நீங்களும் ஆகலாம் ஸ்பைடர் மேன் – Cosplay

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையத்தை சுற்றிவரும்போது, இலங்கையில் திடீரென தோன்றிய ஸ்பைடர் மேன் பேரூந்துக்காக காத்திருப்பது போலவும், சிலருக்கு வீதியை கடக்க உதவுவதும் போன்ற புகைப்படங்களை கடந்து போயிருப்பீர்கள். சிலவேளை நீங்கள் இதனை புதிய ஸ்பைடர்மேன் திரைப்படத்துக்கான விளம்பரமாகவோ அல்லது ஏதேனும் உபயோக பொருட்களுக்கான விளம்பரமாகவோ நினைத்துதான் நிச்சயமாக கடந்து போயிருப்பீர்கள். அப்படியே கடந்து போயிருப்பினும் உங்கள் எண்ணங்களில் தவறில்லைதான். ஆனால், அப்படி கடந்து செல்லும்போது இந்த புதியவகை விளம்பர முயற்சியின் பின்னால் ஒளிந்துள்ள அல்லது நாம் அறியாத ஒரு கலைவடிவத்தினை (Art Form) நாம் கவனிக்கவோ, கண்டறியவோ தவறிவிட்டோம் என்றே சொல்லவேண்டும்.

மேற்பத்தியை வாசிக்கும்போது, நிச்சயம் ஸ்பைடர்மேன் போல கடந்த வருடத்தில் சில பிரசித்தமான கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நிகழ்வான Lanka Comic Con கூட சிலரது நினைவுக்கு வந்திருக்கக்கூடும். அப்படியாயின் இவை எல்லாம் என்ன என்று ஆராய்ந்து பாத்திருப்போமானால், நிச்சயம் நமக்கு CosPlay எனப்படுகின்ற கலைவடிவம் தொடர்பில் அறியக் கிடைத்திருக்கும்.

CosPlay என்பது என்ன ?

Cosplay கலையில் ஈடுபடும் அஷானி மரியான் பொன்சேகா, உஷான் குணசேகர மற்றும் தாரக சுகததாச
Image credit: Prasanna Welangoda

பாடசாலைக் காலங்களில் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் எது இல்லையோ, கட்டாயமாக சிறுவர்களுக்கான போட்டியில் வினோத உடைப் போட்டி நிச்சயமாக இடம்பிடித்திருக்கும். குறைந்தது ஒரு தடவையாவது அந்தபோட்டியில் கலந்துகொண்டவர்களாகவே நாமும் இருப்போம். அந்த அடிப்படை போதும் இந்த CosPlay என்கிற கலைவடிவத்தை பற்றிய ஆரம்ப அறிமுகத்தையும், உள்ளார்ந்த அர்த்தத்தையும் அறிந்துகொள்ள!

CosPlay என்கிற கலைவடிவம் ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதாகும். இந்த CosPlay என்கிற வார்த்தையே இரண்டு ஆங்கில சொற்களை இணைத்து உருவாக்கம் பெற்றதாகும். அந்த இருசொற்களுமே Costume (உடை), Play (விளையாட்டு) ஆகும். பெரும்பாலும் இந்த CosPlay கலைவடிவமானது, பெரும்பாலும் கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கும் ஒரு கலையாகவே உள்ளது.

இந்த கலைவடிவத்தைனை கீழ்வரும் நான்கு முறைகளின் மூலமாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

கதை சொல்லி (Narrative) – கற்பனை கதாபாத்திரத்தின் ஆளுமையையும், அதன் கதையும் சொல்லும் முறையை இது உள்ளடக்கி இருக்கிறது. அதாவது, CosPlay கலைவடிவத்துக்கும், கதாபாத்திரத்துக்கும் உயிர்கொடுப்பவர் குறித்த கதாபாத்திரத்துக்குள்ள கதை, வரலாறுகளை உள்ளடக்கி ரசிகர்களுக்கு புனைவு வழியாக புதியவற்றையும் உள்ளடக்கிய கதையை சொல்லுவதாக இருக்க வேண்டும்.

