புட்பால்

இந்தச்சிறுகதைக்கு முன் இலக்கணமாகக் கொஞ்சம் சொல்லிவிட எண்ணுகிறேன்..பதினெட்டாம் நூற்றாண்டு, வட அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பருத்தி உற்பத்திதான் அப்போது பிரதான தொழிலாக இருந்தது..செங்கிரவல் மண் பருத்தி உற்பத்திக்கு அத்தனை செழுமை கொண்டதென அவ்வுள்ளூர் உற்பத்தியாளர்கள் போட்ட கணக்குத் தப்பவில்லை. வருஷத்திற்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு தொன் பருத்தி அங்கே விளைந்தது.. கொஞ்ச வருஷத்திலேயே மில்லியன் தொன்களைத் தொட்டுவிட்டது.. இவ்வளவு பெரிய விளைச்சலை சமாளிக்க ஆள் வேண்டாமா..

உள்ளூர் விவசாயிகள் உற்பத்திக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உழைக்கும் ஜாதியும் இல்லை.. அத்தோடு அமெரிக்க விவசாயிகள் கூட ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்ததால் ஏமாற்றுவது பெரும் பாடாக இருந்தது முதலாளிகளுக்கு.. இந்த அடிப்படை தான் ஆபிரிக்க நாடுகளில் இருந்து கருப்பர் இன உழைப்பாளிகளை விவசாயக்கூலிகளாக இறக்கும் யோசனைக்கு வித்திட்டது.. அத்தோடு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான குதிரைகளை கட்டி மேய்ப்பதற்க்கும் அடிமைகள் தேவைப்பட்டார்கள்… கருப்பர்கள் இரண்டு வேளை சோறு, உடுக்க ஓரு உடை, ஒதுங்க ஓரிடம் இதை எதிர்பார்த்து மட்டுமே வந்தவர்கள்.. பதிலுக்கு உழைக்கத்தயார் என்பது மட்டுமே அவர்களின் அப்ளிகேஷனாக இருந்தது.. உலகில் வேறு எந்தத்தேசமும் பல நூறு ஆண்டுகளாக அமெரிக்காவைப்போல் அடிமைகளை வைத்துக்கொண்டு வாழவில்லை.. அவமானமாக அல்ல.. அதை ஒரு தவறாகக்கூட நினைத்துப்பார்க்க முடியாத மனோபாவம் வேறு எந்த நாட்டு மக்களுக்கும் இருந்ததில்லை.. பிரிட்டனிடம் அமெரிக்கா அடிமைப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் கூட அமெரிக்கர்களின் தனிப்பட்ட ஆதிக்க மனோபாவமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கித்தான் இருந்திருக்கிறது..

(wahooart.com)

அமெரிக்கர்களைப்பொறுத்த வரையில் கருப்பர்களுக்கும் ஆடு, மாடு, குதிரை, பன்றி இனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.. அப்போது இந்தா இந்தா என்று சரித்திரம் எடுத்துப்போடும் காட்சிகள் வரண்ட நெஞ்சில் கூட ரத்தம் கசியச்செய்யும்……

இது பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதி.. சைக்கோ என்னும் சொற்பதம் அதுவரை அந்தஅளவுக்கு பமிலியர் ஆன ஒன்றாக இருந்திருக்கவில்லை.. முதலாளிகளின் துப்பாக்கியில் இருந்து தப்பித்து அமெரிக்கச் சேரிப்புறங்களில் குடி ஸ்தாபித்து குடித்தனம் நடத்தும் குடும்பத்தைச்சேர்ந்தவன்தான் அந்தப்பையன்.. அம்மைநோய் தீவிரத்தால் அப்பனும் அம்மையும் மறைய மற்றைய குடும்பங்கள் போடும் ஒரு பிடிச்சோற்றை மன்னிக்கவும் ஒரு பிடி அரிசிப்பொரியை நம்பி வாழும் வாழ்க்கை.. கறுப்புநிறப்பஞ்சுமிட்டாய் மாதிரி சுருள் முடி.. மெல்லிய தேகம் கறுப்பர்களுக்கே உரித்தான உதடு என அவனும் பார்ப்பதற்கு ஒரளவு சுமாராகத்தான் இருப்பான்.. அழுக்குப்படிந்த அந்த அடிடாஸ் ஷ்ஷூக்கள் அவன் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியை சேர்ந்த பையன் என முத்திரை குத்திக்கொண்டிருக்கும்.. ஏனெனில் லொஸ் ஏஞ்சல் தெருக்கள் அவன் ஷ்ஷூவை காட்டிலும் அந்தளவுக்கு சுத்தமானவை.. அத்தோடு அந்தக்காலத்தின் அவன் போன்ற பேர்வழிகள் நகர்ப்பகுதிகளில் உலவுவது சந்தேகத்திற்கு இடமாகமாறலாம் என்பதால் அவனால் ஒருமுறையேனும் தன் ஷூக்களுக்கு லொஸ் ஏஞ்சல் நகர நெடுஞ்சாலைகளைத் தொடும் பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லை..

