இன்றைக்கு எப்படியாவது….

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’ மனம் உறுதிமொழி எடுத்துக்கொண்டது.

‘டேய், இது நூத்தி தொண்ணூத்தி ஒம்பதாவது உறுதிமொழி..பார்க்கலாம் பார்க்கலாம், நீயும் உன்ட உறுதிமொழியும்’ மூன்று முடிச்சு ரஜினிகாந்தோடு கதைத்த அதே மனசாட்சி, ரோசா மினிபஸ்ஸின் கண்ணாடியில் என்னைப் பார்த்து கதைத்தது, நக்கலடித்தது.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

அவள் ஒரு கொழும்புக்காரி, அதுவும் மண்டைக்காரி, உயர்தரத்தில் மட்ஸ் படிக்கும் மண்டைக்காரி. கொழும்புக்காரிகளுக்கு கொழுப்பு அதிகம், அதுவும் மண்டைக்காரி வேறு என்பதால் எடுப்பும் கனக்க கூட. கொழும்பு லேடீஸ் கல்லூரியில் படிப்பதால் தடிப்பிற்கும் குறைவில்லை. ஆக மொத்தம் அவள் ஒரு எடுப்பும் தடிப்பும் கொழுப்பும் மிகுந்த கொழும்பு மட்ஸ் மண்டைக்காரி.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

நானோ ஒரு யாழ்ப்பாணத்தான், அதுவும் கொமர்ஸ் படிக்கிற மொக்கன். கொழும்பு இந்துவில் அமலன் “பனங்கொட்டை, பனங்கொட்டை” என்று அடிக்கடி கூப்பிட்டு கடுப்பேத்துவான். கொழுப்பு, தடிப்பு எதுவுமே இல்லாத ஒல்லிப்பிச்சான் தேகம், முகத்தின் அரைவாசியை மறைத்து கண்ணாடி. ஆக மொத்தம் நானொரு கொழுப்பு, தடிப்பு எடுப்பு யாதுமற்ற மொக்கு கொமர்ஸ்காரன்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

“படிக்கிறது ஹின்டு கொலிஜ், பார்க்கிறது லேடீஸ் கொலிஜ்”  ரஜினிகாந்த் மனசாட்சி வேற, காலங்காத்தால பொங்கும் பூம்புனல் தீம் மியூசிக் ஒலிக்கிற நேரத்தில் மறக்காமல் ஞாபகப்படுத்தும். “ஆமிட்ட அடிவாங்காமல், இயக்கத்திற்கு பிடிபடாமல், கொம்படி வெளியால ஓடிவந்த நாதாரி உனக்கு காதல் கேட்குதோ” பின்னேரங்களில் மக்கள் குரலில் ஒலிக்கும் கே.எஸ் ராஜாவின் மொடியுலேஷனில் ரஜினிகாந்த் மனசாட்சி வெருட்டும்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

கொழும்புக்காரியில் இருந்த ஏதோ ஒன்றில் மயங்கிவிட்டேன், இல்லை தொலைந்து விட்டேன், ச்சா ச்சா கிறங்கிவிட்டேன். வட்டமுகத்தில் காந்த விழிகள், விழிகளிற்கு மேல் நெளியும் புருவங்கள். புருவங்களிற்கு மேல் படரும் மேகங்களாய் நெற்றி, நெற்றியில் அந்த குட்டி கறுப்பு பொட்டு. இதயம் படமும் பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டும் வந்த காலம் அது. பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டு, இவள் இந்தியா போன போது வைரமுத்துவின் கண்ணில் பட, வைரமுத்து இவளை வைத்து எழுதின பாட்டு என்று கூட நினைத்தேன்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

கொழும்புக்காரி லேசில் சிரிக்க மாட்டாள், மண்டைக்காரிகள் லேசில் சிரிக்க மாட்டினம். நடந்து போகும் போது அவளின் பின்னால் போனால், அவளின் குறும்பின்னல் தகதிமிதா என்று ஆடும், வாசுகி சண்முகம்பிள்ளையிடம் பரதநாட்டியம் பழகிறளவாம்.  நீல நிற ஸ்கர்ட் அணிந்து வந்தாளென்றால், இடை தான் கொடியா என்று அன்றிரவு கனவில் கவிதை வரும். அவளின் நடையில் நளினம் இருக்காது, நடனம் பயிலும் கால்களுக்கு நடைப்பயிற்சி தேவையில்லை என்று என்னுடைய இகனொமிக்ஸ் கொப்பியின் கடைசி பக்கத்தில் எழுதிய ஞாபகம்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

அவளின் நண்பிகளோடு கதைக்கும் போது காத்து பலமாக வீசும், அதாவது இங்கிலீஷில் தான் கதைப்பினம்.