ஆடை (Clothing) – CosPlayயின் மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஆடை வடிவமைப்பு ஆகும். குறித்த கதாபாத்திரக்காரர் எவ்வளவு தூரம் குறித்த கதாபாத்திரத்துடன் ஒன்றித்து, ரசிகர்களையும் ஒன்றிக்க வைக்கிறார் என்பதனை இந்த கலைவடிவத்தில் ஆடை வழியாகவும் தீர்மானிக்கிறார்கள். எனவேதான், மேற்கத்திய நாடுகளில் CosPlayerகள் தனியே நடிகர்களாக மாத்திரமின்றி, தங்களுடைய ஆடைகளைக்கூட வடிவமைக்கத் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில், ஆடை வடிவமைப்பில் உள்ள விடயங்களை வடிவமைப்பு தேர்ச்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும், அதன்போது, CosPlayers அதன் துல்லியத்தில் மிகுந்த கவனத்தை செலுத்துவார்கள்.

நடிப்பு (Play) – புனை கதாபாத்திரங்களுக்கான கதையும், ஆடை வடிவமைப்பும் CosPlayக்கு பாதிவடிவத்தை கொடுப்பதுபோல, நடிப்பு அதனை பூரணப்படுத்துகிறது என சொல்லலாம். குறிப்பாக, குறித்த கதாபத்திரத்துக்கெனவுள்ள விசேடமான பண்புகள், பழக்க வழக்கங்கள், ஆளுமை தன்மைகள் என்பவற்றை அச்சுப்பிசகாமல் நடிப்பில் கொண்டுவரவேண்டியது அவசியம். இதுதான், ஆரம்பத்தில் ரசிகர்களை குறித்த நடிப்புடன் பொருந்திப்போகச் செய்வதுடன், அதனுடன் சேர்த்து சொல்லப்படும் கதைக்குள்ளும் ஒன்ற வைக்கும்.

நடிகர் (Player) – CosPlay நடிகர்களின் மிக முக்கிய பணி, கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதாகும். அதற்காக, அவர்கள் அந்த கதாபாத்திரமாக தங்களை மாற்றிக்கொள்ளுவதிலும் பார்க்க, குறித்த கதாபத்திரங்களுக்கான அம்சங்களுடன், தங்களுடைய அடையாளங்களை நடிப்பு மற்றும் ஆடைகளின் மூலமாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

ஒபுலா பொன்சேகா Image credit: Himal Kotelawala

பெரும்பாலும் திரைப்படங்கள் வழியாக, புனைவு கதைகள் வழியாக பெரும்பாலான கதாபாத்திரங்களை கடந்து செல்லும்போது, அந்தந்த கதாபாத்திரங்களின் பண்புகள் சில நம்மை ஈர்ப்புக்குள்ளாக்கும். குறைந்தது ஒரு தடவையாவது அந்த கதாபாத்திரங்களாக வாழவோ, செயல்படவோ முயற்சித்து பாத்திருப்போம். ஆனால், எல்லோருக்கும் அந்த கலை வசப்படுவதில்லை. அதனை வசப்படுத்திக் கொண்டோர்களே Cosplay எனும் கலையின் மூலமாக, அந்ததந்த கதாபாத்திரங்களின் இரசிகர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இலங்கையில் CosPlay

CosPlay கலைவடிவமானது ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தனது தோற்றத்தை பெற்று, அவற்றின் தாக்கத்தின் வழியான ஏனைய நாடுகளுக்கு பரவி அபரிதமான வளர்ச்சியைப் பெற்று இன்று இலங்கை வரை வந்தடைந்திருக்கிறது என்று சொல்லலாம். நூற்றாண்டு கால வரலாற்றை கொண்ட ஒரு கலைவடிவத்தின் அறிமுகமும், ஈர்ப்பும் தற்போதுதான் இலங்கைக்குள் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தியிருப்பது வியப்பாக இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. இலங்கையில் மட்டுபடுத்தபட்ட வளங்களை கொண்டுள்ள இந்த கலைவடிவம் அதன் ஆரம்பநிலையில் உள்ளபோதிலும், அதில் ஈடுபாடு கொண்டவர்களால் மிகத் திறம்பட முன்னெடுக்கப்படுகிறது என்றே சொல்லவேண்டும்.

