ஆள்வராத கோயிலு

ஆறு கால பூசைக்கும் ஆள் வந்து நின்னு  சாம பூசை பண்ணி இருட்ட  வீட்டுக்கு வந்தா ஒரு நியாயம் இருக்கு!.  ஆள் வராத கோவிலு, இருட்ட முன்னவாது வரலாம்ல?  கும்பாவில் கஞ்சிய ஊத்தி வத்தலும் நாரத்தங்காய் ஊறுகாயை வட்டில் வைத்து விட்டு  என்னைக்கும் பாடும் பல்லவி என்றாலும் இன்றைக்கும் பாடினாள் “சேனத்துப்பட்டி  பாண்டி பூசாரியின் மனைவி, போதும்பொண்ணு”.

மதுரையில இருந்து சிவகாசி போர வழியில இருக்கு சேனத்துப்பட்டி. சேனத்துப்பட்டிக்கும் பொன்னாக்குளத்துக்கும் இடையில “மூணு கல்லு தூரம் காட்டுபாதையில போனா!, ஆயிரம் யானை வந்து இழுத்தாலும் அசையாத, பத்து பேர் கூடி நின்னும் கட்டிப்புடிக்க முடியாத ஆலமரம் பக்கத்துல, சுத்தி நாலு சுவரு வச்சு  மேல ஒரு தடுப்பு வச்சு உடம்பெல்லாம் எண்ணெய் வழிய கரு, கரு என ஆள் உயர நிப்பாரு நடுக்காட்டு பாண்டிச்சாமி”.

ஆளுவந்தா சிங்காரிச்சு நிக்கவும், ஆள் இல்லனா மூளியா மூலையில குந்தவும் அவரு என்ன வயசுக்கு வந்த பொட்டச்சியா?, ஊர காக்குற சாமிடி!. ‘கழுதை முண்டை’ உனக்கு எங்க அதுலாம் தெரிய போது என்று பூசை சாமான்களை கழுவியபடி சிடு சிடுத்தார் பூசாரி பாண்டி .

இருட்டுல வர மனுஷன் பூச்சி பொட்ட கடிக்கிமேனு சொன்னா கழுதை முண்டையாம்ல!, நல்ல பாம்பும் நீயும் ஒன்னுயா! பால் வச்சாலும் கொத்தாமலா இருப்பிங்க? அடுப்படியில் பானையை சத்தமாக உருட்ட ஆதம்பித்தாள் போதும் பொண்ணு .

வீட்டுக்கு வர ஆம்பளைய ஏதாவது சொல்லி சோறு திங்கவிடாம பண்ணனும் அதானே உன் எண்ணம் கஞ்சி கும்பாவை தள்ளிவட்டார் பாண்டி பூசாரி.

ஐந்து வருஷத்துக்கு முன்ன வர வருஷா வருஷம் திருவிழா! ஆடி அம்மாவாசை பூசைனு இருந்த கோவில். ஊர் தலைவர் மகனோட  கல்யாண பத்திரிகை வச்சுட்டு வர வழியில நெஞ்சு வலி வந்து செத்து போயிட்டாரு!, அதுக்கு 18வது நாள் நேத்திக் கடன் செலுத்திட்டு போன ஒரு குடும்பம் பொன்னாக்குளம் ரோட்டுமேல ஆக்சிடண்ட் ஆகி செத்துப்போக அதோட அனாதையா போனாரு “நடுக்காட்டு பாண்டி”. எப்பவாது அசலூர் காரனுக நேத்திகடன் செலுத்த வந்தா உண்டு.

ஏங்க, நம்ம மாரி அத்தான் சொன்னாவ, கோயில் பூசாரிகளுக்கு அரசாங்கம் சம்பளம் தருதாம்ல!. போஸ்ட்மேன் அய்யாட்ட என்ன ஏதுனு கேட்டு எழுதிப் போடலாம்ல?. பூசை சாமன்களை பையில் வைத்து விட்டு காலை பூசைக்கான பூ கட்டிய படி கேட்டாள் போதும் பொண்ணு.

