உலக அரங்கில் சாதனை படைத்து வரும் இந்திய மகளிர் கிரிக்கெட்

“அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற காலம் ஓடி இன்று ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அளவிற்கு எங்கள் பெண்கள் சாதித்து உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் நாம் பெண்கள் பெருமையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. சங்க காலத்தித்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்தனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களோடு இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு. சங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும்  பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் வீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் நாம் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா?  இவையனைத்தும் ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருக்கிறது அவள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பெண்கள் வாழ்ந்த நம் நாட்டில் இன்றும் பெண்கள் பல வியத்தகு சாதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பி.டி.உசாவின் சாதனைகளில் தொடங்கி, சாந்தி, சானியா மிர்சா, சாய்னா நேவால், பி.வி.சிந்து, மேரி கோம், தீபிகா குமாரி என பல இளம் பெண்கள் இந்திய விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு உலக அரங்கில் சாதனை படைத்துப் பல பதக்கங்களைப் பெற்று வந்துள்ளனர். அதில் தற்போது நம் அனைவரையும் ஈர்த்த ஒரு சாதனை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

படம்: scoopwhoop.com

நமக்கு கிரிக்கெட் என்றால் நினைவுக்கு வருவது இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர் தொடங்கி அகில உலக கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான சச்சின் கடந்து தற்போது தோனியும், விராட் கோலியும் தான். ஆனால் ஆண்களுக்கு நிகராக நாங்களும் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்தவர்கள்தான் என்று நிரூபித்துக் காட்டிய மிதாலி தலைமையிலான மகளிர்க்கான கிரிக்கெட் விளையாட்டையும் அவர்களின் சாதனைகளையும் பற்றிய கட்டுரைதான் இது.

படம்: bcci

இதுவரை நடைபெற்ற மகளிர் உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆடிய பத்து முறையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறைகூட பாகிஸ்தானால் நம் அணியை தோற்கடிக்க முடியவில்லை. மகளிர் விளையாட்டிலும் கூட நமது  தேசிய விளையாட்டான ஹாக்கியை காட்டிலும் மக்கள் விரும்பி பார்ப்பது கிரிக்கெட் போட்டியைதான். இதிலும் உலக கோப்பை, ராஞ்சி டிராபி, சாம்பியன்ஸ் டிராபி என எல்லாவற்றையும் பார்ப்பதில் மிகுந்த ஆவல் நம் மக்களுக்கு உண்டு. இதுநாள் வரை ஆண்கள் அணிதான் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் அதனை மாற்றும் வகையில்  சென்ற ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விளங்கியது. இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் உலக கோப்பையில் அந்த அணி களமிறங்கியது. இந்திய அணியின் மூத்த அனுபவ வீராங்கனைகளான மிதாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமி ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பை என்பதனால் இந்திய வீராங்கனைகள் இந்த போட்டியில் வென்று அவர்களுக்கு பரிசளிக்கும் முனைப்பில் களமிறங்கினர்.

இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வலுவான இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் மிதாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்கள் அடித்தது முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. இதில் 8 அழகான பவுண்டரிகளும் அமையும். சச்சின் டெண்டுல்கர் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதில், இந்திய அணி அசத்தலாக 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 வது போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 3 வது போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக 4வது போட்டியில் வெற்றி பெற்றது. பின்னர், வலுவான தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் தோல்வியடைந்தது. இருப்பினும்,  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று எழுச்சி கண்டது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதால் தோல்வியடைந்துவிடும் என்று எல்லோரும் கணித்தனர். ஆனால், ஹர்மன்பிரீத் கவுர் ருத்ரதாண்டவம் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர், 115 பந்துகளில் 20 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்தினார். இறுதிப்போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை ஏற்கனவே வெற்றி பெற்றதால் சற்று நேர்மறையாக களமிறங்கியது. ஆனால், இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியுற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணி உலக கோப்பையை தவறவிட்டாலும், இந்திய ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது. கோலி, ரோஹித், தோனி என்று உச்சரித்து வந்த உதடுகளில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தா என்று உச்சரிக்க வைத்தது இந்த மகளிர் உலக கோப்பை.

படம்: espn

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார். மகளிர் கிரிக்கெட் அணிக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 33 ரன்களை கடந்து மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் 6,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமை தனதாக்கி கொண்டார். ஆஸ்திரேலியாவில் லிண்ட்சே ரீலர், எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் ஆகியோர் 6 அரைசதங்களை தொடர்ந்து அடித்தனர். இந்த சாதனையை தனது 7-வது தொடர் அரைசதத்துடன் மிதாலி ராஜ் உடைத்து சாதனை நாயகியாக திகழ்கிறார். இவர் லேடி சச்சின் என்று அழைக்கப்படுகிறார். இந்த வரிசையில் நமது இந்திய மகளிர் அணியின் விளையாட்டு வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுர் தனது சதத்தால் ரசிகர்களை பிரமிப்படைய செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: dnaindia.com

மேலும், ஸ்மிரிதி மந்தா, வேதா கிருஷ்ணமூர்த்தி, கோஸ்வாமி ஆகியோரும் கிரிக்கெட் நட்சத்திரங்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர். எனவே, பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் மீது கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. எனவே 2017, இந்திய மகளிர் அணிக்கான மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. எல்லா துறைகளிலும் எங்களாலும் சாதிக்க முடியும் என்று வென்று வந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வீர வணக்கம்.

Reference:

Related Articles