Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அதிகாரிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் இலங்கை அணி

கிரிக்கெட் உலகில் இலங்கை அணியின் போராட்டமும், விடாமுயற்சியால் கிடைக்கும் வெற்றிகளும் தனித்துவமானது. எப்பேர்ப்பட்ட அணியையும், தனது அணி ஒற்றுமையாலும், தமக்கே உரித்தான மேற்கூறிய பண்புகளாலும் இலங்கை அணி வீழ்த்திவிடும் என்பதுதான் ஒவ்வொரு போட்டியின்போதும் ஆய்வாளர்களினதும், இரசிகர்களினதும் கணிப்பாக இருக்கும். அப்படியான இலங்கை அணியின் நிலைமையானது தற்போது அந்தோ பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. கடந்தகாலங்களில் தோல்வியைக்கூட இலகுவாக எடுத்துக்கொள்ளாமல் இறுதிவரை போராடும் இலங்கை அணி, தற்போது எல்லாம் தானாகவே சரணடைந்து விடுவதுபோல இருக்கிறது.

மூத்த வீரர்கள் ஒரு அணியிலிருந்து விலகி, இளைய வீரர்கள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் மாற்றங்களுக்கான (transition) காலப்பகுதியில் இலங்கை அணி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருந்தாலும், ஏனைய நாட்டு அணிகளில் இடம்பெற்றதுபோல ஒரு சுமூகமான மாற்றத்தை கொண்டிருக்கவில்லை என்பதே எல்லோரினதும் ஆதங்கமாக இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படுகின்ற ஸ்திரத்தன்மையின்மை ஆகும்.

இலங்கை அணிக்குள் வீரர்கள் வருவதும் போவதுமாக இருப்பது போல, நிர்வாகமும் நிறையவே மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. ஒவ்வொரு மாற்றமும் எதை எல்லாம் பாதிக்கச் செய்கிறதோ இல்லையோ! இலங்கை அணியின் பெறுபேறுகளிலும், வீரர்களின் உளவியலிலும் ஏகப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என சொல்லலாம்.

தற்போதைய நிலையில், 2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கே இலங்கை அணி தகுதி பெறுவதே சந்தேகமாகவுள்ள நிலையில், கடந்த 20 மாதங்களில் இலங்கை அணியின் நிர்வாகம் எப்பேர்ப்பட்ட உறுதியற்ற மாற்றங்களை எல்லாம் சந்தித்து இருக்கிறது என்பதை பார்ப்போம்.

தை 2016

வேக பந்துவீச்சு பயற்சியாளர் மீதான குற்றசாட்டும், ஓரங்கட்டலும்

வேக பந்துவீச்சு பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க போட்டியை முன்கூட்டியே நிர்ணயிக்க முயற்சித்தார் என்கிற குற்றசாட்டுக்காக விசாரணை செய்யவென பதவி விலக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்களிடம் போட்டியை முன்கூட்டியே நிர்ணயிக்க முயற்சித்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்தாலும், பின்பு, ICC (International Cricket Council) தனது விசாரணைகளின் முடிவில், இவர் மீதான் குற்றசாட்டுக்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்பதனை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும், இன்றுவரை அவர் மீள அழைக்கபடவேயில்லை. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில், அனுஷவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், இவரது காலத்தில்தான் லசித் மலிங்க , நுவான் குலசேகர , நுவான் பிரதீப் போன்ற வீரர்களின் திறனில் முன்னேற்றமும், சிறந்த பெறுபேறுகளில் முன்னேற்றத்தையும் கொண்டிருந்தார்கள். தற்போதைய நிலையில், இலங்கையின் வேகப்பந்து வீச்சு நிலையை நாம் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

