உலகின் சிறந்த சுழல் பந்து ஜாம்பவான்

கிரிக்கெட் விளையாட்டைப் பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது, அந்தளவிற்கு கிரிக்கெட் மோகம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிந்த பெயர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அதேபோல் பந்துவீச்சில் உலகில் சிறந்தவர் யார் என்றால் அது நம் மண்ணின் மைந்தன் முத்தையா முரளிதரன் மட்டுமே.

முரளிதரன் உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான பெயர் ஆகும். சுழற் பந்து வீசுவதில் புதிய சரித்திரம் படைத்தவர் நமது முரளிதரன். அனைத்து தரப்புப் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற்று விட்ட முரளிதரன், அவர் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் உலகின் எத்தனையோ சிறந்த பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்துள்ளார்.

ஓய்வு பெற்று இத்துனை ஆண்டுகள் ஆகியும் இவரது உலக சாதனையான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

Murali Bowling (Pic: thestar)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள்

முரளியை உலகமே முத்தையா முரளிதரன் என்கிற பெயரில் அறியும். ஆனால் இவரது உண்மையான பெயர் ‘தேசபந்து முத்தையா முரளிதரன்’ என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இலங்கை கண்டியில் இவர் பிறந்தார்.

இவரது பள்ளிப் பருவத்தில் இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வளம் வந்தார், ஆனால் இவரது பள்ளி பயிற்சியாளர் இவருக்கு சுழற்பந்து கற்றுக்கொள்ள ஆலோசனை கூறினார். பிறகு 14 வயதில் இருந்தே இவர் பல அமைப்புகளுக்கு விளையாடத் தொடங்கிவிட்டார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருந்தது.

தனது 20 வயதில் முதல் டெஸ்ட் போட்டியை முரளிதரன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு பிரேமதாசா மைதானத்தில் விளையாடினார். அனைவரும் அவர் மீது மிகவும் நம்பிக்கையாக இருந்தன. அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் அவரும் தனது முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

தொடர்ந்து சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய முரளிதரனை மக்களுக்கும் மற்றும் அணி தேர்வாளர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது

ஆரம்ப காலத்தில் யாருக்குமே இவர் ஒருநாள் உலக சாதனை படைப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் பேசிக்கொண்டே இருக்கும்போது இவர் எப்போது 800 விக்கெட்டுகள் என்கிற இமாலய இலக்கை அடைந்தார் என்பது தெரியவே இல்லை. இவர் ஓய்வுபெற்று இத்துனை ஆண்டுகள் ஆகியும் அதனை முறியடிக்க யாராலும் முடியவில்லை., அதே நேரத்தில் அவரது இமாலய சாதனைக்கு அருகில் கூட யாருமில்லை. முத்தையா முரளிதரனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சிறந்த சுழற்ப்பந்து வீச்சாளர் ஷேன் வாரன் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்து முரளிதரனுக்கு முன்பே ஓய்வுபெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Murali Test Career (Pic: Newsfirst)

முரளியின் 800 வது விக்கெட்

முரளி தனது 800 வது விக்கெட் விக்கெட் வீழ்த்திய கதை மிகவும் சுவராசியாமனது. 2010 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கு முன்பே முரளிதரன் இந்த தொடரின் முதல் போட்டிக்கு பிறகு தாம் ஓய்வுபெற போவதாக அறிவித்தார். அந்த ஆட்டத்திற்கு முதல் முரளியின் டெஸ்ட் விக்கெட் 792 ஆகும். இவர் தனது இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் எடுத்து 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற இமாலய சாதனையை படைக்க வேண்டும் என்பது அனைத்து இலங்கை மற்றும் உலக ரசிகர்களின் ஆசை மற்றும் வேண்டுதலாக இருந்தது. அவரும் அனைவரது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக முதல் ஆட்டத்தின் முதலாவது இன்னிங்கில் ஐந்து விக்கெட்டுகளையும் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இமாலய சாதனையைப் படைத்தார். இவரது 800வது விக்கெட்டாக அமைந்தது இந்திய சுழற்ப்பந்து வீச்சாளர் பிராகியன் ஓஜா ஆவார். இந்த சாதனையுடன் அவர் தனது டெஸ்ட் பயணத்தை முடித்தார். மேலும் முரளியின் இறுதி ஆட்டமாக இருந்த இந்த ஆட்டத்தை இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

800 Wickets (Pic: espncricinfo)

சாதனைகளுக்கு அதிபதி

முத்தையா முரளிதரன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற சாதனைகள் இவர் பெயரில் உள்ளது. இதேப்போன்று மற்றொரு சாதனையும் இவர் பெயரில் உள்ளது. இந்த சாதனையை முறியடிக்க ஒரு யுகமே ஆனாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அந்த சாதனை என்னவென்றால் கிரிக்கெட் உலகில் ஆயிரம் விக்கெட் எடுத்த சாதனை ஆகும். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் என அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 1347 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் டெஸ்டில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

அதேபோல் மற்றொரு சாதனை இங்கிலாந்து வீரர்களை அதிக முறை அவுட் செய்த பெருமை இவரையே சேரும் இதுவரை முத்தையா முரளிதரன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 112 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார் குறுகிய காலக்கட்டத்தில் ஒரு அணிக்கு எதிராக 100க்கும் அதிகமாக விக்கெட் எடுத்த சாதனை இவரை மட்டுமே சேரும்.

