸ்லோவேகியா, போலந்து,  ஹங்கேரி,  இத்தாலி,  ஜெர்மனி,  ஐரோப்பா,  ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு,  ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு,  அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவுசெய்தது. கொல்கத்தா தொண்டர் படையின்  தலைவராக பொறுப்பேற்று,  தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெற முடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும்,  தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கட்சியிலிருந்து பிரிந்தார். சி.ஆர் தாஸ்  அவர் சுயேட்சிக் கட்சியை  தொடங்கியது மட்டுமல்லாமல்  “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

படம்: indiatoday

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நினைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால்,  இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.

மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலையானால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்குள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்?  இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது”  என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.

படம்: openthemagazine

1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயேட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்துக் கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள்,  “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை”  என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்  என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால் தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்க ஒரு நிகழ்வு தான் காரணம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும்,  பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட,  ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க,  மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த தப்பி செல்லுவதில் சுபாஷின் பெயருக்கு தனி இடம் உண்டு.

படம்: dailystar

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட,  அதை எதிர்த்துப் பேசிய போஸ்,  அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்  என்று மொழி பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் பலத்தை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.

1941 ஆம் ஆண்டு ஜெர்மன் பயணித்த நேதாஜி அதற்கு மாறாக அப்பொழுதே கிழக்கு நோக்கி ஜப்பான் சென்று இருந்தால் இன்று இந்திய அரசியல் வரலாறு மாறியிருக்கக்கூடும். இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்று தான் அம்மாபெரும் மனிதனுக்கு நம் காணிக்கை.

Web Title: Rembering the great leader of Indian national army Nethaji subash chandra bose

Featured Image Credit: economyleadoneindiataazakhabarnews.

Related Articles