மாசி 2016

கிரஹாம் போர்ட் (Graham Ford’s ) மீள்வருகை

Image Credit : itnnews.lk

இலங்கை அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக கிரஹாம் போர்ட்டை குறிப்பிட முடியும். இவர் பயிற்சியளித்த 2012 – 2014 காலப்பகுதியில் இலங்கை அணி தொட்டிருந்த உச்சமே இதற்கு சான்றாகும். 2014ம் ஆண்டும் இலங்கை பயிற்றுவிப்பிலிருந்து விலகி சரே (Surrey) பிராந்திய அணிக்கு பயிற்றுவிப்பாளராகியிருந்தார். போர்ட்டின் பயிற்றுவிப்பு திறமையும், அவர் ஏற்கனவே இலங்கையை பயிற்றுவித்த அனுபவமும், இலங்கைக்கு அவரை பயிற்சியாளராக கொண்டு வருவது உசிதம் என கருதப்பட்டபோது, அதற்க்கு வலுசேர்க்க சரே அணியில் விளையாடிய சங்காவின் மேலதிக வேண்டுகோளும் இணைந்துக்கொள்ள மீண்டும் இலங்கைக்கு பயிற்சியாளராக வந்து சேர்ந்தார் போர்ட்.

பங்குனி 2016

அணி நிர்வாக மாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணி 2016ம் ஆண்டு T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு புறப்பட தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில், அதுவரை நிர்வாகத்திலிருந்த கபில விஜயகுணவர்த்தன (Kapila Wijegunawardene) அவர்களது நிர்வாகம், விளையாட்டு அமைச்சுக்கு அமைவாக செயல்படவில்லை என்கிற காரணத்துடன் வெளியேற்றப்பட்டது. இதன்போது கபில கருத்து தெரிவிக்கும்போது, உலகக்கிண்ண போட்டிகளுக்கு தேர்வான அணி விளையாட்டுத்துறை அமைச்சின் விருப்பில் மாத்திரமே தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

பதவி விலக்கப்பட்ட கபில நிர்வாகத்துக்கு பதிலாக, இடைக்கால அடிப்படையில் அரவிந்த டீ சில்வா தலைமையில், குமார் சங்கக்கார , ரொமேஷ் களுவித்தாரண மற்றும் லலித் களுப்பெரும ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

லசித் மலிங்கவின் பதவி விலகல்

Image Credit : newsradio.lk

நிர்வாக மாற்றத்தை தொடர்ந்து, உலகக்கிண்ண போட்டிகளில் பங்குபெறும் அணியின் தலைமையிலிருந்து லசித் மலிங்க விலக, T20 போட்டிகளுக்கும் அஞ்சலோ மத்தியூஸ் தலைமையேற்க ஏற்பட்டது. லசித் மலிங்க அணியில் ஒரு வீரராக உள்ளடக்கபட்டிருந்தபோதும், அவரது உடற்தகுதி பெரும்பாலான போட்டிகளில் அவர் விளையாட அனுமதித்திருக்கவில்லை. குழுநிலையில் அவர் அதற்க்கு முன்பாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாது நேரடியாகவே இந்தியாவுடனான போட்டியில் விளையாடி இருந்தார்.

சித்திரை 2016

புதிய அணி நிர்வாகி

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் சுழற்சி அடிப்படையில் பதவி வழங்கல் செயற்பாட்டை காரணம் காட்டி, இலங்கை அணியின் நிர்வாகியாகவிருந்த (Team Manager) ரஞ்சித் பெர்னாண்டோ அவர்களுக்கு பதிலாக சரித் சேனநாயக்க (Charith Senanayake) நியமிக்கப்பட்டார். ஆனாலும், அவர் அப்பதவிக்கு நியமிக்கபட்டாரே ஒழிய, அவர் அந்த கடமைகளை செய்ய அனுமதிக்கபடவில்லை. அணி நிர்வாகியாக அணியுடன் பயணிக்காமல் இறுதிவரை இலங்கை கிரிக்கெட் நிர்வாக அலுவலகத்திலேயே அவர் உட்கார வைக்கப்படிருந்தார்.