அதேப்போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10க்கும் அதிகமாக விக்கெட் அதிகமுறை எடுத்த சாதனையும் இவர் பெயரில் தான் உள்ளது. 22 முறை இவர் 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Muralitharan-Celebration (Pic: thequint)

சர்ச்சைகளும் முரளியும்

இவ்வளவு திறமைகள் இருந்தாலே தீமைகளும் வந்துசேரும் என்பதில் ஆச்சரியமில்லை. இவரது பந்துவீச்சு முறை தவறாக இருப்பதாகக் கூறி இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. வீரர்கள் மற்றும் நடுவர்களும் இவரது பந்துவீச்சு முறை தவறாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அட்டகாசமான வீரர் ஏடம் கில்கிறிஸ்ட் அவரது வாழ்க்கை புத்தகமான ‘ட்ரூ கலர்ஸ்’ என்கிற புத்தகத்தில் பிரத்யேகமாக கூறியுள்ளார்.

அவர் தனது புத்தகத்தில் கூறியது ‘ முரளிதரனை ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யவேண்டும் என்று அவர் தனது புத்தகத்தில் பதிவு செய்து இருந்தார், காரணம் முத்தையா முரளிதரன் பந்து வீசும் பொழுது அவர் தனது கைகளை 15 டிகிரி வடிவில் சுழற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த பந்து வீசும் முறை கிரிக்கெட்டுக்கு எதிரானது என்பது பலரின் விவாதமாக இருந்தது.

ஆனால் முரளிதரன் பல்வேறு தேர்வுகளைச் சந்தித்து எல்லோருக்கும் தாம் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என நிருபித்து, அனைவரது வாய்களுக்கும் பூட்டு போட்டுவிட்டார்.

Bowling Action Test (Pic: espncricinfo)

இந்தியாவின் செல்ல மாப்பிள்ளை

இலங்கையில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் முத்தையா முரளிதரன் என்பதால் என்னவோ அவர் இந்தியா மீதும் தமிழகம் மீதும் அதிக அன்பு வைத்துள்ளார் . சிலருக்கு மட்டும் தான் தெரியும் முத்தையா முரளிதரன் தமிழக மாப்பிள்ளை என்று காரணம் அவரது மனைவி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவர். சென்னையில் உள்ள மலர் மருத்துவமனையின் மருத்துவர் தெய்வத்திரு டாக்டர் எஸ். ராமமூர்த்தி அவர்களின் புதல்வி மதிமலர் ராமமூர்த்தியை  2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

சென்னை மீது இவருக்கு அன்பு மிகவும் அதிகம் 2016 ஆம் ஆண்டு சென்னை மக்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் முத்தையா முரளிதரன் ஒரு கோடி ருபாய் நிவாரண நிதியாக வழங்கினார். முரளிதரன் இந்தியா வருவதற்கு வீசா வாங்க அவசியமில்லை. முரளியிடம் ஒசிஐ (ஓவர்சிஸ் இந்தியன் வீசா) உள்ளது. இதன்முலம் அவர் இந்தியாவில் எந்த மூளைக்கும் தாரளமாகச் செல்ல முடியும். மேலுமவர் இந்திய வரும்போது பல்வேறு ஏழை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி இலவசமாக வழங்கி வருகிறார்.

Murali and Malar (Pic: espncricinfo)

முரளிதரனின் ஐபிஎல் பயணம்

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முரளிதரனை 600,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் முதல் சீசனில் சென்னை அணி இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரின் முதலாம் ஆண்டில்  முரளிதரன் சென்னை அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2010 ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த வருடம் சென்னை அணிக்காக விளையாடிய முரளிதரன் சென்னை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் கொச்சி டஸ்கர் அணிக்காக விளையாடினார். பிறகு 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்காக விளையாடினார். 2015 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

Murali WIth Gayle (Pic: News18)

இதுபோன்ற திறமையான ஒரு வீரரை மீண்டும் காண்பது மிகவும் அரிதான ஒன்று. முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பின்னால் அணியின் பாலமாகச் செயல்பட வேண்டும் என்பது இன்று இருக்கும் பல கிரிக்கெட் ரசிகர்களின் ஆசையாக உள்ளது

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தாலோ அல்லது சொல்லப்பட்ட தகவலில் தவறுதல் இருந்தாலோ தயவுசெய்து உங்களது கருத்தை பகிரவும். உங்களது கருத்து எங்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

Feature Image Credit: sportingnews.com

Related Articles