சாதனை மனிதர் சுந்தர் பிச்சையின் வெற்றிச் சரித்திரம்

கூகிள் என்றாலே  நம் அனைவரின் நினைவுக்கு வருவது சுந்தர் பிச்சை அவர்கள் என்பது வரவேற்புகுரிய நிதர்சனமான ஒரு உண்மையே. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவிற்கு தனக்கான இடத்தை வகித்துள்ளார் கூகிள் என்ற மாபெரும் தேடலுக்கான ஒரு இணையத்தளத்தில் முதன்மை செயல் அலுவலர் என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்பட வைக்கின்ற தருணமே. சுந்தர் பிச்சையின் இயற்பெயர் பிச்சை சுந்தரராசன் 1972ஆம் ஆண்டு ஜூலை 12ந்தேதி லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலராக சுந்தர் பிச்சை (படம்: linkedin)

இவர் ஓர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். நீ ஏழையாக பிறப்பது உன் தவறில்லை நீ ஏழையாக மடிவதே உன் மிகப்பெரிய தவறு என்ற வாசகத்திற்கு ஏற்ப ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு இடத்தில் தனக்கான சாதனையைப்  படைத்து தன் பொருளாதார நிலையிலும் தன்னை உயர்த்தியுள்ளார் இவர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே. இவரது தந்தை ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றினார். எப்போதும் வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் அவர் தன் மகன்களிடம் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்களை கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இரு அறைகளை கொண்ட சாதாரண வீட்டில் தான் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் சொந்தமாக டிவி,கார் போன்றவை இருந்திருக்கவில்லை. எனினும் அவரின் தந்தை தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்தினார். சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் உதவி தொகையுடன் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் படித்து மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.

அந்தக் காலத்தில் அவரது தந்தையின் ஒரு வருட சம்பளத்தின் தொகைக்கும் அதிகமாகவே விமான பயண சீட்டின் விலையாக இருந்தது. அவரின் தந்தை பிறரிடம் கடன் வாங்கி கொடுத்தே அவரை அமெரிக்கா அனுப்பி வைத்தார். இன்று சுந்தர் பிச்சை நினைத்தால் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் வாங்கும் அளவிற்கு பன்மடங்கு தன் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்துள்ளார். அவர் அமெரிக்காவில் பயின்ற காலக்கட்டத்தில் கூடத்  தனது பழைய பொருட்களையே உபயோகப்படுத்திக் கொண்டார். தனக்காக தனிப்பட்ட எந்தச்  செலவும் செய்து கொள்ளாமல் படித்து முடித்தார். பல கஷ்டங்களைத்  தாண்டியே தனக்கான அடையாளத்தை நிலை நிறுத்தினார்.

பின்பு சுந்தர் பிச்சை கூகிள் நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு இணைந்து வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கியப்  பங்கு வகித்தார். கூகிள் நிறுவனத்தில் பின்பு முதன்மைச்  செயல் இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து சுந்தர் பிச்சை தலைவரானார். மேலும் இவர் கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைமை பொறுப்பையும் ஏற்று வழிநடந்தியுள்ளார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ந்தேதி கூகிள் நிறுவனத்தால் அந்த நிறுவனத்தின் முதன்மை செயலாளராக அறிவிக்கப்பட்டார். (படம்: slashgear)

இன்று சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பெரிய பதவியை பெற்றிருப்பதோடு லார்ரி பேஜ் வாழ்க்கையில் நெருங்கிய நண்பராகவும்  திகழ்கின்றார். 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சை அவர்களை பணியில் சேர கேட்டுக் கொண்ட போது கூகுள் நிறுவனம் சுந்தர் அவர்களின் ஊதியத்தை ரூ.305 கோடியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2016ஆம் ஆண்டு இவரது சம்பளம் ரூ .1,285 கோடி (20 கோடி டாலர்) என்று தெரியவந்திருக்கிறது. முந்தைய 2015 ம் ஆண்டு ஒப்பிடும்போது இவரின் சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் பங்கேற்கும் கூட்டங்களில், மாணவர் சந்திப்பில் சில சுவாரஸ்யமான விஷயங்களைச்  சொல்லி கூட்டத்தை திகைப்பில் ஆழ்த்துவார்.

சுந்தர் பிச்சை சமீபத்தில் தான் படித்த கல்லூரியில் (ஐ.ஐ.டி. கான்பூர்) சொன்ன ஒரு கதை (படம்:twitter.com)

கரப்பான்பூச்சி ஒன்றை மையமாகக்  கொண்ட இந்தக்  கதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெற்றிகரமான ஒரு தெளிவை உருவாக்கும் என்பது உண்மை. சுந்தர்பிச்சை தன் கதையை இப்படிதான் துவங்கியுள்ளார்.” ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த டேபிளில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர்.

அப்போது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனடியாக, அந்த பெண்மணி கத்திக்  கூச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும் கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயன்றார். சிறிது நேர முயற்சிக்கு பின்னர் அதை தட்டிவிட்டார். ஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.

சுந்தர் பிச்சையின் வளர்ச்சி (படம்: cwstechnology)

மீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு  நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார். இதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா? இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட  செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது. அப்போது தான் எனக்கு புரியத்  தொடங்கியது. நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும்  நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மனக் கட்டுப்பாடுதான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிடச் சிந்தித்து முடிவு எடுப்பதுதான் பயன் தரும்” என்றார். இதுபோன்ற பல சிந்தனை கருத்துக்களையும் அவர்கள் சாதிக்கும் வண்ணம் ஊக்குவிக்கும் செயல்களையும் மாணவர்களிடையே  எடுத்துரைத்து வருகிறார். சுந்தர் பிச்சை இந்த அளவிற்கு உயர அவரது விடா முயற்சியும் அவர் கடந்து  வந்த சில கடினமான பாதைகளும் மிக முக்கியமான ஒன்று. அமெரிக்கத்  தொழில்நுட்ப துறையில், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் உயர பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவிற்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். தமிழரின் பெருமையை உலகுக்கு வெளிக்காட்டிய இவர் விடாமுயற்சியால் வெற்றி பெற்ற தமிழன் என்ற சிறப்புக்கு உரியவர் தற்போது தனது 46 அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

Web Title: Success story of Sundar Pichai

Featured Image Credit: fortune

 

Related Articles