வைகாசி 2016

நிர்வாகத்தின் உள்ளே,வெளியே ஆட்டம்

Image Credit : srilankacricket.lk

தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாகியான அரவிந்த டீ சில்வா குறித்த பதவியிலிருந்து நீங்கி, கிரிக்கெட் ஆலோசகர் பதவியில் இணைந்துகொள்ள இவருக்கும், இவரது குழுவுக்கும் மாற்றீடாக சனத் ஜெயசூர்யா தலைமையில் ரொமேஷ் களுவித்தாரண, ரஞ்சித் மதுரசிங்க மற்றும் எரிக் உபசாந்த ஆகியோரை கொண்ட குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குழுவின் ஆயுட்காலம் ஒரு வருடமாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், பின்னர் மார்கழி 2017 வரை நீடிக்கப்பட்டது. சனத் தலைமையிலான நிர்வாகக் குழு பொறுப்பேற்றது முதல் இதுவரையான ஒரு வருட காலத்துக்குள் அணித் தேர்வில் சுமார் 44 வீரர்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்துள்ளார்கள். இது அவர்களது அணித்தேர்வில் உள்ள உறுதியற்றநிலையையும், அணியில் ஒன்றுபட முடியாதுள்ள நிலையைம் நன்கே எடுத்துக் காட்டுகிறது.

ஆடி முதல் மார்கழி 2016

புதிய பதவிகளும், மாற்றங்களும்

இந்தக்காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் உயர் செயல்திறன் நிர்வாகி (High Performance Manager) உருவாக்கப்பட்டு இங்கிலாந்து நாட்டவரான சைமன் வில்லிஸ் (Simon Willis) உள்வாங்கப்பட்டார்.

அதேபோல, தற்போது பயிற்சியாளராக உள்ள நிக் போதாஸ் (Nic Pothas) இந்த காலப்பகுதியில்தான் களத்தடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்ட பின்னான ஆறுமாதகாலத்தில் மட்டும் கிரிக்கெட் அரங்கில் மெச்சப்பட்ட இலங்கை களத்தடுப்பாட்டம் தடுமாற்ற நிலைக்கு மறுக்க முடியாது. குறிப்பாக, இந்த ஆறுமாத காலத்தில் மாத்திரம் வீரர்கள் தவறவிட்ட பிடிஎடுப்புக்களின் எண்ணிக்கை 56 ஆகவுள்ளது.

மார்கழி மாதத்தில் மீளவும் நிர்வாக சுழற்சியை காரணம் காட்டி, சரித் சேனநாயக்கவுக்கு பதிலாக ரஞ்சித் பெர்னாண்டோ அணி நிர்வாகியாக கொண்டுவரப்பட்டார். அதற்குபின், இதுவரை நிர்வாக சுழற்சி இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில்தான் இலங்கை அணியின் உடற்பயிற்சி நிபுணர் தனது பதவிகாலத்தை நீட்டித்துக்கொள்ள விரும்பாது விலக, புதியவராக நிக் லீ இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார்

பங்குனி 2017

மீண்டும் நிர்வாக மாற்றம்

Image Credit : imgci.com

இலங்கை அணியின் முன்னாள் வீரர் அசங்க குருசிங்க அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த சிலநாட்களில் இலங்கை கிரிக்கெட்டின் மேலாளராக (Cricket Manager) அறிவிக்கப்பட்டதுடன், ரஞ்சித் பெர்னாண்டோவுடன் இணைந்து செயலாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இவரது போக்கில் காணப்பட்ட கடுமையான போக்கு மற்றும், அதிகார பயன்பாடு என்பவற்றின் விளைவாக, இலங்கை அணிக்கு தலமை பயிற்சியாளராவிருந்த போர்ட் அவர்களுடன் ஒரு முரண்பாடான சூழ்நிலை ஏற்படவும் ஆரம்பித்திருந்தது. இதனை போர்ட் பின்னர் வெளிப்படையாக தெரிவித்தும் இருந்தார்.