குளிருக்கு இதமான ஆடைகள் ஒன்றுமே குப்பைத்தொட்டியில் கிடைக்காதபடியால் தன்னிடமிருந்த ஊசியை கொண்டு நான்கைந்து ஷேட் களை வெட்டித்தைத்து புது வகையான கோட் ஒன்றை தயாரித்திருந்தான்.. அந்தப்பல் நிற கோட்டில் கறுப்பு நிறம் மட்டும் தான் இடம்பறவில்லை. வைல்ட்ஸ்ரோன் கொம்பனியின் கோட்டுகள் கூட அந்தளவுக்கு குளிருக்கு இதமளித்திருக்காது.. எங்கள் ஊரைப்போல இல்லாமல் பிளாஸ்டிக், சேதனக்கழிவு என வகைகளாகப்பிரித்து அமெரிக்கர்கள் குப்பைகளை இடுவதால் அவனால் கொஞ்சம் சுலபமாக தன் இதர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடிந்தது. எத்தனையோ விதமான சோப்புகள் முயற்சித்தும் அவனை வெள்ளையாக்க முடியவில்லை. கல்லை கொண்டு கூட தேய்த்துப்பார்த்தான் சிவப்பு நிறத்தில் இரத்தம் தான் வந்தது.. தான் தைத்த பன் நிறத்திலான கோட்டினால் கூட தன் உடல் வண்ணத்தை மறைக்க முடியவில்லை…. ஷொக்கர் விளையாட்டு அவனுக்குத்தன்னை நிஜமாக வெறுக்க வைத்தது.. தான் மட்டும் வெள்ளையனாகப்பிறந்திருந்தால் அமெரிக்காவின் ஃபேமஸ் கிளப்புகளில் விளையாடும் பாக்கியதை அவனுக்கும் கிடைத்திருக்கும்..

மிசிசிப்பி நதியில் மிதந்து வந்த பந்து ஒன்றை அவனும் வைத்திருந்தான், அதுவும் மூன்று வருடங்களாக… ஏகலைவன் போல கொஞ்ச வித்தைகளை அவனே உருவாக்கி வைத்திருந்தான்.. மழைதூறும்போது செம்மண்குழைந்த சேற்றுக்குள் சேற்றில் புதைந்து மட் புட்போல் விளையாடுவது அவனின் பேவரிட்.. சேரிப்புற அண்ணாமார்களுடன் சில நேரம் ஷொக்கரும் விளையாடி இருக்கிறான்… கோல் கீப்பிங்கில் அவனை அடித்து கொள்ள யாரும் இல்லை..

(unoentrerios.com.ar)

ஆனால் கொஞ்ச நாளாக அந்தப்பந்தைக்காணவில்லை.. ஸ்ரேனி அண்ணாதான் தன் பந்தை எடுத்தது என்று அவனுக்கும் தெரியும் ஆனால் கேட்டால் உதைவிழும். போய்த்துலையட்டும். விட்டுவிட்டான்.. பந்து தொலைந்த நாளில் இருந்து அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை.. அதன் பின் தான் இந்த மேட்டர் நடந்து வருகின்றது.. அவனது சேரிக்கு நான்கு காத தூரத்தில் இருக்கும் புட்பால் க்ளப் அண்ணாமார்கள் சிலரை கைக்குள் வளைத்துவிட்டான்.. நானும் வெள்ளையன் தான் ஏதோ நோய் தொற்றியிருக்க வேண்டும்.. ஒருமுறை பப்ளியைக் கட்டிப்பிடித்தது தப்பாகிவிட்டது அந்த கறுப்பு நாய்க்குட்டி என்னையும் கறுப்பாக்கிட்டுது.

வெள்ளை எனக்கு பிடிக்காத நிறம் அதனால் தான் கறுப்பு மையை அப்பிக்கொள்கிறேன், என விதம் விதமாக கதை சொல்லியும் அவனை அந்த வெள்ளை நிற கும்பல் ஷொக்கர் விளையாட அனுமதிக்கவில்லை.. அந்த பந்தை தொட்டுப் பார்பதற்கு கூட அவன் பல காரியங்கள் செய்யலாயிற்று.. நிறவாதிகள்.. ஒவ்வொரு நாளும் கறுப்பினத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் புட்பால் கிரவுண்டுக்கு வருவதையும் மைதானத்தை விட்டு வெளியே வரும் புட்போல்களை எடுத்து மைதானத்துக்குள் எறிவதையும்.. அந்த கிரவுண்டின் பயிற்றுவிப்பாளர் கவனிக்கத்தவறவில்லை… அவருக்கு அது அருவருப்பைத்தந்தது.. தாம் காலால் அடித்து விளையாடும் பந்தில் கூட அவன் கைரேகை பதியக்கூடாது என்று நினைத்தார். அவனின் வயதுக்கேற்ற குழந்தைத்தனம் அவருக்கு சைக்கோத்தனமான காரியங்களாகப்பட்டது.

ஒருமுறை மைதானத்தில் புட்போலுடன் அவன் நிற்பதை பார்த்த அந்த உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் அவனை அழைத்து கறுப்பன், சைக்கோ எனப்பேசிய வார்த்தைகள் அவனைஅதிகம் யோசிக்க வைத்தன.. இந்த முறை அவன் வழக்கம் போல நதிக்கரையில் அமர்ந்து அழுதுவிட்டு அதை மறந்துவிட எண்ணவில்லை.. சம்மந்தம் இல்லாமல் அவர் கூறிய அந்த வார்த்தை அவனை அதிகம் யோசிக்க வைத்தது.. சைக்கோ.. நான் சைக்கோவா.. சைக்கோ என்றால் என்ன.. சைக்கோ என்ன செய்வான்.. சைக்கோ என்று என்னை பேசுவதற்க்கு காரணம் என்ன இருக்கிறது.. உண்மையில் நான் சைக்கோ என்றால்.. அப்படி இருந்தால் தான் என்ன செய்வேன்.. வேலை வெட்டி இல்லாமல் இருப்பதற்கு சைக்கோவாக இருந்தால் தான் என்ன… உண்மையிலே நான் சைக்கோ தானா என்று படிப்படியாக வளர்ந்த அவன் சிந்தனைகள் அவனை பூரணமான ஒரு சைக்கோவாக மாற்றுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டன.

அந்த பத்து வருடங்களாக அவன் அந்த பகுதியை விட்டு ஊருக்குள் ஒருபோதும் நுளையவில்லை. மிசிசிப்பி நதியின் மயான அமைதி அவன் மூளைச்செல்களின் வேகத்தை துரிதப்படுத்தி இதயத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி அவனை இதயமற்ற அரக்கனாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக அவனுள் பல்வேறு சிந்தனைகளை விதைத்துக்கொண்டிருந்தது. பலமுறை எண்ணிப்பார்த்தான் அவன் கையில் இருந்த புட்போலில் கூட கறுப்பிலும் வெள்ளையிலும் சம எண்ணிக்கையான அறுகோணங்களே இருந்தன.

கடைசியாக அந்த நாள் வந்தது.. அந்த நாளுக்காகவே அவன் தன் வருடங்களை செலவழித்து அசலான திட்டம் ஒன்றைத் தீட்டியிருந்தான்… அத்திட்டத்தின் தேவைகளை சேரிப்புற நண்பர்களைக் கொண்டு பெருக்கி.. தன் கிரியேட்டிவிட்டி கொஞ்சத்தையும் கூட்டியிருந்தான்.. அன்று கிரிஸ்மஸ். சான்ராவின் உடையில் அசைந்த வண்ணம் முதலில் நகரின் எல்லா வீதிகளையும் வலம் வந்தான். நிறைய மாற்றங்கள். அமெரிக்கா அவனுள் ஆசையை விதைக்கப்பார்த்தது… ஆனால் அந்த மிருகம் அவனின் மனிதத்தன்மையோடு சேர்த்து உணர்ச்சிகளையும் மரத்துப்போக செய்திருந்ததால் அவன் ஆடம்பரத்தால் மயங்கவில்லை..

(unoentrerios.com.ar)