இராப்பொழுது அடஞ்சாலும் சரி காலைல விடுஞ்சாலும் சரி உன் கூட ரோதனையா போச்சு!. பரம்பரை பரம்பரையா தொண்டூழியம் பண்ணவங்கடி, மாச சம்பளத்துகு தொண்ணாந்து பூசை பண்ண சொல்றியா? குளித்து ஈரத்தலையை துவட்டியபடி கேட்டார் பூசாரி.

தட்டுல விழுற காசு மட்டும் இனிக்குதோ? அரசாங்கம் தரத ஏன் வேணாம்னு சொல்லனும்? கடைசி கண்ணியை கட்டி முடித்து வெடுக்கென நாரை அத்து , கொஞ்ச பூவை தலைக்கு என எடுத்து வைத்து கொண்டாள்.

தட்டுல காசு போடுறவன் என்னைய சாமியா நெனச்சு, காலுல விழுந்து நீதான்யா அந்த பாண்டி சாமினு சொல்லி குடுக்கிறாண்டி. என் காணிக்கை நான் எடுத்துகிறேன், உண்டியல் பணம் ஒரு ரூபாய் தொட்ருப்பனா இது வர?. 6 மாசத்துக்கு முன்னாடி சிங்கப்பூர்ல இருக்க பெரிய கருப்பு மகளுகளுக்கு குழந்தை இல்லைனு “திருநீர் ” கொடுத்து விட்டேன், இந்தா முழுகாம இருக்கதா கடுதாசி அனுப்பி வெளிநாட்டு தைலம் கொடுத்து விட்றுகாக. சும்மா இல்லடி துடியான சாமி!.

நீங்கதான் மெச்சுக்கனும், ஊர் தலைவர் மகன் பொன்னாக்குளம் ரோட்டு மேல பெருமாள் கோவில் கட்ராப்ல. இனி வர ஒன்னு ரெண்டு சனமும் வராது பாருங்க என்று கட்டிய பூவை புருஷன் கையில் திணித்து விட்டு விருட்டென ஆடு மேய்க்க போய் விட்டாள்.

எப்பவும் போற பாதையை மாத்தி பொன்னாக்குள ரோட்டு பாதையை வழியே நடக்க ஆரம்பித்தார் பூசாரி. பூசாரி அய்யா என்ன! எனைக்கும் இல்லாத திருநாளா இந்த பாதை வழியா போறிங்க? ஊர்த் தலைவர் மகன் சின்ன பாண்டி தான் கேட்டது .

இல்லைங்க தம்பி இந்த பக்கமா ஒரு வேலை அதான்!. ஏப்பு என்ன திடீருனு கோயில் எல்லாம்?

இல்லைங்க பூசாரி, அப்பா காட்டு வழியில கேயிலுக்கு போனதாலதான் நாதி இல்லாம செத்து போனாரு, இப்ப யாரும் காட்டு கோயிலுக்கும் போறது இல்லை, அதான் வெளிநாட்டுல இருக்க நம்ம ஊரு காரவங்க, ஊர் வரி, நம்ம ஊர் எம்.எல்.ஏ-னு பணம் வசூல் பண்ணி கட்ட ஆரம்பிச்சாச்சு. மலையாள மாந்ரீகர்ல வச்சு உருவேத்தி கட்ரோம். ஒரு மாசத்துக்குள்ள முடுஞ்சுரும் .

சரி தம்பி அப்ப நான் கொளம்புரேன்!.

காட்டுக் கோவில்,  பாண்டிச் சாமிக்கு முன் இருக்கும் ரெண்டு பைரவர்க்கும் பழைய பூவை மாத்தி புது பூ வைத்தார். மந்தரவாதிலா உன் எல்லைக்குள்ள வந்துருக்கான்க, என்ன காவல் காத்திங்க நீங்க?. அடுத்து பாண்டிக்கு முன்னவர் மதுரை வீரன் சிலை, ஏப்பா எல்லாத்துக்கும் பாண்டியே போக முடியுமா? குதுரைலா எதுக்கு வச்சிருக்கீறு? நம்ம எல்லைக்கு இன்னொரு ஆள் வரப்போறாறு சொல்லிட்டேன் பாத்துக்கோ!. பாண்டி சாமி சிலை , எப்போதும் போல பழைய வேட்டியை கழட்டி புது வேட்டி சாத்தினார். மாலை , பூ என எல்லாவற்றையும் மாற்றினார். சந்தனம் குங்குமம் வைத்து சூடம் காட்டி பூசையை ஆரம்பித்தார்.