வைகாசி 2017

Champions Trophy போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான அலன் டொனால்ட் (Allan Donald) நிர்வாகத்துக்குள் கொண்டுவரப்பட்டார். இதன்போது, இலங்கை அணியில் ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியாளராகவிருந்த சம்பக்க ரத்னாயக்க (Champaka Ramanayake) Champions Trophy போட்டிகளின் போது பந்துவீச்சு பயிற்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத அரவிந்த டீ சில்வா இந்த முடிவை எதிர்த்தும், தனது ஆலோசனைகளுக்கு புறம்பான செயல்பாடுகளை கருத்தில்கொண்டும்  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஆடி 2017

நிர்வாகத்தின் தொடர் இழப்பு

Image Credit : cricketcb.com

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் உபதலைவர் பதவியை வகித்த ஜயந்த தர்மதாச தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். Champions Trophyயின் தோல்வியுடன் 45மாதகால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை வெறும் 15 மாதத்துடன் முடித்துக்கொண்டு பயிற்சியாளர் போர்ட் நாடு திரும்பினார். மிகைப்படுத்தப்பட்ட தலையீடுகள் காரணமாகவே, அவர் விலகிச் சென்றார் என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. இவரது இடத்தினை தற்காலிகமாக களத்தடுப்பாட்ட பயிற்சியாளர் நிக் போதாஸ் மூலமாக நிர்வாகம் நிரப்பிக்கொண்டது.

ஆவணி 2017 முதல் இன்றுவரை

அடிமேல் அடி

தற்காலிக பயிற்சியாளர் தலைமையில், இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதே ஜீரணிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இவரது காலப்பகுதியில்தான் முதலாவது ஒருநாள் தொடர் ஒன்றை சிம்பாவே அணியிடம் இழக்க நேரிட்டது. இந்த தோல்வி, 2019ம் ஆண்டு வரை அணியை கட்டியெழுப்பக் கூடிய தலைவராக இருப்பார் என நம்பப்பட்ட மத்தியூஸ் நம்பிக்கையையும் சிதைக்கின்ற தோல்வியாக அமைந்தது. விளைவு, அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாதவராக தனது பதவியை மிக நாகரீகமான முறையில் இராஜினாமா செய்து கொண்டார் மத்தியூஸ்.

இதற்குபின், இலங்கை அணியில் இடம்பெறாத சந்திமால் டெஸ்ட் அணித்தலைவராக அணிக்குள் உள்வாங்கப்பட, அணியில் தளம்பல் நிலையிலான பெறுபேறுகளை கொண்டுள்ள உபுல் தரங்க ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அணித்தலைவர்கள் மாற்றத்துடன், தற்போது இடம்பெறும் இந்திய அணியுடனான போட்டிகளை நோக்காக கொண்டு ஹஷான் திலகரட்ன துடுப்பாட்ட பயிற்சியாளராகாவும், சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டர்கள். ஆனால், சமிந்த வாஸ் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே ருமேஸ் ரத்னாயக்கா அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டு வாஸ் 19 வயதுக்குட்பட்டவர்களின் அபிவிருத்தி பயற்சியாளராக மாற்றப்பட்டார்.

கடந்த 20 மாதகாலத்துக்குள் ஒரு நிலையற்ற நிர்வாகமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இருந்திருக்கிறது என்பதனை பார்க்கும்போது நமக்கே தலைசுற்றுகிறது அல்லவா! அப்படியாயின், அணிக்குள் நிரந்தரமாக இருப்போமா? இல்லையா? என்கிற ஐயத்துடன் அணிக்குள் கொண்டுவரப்பட்ட புதிய வீரர்கள் எப்படி நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்க முடியும். ஒரு அணியாக இணைந்து விளையாடவோ, நிர்வாகத்துடன் சுமுக உறவையோ ஏற்படுத்திக்கொள்ள முடியாதநிலையில், அழுத்தங்களுக்கு மத்தியில் எப்பேர்ப்பட்ட வீரர்களாலும் பெறுபேறுகளை வெளிப்படுத்த முடியாது. அப்படியாயின், புதுமுக வீரர்களை கொண்ட இலங்கை அணி என்னவாகும் என யூகிக்க முடிகிறதா ?

மாற்றம் ஒன்றே மாறாது என்பதே உண்மையாக இருந்தாலும் கூட, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த மாற்றங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வராதா? என்பதுடன், இலங்கை அணி மீண்டும் பழைய இலங்கை அணியாக மீண்டெழுந்து வராதா? என்பதுதான் தற்போது ஒவ்வொரு உண்மையான ரசிகனதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles