எடிசன் எனும் வியாபாரி

“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.”

இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தோமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம் அறியபட்டவர். என்றும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புக்களும் இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தோமஸ் அல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வாசித்து பார்த்தபோது, எனக்கு தனித்து அவரை கண்டுபிடிப்பாளர் என மட்டுமே அழைக்கத் தோன்றவில்லை.

படம் – s.hswstatic.com

எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி என்பதை எல்லாம் தாண்டி, எடிசன் ஒரு சிறந்த தொழில் முனைவர் அல்லது சிறந்த தொழில் அதிபராகவும் அறியப்பட்டிருக்க வேண்டியவர். வேறு பல விஞ்ஞானிகளிலிருந்து இவர் வேறுபடவும் எண்ணில் அடங்காத கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும், அவருக்கு உதவி செய்தது இந்த விஞ்ஞான அறிவு மட்டுமல்ல, அவரது வணிக மூளையும்தான்!

எடிசனின் முதல் கண்டுபிடிப்பு யாரும் பெரிதாக அறியாத வாக்கு பதிவு இயந்திரம். இந்த இயந்திரம் நடைமுறைக்கு வர அமெரிக்க அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்திருப்பின், தேர்தல் நடைபெற்று முடிந்தவுடனேயே முடிவுகளை விரைவாக அறிந்துகொள்ள முடிந்திருப்பதுடன்,  மேலதிக பல தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க கூடியதாக இருந்திருக்கும். ஆனால், இதை எடிசன் கண்டுபிடித்து அமெரிக்க அரசியல்வாதிகள் முன்பு காட்ட்டிய போது, “இதில் எங்களுக்கு சாதகமான மாற்றம் தரக்கூடிய எதுவுமேயில்லை” என்று கைவிரித்ததுடன், வேறு எதையும் கண்டுபிடித்து தாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் எடிசனிடமிருந்த வணிக மூளை விழித்து கொண்டது. அப்போது அவர் சொன்ன வாசகம்தான் அவர் வாழ்நாளில் பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது என்று சொல்லலாம்.

படம் – ytimg.com

“மனித சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மற்றையவற்றை நான் தொடவும் மாட்டேன்” என்று கூறினார். தோமஸ் அல்வா எடிசன் இதற்கு பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி பல்வேறுபட்ட அவசியமான கண்டுபிடிப்புகளின் மூலகர்த்தாவாகிப் போனார். இதற்கு மேலாக, எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் சம்பந்தப்படாத கண்டுபிடிப்பாளர்களை தட்டி கொடுத்து ஊக்குவித்ததுடன், தன்னுடன் தனது கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களை ஒரு வணிக முதலாளி போல ஒடுக்கவும் தவறவில்லை.

போனோகிராப் (ஒலிப்பதிவு செய்யும் கருவி) மற்றும், பேசும்படத்தின் அடிப்படையில் அமைந்த இவரது சில நிமிடங்கள் ஓடக் கூடிய படங்கள் போன்ற கண்டுபிடிப்புக்களின் மூலமாக விஞ்ஞான உலகின் வசூல் சக்கரவர்த்தியாக பணம் கொழிக்கும் ஒருசில விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். மனிதகுல தேவையை முன்னிலைப்படுத்தி கண்டுபிடிப்பை செய்வேன் என்று சொல்லிய எடிசன், தன் கண்டுபிடிப்புக்களை சந்தைப்படுத்தவும், பணம் உழைக்கவும் அவரது கண்டுபிடிப்புக்களில் ஒன்றான பேசும் படங்களைக் கொண்டு கவர்ச்சிப்பெண்களை பயன்படுத்தி படங்களை எடுத்தார் என்பதும் உபரிதகவல்.

படம் – image.pbs.org

தனது கண்டுபிடிப்புகளில் தலையீடு செய்யும் கண்டுபிடிப்பாளர்களை ஒரு தொழிலதிபர் ஏனைய புதிய திட்டங்களை கொண்டுள்ள சிறு அல்லது புதிய  தொழிலதிபர்களிடம் பணத்தைக்கொட்டி வாங்குவதைப்போல, அன்றைய காலத்தில் குறித்த கண்டுபிடிப்பாளர்களின் வறுமையை பயன்படுத்தி விலைக்கு வாங்குவதை ஒரு உத்தியாகவே கொண்டிருந்தார். அதுபோல, பிற்காலங்களில் தனது கண்டுபிடிப்புகளில் உதவக்கோரி திறமையானவர்களை இனம்கண்டு இணைத்துக்கொண்டு தன் கண்டுபிடிப்புகளை பூர்த்திசெய்த பின்பு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானம், பெயர் என்பவை கிடைக்க செய்யாமல் செய்த சம்பவங்களும் அவரது வரலாற்றில் நிறையவே உள்ளன.

அவர் காலத்தில், ஆங்கிலேயே ஆட்சியின் கீழிருந்த நாடுகளுக்கு வரும் அமெரிக்க இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன் இருந்தார் என்று அப்போதைய பிரபல எழுத்தாளர் வில்லியம் செக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் போது, எடிசன் அப்போதைய அமெரிக்க இளம் வர்க்கத்திடம் ஒரு விஞ்ஞானியாக பார்க்கபட்டத்தை விட, ஒரு சிறந்த தொழில் முனைவராக பார்க்கபட்டார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க இளைஞர்களுடன் செக்ஸ்பியர்  உரையாடும் போது, அவர்கள் எடிசனை விட சிறந்த தொழில் முனைவர் இந்த உலகத்தில் இல்லை என்ற மனப்பாங்குடன் இருந்ததாக குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு தனது ஆளுமை மூலமாக அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் தோமஸ் அல்வா எடிசன்.