“ஊர் காக்கும் அய்யாவே வானம் மழை பெய்யோனும்” டிங், டிங், டிங்

“பார் ஆளும் பாண்டி அய்யாவே பஞ்சம் இல்லாம காக்கோனும்” டிங், டிங், டிங்

“காட்டுக்குள் நிற்பவனே காடு கரை காக்கோனும்” டிங், டிங், டிங்.  மணியை கீழ வைத்து விட்டு, பாண்டிச்சாமியை பார்தார் பூசாரி.

“கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பஞ்சம் வந்தப்ப பதறி திருவிழா எடுத்தான்களே அப்டி எதாவது பண்றியா பாண்டி அய்யா”? காட்டுப்பாதை சரி இல்லைனா ரோடுதானே போடனும்! சாமிய மாத்துறான்க புத்தி கெட்டவன்க!. இல்லைனா ஏதாவது பெரிய விஷ காய்ச்சல் ஏவி விடு! திருநீர் வாங்க இங்க தானே வந்தாகனும்!! என்ன நான் சொல்றது!. வேணா வேணா, நீ ஒரு கூறு கெட்ட சாமி! சின்ன பிள்ளைங்க, புள்ளைத்தாச்சி-னு பேதம் பாக்காம காய்ச்சல விடுவ .

கறி தின்னு நெஞ்சு வலி வந்து செத்ததுக்கும், குடிகார டிரைவர் வண்டி ஓட்டி செத்ததுக்கும் நீயா பொறுப்பு? ஊர் பெரிய தல கட்டு கனவுல போய் எதாவது செல்லு பாண்டி அய்யா!. கண்ணுக்கு எட்டுற தூரத்துல பங்காளி வர போராறு உனக்கு சொல்லிட்டேன் பாத்துக்கோ!. அப்டியே என் பொண்டாட்டி வாய் அடைக்க எதாவது செய் ஓரு மாசம் தான்யா இருக்கு. தெய்வம் நின்னுதான் செய்யும்னு கல்லா நிக்காம, வெரசா செய் சொல்லிப்புட்டேன்.

ஏங்க, புது கோயில் இரண்டு நாளுல கும்பாபிஷேகம் பண்ணி தெறக்குறாக நம்ம செவங்கை எம்.எல் ஏ வச்சு தெரியும்ல? குத்தலாக கேட்டாள் போதும் பொண்ணு.

போன பாண்டி அய்யா திருவிழா, நான் கரகம் தூக்கி நடந்து வந்தப்போ நெடுஞ்சான் கெடையா காலுல விழுந்து நீ கொடுத்த திருநீர்லதான் செயிச்சேன் பாண்டி அய்யானு சொன்னாரு நியாபகம் இருக்கா? ஓரக் கண்ணால் பார்த்தார் பூசாரி.

நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றிங்க?, ஊர் தலைவர் பையன் இல்லைனா எம்.எல்.ஏ பாத்து புது கோயிலை நீங்களே பார்த்துக்குறேனு கேளுங்களேன். நீங்க சொன்னா மறுப்பா சொல்ல போறாங்க?. முகத்தை அப்பாவி போல் வைத்து கொண்டு கேட்டாள் .

எட்டாவதும் பொண்ணா உன்ன பெத்து, போதும் பொண்ணுனு பேர் வச்சாங்க பாரு அவுங்கள சொல்லனும்! ஏழுக்கே அந்த பேரை வச்சு முடுச்சுருந்தா நானாவது நிம்மதியா இருந்துருப்பேன். சற்றே உரத்த குரலில் கத்தினார் பூசாரி

ஏன்? நான் என்ன பண்ணேன்! சோத்துக்கு இல்லைனு கை ஏந்தவா சொன்னேன்! அந்த கோயிலையும் சேர்த்து பார்த்து குடியா முழுகி போய்ரும்? கண்ணீரை துடைத்து மூக்கை சிந்தி நெட்டி முறித்தாள் போதும் பொண்ணு!.