ஆடை வடிவமைப்பு

இலங்கையில் Cosplay கலைவடிவத்தினை பொறுத்தவரையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஆடை வடிவமைப்பாக உள்ளது. பெரும்பாலான கதாபாத்திரங்கள் மேற்கத்திய தாக்கங்களுடன் இருப்பதனால், அதனை, இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவரும்போது ஆடைகளில் துல்லியத்தன்மையை பேணுவதில் சிக்கல்நிலை காணப்படுகிறது. Cosplay தொடர்பில் Youtubeல் நிறையவே காணொளிகள் உள்ளன. அவற்றில் ஆடைவடிவமைப்பு காணொளிகளும் உள்ளது. ஆனால், அவற்றில் குறிப்பிடுவதுபோல உயர்தரமான பொருட்களை பெறுவதிலும், துல்லியத்தன்மையை பேணுவதிலும் Cosplay இங்கே ஆரம்பநிலையில் உள்ளதால் சிக்கல்நிலை நிலவுகிறது.

இலங்கையின் ஒரு Cosplay நடிகரான பொன்சேகா அவர்களிடம் இது தொடர்பில் வினவியபோது, Cosplayக்கான கதாபாத்திரங்களை தெரிவு செய்யும்போதே, அதற்கான ஆடையை வடிவமைக்கும் அல்லது தேடும் கடினமான வேலையும் சேர்ந்தே தொடங்கிவிடுவதாக கூறுகிறார். ஆரம்பகாலமான Cosplay இங்கே வளர்ச்சியடையாத நிலையில், பொருத்தமான பொருட்களை எங்கே தேடுவது என்கிற குழப்பத்திலேயே காலத்தை வீணாக்கவேண்டி ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார். பின்பு Cosplayயில் ஈடுபாடு கொண்டுள்ள நபர்களை , குழுக்களை அடையாளம் காணத்தொடங்கிய பின்பு, இந்த பிரச்சனை ஓரளவுக்கு குறைவடைந்துள்ளபோதிலும், இதற்க்கு நிரந்தர தீர்வு என்பது கிடக்கைவில்லை என்பதாகவுள்ளது அவரது கருத்து வெளிப்பாடு. சில சமயங்களில் ஆடைகளை வாடகைக்கு எடுக்க நேர்வதுடன், சில பொருட்களை புறக்கோட்டை உட்பட சிலவகை கடைகளில் தேடிப்பெற்றுக்கொள்ளுவதாகும் குறிப்பிடுகிறார்.

ஜோக்கர் வேடத்தில் ஓஷித நாரங்கோட Image credit: Prasanna Welangoda

இவரைப்போல, கடந்த வருடத்தில் இலங்கையின் Lanka Comic Con கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Cosplay நிகழ்வில் Badman திரைப்படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று பலரதும் பாராட்டை பெற்ற ஓஷித நாரங்கோட (Oshitha Narangoda) குறிப்பிடுகையில், ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு அவசியமான ஊதா நிற கோட் (Coat) ஒன்றை பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல்நிலையை எதிர்கொண்டதாக குறிப்பிடுகிறார். தையல் கலையில் தேர்ச்சியின்மை காரணமாக, தன்னால் இதனை செய்துகொள்ள முடியாத நிலையில், செலவுகளையும் கணக்கில்கொண்டு தையல் தேர்ச்சியாளர் ஒருவரின் உதவியுடன் இறுதியில் குறித்த உடையை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.

அதுபோல, Cosplay கலைவடிவத்தை உள்வாங்கி நடிக்கும்போது, அதன் துல்லியத்தன்மையை முடிந்தவரை பேணுவதுதான் கடினமான இலக்காக உள்ளதாக குறிப்பிடுகிறார். குறித்த கதாபாத்திரமாக மாறியபின்பு செய்யக்கூடிய சிறுபிள்ளைத்தனமான விடயங்களில் கூட கதாபத்திரத்தின் துல்லியத்தன்மை பேணப்படுவது அவசியம் எனவும் சொல்லுகிறார். இல்லையெனில், பார்வையாளர்கள் மற்றும் இரசிகர்களிடம் நீங்கள் பரிமாறிக்கொள்ளவேண்டிய தகவலை செயற்படுத்த முடியாதநிலை ஏற்படும் எனவும் கருதுகிறார்.

அவரது கூற்றிலுள்ள உண்மைகள் போலவே, வளர்ந்துவரும் இந்த கலைவடிவத்தின் அடுத்த கட்டம் இங்குள்ள Cosplayersல் தங்கியுள்ளதும் நிதர்சனமானது. Cosplayers தமக்கிடையே மிக உறுதியான கட்டமைப்பை வளர்த்துக்கொள்ள வேண்டியது தற்போதைய நிலையில் அவசியமாகும். குறிப்பாக, ஆரம்பநிலையில் உள்ளதால், மக்களிடமிருந்து அதிக ஆர்ப்பரிப்பையும், ஊக்கபடுத்தல்களையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, Cosplayers தங்களுடைய நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள தங்களுக்கிடையில் ஒரு சுமுக உறவையும், ஊக்கப்படுத்தல் பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது, அவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதுடன், மேலும் மேலும் வேறுபட்ட கதாபாத்திரங்களின் ஊடாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும், மக்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளவும் ஒரு உந்துசக்தியாக அமையும்.