தன்னை அண்டிய அனைத்து குழந்தைகளுக்கும் ஆளுக்கொரு கிரிஸ்மஸ் பரிசை கொடுத்து வாழ்த்திவிட்டு அவர்களோடு சேர்ந்து கரோலும் பாடினான்.. தன் திட்டத்தில் எந்தவொரு துகளிலும் பிசகு வர அவன் அனுமதிக்கவில்லை.. கடைசியாக வந்த குழந்தை ஒன்றுக்கு அடிடாஸ் ரகத்தில் ஒரு புட்போலையும் கொடுத்து நத்தார் வாழ்த்தையும் உதிர்த்தான்.. அந்தக்குழந்தைக்கு வயது ஏழுகூட இருக்காது.. வெள்ளைக்கார குழந்தைகள் நம்மூர் குழந்தைகளை காட்டிலும் இயல்பில் படு க்யூட்டாக இருப்பார்கள்.. அந்தக்குழந்தையின் பிஞ்சு முகம் கூட அவனுக்கு வெள்ளையனின் வாரிசு என்று வெறியைத்தான் மேலும் மேலும் விதைத்தது…. சஸ்பன்ஸை உடைத்தால் இரண்டு சென்ரிமீட்டர் கனவளவுடைய அந்தக்குப்பி மிகப்பாதுகாப்பாக அந்த புட்போலினுள் விதைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் வெடி மருந்துகளைக்கொண்டு அவனே தயாரித்த அந்தக்குப்பி சில பஸ்கால் அமுக்கம் கொண்ட உதைகளை சக்தியாக சேமித்து குறித்த அளவு சக்தியை அடைகையில் வெடித்து வாஷிங்டன் நகரை சிதிலம் சிதிலமாக சிதறடிக்கவல்லது… டெக்னிக்கல் பாம் என்ற வகையைச்சார்ந்தது… அவன் திட்டம் அளவானது.. ஆனால் ஆண்டு காலத்திற்க்கு வாஷிங்டனை முடக்கக்கூடியது.. தன் ஊடல் நிறைவேறப்போகின்றது. தன்னை பழித்த வெள்ளையர்களின் இரத்தம் ஊறிய செம்மண் மைதானங்களில் ஷொக்கர் விளையாட இன்னும் சில காலங்களே இருக்கின்றன.. வானத்தை நோக்கிக் கண்களை மூடி கைகளை விரித்துஅந்த திருப்தியை அனுபவித்துக் கொண்டிருந்தான்..

யாரோ காலைப்பிடித்து இழுக்க. குனிந்து பார்க்கிறான்.. அதே குழந்தை….” தாத்தா தாத்தா இந்தப்பந்து காற்றுப்போய்விட்டது. வேறு ஏதும் பந்து இல்லையா…நீ க்ரிஸ்மஸ் தாத்தா தானே.. அப்ப இந்தமுறை பீபால பெனால்டி அடிச்சாரே… கறுப்பின ஷொக்கர் விளையாட்டு வீரன் ஸ்ரேனி..அவர் சின்ன வயதில் விளையாடிய பந்த எடுத்துக் கொண்டு வா… இத நீயே வச்சுக்கோ என்றது.” முதலில் அந்தச்சொல் அவ்வளவாக அவனைப் பாதிக்கவில்லை..

சில நிமிடம் அந்த குழந்தையின் ஷர்ட் ல் இருந்த ஸ்ரேனியின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.. இவர் தான் ஸ்ரேனி என்றது அந்தக்குழந்தை..மேலும் தனது மழலை மொழியில் தான் பார்த்து கேட்டு அறிந்து கொண்ட ஸ்ரேனியின் அருமை பெருமைகளை அவிழ்க்கத் தொடங்கியது..அவை எல்லாம் அவன் காதில் ஏறவே இல்லை.. அவன் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்…ஸ்ரேனி….?!! இது என்னிடம் பந்தை களவாடிய அதே ஸ்ரேனி அண்ணாவின் புகைப்படம்.. அவன் தான் அந்த புகழ் பெற்ற ஷொக்கர் விளையாட்டு வீரனா.. என்னைத்தாண்டி அவன் ஒருமுறை கூட கோல் அடிக்கவில்லையே பிறகு எப்படி.. அது இருக்கட்டும் இந்த வெள்ளையனின் குழந்தை ஸ்ரேனியின் முகம் பதித்த இந்த சட்டையை போடுவதற்க்கு இவன் அம்மா எவ்வாறு அனுமதித்தார்.. கடைசியாக “தாத்தா பந்து இல்லை என்றால் பரவாயில்லை போய்வருகிறேன்” என்றது அக்குழந்தை.. அந்தப்பந்து..

தேம்ஸ் நதிகரையில் நான் எடுத்த அதே பந்து.. அந்தப்பந்தை தான் அந்தக்குழந்தை கேட்கிறது.எ..ப்படி சொல்வேன் ஸ்ரேனி என்னிடம் தான்.!?…!?.. நானும் … ஆண்டவா.. தலை சுற்றியது.நினைவிழந்தான்… மீண்டும் கண் முழிக்கையில் அந்த குழந்தையை காணோம்.. அந்தக் காற்றுப்போன பந்து அவன் கையில் இருந்தது..மிசிசிப்பி நதிக்கரையில் மீண்டும் ஒரு பந்து … அருகில் அவனும் …. இந்த முறை இரண்டுக்கும் காற்றுப்போய் இருந்தது..

 

 

Related Articles