ஏன்டி, கோயில் கட்ட போறம்னு மரியாதைக்கு கூட சொல்லாத சின்ன பயல்களுட்ட என்ன கைய கட்டி நிக்க சொல்றியா? அது மட்டும் இல்லாம அவனுக பெருமாள் கோவில் கட்றானுக சமஷ்க்கிருத்துல மந்திரம் சொல்ற அய்யமார்ல கேப்பான்க! நான் எங்க போரது? தரையை பார்த்து தான் சொன்னாரு பூசாரி

என்னமோ பண்ணுங்க. நாளைக்கு என் மகன்  ஹாஷ்டல்-ல இருந்து விடுப்புக்கு வறான் அவனுக்கு கறி, மீனு ஆக்கிப் போட ஊருக்கு போகும் போது பரிச்சைக்கு கட்ட பணம் குடுக்கனும். அதுக்கு உங்க பாண்டி அய்யாட்ட வாங்கிட்டு வாங்க! சொல்லிவிட்டு பூசாரியை பார்த்தாள். இன்னைகி பூ கட்டவில்லை

ஊருக்கே படி அளக்குறவரு அவர் புள்ளைய விட்டுருவாரா?.பூசை சமான்களோட கேயில் போனாரு, பூ இல்லையே! என்ற எண்ணத்தோட அவருக்கு முன்னாடி அங்க ஒரு குடும்பம் நின்றது.

என்ன பூசாரி அய்யா வெள்ளனமா எப்பவும் வருவிங்கனு சென்னாங்க, இவ்ளோ பிந்தியா வரது? பெரிய மீசை வைத்த நபர் கேட்டார்,

இல்லைங்க, கொஞ்சம் உடம்புக்கு சொகம் இல்ல அதான். ஆடு, மாலை, பூ என அனைத்தையும் பார்த்ததும் பூசாரிக்கு சந்தோசம் தாங்கவில்லை. ஊர் வழக்கப்படி 2 காலும் தலையும் பூசாரிக்கு, வசதியான குடும்பம் என்றால் 500-1000 எல்லாம் கிடைக்கும். குறைந்த பட்சம் இருநூறு அது போதும் என்று பம்பரமாய் சுத்தினார் பூசாரி.

காவல் தெய்வமான பைரவர்களுக்கும், முன்னவர் மதுரை வீரனுக்கும் எண்ணெய் தேய்த்து புது வேட்டி சாத்தினார். அடுத்து “பாண்டிச் சாமி ” அதானே பாத்தேன் என் வீட்டில் பூ இல்லனதும் வெளியூர்க்காரன விட்டு எடுத்துட்டு வர வைக்கிற, விவரமான சாமிதான நீ! அலங்காரம் முடிந்து அடுத்து கிடாய் பலி!.

மஞ்ச தண்ணிய ஊத்துனதும் தலைய சிலுப்ப ஓங்கி ஓரு வெட்டு! எப்பவும் துண்டாய் விழும் தலை பாதியாய் தொங்கி நின்றது!. மீசைகார் முகம் சுருங்கியது. என்ன பூசாரி!.. இழுத்தார் மீசைக்கார்ர்.

அதலாம் ஒன்னும் இல்லையென்று சொல்லியும் அவர் மனம் ஒப்பவில்லை. கிடாய் பலி இன்னொரு நாள் கொடுத்துக்கிறோம் என்று சொல்லி பொங்கலை மட்டும் வைத்து விட்டு 11 ரூபாய் வெற்றிலையில் வைத்து பூசாரியிடம் கொடுத்து ஆட்டையும் தூக்கிக்கொண்டு கிளம்பியது அந்த குடும்பல்

வெளிச்சம் மறைய ஆரம்பித்தது. நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாண வேடிக்கை ஆரம்பம் ஆனது . வெடிச் சத்தத்தை கேட்டார் பூசாரி , எழுந்து துண்டை இடுப்பில் கட்டினார் நெடுஞ்சான் கிடையாக பாண்டிச் சாமி முன் விழுந்தார், “அந்த பதினொரு ரூபாயையும் உண்டியலில் போட்டார். தனியா இருந்து பழகிக்கோ பாண்டிச்சாமி என சொல்லிவிட்டு கோயில் குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் பூசாரி!..

Related Articles