தமிழக விஞ்ஞானி Dr. சிவன் பிள்ளை கடந்து வந்த பாதைகள்

“கல் தேன்றி மண்தோன்றா காலத்தே முன்தோறி மூத்த குடி தமிழ்க் குடி” என்கிறது தொல்காப்பியம்.  இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி எனப் பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். இந்தப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது மற்றொரு தமிழனுக்கு. இத்தகு பெருமை வாய்ந்த நம் தமிழ் மரபில் வந்த ஒருவர் மத்திய விண்வெளித்துறை செயலாளர் மற்றும் விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நம்மில் எத்தனை  மகிழ்ச்சி ஊட்டக் கூடியத் தருணம். கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற கிராமத்தில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிப்பைத் தொடங்கி நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார்.  குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமிற்கு பிறகு, அகில இந்தியாவிலும் சிவன் என்ற பெயர் ஒரே நாளில் பரவிவிட்டது. சிவனை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை. நாட்டின் கௌரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை அலங்கரித்த முதல் தமிழர் சிவன்.

சிவன் பிள்ளை  நாகர்கோவிலில் உள்ள வல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கைலாச வடிவுக்கு, மாங்காய் வியாபாரம் தான் தொழில். சிவன் பிள்ளைக்கு அவரது தந்தை கூறிய அறிவுரை நீ எதுவேண்டுமானாலும் படி ஆனால் நீ வேலை செய்து அந்த பணத்தில் படி என்று கூறியுள்ளார். இதனால் அவர் வேலை செய்துக்கொண்டே படித்துள்ளார். பின்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படித்தார். சென்னை எம்.ஐ.டியில் 1980-ல் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை 1982ம் ஆண்டில் முடித்தார்.  ஆனால் இவரது சிறு வயது கேட்டால் சிறிது வியப்பாகவே உள்ளது. இவர் ஒரு பேட்டியில் சின்ன வயசுல என்னோட அதிகபட்சக் கனவு,  எங்க கிராமத்துக்கு மேல பறக்கிற விமானத்துல என்றைக்காவது ஒருநாள் போக வேண்டும் என்பது தான்.  இந்த விமானம் எப்படிப் பறக்குது?  நாமே ஏன் இதுபோல ஒன்று செய்து பறக்கவிடக் கூடாது என்று நினைப்பேன். சின்ன வயசுல இருந்தே நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும். இருந்தாலும் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால், ‘எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்வதுபோல,  இறுதியில் எனக்கும் எல்லாமே சுபமாத்தான் முடியும். அப்படித்தான் நான் விஞ்ஞானி ஆனதும் என்று கூறியுள்ளார்.

படம்: indiatimes

இஸ்ரோவில் பிஎஸ்எல்வி  திட்டத்தில் 1982ம் ஆண்டு சேர்ந்தார்.  இஸ்ரோவின் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வில் அளப்பரிய பங்களிப்பை சிவன் வழங்கினார். பணியில் இருந்துகொண்டே மும்பை ஐ.ஐ.டி-யில், 2006-ல் முனைவர் பட்டம் பெற்றார்.  மேலும் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை இவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். மேலும் இவர் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைப் படைக்க காரணமாக இருந்தது ராக்கெட் ஸ்பெசலிஸ்டான சிவனின் சாதனையாகவே பரவலாக பேசப்பட்டது. 2011-ல் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட சிவன், 2014-ல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை மையத்தின் இயக்குநரானார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்த தமிழரான சிவனின் பங்களிப்பு முக்கியக் காரணமாகும். இதனால் இவரது பணியில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இஸ்ரோவின் மெரிட் விருது,  டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். சிவன் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக சிவன் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது கிரையோஜெனிக் எஞ்ஜின். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன்,  விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007ல் இஸ்ரோவின் விருதையும், 2011-ல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதையும், சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

படம்: deccanchronicle

இவரது முன்னுதாரணம் யாரும் இல்லை என்றும்  என் அனுபவத்தில் நான் பார்த்த சிறந்த மனிதர் என்றால்  அது அப்துல் கலாம் என்று கூறியுள்ளார். தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு  தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். கலாம், எனக்கு ரொம்ப சீனியர்  ரொம்ப அமைதியானவர். யாராவது சிறிய அளவு  சாதித்தாலே, பெரியதாக பாராட்டுவார். நான் ‘சித்தாரா’ போன்ற ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு மென்பொருள் உருவாக்கியதால்,  என்னை எப்போதும் ‘சாப்ட்வேர் இன்ஜினீயர்’ என்று தான் அழைப்பார். அவரது மரணம்,  நம் நாட்டுக்கும் விண்வெளித் துறைக்கும் பெரிய இழப்பு” என்றும் கூறியுள்ளார்.

சிவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தற்போது தனது முழு மனதும் அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால்,  இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், யு.ஆர்.ராவ் உள்ளிட்ட மாமேதைகள் தலைமையேற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்பது மிகப்பெரிய கடப்பாடு நிறைந்தது என்றும் சிவன் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பெருமையாக உணர்கிறேன். எனக்கு முன்னர் எத்தனையோ மேதைகளும், ஆளுமைகளும் வகித்த பதவி இது. அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

படம்: thehindu

இஸ்ரோவின் புதிய  பதவியேற்ற சிவன் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையின் சாதனைகள் சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சார்பாக 100-வது செயற்கைக் கோளான பி.எஸ்.எல்.வி சி-40 என்ற புதிய செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ மையத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்று இருக்கும் சிவன் செய்தியாளர்களிடம்  ’’நமது விண்வெளித் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதே சமயத்தில் விண்வெளித்துறையின் வளர்ச்சியானது,  சாதாரண மக்களுக்குப் பயன் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனேயே விஞ்ஞானிகள் அனைவருமே செயல்பட்டு வருகிறார்கள். இஸ்ரோ மையம் கேரள அரசுடன் இணைந்து மீனவர்களுக்கு உதவும் வகையில்,  நாவிக் என்ற புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது போல சாமன்ய மக்களுக்கான தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார்.

அண்டை மாநிலம் கூட அவர் தமிழராக இருந்தாலும் மலையாளிதான் என்று உரிமை கொண்டாடுவது வியப்பை அளிக்கிறது. இஸ்ரோ தலைவராக சிவனை அறிவித்ததும் அவரை அதிகம் கொண்டாடியது கேரள மாநிலம்தான். முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ”கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக  மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்”  என்று கூறியுள்ளது. மேலும் ‘உறக்கம் அறியா விஞ்ஞானி’ என்றும் அந்த பத்திரிகை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. ஒருமுறை, ஏ.ஆர். ரஹ்மான் என்ற தமிழரிடம் இந்தி பாடல்கள் கேட்டு, வட இந்தியர்கள் அடம் பிடித்தனர்.  அதற்காக அவரை விமர்சிக்கவும் செய்தனர். தமிழரிடம் வட இந்தியர்களே  இந்தி பாடல்களை  இசைக்க கேட்டதுதான் நமக்கு கிடைத்த வெற்றி.  அதுபோல, சிவனும் அண்டை மாநிலம்  கூட  தன்னை உரிமை கொண்டாட வைத்துள்ளார்.

Web Title: Success story of Dr.Sivan pillai- new director ISRO

feature image credit: jovo.educationbusiness-standard.

Related Articles