“Today Premnath didn’t explain இடைமதிப்பு தேற்றம் properly, no”

“Ya ya..hope he will do a better job with மைய எல்லை. Because அது very very கஷ்டமாமடி”

காற்றடித்தால் மரம் ஆடும், ஆனால் சாயாது. சென். ஜோன்ஸ் காற்றுப் பட்டு படித்த இங்கிலீஸு, இவளவயின்ட இங்லீஷ் ஷெல்லடிக்கு பயந்து பங்கருக்குள் பதுங்கும். நாங்கள், “கரிக் கதை கதைக்காதே ஹரித” என்று கொழும்புத் தமிழும் “மங் ருபியல் தஹயக் துண்ணா, இதுரு சல்லி தென்ட” என்று தத்தி தத்தி சிங்களமும் பழகிக் கொண்டிருந்த காலம் வேற, இதுக்க இங்கிலீஸ் எங்க பழகிறது.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

செவ்வாய்க்கிழமைகளில், பின்னேரம் நாலேகாலுக்கு அவளிற்கு பிரேம்நாத்திடம் pure maths க்ளாஸ், எனக்கு நாலரைக்கு செல்வநாயகத்திடம் கொமர்ஸ் க்ளாஸ். அவள் ஏறி இறங்கிற பஸ் ஹோல்டுகள், நேரங்கள், வாற போற ஆக்கள் எல்லாம் ஏழு கிழமைகளாக ரெக்கி பார்த்தாச்சு, பக்காவா ப்ளான் பண்ணியாச்சு.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

செவ்வாய்க்கிழமைகளில் பின்னேர வகுப்புக்கு வரும் போது அவள் தனியத்தான் வருவாள், பாரதிராஜாவின் டான்ஸிங் கேர்ள்ஸ் பிரேம்நாத்திடம் வருவதில்லை. அவள் பஸ் ஏறும் நேரம், பஸ் ஹோல்டில் ஒரேயொரு பிச்சைக்காரன் மட்டும் தான் இருப்பான், அவனும் நித்திரை கொண்டு கொண்டு இருப்பான்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

அவளுடைய வீடு இருக்கும் லேனுக்கால அவள் பச்சைக் கலர் குடை பிடித்து கொண்டு வரும்போது, பக்கத்து வீட்டு அன்டியோடு கதைத்து கொண்டு வருவாள். இருவரும் ஒன்றாக காலி வீதி கடந்து, அன்டி சிட்னியிலிருக்கும் அங்கிளிற்கு கோல் எடுக்க கொமியுனிகேஷனிற்குள் போக, அவள் பஸ் ஹோல்ட் வருவாள் கொமியுனிகேஷனிற்கும் பஸ் ஹோல்டிற்கும் இடையில் இருக்கும் தூரம், எழுபத்தியேழு அடிகள், நடந்து பார்த்து அளந்து கணித்தது.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

(mrwallpaper.com)

அவள் சீஸன் டிக்கெட் வைத்திருக்கிறாள். அடிக்கடி வாற பாணந்துறை மினிபஸ்ஸில் ஏற மாட்டாள், கஞ்ச பிசினாறி. 155 ரத்மலான CTB பஸ் வந்தாலும் ஏறமாட்டாள். அவள் ஏறும் CTB பஸ் இலக்கங்கள்:  100 பாணந்துறை, 101 மொறட்டுவ, 154 கல்கிஸை. இந்த எண் பஸ்களை பிடிக்கவென கொஞ்சம் வெள்ளனவே வந்து நின்று, மினி பஸ்ஸின் கொந்தா “என்ட நங்கி என்ட” என்று கெஞ்சி கூப்பிட்டும் போகாமல், சீஸன் டிக்கட்டை கைக்குள் பொத்தி பிடித்துகொண்டு சராசரியாக ஏழு முதல் பதினொரு நிமிடங்கள் பஸ் ஹோல்டில் நிற்பாள்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

அந்த ஹோல்டில் நிற்கிற 100, 101, 154 CTB பஸ்களில், சீட் இருக்கிற பஸ்ஸாக பார்த்து ஏறி, யன்னல் பக்கம் இருக்காமல் மற்றப் பக்கம் இருப்பாள். தலை குழம்பிடும் என்று பயமாகவோ முகத்தில் புழுதி படக்கூடாது என்ற தற்காப்பாகவோ இருக்கலாம். கொந்தா வந்து சீஸன் டிக்கெட் கேட்டாலொழிய தானாக போய் சீஸன் டிக்கெட் கொடுப்பதில்லை என்ற வைராக்கியம், தடிப்பு என்றும் சொல்லலாம்.

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்’

இன்றைக்கு…

செவ்வாய்கிழமை

பச்சைக் கலர் குடை

நீல நிற ஸ்கேர்ட்

கறுப்புப் பொட்டு

பக்கத்துவீட்டு அன்ரி

கொமியுனிகேஷன்

பிச்சைக்காரன் நித்திரை

‘இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்

Related Articles