படம் – breakingenergy.com

ஆனால், எந்த தருணத்திலும் தோமஸ் அல்வா எடிசன் தான் ஒரு தொழில் முனைவனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ வரலாறுகள் காட்டி விடக் கூடாது என்பதிலும் முனைப்பாக செயல்பட்டார் என்பதனை பதிவு செய்ய வேண்டும்.

எடிசனின் மேற்கூறிய முனைப்புக்கு மிக சிறந்த உதாரணமாக, மின்குமிழ் கண்டுபிடிப்பை எப்படி வரலாறுகளில் பதிவு செய்தார் என்கிற ஒரு உதாரணமே போதுமானதாக இருக்கும். மின்குமிழை கண்டறிந்த எடிசன் அதனை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தித்தார். அதற்கு, எல்லோரிடத்திலும் மின்சாரம் இருக்கவேண்டியது அவசியம் என்பதனை உணர்ந்து கொண்டார். ஆனால், அவருக்கு மின்குமிழை இயக்கும் மின்சாரத்தின் யுத்தி முழுமையாக வசப்படவில்லை. இந்த இடத்தில்தான் தொழில் முனைவோன் எடிசன் முன்னிலை பெறுகிறார். அமெரிக்க அரசியல் சபைக்கு தனது கண்டுபிடிப்பான மின்குமிழை கொண்டு சென்று, அங்கிருந்த அனைவரையும் தன் மின்குமிழால்தான மின்சாரமே இயங்குகிறது என நம்ப வைக்கிறார். இதன் விளைவாக, மின்சாரத்தை கண்டுபிடித்தவர்களால் கூட செய்ய முடியாத ஒன்றை எடிசன் செய்து காட்டினார். அது மக்களிடம் தனியே மின்குமிழை மட்டும் கொண்டு சேர்க்காமல், மின்சாரத்தையும் அமேரிக்கா முழுவதும் கொண்டு சேர்த்தார். எடிசனின் கீழாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்வழங்கல் அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டது. ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கு வெளிச்சம் கொண்டுத்தவர் என்கிற புகழ் எடிசனை வந்து சேர்ந்தது. ஆனால், அந்த புகழுக்கு பின்னால் மின் நிலைய அனுமதியை சலுகை அடிப்படையில் பெற்று, மின்சாரத்தை மக்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கி பெற்றஇலாபத்தை புதைத்துக் கொண்டார். இதனால், ஒரு இலாபவாதி மக்களின் இலட்சியவாதியாக மாறிப்போனார்.

விஞ்ஞானி எடிசன் தன் வணிக மூளையின் உச்சத்தை பயன்படுத்தியது, தான் கண்டுபிடித்த சீமேந்து கலவையுடன் கூடிய கான்கிரீட் என்கிற கட்டுமான கலவையில்தான். அப்போது இந்த தொழிலில் அவருக்கு நிறையவே போட்டியாளர்கள் இருந்தார்கள். எடிசன் வெறுமனே இதை கண்டுபிடித்ததுடன் நின்றுவிடவில்லை. அவர் இந்த தொழிலில் ஈடுபட்ட நபர்களை வெற்றி கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நினைத்தார். அதற்கு மக்களின் வறுமையை கையில் எடுத்தார். அதாவது, வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த செலவில் தான் கண்டுபிடித்த கலவையை பயன்படுத்தி வீடுகளை கட்டி தருவதாக வாக்களித்து கட்டியும் கொடுத்தார். ஆனால், இதற்க்கு பின்னால் தெரியாதவொரு உண்மை ஒழிந்திருந்தது. அதற்கு அவர் கையிலெடுத்த ஆயுதம் கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate social responsibility) ஆகும். அதாவது , பெரிய கட்டுமான நிறுவனங்களை அணுகி, அவற்றின் விளம்பர உத்திக்கு வறியவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை ஒரு நிபந்தனையுடன் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். நிறுவனங்கள் தங்களை மக்களிடம் விளம்பரபடுத்திக்கொள்ள எடிசனின் யோசனையை ஏற்றுக்கொண்டன. அவர் விதித்த ஒரே நிபந்தனை, தனது சீமெந்து கலவையை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இதனால், தவிர்க்க முடியாமல் எடிசனின் கலவைக்கு சந்தையில் கேள்வி எழுந்ததுடன், காலப்போக்கில் அந்த கலவை போட்டியாளர்களை ஓரம்கட்டி சந்தையில் முன்னணி கலவையாக மாற்றம் பெற்றது.

படம் – history.com

எடிசன் மட்டுமல்ல இன்றைய காலத்தில் வாழும் பல பிரபலங்கள் தங்களை பிரபல்யம் செய்து கொள்ள இந்த வணிக தந்திரங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே எடிசன் போல கண்டுபிடிப்பாளர் என்கிற போர்வைக்குள் வாழவிரும்பும் வணிகவியலாளர்கள் அல்ல.

எப்போதுமே வணிகம் என்கின்றவொன்று சரியான முறையில் பயன்படுத்தபட்டதாக வரலாறே இல்லை. போட்டியாளனாக இருக்கும் ஒருவனை வீழ்த்தவும், தங்களை சரியாகப் பலப்படுத்தி கொள்ளவும், ஒருவனை அடக்கி ஆளவுமே வரலாறுகளில் வணிகம் என்பது சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தோமஸ் அல்வா எடிசன் என்கிற கண்டுபிடிப்பாளன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா ?

Related Articles