Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்திய அரசியலில் பெண்களின் பங்கீடு

பெண்கள் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், வாக்குவாதங்கள், திட்டங்கள், மற்றும் மசோதாக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 33% பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை முனிசிபல் மற்றும் கிராமபஞ்சாயத்து அமைப்புகளில் நடைமுறைக்கு கொண்டு வந்து 23 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் பிரதிநிதிகள் அழைத்துவரப்பட்டு, அவர்களின் ஆக்கப்பணிகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கி சிறப்பிப்பது வழக்கத்தில் உள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் 33% இடஒதுக்கீடானது 50%மாக உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பது பாராட்டுதலுக்குரியது. ஆனால், இன்று இதைப்பற்றி எழுத மீண்டும் ஒரு காரணம் இருக்கின்றது என்றால், நம்மால் ஏன் இந்த 33% இடஒதுக்கீட்டினை லோக்சபாவிலும், இராஜ்யசபாவிலும் செயல்படுத்த இயலாமல் போனது என்பதைத் தான்.

2010ஆம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது ஏகமனதாக, 33% இடஒதுக்கீட்டிற்கான சட்டமசோதா, இராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்றும் 245 எம்.பிக்களில் 27 பேர் மட்டுமே பெண்கள். அதாவது 11%. இந்த சட்டமசோதா லோக்சபாவில் இன்னும் நிலுவையிலேயே தான் இருக்கின்றது. அங்கும் பெண்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றார்கள். 542 எம்.பிக்களில் 64 பேர் மட்டுமே பெண்கள். இதுவும், 11.8% மட்டுமே. தேசத்தில் மொத்தம் இருக்கும் 4128 எம்.எல்.ஏக்களில் 364 நபர்கள் மட்டுமே பெண்கள். இது வெறும் 8% தான். இன்று உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருக்கும் அரசியல் தலைவர்களில் 22% மட்டுமே பெண்கள் . இந்த சதவீதத்தையும் நம்மால் எட்ட இயலவில்லை. ஏன்? நம் நாட்டில் ஆண் பிரதிநிதிகள் பெண்களின் பிரச்சனைகளையும் தோளில் சுமந்து கொண்டு, பெண்களிற்கான பாதுகாப்பான சமூக கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றார்களா அல்லது அவர்களின் பொறுப்பு சுமைகளை சரியாக பங்கிட்டு பெண்களின் கைகளிலும் அதிகாரத்தை அளித்து அதனால் ஏற்படும் சமூக மாற்றத்தினை வரவேற்க காத்திருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஓட்டுரிமையும், 33% இட ஒதுக்கீடும்

  • பெரும்பாலான சமூக சீர்திருத்தங்கள் மற்றும் விடுதலை போராட்டங்களில் பெண்கள் தொடர்ந்து பங்கேற்று வந்ததை நாம் அறிவோம். அரசியல் களமும், சமூக சீர்திருத்த முன்னேற்றப் பாதைகளும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  தேவதாசி ஒழிப்பு முறை போன்ற சமூக சீர்திருத்தங்களை முன்னின்று நடத்தியது முத்துலட்சுமி ரெட்டி என்னும் சட்டசபை துணை தலைவராக நாம் அறிவோம்.
  • சுதந்திர போராட்ட காலங்களில் பெண்களை அதிகாகமாக போராட்டத்தில் பங்கிட வைத்த பெருமையெல்லாம் காந்தியினையே சாரும். காந்தியின் அழைப்பை ஏற்று 30களில் நடந்த சத்தியாகிரக போராட்டங்களில் நிறைய பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்றார்… ஆண்கள் பெண்கள் வித்யாசம் இன்றி சம உரிமையுடன் அரசியலில் பங்கேற்க பெண்களுக்கு கோரிக்கை விடுத்தார் மகாத்மா
  • 1900களில் இருந்தே பெண்களிற்கான ஓட்டுரிமைக்காக போராடிக் கொண்டே இருந்தது நம் சமூக அமைப்பு. மதராஸ் மாகாணம் தான் முதன்முதலில் சில கட்டுப்பாடுகளுடன் பெண்களுக்கு ஓட்டுப்போடும் உரிமையினை 1921ல் அளித்தது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, 1950ல் பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினை அளித்தது இந்திய அரசாங்கம் ஆனால் அரசியலில் பெண்களின் பங்கு குறித்து எந்தவிதமான எண்ணங்களும், அபிப்ராயங்களும் அன்று யாருக்கும் ஏற்படவில்லை.
  • 1974ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகளின் சபை உருவாக்கிய ஒரு குழு பெண்களின் நிலைப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பெண்களை அதிக அளவில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியது.
  • 1993ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 73 மற்றும் 74ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பஞ்சாயத்து அமைப்புகளில் 33% இடஒதுக்கீட்டினை பெண்களுக்கென உறுதி செய்தது இந்திய அரசு
  • செப்டம்பர் 12, 1996 – பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை தேவ கௌடா அரசு லோக் சபாவில் தாக்கல் செய்தது
  • 1998, 1999, 2002, 2004ம் என தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
  • மே 6, 2008ஆம் ஆண்டு காங்கிரஸ், இராஜ்யசபாவில் இந்த சட்டமசோதாவினை தாக்கல் செய்தது
  • மார்ச் 9, 2010ல் இந்த சட்டம் இராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இன்றும் இந்த மசோதா நிலுவையில் இருக்கின்றது

கீழ் இருந்து தொடர்ந்து இந்த மாற்றத்தினை நாட்டின் மத்திய அரசாங்கம் வரை கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்த பட்சத்திலும், பாலின வேறுபாடு, பாலின இடைவெளி, சமஉரிமையின்மை போன்ற அடிப்படை புரிதல்கள் இல்லாத காரணங்களால் இன்றும் நிலுவையில் இருக்கின்றது 33% இடஒதுக்கீடு

Still Looking For 33 (Pic: factly)

33% ஏன் மாநில மற்றும் மத்திய அவைகளில் சாத்தியமற்றதாகின்றது?

  • இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்ற பெரிய கட்சிகளில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டினை பெண்களுக்கு தருவதில் எந்த பிரச்சனையும் இதுவரை இருந்ததில்லை. ஆனால், அங்கும் பெரும்பான்மையாக ஆண்களே அதிகம் இருப்பதால் பெண்களுக்கான இடம், மற்றும் பொறுப்புகளை பிரித்து தருவதிலும், அல்லது அந்த இடத்திற்கான போட்டிகளும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.
  • இந்த 33% இடஒதுக்கீடு சாத்தியமற்றுப் போக காரணமாக இருப்பது அடிப்படைவாத எண்ணங்களால் கட்டமைக்கப்பட்ட கட்சிகளையும், உறுப்பினர்களையும் கொண்ட கட்சிகளாக பெரும்பான்மை கட்சிகள் இருக்கின்றன. பெண்களிற்கான அரசியல் தேவைகள் பற்றி இன்னும் உணராதவர்களே அதிகமாக இருக்கின்றார்கள்.
  • ஏற்கனவே இட ஒதுக்கீடானது சாதியியல் ரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் பெண்களுக்கான தனித்த இடஒதுக்கீடு அதிக குழப்பத்தினை விளைவிப்பதாக இருக்கின்றது.
  • பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் பெண்களுக்கும் இந்த 33% இடஒதுக்கீடு பொருந்தும் என சட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால், மாயாவதி போன்றவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகப்பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் சதவீதம் இன்னும் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
  • 1996ல் இந்த சட்ட மசோதாவினை தேவ கௌடா ஆட்சியில் கொண்டு வரும் போதே கூச்சல், குழப்பங்கள், மற்றும் அமலிகளில் ஈடுபட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அன்றிலிருந்து இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், பிரச்சனைகளின் வசம் மாட்டிக்கொள்கின்றது நாடாளுமன்ற அவைகள்.
  • காங்கிரஸாரால் 2010ஆம் ஆண்டு, இந்த மசோதாவை இராஜ்ய சபையில் சட்டமாக்கியது. காரணம், சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருந்ததால். ஆனால், இன்று வரை லோக்சபாவில் இந்த மசோதா நிலுவையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை அடிப்படை அமைப்பில் இருந்து மேல்மட்ட உறுப்பினர்கள் அவை வரை யாரும் விரும்புவதில்லை என்பதற்கு இதுவே சான்று.
  • சில நேரங்களில் மக்களாகிய நாமும் பெண்களின் தலைமையின் கீழ் ஆட்சி அமைவதை துளியும் விரும்புவதில்லை. எடுத்துக்காட்டாக இந்தியாவின் இரும்பு மனுஷி என்று அழைக்கப்பட்ட இரோம் சானு ஷர்மிளாவும் தேர்தலில் பங்கிட்டார். ஆனால், அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை நூறைக்கூட தொடவில்லை. இந்தியாவில் காஷ்மீர் மற்றும் இன்ன பிற வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் இந்திய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கைவிடச் சொல்லி தொடர்ந்து 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனாலும் அவரின் தேர்தல் பிரவேசம் தோல்வியில் தான் முடிவடைந்திருக்கின்றது
  • நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசத்தின் மிகப் பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியும் கூட பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் கூட 33% என்பதை பின்பற்றவில்லை. பொதுவாக பெண்கள் அரசிலிற்குள் நுழைய அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒரு ஆண் அரசியலில் ஏற்கனவே இருப்பார். பல நேரங்களில் அந்த ஆண் நபரின் விருப்பங்களை வழி நடத்தும் முறையிலே பெண்கள் அரசியலிற்குள் வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நேரு இறந்த பின்பு, அவருக்கு ஒரு ஆண் வாரிசு இருந்திருக்கும் பட்சத்தில், இந்திரா காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது கேள்விக்குறிதான்.. இப்படியாக தான். இருக்கின்றது பெண்களிற்கான அரசியல் நிலைப்பாடு

Indra Gandhi (Pic: pinterest)

பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்?

  • பெண்கள் சிறந்த நிர்வாகிகள் என்பதை ஒவ்வொரு நாளும் அவர்கள் நிரூபித்து வருகின்றார்கள், எனவே அரசியல் என்பது அத்தனை கஷ்டமான காரியமாக பெண்களுக்கு இருந்துவிடாது.
  • பெண்களின் பிரச்சனைகளை பெண்களைவிட மிகச்சிறப்பாக கையாண்டு அதற்கான தீர்வினை வேறு யாராலும் தந்துவிட இயலாது.
  • தொடர்ந்து பெண்கள் ஒதுக்கப்பட்டு வருகின்ற இடங்களில் ஒன்றாக அரசியல் களம் இருக்கின்றது. அவர்களின் ஓட்டுகள் முக்கியத்துவம் அடைகின்ற போது, அவர்களின் வார்த்தைகளும், அவர்களும் எண்ணங்களும் அவர்களால் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • கல்வி, சுகாதாரம், மற்றும் இன்னப்பிற அடிப்படைத் தேவைகள் பற்றிய புரிதல்கள் ஆண்களை விட பெண்களால் புரிந்து கொள்ள இயலும். ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்படும் போது, சானிட்டரி நேப்கின்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு உதாரணமாக கொண்டால், பெண்களின் அரசியல் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் உணர முடியும்.
  • பெண்கள் அரசியலில் ஈடுபடும் போது அவர்கள் தங்களின் நிர்வாகத்திறனை முழுமையாக வெளிப்படுத்துவார்கள். பெண்களுக்கான பேறுகாலவிடுப்பு, பேறுகால சுகாதாரம், தாய்சேய் நலம், சம ஊதியம், பெண்களிற்கான பாதுகாப்பு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், பாலின இடைவெளியை சமன் செய்தல் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வினை பெண் தலைமையிலான அரசாங்கத்தினால் சர்வ நிச்சயமாக தர இயலும்.
  • நான்கு பெண்கள் சேர்ந்தால் நல்லதை நிகழ்த்தி காண்பிக்க இயலும் என்பதற்கு, தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் குழு ஒரு உதாராணம். சிறு குறு தொழில்கள் தொடங்குதல், நிலையான வருமானத்தினை ஈட்டுதல், பொறுப்புகளை பங்கிட்டு குழுவாக செயல்படுதல் என படிப்படியாக வெற்றி கண்டிருக்கின்றார்கள் நம்மூர் பெண்கள்.
  • மேற்கு வங்கத்தில், பெண்களின் கவனிப்பின் கீழ் இருக்கும் கிராம நிர்வாகங்களில் தண்ணீர், சாலை வசதிகள், கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என அனைத்தும் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆண் பெண் சமத்துவம் என்பது பெண்களின் அரசியல் பங்கீட்டினால் நிச்சயம் சாத்தியமாகும். இது பாதுகாப்பு, வருமானம், கட்டமைப்பு போன்ற பலங்காலங்களாக சீர் செய்ய முடியாமல் இருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாக அமையும். பெண்கள் அரசியல் பிரமுகர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வகையில் குறைந்திருக்கின்றன. எனவே 33% தாண்டி நாம் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

மற்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பங்கீடு, ஒரு ஒப்பீட்டுப் பார்வை

  • உலக வல்லரசுகள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அமெரிக்காவில் கிளாரி கிளிண்டன் தான் முதல் முன்னெடுப்பு என்பது தான் உண்மை.
  • ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் மிக சமீபத்திலேயே பெண் ஆட்சியாளார்களைக் காண்கின்றது.
  • சவுதி அரேபியா போன்ற பணம் கொழிக்கும் தேசங்களிலும் கூட பெண்களின் அரசியல் பங்கீடு மற்றும் வாக்குரிமை என்பதை கொண்டு வர அதிக காலம் ஏற்பட்டிருக்கின்றது.
  • சப் சஹரான் ஆப்பிரிக்க நாடுகள் அதிக அளவில் பெண் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகக்து.
  • ருவாண்டா, புருண்டி,  ஜிம்பாப்வே, ஈராக், மற்றும் சோமாலியா நாடுகளில் பெண்களின் அரசியல் பங்கீடானது இந்தியாவோடு ஒப்பிடும் போது மிகவும் அதிகம்.
  • எகிப்து, ப்ரேசில், மலேசிய, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பங்கீடு 15% கூட தொடவில்லை.
  • ஒரு பெண்ணின் கையில் அதிகாரம் தரப்படும் போது ஏற்படும் மாற்றங்கள் மகத்தானவை. கென்யாவின் வங்காரி மாத்தாய் அவர்களின் கையில் அதிகாரம் தரப்பட்டபோது வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் ஒழிக்க பெரும் முன்னெடுப்புகள் நடைபெற்றது. அந்த உழைப்பின் பலன் ஆப்பிரிக்காவுக்கு முதல் நோபல் பரிசினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. காடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் மற்றும் இயற்கை என இரண்டையும் மீட்டெடுத்தது அவரின் நுட்பமான அறிவு.

Wangari Maathai (Pic: superheroyou)

ஒரு மாற்றத்தினை ஏற்பதில் எந்த பிரச்சனையும் நமக்கு இருப்பதில்லை. இந்தியா ஏற்கனவே ஒரு பெண் பிரதம அமைச்சரை சந்தித்துவிட்டது. ஒரு பெண் அதிபரை சந்திருக்கின்றது. 33% இல்லையென்றாலும் கணிசமான அளவில் பெண் முதலமைச்சர்களை பல்வேறு மாநிலங்கள் சந்தித்திருக்கின்றது. மிக பெருமை கொள்ளும் விசயமாக ஒரு பெண் அமைச்சர், இன்று நாட்டின் மிக முக்கியப் பொறுப்பான பாதுகாப்புத்துறையில் அமைச்சராக இருக்கின்றார். நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒரு பெண் அமைச்சரின் பார்வைக்கு கீழ் செயல்படுகின்றது என்பது மிகப்பெரிய விசயம். அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த பதவிகள் பலவற்றிலும் பெண்கள் அவர்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். 33% இடஒதுக்கீடு இன்னும் பல மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வரும். அது 50% உயரும் அளவிற்கு மகத்தான மாற்றங்களை பெண் ஆட்சியாளர்கள் தருவார்கள் என்று நம்புவோம்.

Web Title: Women’s Participation In Indian Politics

Featured Image Credit: dnaindia

Related Articles