மேலே கூறியதற்கு ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறும் The San Diego Comic Con நிகழ்வு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது. வருடம்தோறும் இடம்பெறும் இந்த நிகழ்வில் CosPlay நடிகர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் , இந்த நிகழ்வுடன் தொடர்புடைய மற்றும் ஆர்வம் கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்குகொள்ளுகிறார்கள். இது அவர்களிடம் சிறந்த தொடர்பை வளர்த்தெடுப்பதுடன், புதியவர்களுக்கும் இந்த கலைவடிவம் தொடர்பில் ஒரு அறிமுகத்தையும், ஆர்வத்தையும் வழங்குவதாக அமைகிறது.

ஆனால், இலங்கையில் அந்தநிலை வேறுவிதமாக இருக்கிறது. CosPlayers தமக்கான அடையாளத்தையும், ஒரு சமூகத்தையும் உருவாக்குவதில் பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு இக்கலை தொடர்பில் அறிவூட்டல்கள் போதியளவில் இல்லாதநிலையில், அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளுவதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

CosPlayயின் எதிர்காலம் ?

ஜீவன் சுகுமாரன் Image credit: Prasanna Welangoda

இலங்கையில் கடந்த வருடங்களில் CosPlayயின் வளர்ச்சி அபரீதமானதாக இருந்திருக்கிறது. அதிலும், இவற்றுக்கு ஆதரவாக உள்ள The Geek Club of Sri Lanka இதற்கு ஒரு ஆதரவான ஆரம்ப முயற்சியாக இருக்கக்கூடும். அத்துடன், இந்த கழகத்தால் தோற்றுவிக்கப்பட்ட Lanka Comic Con கழகத்தால் CosPlay செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதுடன், அதனை வளர்த்தெடுக்க தேவையான அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இது இலங்கையில் CosPlay கலைவடிவத்தை வளர்த்தெடுப்பதுக்கான முயற்சியாக உள்ளது.

குறிப்பாக, The Geek Club தற்போதைய நிலையில், இலங்கையின் வரலாற்றில் உள்ள கதைகளுக்கு CosPlay கலைவடிவத்தின் ஊடாக வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது நிச்சயமாக, இங்குள்ளவர்களின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைவதுடன், அதனுடன் இணைந்ததாக இந்த கலைவடிவத்தை தெரியப்படுத்த முடிவதுடன் பிரபலப்படுத்தவும் முடியும். உதாரணமாக, இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த சிங்கபாகு என்கிற கதாபாத்திரத்தை Comic கதாபாத்திரமாக உருவாக்க முனைவதுடன், CosPlay கலை ஊடாக வடிவம் கொடுக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள்.

இது இலங்கையின் தொன்மையான வரலாறுகளையும், கதாபாத்திரங்களையும் மக்களுக்கு மீள்நினைவுபடுத்தி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுடன், கூடவே CosPlay கலையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை வாசித்து முடிக்கும்போது CosPlay தொடர்பில் ஒருவித ஆர்வம் ஏற்பட்டு இருக்குமாயின் அல்லது குறித்த CosPlay கலைவடிவத்தில் ஒரு அங்கத்தவராக இணைய விருப்பம் இருக்குமாயின், நிச்சயமாக கொழும்பில் உள்ள SLECC அரங்கில் இடம்பெறும் the Asus Lanka Comic Con 2017 என்கிற நிகழ்வில் வாய்ப்பை தவறவிடாது பங்குகொள்ளுங்கள். இந்த நிகழ்வு August 26 (10:00 a.m. ‒ 8:00 p.m.)  மற்றும் 27 (10:00 a.m. ‒ 6:00 p.m.) ம் திகதிகளில் இடம்பெறுகிறது. இது நிச்சயம் உங்கள் தேடலுக்கும், திறமைக்கும் தீனி போடுகின்ற நிகழ்வாக அமையக்கூடும்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை – Roar Media Network

Related Articles